Sonntag, November 02, 2003

மலேசியத் தமிழ்ப் பெண்களும் சமூக சிந்தனையும்.

ந. மகேஸ்வரி

இன்றைய நவீன உலகில் மலேசியத் தமிழ்ப் பெண்களின் சமூக சிந்தனை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

மலேசியப் பெண்கள் என்று பொதுவாகக் காணும்போது முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைந்திருப்பதாகத் தோற்றம் தருகின்றது.

ஆனால் தமிழ்ப் பெண்கள் என தனியாகப் பிரித்து நோக்கினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். பிற இனப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கல்வி, பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைத்தரம் சமூகப்பணி யாவற்றிலுமே இன்னமும் வெகுதூரம் பின் தங்கிய நிலையிலேதான் இருக்கின்றனர்.

ஆரம்பக் கல்வியைப் பெறுவதில் ஓரளவு வாய்ப்புக் கிட்டியுள்ளது என்று கூறலாம். நகர்ப்புறத்திலும் அதையொட்டியுள்ள இடங்களிலும் பெண்கள் சற்று தெளிவடைந்து வருகின்றனர் என்று கூறலாம். சின்னச் சின்ன மாறுதல்களைக் காண முடிகின்றது. ஆனால் ஆழ்ந்து கவனித்தால் மற்ற இனப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிர்ச்சிக் குரிய ஏமாற்றமே மிஞ்சும்.

மலேசியா போன்ற வளமிகுந்த, வாய்ப்புகளும் வசதிகளும் பெருகியுள்ள நாட்டிலும் நமது பெண்களின் நிலை இப்படி இருக்கிறது என்றால் அதற்கு அவர்களின் அறியாமை மட்டுமே காரணமாகி விடாது. அவர்கள் சார்ந்துள்ள குடும்பம், சுற்றம் மற்றும் நமது சமூகத்தில் நிலவும் குறைபாடுகள்தான் காரணமாக இருக்கும். தனி மனிதரால் நிவர்த்தி செய்து விடக்கூடியதல்ல. நமது சமூகம் சார்ந்த எல்லாத் தரப்பினரின் சிந்தனையிலும் மாற்றமும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

சுயநலத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு பொது நல நோக்குடன் செயல்பட வேண்டும். அறியாமை, இயலாமை, ஏழ்மை போன்றவற்றை அகற்ற அதிக அக்கறையும் ஈடுபாடும் காட்ட வேண்டும். விளக்கிருந்து கண்களில் ஒளியில்லையேல் யாவும் இருண்டு போகுமல்லவா.

அதைப் போன்ற நிலையில் தான் நமது பெண்கள். அறிவுக் கண்களைத் திறக்க கல்வி வேண்டும். அறியாமை அகல சிந்தனை வளர வேண்டும். சிந்தனைதான் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும். விழிப்புணர்ச்சி பெற்றால்தானே சமூகத்தைப் பற்றியும் முன்னேற்ற வழிவகைகளைப் பற்றியும் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். இன்றைய நம் பெண்களில் பெரும்பாலோருக்கு ஆரம்ப இடைநிலைப் பள்ளிகளில் கல்வி கற்கும் அளவிற்காவது வாய்ப்புகிட்டியுள்ளது.

இதுவும் ஓர் ஆறுதலுக்குரிய மகிழ்ச்சிதான் என்றாலும் இன்றைய கணினி யுகத்திற்கு இது போதுமா? கிடைக்கும் சொற்ப அறிவைக்கொண்டு தங்களையே செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட வகை தெரியாமல் வழியறியாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில் சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்க இயலுமா? செயல்படத்தான் முடியுமா?

முதலில் நமது பெண்களின் அறிவுக் கண்களைத் திறந்து சிந்தனை மாற்றத்திற்குரிய அடிப்படை உணர்வுகள் பெறுதலுக்குரிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மனோபாவங்களில் மாற்றம் தேவை. உயர்கல்வி பெறவும் வெளி உலக அனுபவம் பெறவும் வாய்ப்பளிக்க வேண்டும். சுதந்திர மனப்பான்மை, சுயநிர்ணய அறிவு சுயகாலில் நிற்கும் துணிவு பொறுப்பேற்கும் திறன், மன உறுதி யாவும் பெற்றுத் திகழ வேண்டும்.

சுதந்திரமென்றால் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிதலும் வீண் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்வதுமல்ல என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். தங்களின் உரிமைகளைப் புரிந்து கொண்டு பண்பாட்டு மீறல்களின்றி பணியாற்ற வேண்டும். பண்படுத்திப் பக்குவப்படுத்தாதவரை எவ்வித முன்னேற்றமோ மாற்றங்களோ நிகழப்போவதில்லை.

சிவப்பழகியாகிவிட்டால் நாளைக்கே திருமணம், அடுத்த ஆண்டே கையில் குழந்தை என்ற வணிக விளம்பரத்தைத் தாரக மந்திரமாக்கிக் கொண்டு கடைகளிலும் பேரங்காடிகளிலும் சுற்றித் திரிவதுதான் சுதந்திரம், முன்னேற்றம் என்ற தவறான வழிகாட்டுதல்களைப் பின்பற்றித்திரிந்தால் அடுத்த நூற்றாண்டில் கூட நம் பெண்கள் விழிப்புணர்வை அடையப் போவதில்லை.

வணிகர்களும் விளம்பரதாரர்களும் தங்களின் வியாபாரம், பொருளீட்டல் போன்வற்றுடன் சமூக நலன்களிலும் சற்றே தார்மீக உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்திலுள்ள எலலாத் தரப்பினருமே நம் இனப் பெண்களின் முன்னேற்றத்திற்குரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு குடும்பமும் அதில் வாழ்பவரும் சமுதாயத்தின் அங்கம்தானே!

நமது பெண்களிடம் சமூக சிந்தனையே கிடையாது என்று சொல்ல வரவில்லை. சேவை மனப்பான்மை இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள்தான். தன் குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூகத்திற்காக உழைப்பைச் சிந்துவதாகவே உணரப்பட வேண்டும். வெளியில் சென்று செய்வது மட்டுமே சேவை என்பதல்ல.

குடும்பத்திற்காக ஒவ்வொரு வினாடியும் செய்கின்ற செயல் யாவுமே சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் சேவையாகவே கருதப்பட வேண்டும். ஆனால், வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுக் கொள்ளும் இத்தகைய சேவை மனப்பான்மையை சமூகம் வரையில் விசாலப்படுத்த வேண்டும். பரவலாக அது பயன்பட வேண்டும்.

தனிமனிதனுக்கு மட்டுமே என்றும் தான், தன் சுகம் என்கிற குறுகிய மனப்பான்மையோடு சுயநலத்துக்காக அடக்கியாளும் போக்கைத் தவிர்க்க வேண்டும். தகுதியுள்ள பெண்களையாவது அடையாளங்கண்டு ஊக்குவித்து சமுதாய விழிப்புணர்ச்சிக்கு வித்திட வேண்டும்.

நமது பெண்களிடையே விழிப்புணர்ச்சியே கிடையாது என்பதல்ல! இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னும் ஒரு சிலரால் நம் சமூகம் ஒளிமயமாகி விட இயலாது.

சமூகப் பணி என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல! விழாக்களுக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் அலங்காரமாக வந்து போவதும் காட்சிப் பொருளாக அணிவகுத்து நிற்பதும் மலர் தூவி வரவேற்பதும் சமுதாய சேவையாகி விடாது.

தரிசாகக் கிடக்கும் நிலத்தைப் பண்படுத்தி நல்ல விளை நிலமாக்குவதற்கு ஒப்பானதே சமூகப் பணி. அவ்விதப் பணிகளைச் செய்யும் தகுதி படைத்தவர்களாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூக அமைப்புகளும் அதற்கு ஆவன செய்ய வேண்டும். சமூக சிந்தனையுடைய சில பெண்களும் எப்படிச் செய்வது, என்ன செய்வது போன்ற வழிமுறைகள் தெரியாமல் வழிகாட்டி இல்லாமல் இருந்து வருகின்றனர்.

நமது பெண்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நமது சமூக அமைப்புக்கள் வழிவகுத்துக் கொடுக்கவும் இல்லை. விரிவான செயலாக்கமும் காணப்படவில்லை. காலங்கடந்து அரும்பியிருக்கும் இப்புதிய சிந்தனையை ஆவலோடும் அக்கறையோடும் ஏற்றுக் கொண்டு முன்வரும் பெண்களுக்கு மகளிர் அமைப்புகள் நல்ல அடித்தளம் அமைத்துத் தர வேண்டும்.

வலுவான தலைமைத்துவமும், முறையான செயல் திட்டங்களும் இருந்தால் நமது பெண்களுக்கும் புதிய பாதைகள் அமையும். அதன் மூலம் விழிப்புணர்வும் மாற்றங்களும் வரக்கூடும். பெண்களின் சிந்தனை மாற்றங்கள் சமூகத்தையே மாற்றி அமைக்கவல்லதாக அமையலாம்.

பெண்களே சமுதாயத்தின் கண்கள் என்று மேடையில் முழங்கி விட்டுப் போனால் மட்டும் போதாது. அதற்குரிய செயல்பாடுகளில் தீவிரமாக இறங்க வேண்டும். வழிவகுக்கப்பட வேண்டும். வசதிகள் செய்யப்படவும் நமது பெண்களின் சிந்தனை மாற்றத்திற்கு உதவ கல்வியாளர்கள் முன்வர வேண்டும்.

அதன் மூலம் சமூகம் நற்பயனை அடையும். நலிவுற்று நசிந்து கொண்டிருக்கும் சமூக சீர்கேடுகளைத் துடைத்தொழிக்க ஒன்றுபடுவோம்.

ந. மகேஸ்வரி
நன்றி-செம்பருத்தி

Donnerstag, Oktober 09, 2003

தமிழ்த்தேசியத்துள் பெண்களின் நிலையும் நிலைப்பாடும்.

தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டில் பெண்களை ஒன்றினைப்பதற்கும் சமூக, பொருளாதா ரீதியாக பெண்களை விரைவாகவும் இலகுவாகவும் பலம் பெறச் செய்வதற்கும் உரமான உழைப்பாளிகளான உயிர்துடிப்புள்ள கிராமியப் பெண்களைச் சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் அதிகளவான பங்கேற்றலையும், பதவிகளையும் பெறுவதற்கும் வலியுறுத்துவதோடு பாராம்பரிய எண்ணக்கருக்களில் இருந்து பெண்கள் சிந்தனைத் தெளிவு பெறக்கூடிய புரிந்துணர்வு ஏற்படுத்துவதற்கும் சமத்துவம், பொருளாதாரம், சட்டம், கலவ்p, உடல்நலம், சுயதொழில், மற்றும் பெண்கள் தொடர்பான மேம்பாடான கிராமியத்திட்டமிடல் முறைமைகளில் பங்காளிகள் ஆவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையைச் செயற்படுத்தக்கூடிய கிராமியப் பெண்கள் குழுக்களின் முக்கியத்துவத்தையும், ஒருகிணைப்பையும் வலியுறுத்தவும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் பெண்களும் சம அளவான அங்கீகாரம் பெறக்கூடிய வாய்ப்புக்களையும் வளப்பகிர்வினையும் தமிழ்த்தேசியப் பெண்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.


மனிதகுல வரலாற்றைக் கருத்தியல் ரீதியாகச் சிந்திக்க வைத்த முதலாளிதுவ சமூகம் உருவான காலம் முதல், பெண்கள் மரபு வழிப்பட்ட பாரம்பாரிய எண்ணக்கருக்களாலும் ஜதீக பௌராணிகச் சிந்தனைக்குள்ளும் சிக்குண்டிருக்கும் எமது சமூகத்தின் ஆரம்பம் முதல், பெண்கள் பற்றிய பார்வை பிரச்சினைகள் கொண்டதாகவே வளர்ந்து வந்துள்ளது. சர்வதேச ரீதியில் பெண்களின் பிரச்சினைகள் உக்கிரம் பெற்றிருந்த போதிலும் எமது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் போராட்ட காலத்தில்தான் மேலதிகமான அழுத்தம் பெறத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் சமூகத்தில் கட்டமைமக்கப்பட்டிருந்த பழம் வழக்காறுகளை அறுத்தெறிந்து தேசிய விடுதலைப்போராட்டத்துடன் தமிழ் பெண்கள் தம்மை இணைத்துக்கொண்டனர்.

அப்பெண்கள் தன்னம்பிக்கை, சுய ஆளுமை, அறிவியல் பலம் கொண்ட பெண்களாக எம்மத்தியில் முனைப்புப் பெறத்தொடங்கினர். போராட்ட காலங்களில் பெண்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளக் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பெண்களின் உரிமை மறுப்புக்கள் ஆரம்பகாலங்களில் சமூக, சமய, கலாசார, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டும் நியாயப்படுத்தப்பட்டும் வந்த போதிலும் போராட்ட காலங்களில் இராணுவக்கெடுபிடிகளாக மாறிய பாலியல் வன்முறைகளாகத் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை ஆட்டம் காண வைத்ததோடு பெண்களுக்கு உடல், உள hPதியான சித்திரவதைகளாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு புதிய சமூக அவலங்களையும் தோற்றுவித்தது.

இதில் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் கிராமியப்பெண்களாகும். அதே காலகட்டத்தில் அப்பெண்கள் ஒன்று சேர்ந்து தம்மை அணிதிரட்டி தமது பிரச்சினைகளைப் பகிரங்கப்படுத்தும் அளவிற்கு சமூக பலத்தையோ? ஒருங்கிணைப்பையோ? பெண்கள் பெற்றிருக்கவில்லை. ஆகவே இனிவரும் காலங்களில் தமிழ்த்தேசியப்பெண்கள் தமக்கென்று ஒரு ஸ்திரமான அமைப்பை உருவாக்குவதற்கும் கிராமங்கள் தோறும் பெண்கள் குழுக்களின் பங்கேற்றலும், செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதற்கும் பெண்களுக்கான கருத்தியல் தளம் (Ideological Stance) உடையவர்களாகவும் பெண்களின் காத்திரமான பங்களிப்புக்கு அவர்களின் தகுதிப்பாடு ((Credibility) பொருத்தப்பாடு (Suitability) என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதனோடு அவர்களின் மனப்பாங்கு (Commitments) சமூகபங்களிப்பைச் சரியாகச் செய்வதற்கு உதவக் கூடியதோடு கிராமியப்பெண்கள் தத்தமது குடும்பமட்டத்திலிருந்து சமூகமட்டத்திற்கு வரவேண்டியுள்ளது. பெண்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கும் சமூகமேம்பாட்டுத் திட்டமிடலில் சமபங்கு வகிப்பதற்கும் அபிவிருத்தியில் சாதமான, பலனைப்பெற சமூகமான, ஆரோக்கியமான வன்முறைகளற்ற தீர்மானங்களையும் எடுப்பதற்கு பெண்கள் சகல மட்டங்களிலும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பலம் பெறும் வழக்காறுகளை உடைத்து குடும்பமட்டத்திலிருந்து வெளிவர வேண்டியுள்ளது.

.பெண்களின் பிரச்சினைகளுக்குப் பெண்களே முன்னின்று வெளியில் வந்து போராட வேண்டும். பெண்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்வதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் பெண்கள் தமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாடான கல்வியை வடிவமைப்பதற்கும் பெறுவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சொத்துரிமை, தமக்கு தேவையான விரும்பமான தொழிற்துறையைத் தெரிவு செய்வதற்கும் பெண்களே சுயமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டும். தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் சுயமாக முடிவுகளை பெண்கள் முன்வரவேண்டும்.

எந்தவொரு சமுதாயத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு அவசியமானது. அடிப்படையானதும் ஆகும். அந்த வகையில் எமது தேசிய விடுதலைப்போராட்த்துடன் இணைந்த பெண்கள், அவர்களின் ஆற்றல்கள் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். எமது சமூகத்தில் ஆண்,பெண் சமத்துவம் தொடர்பான கருத்துருவாக்கம் வளர்வதற்கும் எமது சமூகத்திற்குப் பொருத்தமான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் விழிப்புணர்வும், சுயதிறன் விருத்தியும், பொருளாதார நடவடிக்கைகளில் பண்முகத்தன்மையும் கொண்டவர்களாகத் தேசிய விடுதலைப்போராட்டத்துடன் இணைந்த பெண்கள் காணப்படுகின்றனர்.

கிராமியப்பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களை ஒன்றினைப்பதற்கும் அபிவிருத்தி திட்டமிடல் முறைமைகளில் பெண்களின் பங்கேற்றலைத் துரிதப்படுத்துவதற்கும் ஆற்றலும் ஆளுமையும் கொண்ட இப்பெண்கள் தம்மை வடிவமைத்தது போன்று கிராமியப் பெண்களையும் பலம் பெற வேண்டுமெனில் அவர்களின் ஆற்றல்கள் மழுங்கடிக்கப்படாது ஆரோக்கியமான, பெண்களின் உழைப்பைச் சுரண்டாத திட்டமிடல் வழிமுறைகள் பெண்களாலேயே வடிவமைக்கப்படவேண்டும். அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும்போது அதில் பெண்களின் அங்கத்துவமும் சம அளவில் இடம்பெற வேண்டும். இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் மிகவும் தெளிவாக வலியுறுத்தப்பட வேண்டும்.

சமுகத்தில் நீதியையும், சமாதானத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் பெண்களின் பங்களிப்பு மிகமிக அவசியம். எமது சமூகம் மீளுருவாக்கம் பெறுவதற்கு பெண்கள் காத்திரமான பங்களிப்புச் செய்யவேண்டும். கிராமியப்பெண்களின் கருத்துருவாக்கமும் வளரவேண்டும். மேம்பாடான சமூக உருவாக்கத்திற்கான தெளிவுபடுத்தல்களும் வலியுறுத்தப்படவேண்டும். கடந்தகாங்களில் எம்மை அடக்கு முறைக்குட்படுத்திய அரசு, மகளிர் அபிவிருத்தி தொடர்பாகவும் அவர்களின் பாதுகாப்புத்தொடர்பாகவும் அமைச்சை நிறுவிய அதே காலகட்டத்தில்தான் அதே அரசால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், அபிவிருத்தித்தடைகளும் வடிவமைக்கப்பட்டது.

பெண்களின் உரிமை மறுப்புக்கள் காலம் காலமாகத் தொடாந்த அரசுகளால் வன்முறைகளுக்கூடாக நியாப்படுத்தப்பட்டு வந்ததையும் கடந்த காலங்களில் பெண்களாகிய நாம் புதிய, புதிய அவலங்களைக் கண்டும், கேட்டும், அனுபவித்தும் உணர்ந்தும் வந்திருக்கிறோம். இவ்வாறான விடயங்களும் தமிழ் தேசியப்பெண்களை மேலும் விழிப்படையச் செய்துள்ளது. பெண்களாகிய நாம் காலம் காலமாக அடக்கப்பட்டதையும், ஒடுக்கப்பட்டதையும் வன்முறைக்குட்படுத்தப்பட்டதையும் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டதையும் எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.

எல்லா விதமான கலாச்சார நாடுகளிலும் பெண்கள் தமக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் நேரத்துக்கு நேரம் பெண்களின் வாழ்வியல் நடைமுறைகள் மாறிக்கொண்டிருப்பதால் இதுவரை காலமும் சமூகத்தால் வடிவமைக்ப்பட்டு காட்டிக்காக்கப்பட்டு வந்த கலாச்சாரக் கட்டுமானங்களைத் தேவையின் நிமித்தம் தகர்த்து வெளியில் வந்து தேசிய விடுதலைப்போராட்டத்துடன் இணைந்த பெண்கள் இன்று சமூக மேம்பாட்டில் தம்மை இணைத்து வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்பத் தம்மை ஒருங்கிணைத்து இருப்பதை காண்கின்றோம். எந்தவொரு செயற்பாடும் பெண்களின் சுறுசுறுப்பான ஆர்வம் மிக்க செயற்பாட்டிலே தங்கியுள்ளது.

எனவே கிராமியப் பெண்களை ஒன்றிணைத்து சமூகமேம்பாட்டு உருவாக்கத்திற்கு அப்பெண்களின் பங்களிப்பைப் பெறுவதற்கு சமூகமேம்பாட்டு அமைப்புக்கள் தூண்டுதல் அளித்தபோதும் ஒரு பெண் தானாகவே முன்வந்து தன்னை வளர்த்துக்கொண்டாலன்றி, விழிப்புணர்வு பெற்றாலன்றி அவளது வளர்ச்சி தடைப்படதொன்றாகவே அல்லலுறும். எது எவ்வாறிருப்பினும் இன்று வரை குடும்பச் சூழ்நிலைகளும் பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவேயுள்ளது. ஆயினும் ஒவ்வொரு பெண்ணும் தனக்குள்ளிருக்கச் கூடிய சக்தியையும், ஆற்றலையும் உணர்ந்து அந்ததந்த துறைகளில் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள முன்வரவேண்டும்.

கிராமியப்பெண்களிடம் ஏற்கனவே இருக்கின்ற திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்ப்பதற்குச் சமூகத்தில் உள்ளவர்கள், மேம்பாட்டு நிறுவனங்கள் இயன்றளவு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். கிராமியப்பெண்கள் இழிவுபடுத்தப்பவோ, கீழ்நிலைக்ப்படுத்தப்படவோ முடியாதவர்கள். சமூக மேம்பாட்டில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆகவே அப்பெண்களின் மனங்களில் கருத்தியல் hPதியான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மரபு hPதியான சிறுமைப்படுத்தலைத் தகர்த்து பெண்களின் சமத்துவத்திற்கும், சுய அபிவிருத்திக்கும் ஆற்றும் பங்களிப்பே அப்பெண்களை உண்மையான விடுதலைக்கு இட்டுச்செல்லும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆண்,பெண் இருபாலாரின் பங்களிப்பு எந்தளவு அவசியமோ? நாட்டின் பொருளாதார உற்பத்திக்கும் சமத்துவம், உற்பத்தி என்பன முக்கியமான இருசக்கரங்கள். இந்த வகையில் எமது தமிழ் தேசிய சமூகம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் அங்கு பெண்களும் சமூக, பொருளாதார, அரசியல், சட்ட, நீதி, நிர்வாகம், போன்றவற்றில் மட்டுமல்லாது 'படைப்பிரிவுகளிலும்" பெண்கள் பங்கேற்க வேண்டும். அதே போன்று கிராமிய வளப்பகிர்வுகளிலும், உற்பத்தியிலும் கிராமியப் பெண்கள் சம அளவில் பங்கேற்க வேண்டும். இதற்கூடாகவே பெண்கள் காலம்காலமாகத் தம்மை வடிவமைத்துள்ள சமூககட்டுமானங்களில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்வதோடு சமூகத்தையும் விடுவித்துகொள்ளமுடியும்.

பெண்கள் உடல்,உன hPதியாகத் தம்மை வலுப்படுத்தியும் ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் கிராமிய, பிரதேச மாவட்ட மட்டங்களில் பெண்கள் குழுக்களை அமைத்து அதற்கூடாக சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒவ்வொரு பெண்ணும் பங்கேற்பதோடு திட்டமிடல் முறைமைகளில் பெண்களும் சம அளவில் பங்குபற்ற முடியும். தேசிய விடுதலைப்போராட்டத்துடன் இணைந்த எமது பெண்களின் நடவடிக்கைகளைக் கருத்தியல் நோக்குடையதாகக் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு கிராமியப் பெண்ணும் தம்மை முன்னெடுக்க வேண்டும்.

கிராமியபெண்களுக்கு பக்கபலமாகவும் உந்த சக்தியாகவும் உள்ள தமிழீழத் தேசிய பெண்களின் அர்ப்பணிப்புகளும், தேடல்களுமே, ஒட்டுமொத்தப் பெண்களுடைய விடுதலையை வென்றெடுக்க வழிசமைக்கும் இவ்வாறான பெண்களின் முழுமையான அர்ப்பணிப்பே விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே பெண்கள் அனைவரும் முழுமையான பெண் விடுதலையைப் பெற முன்னின்று உழைப்பதோடு அனைத்துச் சமூகங்களிலும் ஓரங்கட்டப்பட்டதையும், கீழ்நிலைப்படுத்தப்பட்டதையும் இதுவரை காலுமும் அனுமதித்து, தலை வணங்கி அதற்கு எதிராக வாய்பேசா மௌனிகளாக இருந்தது போதும். இனிவரும் காலங்களிலாவது தமிழ்தேசிய விடுதலைக்காக வெளியில் வந்து முன்னின்று உழைப்பதற்கூடாக தேசவிடுதலையும் பெண் விடுதலையையும் வென்றெடுக்கலாம்.

எது எவ்வாறு இருப்பினும் பெண்கள் தமது உரிமை மறுப்புக்கள் தொடர்பாக சர்வதேச அளவில் அரசியல் நிலைப்பட்ட செயற்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ள போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. கோரிக்கைகளையும் முன்வைத்துள்ள போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை. ஆயினும் எமது தமிழ்த்தேசிய சமூகத்தில் சகல ஒடுக்குதல்களுக்கும் உட்பட்ட பெண்கள் வெளியில் வந்து சமத்துவமான கட்டுமானங்களை உருவாக்குவதிலும் அவற்றுக்கூடாக பெண்கள் அபிவிருத்தியிலும், தாயக தேசத்தின் விடுதலையிலும் பங்காளிகளாகவதற்கும் தமது ஈடுபாட்டையும் அக்கறையையும் அதிகரித்து இருப்பதோடு, பெண்களாகிய நாம் எல்லாக் காலங்களிலும், எல்லாச்சமுதாயத்திலும் எமது அடிப்படை உரிமைகளை இழந்தவர்களாகவும் அடிமைகளாகவும் ஆற்றல்கள் அனைத்தையும் அடக்கியவர்களாகவும், இருளுக்குள் இடிந்த எண்ணங்களுடனும், உள்ளங்களுக்குள் உடைந்த ஆசைகளுடனும் வாய்பேசத் திராணியற்றவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளளோம்.

.இவ்வாறு மௌனித்து வாய்பேசக் கூடத்துணியாதவர்களாக, சகித்துப் பொறுத்துக்கொண்டிருந்த காலம் பெண்களைச் சிதைத்து, அடிமைகளாக்கி, சிறைப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, புதைகுழியிட்டு பெண்களின் தேவைகள், எண்ணங்கள், மனக்கொந்தளிப்புக்கள் அனைத்தையும் சின்னாப்பின்னப் படுத்தியது. இவ்வாறான துன்பங்கள் பெண்களுக்கு இனியும் வேண்டாம். தமிழீழ தேசிய விடுதலைக்காக கைகளை ஒன்றினைத்து ஒத்துழைப்புக்கொடுப்போம்! எமது குரல்களையும், கரங்களையும் யாரும் நசுக்காது தேசத்தை காக்கும் திறனை தமி;ழீழ தேசியப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்குவோம். சமூக மேம்பாட்டு உருவாக்கத்தில் பெண்களாகிய நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே சுதந்திரமான பெண் விடுதலையையும், ஆரோக்கியமான சமூக விடுதலையையும் வென்றெடுக்க முடியும்.

நன்றி தில்லை. சுட்டும்விழி
(08 -10 -2003)

nantri-soorizan.com

Samstag, September 20, 2003

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண் பற்றிய வர்ணனைகள்

சஞ்சீவி சிவகுமார்

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண் பற்றிய வர்ணனைகள் உத்திகளாயின! இந்த மிலேனியம் ஆண்டு வரை பெண் தன் அழகு இரகசியங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதிலும் கற்புத் தன்மையை நிரூபிப்பதிலுமே ஆர்வமுடையவளாக இருக்கிறாள். அல்லது தன் ஆளுமை திறமை என்பவற்றை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்திலும் பார்க்க அதிக ஈடுபாட்டை மேற் குறித்த விடயங்களில் காட்டுகிறாள்.

சினிமா மொடலிங் நாடகம் மற்றும் ஏனைய பொழுதுபோக்கு முதலான துறைகள் கலை சார்ந்த துறைகளாக விருத்தியுறுவதிலும் பார்க்க அதாவது கலைப் பெறுமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் பார்க்க தசை சார்ந்த விரச விபசார பண்புகளை நோக்கிய தளத்தில் இயங்குவதும் உணரக் கூடியதாக உள்ளது. இதற்குத் தனியே இத்துறை சார்ந்தவர்களை மட்டும் குறை கூறுவது போதுமானதல்ல. இது குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இதுவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஓருவருக்கு இயல்பாகவே எழும் எதிர்பாலார் மீதான இரசனையையும் கலைக் கூறாகக் கொள்ளுவது இறுக்கமான பண்பாட்டு உணர்வாளர்களால் மறுக்கப்படலாம். ஆனால் நீண்டகால நிதர்சனமாக இதுவே நிகழ்கின்றது. தடித்த பொன்முலைத் தடம் கடந்து அருவி போய்த்தாழ' என்ற வர்ணணை முதல் இராவணன் சீதையைச் சந்திக்க அசோக வனத்துக்கு வரும் போது அவன் அணிந்திருந்த மாலையிலிருந்து உதிரும் மலர்களினை புணர்ச்சியின் பின் சோர்ந்துக் கிடக்கும் விபசாரிக்கு ஒப்பிட்டது வரையிலான பல்வேறு உதாரணங்களை இதற்குக் கூறலாம். இத்தகைய வரிகளை எல்லாம் கலையுணர்வு மிக்கது என்று யாரும் சொல்லி விட முடியாது.

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண்ணையும் 'பெண் குறித்த வர்ணணையையும் பயன் படுத்திய உத்தி என்பதுவே இதற்கு மிகப் பொருத்தம். இக்கால சினிமாவின் மசாலாக் கூத்தையும் இத்தகைய வர்ணணையும் ஒரே தராசில் இரு தட்டுக்களில் சமப்படுத்தலாம்.

மறுபுறத்தில் இயல்பான வாழ்வியலில் பாலியலும் எதிர்பால் உணர்வும் முக்கியத்துவம் பெறுவதால் கலை இலக்கியங்களில் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்ற சூடான வினா எழத்தான் செய்கின்றது. ஆனால் இரசனை என்பது உள்ளார்ந்த ஆர்லம். இதனைக் கலையுணர்வு குறித்த தளத்திலிருந்து தசை விரசத்திற்குத் தடம் புரட்டி விடுவது ஆரோக்கியமானதல்ல.

சரி சமூக இலக்கியங்கள்தான் இப்படி என்றால் கட்டுக்கோப்புகளையே வரையறுக்கும் சமய இலக்கியங்களும் இதனையே செய்திருக்கிறது. தேவதாசி கந்தருவப்பெண் தேவலோக அரம்பை என்று வர்ணித்தது போதாமல் அரக்கி பேய்ப்பெண் என்று நீண்டு செல்லும் பாத்திரங்களுக்கு தசை அழகு வர்ணிப்பது தவிர காத்திரமான இலக்கிய முக்கியத்துவம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அத்தகைய வர்ணிப்பையும் பாத்திர அலங்காரத்தையும் தவிர்த்தே கதையை நகர்த்தியிருக்கலாம் போலவும் படுகின்றது.

பெண்ணைத் தனியே போகப்பொருளாக நினைத்து ஆக்கும் படைப்புக்கள் கிராக்கியுள்ள விற்பனையையும் பிரபல்யங்களையும் பெற்றுக் கொள்ளும் என்ற கருத்தே இத்தகைய பாத்திரங்களைத் தேவைப்படுத்துகின்றது. காமசாத்திரம் காமசூத்திரம் மதனசிந்தாமணி என்பவற்றைப் புறநிலையில் நின்று வாசிக்கும் போது இந்த ஆணாதிக்க நிலைப்பாடு தெட்டத்தெளிவாகும். அதிலும் வாசகர்களை முழுதாக ஆண்களாகக் கருதிக்கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களில் பெண் தாய் சகோதரி என்ற உறவு நிலைகளைக் கடந்து ஆணைத் தூண்டற் பேறடையச் செய்யும் ஒரு கூறாகவே காட்டப்படுகிறாள். இந்தக் காட்சி நிலையிலிருந்து மீள முடியாத அளவுக்கு சமூக இறுக்கத்தைத் தக்க வைத்தது தவிர வேறு எதனையும் இத்தகைய பண்பாடுகளால் அடைய முடிவதில்லை.

இவை தவிர சமூகத்திற்குப் போதனை வழங்கும் சமூக சீர்திருத்தக் கருவிகளாகத் தம்மை இனங்காட்டிக் கொள்ளும் கிராமிய நிகழ்த்துக் கலைகள் கூட பெண்ணைத் தன் போக்கில் வகைப்படுத்திக் கொள்வதும் வசைப்பாடிக் கொள்வதும் முட்டாள் தனத்துடன் கூடிய பிற்போக்காகவே கொள்ளக்கூடியது. சிறுவயதில் என்னை மிகப்பாதித்த காத்தவராயன் கூத்தில்
ஆரியப்பூமாலையைப் பற்றிய ஒரு பாட்டில். . . . .

கெண்டை பெருத்தவளுடா மகனே!
பெருத்தவளுடா அவள் குடிவழிக்கு ஆகாதுடா மகனே!
ஆகாதுடா
கூந்தல் பெருத்தவளுடா மகனே!
பெருத்தவளுடா. . . '
என்று நீண்டு செல்லும் பாடல் நச்சு விதையை சமுதாயத்தில் தூவுவன. பெண் குறித்த இந்த அளவீடு ஆதாரமின்றிய ஒரு அடக்கு முறையாக சமூக அநீதியாகவே அமைகிறது. பெண் செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுவதிலும் பார்க்க குற்றம் செய்து விடுவாளோ என்ற அச்சம் காரணமாக தண்டிக்கப்படும் சமூக சட்டங்களே அநேகம். இத்தகைய சமுதாய மாறாட்டம் வக்கிரத்தையே விளைவிக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆண் எதிர்ப்பு வாதமாக வரும் தஸ்லிமா நஸ்லிமின் கவிதையைக் கவனிப்பது பொருத்தமென நினைக்கிறேன்.

நான் ஒரு
ஆணை வாங்க விரும்புகிறேன்
சுத்தமான உடை சவரம் செய்த முகம்
வாரிய தலைமுடி
அவன்-ப10ங்கா இருக்கையில்
இருக்கிறான்.
தடவைக்கு
ஐந்து அல்லது பத்து டக்கா
எனும்
மலிவான விலையில்
அவனை நான் வாங்குவேன்

என்று தொடங்கி தன் ஆண் வக்கிரத்தை எல்லாம் கொட்டிய பின்

' பின் அவனை
. . . . . . . . . . .
. . . . . . . . . .
. . . . . . . . . .
நான் அழிப்பேன்'
என்று முடிக்கிறார். இத்தகைய வெறுப்பின் அத்திவாரம் என்ன? சமூகத்தின் எந்தச் செயலுக்கு இந்தப் பதில்? ஏன்பவற்றை நாம் ஊன்றி நோக்க வேண்டும். ஓட்டுமொத்தமான சடத்துவ இருப்பை பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்காக தன்னை நிலை நிறுத்தவும் நிர்ணயம் செய்யவும் சமூகத்தின் ஓர வஞ்சமான சட்டங்களிலிருந்து மீட்புப் பெறவும் அவள் துணிந்துவிட்டாள் என்பதுவே இத்தகைய எழுச்சிகளின் அறிவிப்பாகும்.

சமூகம், சமத்துவம் நோக்கிப் பண்படுத்தப்படாதவரை ஆணாதிக்க சிந்தனை அறுபடாத வரை பால்நிலை வக்கிரம் சீர்படுத்தப்படாதவரை இந்த நிலைப்பாடு பெண்களின் மனநிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும.

சஞ்சீவி சிவகுமார்

Freitag, September 19, 2003

கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே!

தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே!

"பெண்கள் இப்போது மிகவும் முன்னேறிவிட்டார்கள்."
இன்று பலராலும் முன்வைக்கக்கூடிய கூற்று இது. இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதுதான். ஆனாலும் இந்த முன்னேற்றம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதாகிறது. முன்னேற்றம் என்பது துணிச்சல் தன்னம்பிக்கை என்கின்ற இரண்டு விடயங்களில் தங்கியிருக்கின்றது. இந்த இரண்டு விடயங்களுமில்லாத பெண்கள் மட்டுமல்ல மனிதர்கள் யாருமே முன்னேற முடியாது.

எமது சமூகத்தில் பெண்கள் மிகவும் வேகமாக முன்னேற வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் பாதிப்புகளும் பிரச்சினைகளும் மூடக் கொள்கைகளும் முரண்பாடுகளும் பெண்களிடமே அதிகம் காணப்படுகின்றன. இவை நிச்சயமாக முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். இந்தத் தடைகளை உடைத்து அல்லது தகர்த்து முன்னேற வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்குரியது. அப்பொழுதுதான் பெண்கள் இலகுவில் முன்னேற முடியும்.

பெண்கள் பல கோணங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். பெண்ணின் ஒவ்வொரு திசையும் பயங்கரமானதாக, கரடு முரடானதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இதை விட காலங்கலமாக பெண் பற்றி நிலவி வந்த உருவகங்களும் இன்றைய பெண்களின் முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடுவனவாகவே இருப்பதை காண்கின்றோம்.

பெண்ணின் ஆற்றல், ஆளுமை என்பன பெரியளவில் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே இருப்பதை பல இடங்களில் பெண்ணின் ஆளுமை வெளிப்படுவதை அவள் சார்ந்தோர் விரும்பாத நிலையும் இருக்கின்றது. பெண் என்பவள் இரண்டாம்படி நிலையில் இருப்பதுதான் அவளின் பெண்மைக்கு புனிதம் கற்பிப்பது என்ற மாதிரியான கருத்தும் இருந்து வருகின்றது. பல இடங்களில் |பெண்தானே| என்கின்ற அலட்சியம் அல்லது அக்கறையின்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான பார்வைகளையும், படிநிலைகளையும் தாண்டி முன்னேற வேண்டிய நிலையிலேயே இன்றைய சாதாரண பெண் இருக்கின்றாள்.

இன்று பெண் தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டவும் ஆற்றல்களை வெளிப்படுத்தவும் பல வழிகள் இருக்கின்றன. எமக்கு முந்தைய சந்ததியினரைப் போல பெண்கள் ஏக்கம் நிறைந்தவர்களாகவோ இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியவர்களாகவோ இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அருகிவிட்டன. பாதைகள் பல முனைகளில் திறந்திருக்கின்றன.

இருந்தும், எத்தனை பேர் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஏதோ ஒரு விதத்தில் ஏற்படும் பயமும், தயக்கமும் அநீதிக்குட்பட்டவர்களின் உணர்வுகளை மரக்கச் செய்து விடுகின்றன. அல்லது மௌனிக்க வைத்து விடுகின்றன. என்றே சொல்ல வேண்டும். உண்மையில் எப்பொழுதும் அநீதி இழைப்பவர்கள் தான் அச்சமுறவேண்டும். ஆனால் இங்கே மாறாக அநீதிக்குட்படுபர்களே அச்ச முறுகின்றார்கள்.

காலங்காலமாய் பெண் இப்படித்தான் இருப்பதற்குப் பழக்கப்பட்டிருக்கின்றாள். அநீதிக்கெதிராககுரல் கொடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பது என்பது பெண்ணுக்கு அவமானம், களங்கம் என்று அன்றைய காலம் போதித்தது. ஆகவே, அன்றைய பெண் எப்படி வாழ்ந்தாள், அந்தக் கருத்தும், ஆழமான வழி நடத்தலும் இன்றும் சில இடங்களில் ஊறி இருப்பதை நாம் காண்கின்றோம். இவை களையப்பட வேண்டிய கருத்துக்களாக இருக்கின்றன.

சிறிலங்காவின் தேச வழமைச்சட்டம் பெண்களுக்கு மனத்துணிவை ஏற்படுத்துவதாக இல்லை. ஆனால் எமது தமிழீழச் சட்;டங்கள் பெண்களுக்கு உரிய முறையில் நீதி வழங்கக்கூடிய வகையில் இருக்கின்றன. இருந்தும், அநீதிகளுக்கு எதிராக துணியாதவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சட்டம் தெரியாதவர்கள் என்பவர்களைவிட சட்டம் பற்றி முழுமையான தெளிவிருந்தும் முன்வராதவர்கள் தான் அதிகம்.

சமூக மட்டங்களில் இன்னமும் துன்புறுத்தப்படும், ஏமாற்றப்படும், அவதிக்கப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் எல்லோருமே இந்த அநீதிகளை எதிர்த்து போராட முன் வருகின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

ஏன் இவர்கள் இப்படி ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அவமானம் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் |என்ன செய்வது பெண் என்றால் இதெல்லாம் சகஜம்| என நினைக்கும் மனோபாவம் என்பவையே காரணங்களாக அமைகின்றதை அறிய முடிகின்றது.

இதன் மூலம் அநீதி இழைப்பவர்கள் தப்பிக் கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலுடனும், மாற முடியாத துன்பத்துடனும் வாழ நேரிடுகிறது. மேலும், அநீதி இழைப்பவர்கள் மீண்டும் மீண்டும் இதே அநீதியை இவர்களுக்ககோ, அல்லது இன்னும் பலருக்கோ இழைக்கும் மனத்துணிவும் இதன் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்யப்படுவதை வெறுமனே அனுமதித்திருப்தும் மாபெரும் தவறாகிறது.

தவறிழைப்பவர்களை மன்னித்துவிடுகிறோம். அல்லது அலட்சியம் செய்துவிடுகின்றோம். இதனால் தவறிழைப்பவர்கள் மனச்சாட்சியின் உறுத்தலால் திருந்திக் கொள்வார்கள் என்பது எல்லாம் முழுமையான உண்மையல்ல. மன்னிப்பது பெருந்தன்மையை வெளிப்படுத்துவது என்று கருதப்பட்டாலும் கூட, இது எல்லா அநீதிகயாளர்களையும் திருத்தி நல்லவர்களாக்கும் என்று கூறிவிட முடியாது.

ஆகவே, பெண்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டியது. போராட வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. இந்தக் கிளர்ச்சி அல்லது போராடும் மனப்பான்மை தான் பெண்களின் முன்னேற்றங்களுக்கு உந்துதலாக அமையும்.

ஆதிலட்சுமி சிவகுமார்
நன்றி - ஈழநாதம்

Mittwoch, September 10, 2003

சீ - தனம்...!!! - சபேசன்

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், நாம் இப்போது காலடி எடுத்து வைக்கின்றோம். இதே செப்டெம்பர் மாத ஆரம்பம் தான், தமிழீழத்தின் சமுதாயக் கொடுமை ஒன்றிற்கு, சாவு மணி அடிக்கின்ற சரித்திரத்தின் ஆரம்பமாகவும், அத்திவாரமாகவும் அமைந்துள்ளது. ஆமாம், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 1995ம் ஆண்டன்றுதான் முதன் முதலாக மணக் கொடைத் தடைச் சட்டம் என்கின்ற சீதனத் தடைச் சட்டம், தமிழீழத்தில் அமுலாக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான்! என்று எம்மில் பலர் இன்னமும் எண்ணியும் எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது, தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம் அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்க பேதம் போன்ற பல சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ் மொழி மீட்பு, மண்மீட்பு, நெறி மீட்பு, போன்றவற்றிற்கான போராட்டங்களையும், ஒருங்கு சேர, விடுதலைப்புலிகள் இயக்கம் நடாத்தி வருவதை நாம் இந்த வேளையில் சுட்டிக் காட்ட விழைகின்றோம்.

ஆனால், சிறிலங்கா அரசுகளின் தமிழின அழிப்பு யுத்தத்தைத் தம் ஆயுதப் போராட்டம் மூலமாக, வீடுதலைப்புலிகள்; முகம் கொடுத்துப் போராடியது மட்டும்தான், பிறரின் பார்வையில் ஏன் எம்மவரின் கண்களில் கூடத் தெரிகின்றது. முன்னைய சிறிலங்கா அரசுகள் கொடுத்த ஆயுதப் போர்களுடன், பொருளாதாரத் தடை, உணவுத் தடை, மருந்துத் தடை போன்ற உடல் உளவியல் ரீதியான போர்களையும் முகம் கொடுத்துப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம், எம்மிடையே பரவிக் கிடக்கும் சமூக அநீதிகளையும் ஓருங்கு சேர எதிர்த்துப் போராடி வருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றோம்.

ஈழத் தமிழன் மீது, சிறிலங்கா அரச பயங்கரவாதம் திணிக்கப்பட்டதன் காரணம், அவன் யாழ்ப்பாணத் தமிழன் என்பதாலோ, மட்டக்களப்புத் தமிழன் என்பதாலோ - அல்லது அவன் மன்னார் - வன்னித் தமிழன் என்பதலோ அல்ல! அவன் தமிழன்| என்பதால் மட்டுமே! தமிழன் தமிழனாக வாழ்வதாலும், அவன் பேசுவது தமிழ் மொழியாக இருப்பதாலும், அவனுக்கு மதங்களைக் கடந்த தனித்துவமான பண்பாடும் - நாகரிகமும் இருப்பதாலும், அவனுக்கென்று ஒரு பாரம்பரிய பூமி வாழ்விடமாக இருப்பதனாலும், அவனுடைய இனம் ஒரு தேசிய இனமாக இருப்பதனாலும் -

அவனை - அந்தத் தமிழனை, அவனது மொழியை
அவனது பண்பாட்டை, அவனது நாகரிகத்தை,
அவனது பாரம்பரிய மண்ணை, அவனது இனத்தை, -

ஒழிப்பதற்கான - அழிப்பதற்காக மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் தங்கள் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இவை அனைத்தையும் எதிர்த்துப் போராடியது மட்டுமல்லாது, தனது இனத்திலேயே கால-காலமாகப் புரையோடிப் போயிருக்கும் பல சமூக அநீதிப் புண்களுக்கும் மருத்துவம் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு உண்டு! அதில் ஒன்று தான், இந்த மணக் கொடைத் தடைச் சட்டம் என்கின்ற சீதனத் தடைச் சட்டம்! தன் நாடு மட்டுமல்ல, தனது இனமும், மொழியும், பண்பாடும், கலைகளும் உண்மையான முழுச் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவன் மேற்கொண்ட, மேற் கொண்டுள்ள செயல்பாடுகளின் ஒன்றுதான், இந்தச் சீதனத் தடைச் சட்டம்!

தமிழ்ப் பெண்ணைப் பூச்சுடிப் பொட்டு வைத்து - பொன் நகையால் அலங்கரித்து - பட்டு உடுத்தி, பாட்டெழுதி, மெட்டமைத்து, போற்றிப் பாடிப் புகழ்ந்து வந்தாலும் பெண் அடிமை - என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான், எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து(?) வந்திருக்கின்றது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் ~கட்டாயச் சீதனத்தின்| கொடுமை!

சீதனத்தின் நன்னை-தீமைகளை நாம் ஆராயப் போவதற்கு முதல், இதற்கு அடிப்படையாக விளங்கும் ஆணாதிக்கம் - பெண்ணடிமைத்தனம் - சமூகவியலின் பொருளாதாரம் போன்றவற்றைச் சற்று விளக்கமாகத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றறோம்.

பெண்ணியம் குறித்த ஆய்வாளரான - கேட் மில்லட்| என்ற பெண்மணி, பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துகளை விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் ~பால்வகை| என்பது, ஆண்-பெண்ணை அதிகாரம் செய்யும் பான்மையில் தான் அமைந்துள்ளது. ஏனென்றால், ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் ~பால்வகைப்| பிரிவு என்பது ஆண் தனக்குதிய சமூகக் களமாக ~இராணுவம், தொழிற்சாலை, அரசியல்,நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்பு தெரிந்தெடுத்துக் கொண்டு, தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு ~இல்லம்| என்பதை உரிமையாக்கி, அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான.; அதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண், சமூகத்தை அணுகுவதற்கு, அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது, அது அவளைச் சுய சிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாலையாக உருவாக்குவற்குத் துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு, குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனம் கருத்துருவம் (Ideology), உயிரியில் (Biological) சமூகவியல் (Sociological), வர்க்கம் (Class), பொருளாதாரமும்-கல்வியும் (Economics and Education), சக்தி (Force), மானுடவியல் (Anthropology), உளவியல் (Phychology) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக ~கேட் மில்லட்| மேலும் குறிப்பிடுகின்றார்.

மேலைத் தேய ஆய்வு இவ்வாறு இருக்கையில், எமது தமிழ்ச் சமுதாயத்தில், இந்தப் பண்பு குறித்துச் சற்றுத் தர்க்கிக்போம். தமிழ் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காட்பியத்தின் நூற்பாக்கள் கூட, பெண்ணடிமைக் கருத்துருவங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம், ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும், தொல்காப்பியரின் வரைமுறைகள், ஆணாதிக்கத்தையும்-பெண்ணடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத் தேய பெண்மணியான ~கேட் மில்லட்| டின் மேலைத் தேய ஆய்வுக்குச் சார்பாக, மேலைத் தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் சான்று காட்டி நிற்கின்றது. உதாரணமாக, தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும் போது,

'பெருமையும் ஊரனும் ஆடூஉ மேன" (தொல்காப்பியம் - பொருள்-களவு 7)
என்று உயர்த்திக் கூறுகின்றார். பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும் போது,
'அச்சமும் நாணமும் மடனும் முந்துறல் நிச்சமும் பெண் பாற் குரிய"

என்று தொல்காப்பியர் கோடு கீறி வரையறுக்கின்றார். இதன் அடிப்படையில் ஆண்மகன் உரமுடையவனாகவும், பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். பெண்ணோ, அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Fair Sex), இரக்கம் உடையவளாக (The Gentle Sex), மெல்லியவளாக (The Softer Sex), உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக செயல் திறன் அற்றவளாக (The Weaker Sex) உருவாக்கப்படுகின்றாள்.

மேலும், தொல்காப்பியர் இல்லத் தலைவிக்கு உரிய பண்புகளைக் கூறும்பொழுது,
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து பறநதருதலும், சுற்றம் ஓம்பலும் (தொல்காப்பியம் - பொருள் - கற்பு.11)

என்று வரையறுக்கின்றார். அதாவது, இல்லறத்தில் பெண் ஒரு பதி விரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும் மனக் கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்து சுற்றம் ஒம்புவளாகவும் இருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். அது மட்டுமல்ல நேயர்களே, கணவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல், பரத்தையர்களிடம் - விலைமாதர்களிடம்- சென்று வரும் போதும், மனைவியானவள், சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறுகின்றார்.

தமிழ் இலக்கிங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ~ஆண் மைய வாதம்|, அன்றைய தொல்காப்பியம்- மற்றும் சங்கக் கால இலக்கியங்களில் இருந்து, இன்றைய படைப்பிலக்கியம் வரை காணக்கூடியதாக உள்ளது. கோவலனின் பரத்தமையைப் பொறுத்துக் கொண்ட கண்ணகியைப் போற்றுவதை நாம் சிலப்பதிகாரத்தில் கூடக் காண்கின்றோம்.

~பருவம்| என்றால் என்ன? என்பதை ஒரு புதுக் கவிதை அழகாகச் சொல்கின்றது.
பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்"

இன்று இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெளிவருகின்ற தமிழ் திருமண விளம்பரங்களை நேயர்கள் பார்த்திருப்பீர்கள். சாதி-சமயக் குறிப்புகளோடு, மணமகள் என்ன நிறத்தில் - என்ன அளவில், எப்படி இருக்க வேண்டும் என்றுதான் விளம்பரம்கள் வெளி வருகின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணும் தனக்கு வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவன், இந்த உயரத்தில், இந்த நிறத்தில், இந்த உருவத்தில் இருப்பவனாக இருக்க வேண்டும் என்று எளிதில் விளம்பரம் செய்ய முடியாத நிலைதான் இன்றைய யதார்த்த நிலை.

ஆரியர்கள் வருகைக்கு முன், தாய்வழிச் சம்பிரதாயமே, பழங்குடி மக்கள் சமுதாயங்களில் நிலவி வந்திருக்கின்றன, என்பதற்குத் தகுந்த சான்றுகள் உள்ளன. அன்றைய தாய்வழிச் சம்பிரதாயத்தில், பெண் வீட்டை விட்டுப் போக மாட்டாள். அவள் பிறந்த வீடு, அவளுக்கு உரிமையுள்ள வீடு. அவளை மனைவியாக ஏற்றுக் கொள்பவன், அவளது வீடு தேடி வந்து அங்கேயே வாழ்வான். இந்த வழக்கம் இன்று தமிழ் நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தமிழீழத்தில் மாறாமல் அப்படியே இருப்பதை நேயர்கள் அறிவீர்கள்.

இனிச் சற்று ஆழமாக- தாய்வழிச் சம்பிரதாயத்தையும், சீதன வழக்கு முறையையும் பற்றிச் சிந்திப்போம்.
ஈழத் தமிழ் மக்களினதும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களினதும் சீதன முறையையைப் பற்றிச் சுருக்கமாக -அதே வேளை தெளிவாகக் கூற வேண்டுமானால், திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ~சுதந்திர வேட்கை| ~உடையாத விலங்கு| போன்ற நூல்களை மேற்கோள் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனப் பார்வையையும், செயல்பாட்டையும், தமிழ் மக்களின் சீதன முறையின் நிறைகுறைகளையும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் ஒரு தெளிவான பார்வையுடன் விளக்குகின்றார். அவருடைய பல கருத்துக்களுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

திருமணத்தின் போது பெண்களுக்கு சீதனம் வழங்குகின்ற முறையை நாம் ஆராய்ந்து பார்த்தால், அது குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரோடிப் போய் நிறுவன மயப்பட்ட வழக்கமாக இருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாண மக்களின் பாரம்பரிய சொத்துடமைச் சட்டமாகிய தேச வழமைச் சட்டக் கோவையில், இந்த சீதன முறைமை, ஒரு சமூக ஒழுங்கு முறையாகவே கொள்ளப்படுகின்றது. இந்தச் சொத்துடமைச் சட்;டத்தின்படி, ஒரு பெண் தனது தாய்வழியாகப் பெறுகின்ற சொத்துக்களைப் பேணுவது குறித்த விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. தேச வழமைச் சட்டத்திற்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டு கால வரலாறு உண்டு. ஆனால், தாய்வழிச் சொத்துடமையின் மூலம், இதற்கும் அப்பாலானது. யாழ்ப்பாணத்து சீதன வழமையின் வரலாற்று வேரும் ஆழமானது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, தென்மேற்கு இந்தியாவிலிருந்து, யாழ்ப்பாணத்தில் குடியேறிய தமிழர்களிடமிருந்தே இந்த வழக்கு முறை தோன்றியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. பின்னாளில், காலனித்துவ வாதிகள், இந்தச் சொத்துடமைச் சட்டத்தைத் திருத்தியபோதும், பெண்களுக்கு சீதனம் வழங்கும் மரவு முறை, அடிப்படையில் மாறவேயில்லை. தமிழ் சமூகத்தில் நிலையூன்றி நீடித்து வருகின்ற சீதன முறைமை, இன்றும் தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயித்து வருகின்ற சக்தியாகவே விளங்குகின்றது. இந்தப் பிரச்சனையின் அடிப்படையில்தான், ஒரு தமிழ்ப்பெண்ணுடைய சமூக அந்தஸ்தும், அவளுடைய சமூகப் பொருளாதார வாழ்வும் நிர்ணயமாகின்றது. சீதன வழக்கு முறையானது, யாழ்ப்பாண சமூகத்தின், சமூக - பொருளாதார வாழ்விற்கு ஓர் அச்சாணியான பிரச்சனை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தின் பாரம்பரிய சொத்துடமைகளே, பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்படுகின்றது|, என்றும் சீதன முறை அகற்றப்பட்டால், இந்தச் சொத்துரிமையை பெண்கள் இழக்க நேரிடும்" என்றும், சீதனத்திற்கு ஆதரவாக, வலுவான கருத்துக்களும் உண்டு. அத்துடன், 'பொதுவாகவே, அது ஒரு கட்டாயச் சேமிப்பாகத் தொடங்கி, ஒரு சமூகத்தின் நல்ல பொருளாதாரக் கட்;டுமானத்திற்கு உதவுகின்றது" என்று சீதனத்திற்குச் சார்பான தர்க்கங்களும் உண்டு.

ஆனால், மணமகன்களிடமிருந்தும், அவர்களது குடும்பங்களிடம் இருந்தும், மட்டுக்கு மீறிய அளவில் மிகுந்த பேராசையுடன் எழுப்பப்பட்ட சீதன வற்புறத்தல்கள் - பல குடும்பங்களைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல், மிகப் பெரிய சமூகப் பிரச்சனையாக, சீதனக் கொடுமை உருவாகுவற்கும் வழி வகுத்தன. சீதனக் கொடுமை அழிக்கப்பட வேண்டும்| என்று ஏற்கனவே 1992 சர்வதேச மகளிர் மகாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு, தமிழ்ப் பெண்கள், விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளிடம் கோரிக்கை விடுத்தனர், இந்தக் கோரிக்கை, தேசியத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது முறையான நடவடிக்கை எடுப்பதற்கு அவர் முடிவு செய்தார்.

முதலில் பொது மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இப்பிரச்சனை குறித்துப் பகிரங்க விவாதங்களும், கூட்டங்களும் கிராமம் - கிராமமாக நடந்தன. பாடசாலைகள் - கல்லூரிகள் - பல்கலைக்;கழகம் - மற்றும் பொது இடங்களில் எல்லாம் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாண மக்களின் வாரம்பரியச் சொத்துடமைச் சட்டமான, ~தேச வழமைச் சட்டம்| மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்டது. இந்த மரபுச் சட்டங்களை நன்கு பரிசீலனை செய்த பிறகு, பெண்களின் நலன் கருதி, மரபுச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன” என்று திருமதி.அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலவிய தாய்வழிச் சொத்துடமை முறை, பேச்சுத் திருமணம் - மற்றும் பல சமூக - பண்பாட்டு வழமைகளை ஆழமாகப் பார்த்த போது, சீதனப் பிரச்சனையானது, பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறையின் ஒரு வெளிப்பாடு என்பது தெளிவாகியது.

ஈற்றில், திருமதி பார்வதி வேலுப்பிள்ளையின், மகனின் பணிப்புரையின் பேரில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நீதி நிர்வாகப் பிரிவினர், சீதன நடைமுறை சம்பந்தமான புதிய சட்ட விதிகளை இயற்றினார்கள். இந்தப் புதிய சட்டங்கள் - பெண்களின் சொத்துரிமையைப் ரொக்கப் பணமாக அன்பளிப்புக் கொடுக்கும் முறையையும் தடை செய்தன. மனைவியின் சொத்து மீது, கணவனுக்கு மேலாண்மை வழங்கும் தேச வழமையின் விதியும் நீக்கப்பட்டது!

ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக- மொழியின் விடுதலைக்காக - இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்காக - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்ற அதே வேளையில், தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும். சமுதாயக் கொடுமைகளையும் களைந்து எறிய முற்படுவது, சாதாரண விடயம் அல்ல! அதனால்தான் அது சர்த்திரத்தில் இடம்பெறப் போகின்ற விடயம் என்று இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே கூறினோம்.

'ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை, இராமன் போன்ற கணவன், பகிரங்கத்தில் சந்தேகப்பட்டுச் சோதிக்கலாம்", என்பது மட்டுமல்ல, 'அவளை ~இலக்குவன்| போன்ற மைத்துனர்களும் கோடு கிழித்துக் கட்டுப்படுத்தலாம்" என்பது போன்ற ஆரிய சிந்தனைகளையும், அவர்களது வழிமுறைகளையும் தமிழனும் ஏற்றுக் கொண்டு தெலுங்கில் பாடி, சமஸ்கிருதத்தில் வழிபட்டு, தன்னைத் தானே இருனில் கட்டிப் போட்டுக் கொண்டான். தமிழ்ப் பண்பாடும், கலைகளும் மீண்டும் புத்துயிர் பெற்று உயர்வதற்கு, சரியான தலைமைதான் வழிவகுக்க வேண்டும்! வழி வகுக்க முடியும்!

கட்டாயச் சீதனக் கொடுமை, எமது சமுதாயத்தில் பெண்ணின் மானுட மதிப்பமையே அடியோடு அழித்துவிட முயல்கின்றது. அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை அடையாளம் கண்டு - பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அழித்துவிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேரூன்றி உள்ளது. ஏன், கர்ப்பத்தில் வளரும் சிசு, ஆணாக மாறி, வலிமை பெறுவதற்காக - ஆரியர்களால் சொல்லப்படுகின்ற ~மந்திரங்கள்| தோன்றிய ஆதர்வ வேத காலத்தில் இருந்து, இந்த நுற்றாண்டு வரை, பெண்ணை ஓர் அடிமைப் கூடாக்கி அழிப்பதற்கு, எமது தமிழினத்தில் புகுந்த ஆரிய சக்திகளும், எம்மினத்து ஆணாத்திக்கமும் உதவின. ஆவற்றிற்குத் தெரிந்தோ, தெரியாமலோ, பெண்ணினமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை!

ஆனால் தமிழீழத்தைப் பொறுத்தவரையில், பெண்ணினத்தின் மேம்பாடு குறித்து, உற்சாகமான உணர்வுட்டும் செய்திகளைக் கேட்டு மகிழ்கின்றோம். அன்று பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணையும் விஞ்சிலிட்டாள், தமிழீழ வஞ்சி! இன்று தமிழ் பெண்ணானவள், தனது விடுதலைக்காக மட்டுமல்லாது, தனது தேசவிடுதலைக்காவும் களம் இறங்கியுள்ளதை காலம் காட்டி நிற்கின்றது. தன்னையும் விடுவித்து, தன் இனத்தையும் விடுவிக்கப் போராடுகின்ற தமிழீழப் பெண்களுக்கு எமது வணக்கங்கள்! பெண் விடுதலை என்பது வெறும் பேச்சில் மட்டுமல்லாது, செயலாகவும் எழுந்து நிற்பதை நாம் இன்று ஈழத்தில் காண்கின்றோம்!

அன்புக்குரிய நேயர்களே! இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு 'பெண்ணியம் - அணுகுமுறைகள்", 'சுதந்திர வேட்கை", 'காலந்தோறும் பெண்", போன்ற நூல்களும், வெளிச்சம்| சஞ்சிகையும் பெரிதும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்!

சபேசன் - 4.9.2003
நன்றி - தமிழநாதம்

Mittwoch, August 27, 2003

பெண், குடும்பம், குழந்தைகள்

பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த
சில அவதானங்கள்


காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்கா இருக்க முடியும்?

பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்யூனிஸ் சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுதுவ அமைப்பு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது.

பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப் பளுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். ஏனெனில், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.

பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரழிகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதைவஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால், இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை.

பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும். கால காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும்.

இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.

உதாரணமக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்குப் போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே, பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திஜீவி" ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கின்றார்.

இதில் கூறப்பட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்காக அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனத்துடன் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்க வேண்டும்.


நோர்வே, கனடா, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பாலுட்டும் தாய்மார்களுக்கு, பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தைச் சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக்கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது.

இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.

சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள். என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஜம்பது அறுபதுகளில் இருந்ததைவிடவும் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக்கேற்ப இயல்பாக்கம் அடைந்தாக இருப்பதால் இன்றை வாழ்வு முறைக்கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப்படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல, வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக்கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும்.

இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறு வழிகளில் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன், மனைவி குழந்தைகளுக்கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண்ணிலைவாதிகள் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை" சீனாவில் அறிமுகப்படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பி;ட்டார். 'ஜனநாயக ப10ர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்

இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும்போது எத்தகையா சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் 'சேர்ந்து வாழல்" (Living to gether) என்ற முறைமையினை மாற்றதாக் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்கள் அக்கறை இன்றி பெண்ணிலைவாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்!. எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும், வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.


நன்றி தினக்குரல்.

மனைவியிடம் ஆண்கள் மூர்க்கத்தனமாக..

மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்.
எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில், நம் ஆண்களுக்கென்னவோ, அவ்வளவாக பிடித்தமே இல்லை. பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து.

டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தார் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து தண்ணி அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார்.

இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மத பேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்ய10) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்ய10 ஆய்வு மேற்கொண்டது.

இதில் ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது.ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள் என்கிறார் ஜ.சி.ஆர்.டபிள்ய10 உறுப்பினர் ஒருவர்.
ஆண்களை எப்போதுமே - சுபீரியர் செக்ஸ் - என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது.

எப்போது மனைவியை கணவன் அடிக்கலாம்? என்ற வழிகாட்டுதல்களுடன் சிறு குறிப்புப் புத்தகங்கள் டில்லி போன்ற நகரங்களில் கிடைக்கின்றன. இப்புத்தகத்தின் விற்பனை எந்தளவிற்கு இப்புத்தகம் படிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
மனைவி ஒழுக்கம் இல்லாதவராக இருந்தால் அடிக்கலாம் என்று இப்புத்தகம் வழிகாட்டுகிறது. என்கிறார் அனைத்துப் பெண்கள் அமைப்பின் இயங்குநர் ஜோத்சனா சாட்டர்ஜி.

கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருப்பதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது| என்பது ஜ.ஆர்.சி.டபிள்ய10. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று ப10ர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர்.

ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன.பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான்.

தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. |கணவனே கண் கண்ட தெய்வம்| என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாhம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும்.

நன்றி தினக்குரல்.
(27 -08 -2003)

சூரியன்.கொம் இலிருந்து

Sonntag, August 24, 2003

சாமத்தியச் சடங்கு

மாதவிடாய் ஆரம்பமாவது பெண்குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்வாகும். வளர்ச்சியடையும் போது வேறு மாற்றங்களும் நடைபெறுகின்றன. ஆண்பிள்ளைகளினதைப் போலல்லாமல் பெண்பிள்ளைகளின் குரல் மெலிவடைந்து ஆழமாகும். உடலின் இரத்த அழுத்தம், செங்குருதி சிறுதுணிக்கைகளின் அளவு விருத்தியடைதல், உடலின் வெப்பநிலை குறைதல், மூச்சு விடுதல் மிகவும் இலேசாக நடைபெறுதல், எலும்புகள் வலுப்படுதல் போன்றன இக்காலத்தில் நடைபெறுவதாகும். ஆண் குழந்தை பருவ வயதிற்கு வரும்போது உடலின் உட்பகுதியிலும் அதேபோல் வெளித்தோற்றத்திலும் மாற்றங்கள் நடைபெறும். இக்காலத்தில் முகத்தில் மயிர் முளைப்பதுடன் குரல் ஆழமாவதையும் எம்மால் கண்டுகொள்ள முடியும். ஆண் குழந்தையின் உடலின் உட்பகுதியிலும் இக்காலத்தில் இன விருத்திக்கான செயற்பாட்டில் கலந்து கொள்வதற்காக விதைச் சுரப்பிகளில் விந்துக்கள் உற்பத்தியாவது ஆரம்பமாகும்.

பெண்குழந்தையின் வளர்ச்சி சம்பந்தமாக பிழையான ஐதீகங்களும் அவற்றால் உண்டான சடங்குகளும் இலங்கைச் சமூகத்தில் காணப்படுகின்றன. எனினும் ஆண் குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட விசேட சடங்குகள் என எதுவும் கிடையாது. பெண் குழந்தையின் முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தியடைதல், பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல் எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நமது கிராமப்புறங்களை போன்றே நகர்ப்புறங்களிலும் நடைபெறும் சில சடங்குகள் பின்வருமாறு:

சிறுமியை வீட்டின் தனியான பகுதியிலோ, தனி அறையிலே தனிமைப்படுத்தி வைத்தல்.

அவளது துணைக்கு ஒரு பெண்ணையோ ஒரு சிறுமியையோ வைத்தல் (குளிக்கும் வரை சிறுமி இவ்வறையிலேயே இருக்க வேண்டும்)

சிறுமியின் அருகில் இரும்பு ஆயுதமொன்றை (கத்தி) வைத்தல்

சிறுமி மலசலகூடத்திற்கு செல்லும்போது அதையும் கொண்டு செல்லல் (இது பேய் பிசாசுகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்காகும்)

உடனடியாக பெற்றோர் சோதிடரை அணுகி சிறுமி வயதிற்கு வந்த நேரத்தைப் பார்த்து பலன் கேட்பர். (இதில் சிறுமியை குளிப்பாட்டுவதற்கு ஏற்ற சுபநாளும் நேரமும் பார்ப்பதும் நடைபெறும்.)

குளிப்பாட்டும் நாள்வரையும் தேங்காய்ப்பால் சேர்க்காது உணவு கொடுத்தல். மீன், இறைச்சி, எண்ணெய் சேர்ந்த பொரித்த உணவுகளை கொடுக்காமல் விடுவது.

சுபநேரத்தில் சலவைத் தொழில் செய்யும் பெண்ணைக்கொண்டு சிறுமியைக் குளிப்பாட்டுவது (சிறுமி பருவமையும் நேரத்தில் உடுத்தியிருந்த உடைகள் ஆபரணங்கள் போன்றவற்றைக் குளிப்பாட்டிய பெண்ணுக்கே கொடுப்பது)

குளிப்பாட்டும் நாளில் பாற்சோறு, பலகாரம், இனிப்புப்பண்டங்கள் போன்ற உணவுவகைகளைத் தயாரித்தல்.

குளிப்பாட்டிய பின் சிறுமிக்கு புத்தாடை அணிவிப்பது.

சில பிரதேசங்களைச் சார்ந்த சில குடும்பங்களில் சிறுமி 3ம் மாதம் வரையும் சலவை செய்யும் பெண் கொண்டுவரும் உடைகளையே உடுத்த வேண்டும்.

சிலர் சிறுமியை குளிப்பாட்டிய பின் சடங்கு செய்வர். இதை சாமத்திய சடங்கு என அழைப்பர்.

இந்த விருந்துக்கு தூர இடங்களிலிருந்தும் உறவினர் நண்பர்களை அழைப்பர். அவர்கள் சிறுமிக்கு பரிசுகளுடன் வருவர்.

கடந்த பல வருடங்களாக நான் மேற்கண்டவாறு சாமத்தியச் சடங்குகளை நடத்திய தாய்மார் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் (70வீதம் வரை) பருவடையும் போது என்ன நடக்கிறது என்பதை தமது மகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இதைப்பற்றிய தெளிவான அறிவு தாய்மாரிடமும் இல்லை. ஓரளவு கல்விகற்ற சில தாய்மார்களிடமே ஓரளவு தெளிவு இருந்தது. எனினும் தமது மகளுக்கு சரியான முறையில் விளக்கப்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் ஆற்றல் கிடையாது. பெரும்பாலான தாய்மார் தமது மகளுக்குக் கூறிய அறிவுரை "இதன் பிறகு ஆண்களிடம் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்" என்பதாகும்.

விரைவான உடல் வளர்ச்சியினால் 18-19 வயதுகள் வரும் வரையும் அவளினுள் உளவியல் ரீதியாகவும் மாற்றம் ஏற்படலாம் என்பது பற்றி எதுவித அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படாதது தெரிந்தது. பெண் குழந்தைகளின் முதல் மாதவிடாய் வெளியேற்றம் தொடர்பான சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்று பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பெண்ணுடலைப் பற்றி சரியான விஞ்ஞான பூர்மான அறிவின்மையே இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அடிப்படையாகும். பெண்ணின் உடல், உள வளர்ச்சியின் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியான இந்தப் பருவ வயதில் சிறுமிகள் மத்தியில் அவர்கள் உடலைப்பற்றிய பிழையான எண்ணக் கருத்துக்களை ஏற்படுத்துவதும் பெரியவர்கள் தம் எண்ணப்படி காலங்கடந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அவர்களை உட்படுத்துவதும், பிற்காலத்தில் பெண் என்ற முறையில் அவளது உடலைப்பற்றிய பிழையான கருத்துக்கள் மிக ஆழமாக அவளுள் வேரூன்ற காரணமாயுள்ளது. அவ்வாறே தமது சகோதரனைவிட அல்லது பெண் என்ற முறையில் ஆண்களைவிட தாம் கீழானவர்கள் எனும் உணர்வு சிறுமிகளிடம் ஏற்பட இந்த சடங்குகள் காரணமாகின்றன.

மாதவிடாய் ஏற்பட்ட மகளை பல நாட்களுக்கு வீட்டுக்குள் அடைத்த வைத்திருப்பது ஏன்? மகனின் குரல் மாற்றமடையும் போது முகத்தில் தாடி, மீசை முளைக்கும் போது மகனை பல நாட்களுக்கு விலக்கி வைத்திருப்பார்களா? மாதவிடாய் ”தீட்டு” எனும் கருத்தை மகளுக்கு மாத்திரம் கொடுப்பது ஏன்?

மாதவிடாய் என்பது சூலகங்களின் முதிராத முட்டையுடன் கருப்பைச்சுவரும் இரத்தமும் சேர்ந்து வெளியேறுவதாகும். பெண் உடலில் கருப்பை இல்லாவிட்டால் குழந்தை உற்பத்தி செய்யமுடியாது. பெண்களின் மாதவிடாய் அசுத்தம் என்று கூறும், அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் பரிசுத்தவான்கள் இவ்வுலகத்திற்கு வந்தது தாய் வயிற்றின் மூலமாயில்லையா?

உணவுகளில் தடை விதிப்பதன் மூலம், முதலாவது மாதவிடாய் வெளியேற்றத்தை ஒரு நோயெனக் கருத சிறுமியைத் தூண்டுவதாகும். உண்மையிலேயே உடல் மிகத் துரிதமாக வளர்ச்சியடையும் இந்நாட்களில் வேறு நாட்களையும் விட போசாக்கான உணவுகளை சிறுமிக்குக் கொடுக்க வேண்டும். முதலாவது மாதவிடாய் ஏற்படும்போது சிறுமியை பேய் பூதங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வை ஒரு குழந்தையின் மனதில் ஏற்படுத்துவது அவளது எதிர்கால வாழ்விற்கு மிகவும் பாதகமாகும். பிற்காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்குக் காரணம் வயதிற்கு வந்த நாளில் ஏற்பட்ட தனிமையே (கெட்ட பார்வை) எனக் கருதும் பெண்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் இலங்கையின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஆய்வுநடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இவ்வாறு கருதும் பெண்களை பெருமளவில் நான் சந்திக்கநேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெறாத வறிய பெண்களாகும். தனிமை (கெட்ட பார்வை) பற்றியுள்ள ஆழமான நம்பிக்கையினால் தேவையான வைத்திய பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயல்வது சாத்தியமில்லாத ஒன்றென எனக்கு விளங்கியது. வறுமைக்கும் கல்வியறிவின்மைக்கும் அடுத்ததாக பெண் உடலைப்பற்றி ஐதீகங்கள் அவர்களது வாழ்வின் சாபமாய் உள்ளது மிகத் துயரமானதொன்றாகும். சாமத்தியச் சடங்குகளை பின்பற்றுவது ஏன் என பெருந்தொகையான தாய்மார்களிடம் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுபற்றி அவர்களிடமிருந்து கிடைத்த காரணங்களை கீழே தருகின்றேன்.

"எனக்குத் தெரியும் இந்த சடங்கள் பிழையானவை என நான் மற்ற நாட்களில் போன்றே மகளுக்கு உணவு கொடுத்தேன் எனினும் எனது அயலவர்கள் இதற்காக என்மீது மிகவும் குறைகூறினார்கள். அப்படியிருக்க நான் யாருக்கும் தெரியாமல் மகளுக்கு நன்றாக உணவளித்தேன். நேரம் பார்ப்பது பொய்யான காரியம் என நான் மகளின் தந்தைக்குக் கூறினேன். நேரம் பார்க்காதுவிடுவது சரியில்லையெனக் கூறிய அவர் தானே சென்று நேரம் பார்த்துக் கொண்டு வந்தார்."(மருத்துவத் தாதி)

"யாருக்கும் இது பற்றி அறிவிக்க நான் விருப்பப்படவில்லை. எனது அண்ணன் கொண்டாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார். அதனாலேயே கொண்டாட்டம் நடத்த நேர்ந்தது." (தொழிலாளப் பெண். இவளின் மகளுக்கு தந்தை இல்லை)

"நான் சடங்குகளை நம்புவதில்லை. எனினும் எனது மாமியாரின் தொந்தரவினால் இதைச் செய்யாமல்விட முடியவில்லை"(ஆசிரியை)

"எமது வாழ்வில் மகிழ்ச்சியான வைபவங்களில் பங்குபெற வாய்ப்பில்லை. எமக்கு இருந்திருந்தென்றாலும் கொண்டாட்டங்கள் தேவை. அதனாலேயே நாம் மகள் வயதுக்கு வந்ததை கொண்டாடினோம்." (இதைச் சொன்னவர் ஒரு தந்தை)

சாமத்தியச் சடங்குகளை விமர்சிக்கதவர்கள் கூட நேர்மையாக அவற்றை எதிர்க்காததும், பிழையான கருத்துக்களை நிராகரித்துப்போகும் சக்தியும் தைரியமும் அவர்களுக்கு இல்லாததும் மேற்குறிப்பிட்ட அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வருகின்றது.

சாமத்திய சடங்கு வைபவங்களுக்கு அழைக்கப்பட்டு அவற்றில் பங்கு பற்றிய பலருடன் இதுபற்றிக் கருத்துக்கேட்டேன். அவர்கள் சொன்னவற்றைக் கீழே தருகின்றேன்.

"மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என ஆண்களான எம்மை சடங்குக்கு அழைப்பது எத்தனை வெட்கங்கெட்ட செயலாகும். ? தமது மகளைப் பற்றிய இத்தகைய விடயத்தை பெற்றார் இன்னொருவருக்கு சொல்வது எப்படி? எமது சமூகம் எவ்வளவு தூரம் சீரழிந்து விட்டது என்பதனையே இது காட்டுகின்றது."(விவசாயி)

சாமத்திய வைபவங்களை நடத்துவதன் முதற்காரணம் பணமும் பரிசுகளும் சேகரிப்பதற்காகும். பணத்திற்கும் வெளிப்பகட்டுக்கும் நமது சமூகம் எவ்வளவு தூரம் உட்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. (தொழிலாளி)

"பெரும்பாலானவர்கள் தமது குறைபாடுகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே சாமத்தியச் சடங்கு வைபவங்களை நடத்துகிறார்கள். மகளைக் காரணமாய்க் கொண்டு பரிசுகள் சேகரிப்பதை அருவறுக்காமல் செய்கிறார்கள்." (ஆசிரியை)

"சுருங்கக் கூறின் சாமத்தியச் சடங்கென்பது சுருக்கமாக பொருள் சேகரிப்பதற்காக செய்யும் ஒரு ஒரு காரியமாகும். பெண் மகளை இப்படியாக விற்கும் ஒரு சமூகம் ஏன் பெண்ணின் ஒழுக்கத்தை இவ்வளவு தூரம் தேடுகிறது? ஏழைப் பெண்கள் விபச்சாரத்திற்கு செல்வது இயலாமையினாலாகும். சாமத்தியச் சடங்கு நடாத்தும் சமூகம் ஏன் விபச்சாரியை அசிங்கமாகப் பார்க்கின்றது. பெண்மகளை முதன்மைப்படுத்தி பொருள் பண்டம் பெற்றுக்கொள்வது விபச்சாரம் இல்லையா?"(தொழிலாளப் பெண்)

பெண்ணைப் பற்றியும் பெண் உடலைப்பற்றியும் நிலவிடும் கருத்துக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அதேபோல் சாமத்தியச் சடங்குகள் மூலம் வெளிப்படுவது எமது சமுதாயத்தில் பெண்கள் பற்றியுள்ள பரஸ்பர விரோதமான சிந்தனையாகும். சாமத்தியப்படுவது தீட்டானது. அசுரத்தனமானது என்பது வெறும் நம்பிக்கையாகும். அப்படி நம்புவர்களே அதன்பிறகு அதற்காக கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.

உடல் சம்பந்தமான இத்தகைய பித்தலாட்டங்களுக்கு இளம் பெண்பிள்ளைகளை உட்படுத்துவது மிகவும் அநீதியானதாகும். வளர்ந்து வரும் பெண் பிள்ளைக்கு பெற்றோரினால் ஆற்றப்படவேண்டிய கடமைகளிலொன்று உடல் - உள வளர்ச்சி பற்றி சரியான வயதில் (அவளது வளர்ச்சி வெளிப்படையாகத் தெரியும்போது, சாதாரணமாக அவளது வயது 11ஆக இருக்கும் போது) முறையாக சொல்லிக் கொடுப்பதாகும். முதலாவாது மாதவிடாய் வெளியாகி தமது வாலிபப் பருவத்தைத் தாண்டுமளவும் (வயது 19 -20) உடலில் ஹோமோன் மாற்றமடைவது நடைபெறும். இதனால் சிறுமியொருத்திக்கு பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சனைகள் ஏற்பட இடமுண்டு. இந்தப்பிரச்சனைகளை விளங்கிக்கொள்ளவும் அவற்றிற்கு முகம் கொடுக்கவும் அவளுக்குள் அவளது உடல்பற்றி, விசேசமாக பாலுறுப்பின் அமைவு பற்றியும், குழந்தையுற்பத்தி செயற்பாடு பற்றியும் முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கம் இருக்க வேண்டும். அவளை இது தொடர்பாக அறிவூட்டுவது விசேடமாக பெற்றோர், ஆசிரியர்களது கடமையாகும். தமது உடலைப்பற்றிய முறையான, சாதகமான, நன்மையான கருத்துக்களை சிறுமிகளிடம் ஏற்படுத்துவது, தன்னம்பிக்கையுடனும் ஆத்ம கௌரவத்துடனும் கூடிய சுயாதீனமான பெண்கள் சமூகமொன்றை இந்நாட்டில் உருவாக்குவதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.

இன்று உலகெங்கிலுமுள்ள பெண்கள் சர்வதேச அளவில் தமது ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்புகிறார்கள். பெண் உடல் பற்றிய எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் நவீன விஞ்ஞானத்தின் மூலமாயும் பெண்விடுதலை இயக்கத்தினூடாகவும் வெற்றிகரமாக உடைத்துள்ளார்கள். இத்தகைய சகாப்த்தத்தில், சிறுமியொருத்திக்கு முதன்முதல் மாதவிடாய் வெளியேற்றம் ஏற்படுகையில் சடங்குகள் செய்வது அர்த்தமில்லாதது. பெண் உடல் சம்பந்தமான வெற்றுத்தனமான சாமத்தியச் சடங்குகள் எவ்விதத்திலும் அவசியமற்றவை.

- பெண் உடல் ஐதீகங்களிலிருந்து -

Montag, August 18, 2003

பலவீனமாகக் கருதப் பட்ட பலங்கள்

- வைத்திய கலாநிதி எழுமதி -

அந்தக் காலத்தில் இருந்து 90 ஆண்டு காலப்பகுதிவரை பெண்ணியம் பற்றிய ஆய்வு நூல்களும், பொதுவான அபிப்பிராயங்களும் பெண்களுக்கு இரண்டாம் இடத்தையே ஒதுக்கியுள்ளன. ஆண்கள் வேலை செய்பவர்களாகவும், பெண்கள் வெறுமனே சமைப்பதும், படுக்கையப்பகிர்வதும்தான் என்ற ரீதியில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று பெண்கள் விமானம் ஓட்டுகின்றனர். விண்வெளிக்குச் செல்லுகின்றனர். களத்தில் ஆண்களுக்குச் சரிக்குச் சமனாக நின்று எதிரியை எதிர்த்துச் சமராடுகின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்களாகவும், வைத்திய நிபுணர்களாகவும், கட்டிட பொறியிலாளர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் வயலில் ஆண்களுடன் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுச் செய்கின்றனர்.

உடலைமப்புரீதியாகவும், உடற்றொழில்ரீதியாகவும் ஒரே வயதுடைய ஆண்பெண் இருபாலாரையும் ஒப்பிட்டுப்பார்க்கும் இடத்தில் உயரம், நிறை, பலம் ஆகியவற்றில், ஆண்கள் பெண்களைவிட கூடியவர்களாகவே உள்ளனர். மேலும் பெண்ணின் வாழ்க்கையில் பிரத்தியேகமாக ஏற்படுகின்ற உடற்றொழிலியல் மாற்றங்களான மாதவிடாய் வருதல், மகப்பேறு அடைதல் ஆகிய விடயங்களையும் பெண்களின் பலவீனங்களாகப் பார்க்கின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் மனதில் நிறுத்திப் பெண்களை 2ம் இடத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் இக்காரணங்கள் அனைத்தும் பெண்களின் பலவீனம் அல்ல. அவை பலம் என்று வாதிடும் காலம் வந்துவிட்டது.. இதற்குப் பல ஆய்வுகளும் உறுதுணையாக நிற்கின்றன.

ஹெலன் பிஸர் ( Hellen Fisher ) என்ற பிரசித்தி பெற்ற அமெரிக்க மனித வர்க்கவியல் நிபுணர் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாகப் பெண் 21ம் நூற்றாண்டின் தலைவியாக வருவாளென்று எதிர்வு கூறுகின்றார். மேலும் அவர் தனது ஆய்வு நூலில் உளவியல் ரீதியாக ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பலம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் தலைமைப்பதவியை வகிக்கத் தகுதிபெற்றவர்கள் என்றும் கூறுகின்றார். பெண்களின் தலை சிறிதாக இருப்பதனால் மூளையும் ஒப்பீட்டளவில் ஆண்களின் மூளையைவிட சிறிதாக உள்ளது. ஆனால் மூளையினுள் காணப்படுகின்ற நியூரோன்கள் எனப்படும் நரம்புக்கலங்களின் எண்ணிக்கை பெண்களில் கூடுதலாக உள்ளது. மேலும் ஆண்களின் குருதியில் ஈமோகுளோபினின் அளவு கூடுதலாகவும் பெண்களின் குருதியில் இமினோகுளோபினின் அளவு கூடுதலாகவும் உள்ளது. இதனைப் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் தங்களின் பணியை எதுவித ஓசையுமின்றி செய்து முடிப்பதினை வைத்தே கண்டு கொள்ளலாம்.

1995ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் ஓர் பரீட்சார்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்பு பயிற்சி எதிலும் ஈடுபடாத 41 பெண்கள் (இதில் மாணவிகள், வழக்கறிஞர்கள், வியாபாரநிலைய ஊழியர்கள், ஆறுமாதகாலத்திற்கு முன்பு, மகப்பேறு அடைந்த தாய்மார்கள் போன்றோர் அடங்குகின்றனர்) யாவரும் ஐந்திலிருந்து ஆறுமாதகாலப் பயிற்சியில் 34 கிலோ கிராம் பாரத்தினை தோளில் சுமந்தபடி 3 கிலோமீற்றர் தூரம் ஓடுவதற்கும், 45 கிலோகிராம் எடையைச் சுமந்தபடி நிலத்தில் இருந்து எழும்புவதற்கும் கற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களைப் போன்ற தரத்தில் உள்ள ஆண்களினால் அப்படி முன்னேற முடியவில்லை என்பதனையும் அப்பாPட்சார்த்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 1964 தொடக்கம் 1995 வரையான காலப்பகுதியில் மரதன் ஓட்டத்தில் பெண்களின் சாதனை விகித உயர்வு 32 வீதமாகவும், ஆண்களின் விகித உயர்வு 4.5 வீதமாகவும் காணப்பட்டது. இதுவும் பெண்களின் பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தினை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும்.

இவ வாறு ஆய்வுகளும் பரீட்சார்த்த செயற்பாடுகளும், பெண்களின் பலத்தினை வெளிக்கொண்டு வந்திருக்கும் இவ வேளையில் பெண்களும் பல பரிணாம வளர்ச்சிகளைத் தம் செயற்பாடுகளுடாகக் காட்டிவருகின்றனர். எனினும் இன்றும்கூட எம் மத்தியில் பெண்களைப் பலவீனமானவர்களாகவும், இரண்டாந்தர நிலையிலுள்ளவர்களாகவும் பார்க்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமாற வேண்டுமாயின் முதலில் பெண்கள் தம்பலத்தினை அறிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக என்னென்ன விடயங்களை வைத்துப் பெண்களைப் பலவீனமாக எடை போடுகின்றனர் என்று அறிந்து அவை, ஏன் பலவீனமான விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன என்பதையும் நோக்க வேண்டும். மேலும் இவ விடயங்கள் யாவும், இன்று பலமானவையாகச் செயற்படுகின்றன என்ற விஞ்ஞானாரீதியான ஆய்வு உண்மையையும் அறிந்திருக்க வேண்டும்.

முதலாவதாக மதக் கோட்பாடுகள் பெரும்பாலும் பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்பட்டவள் என்றும் ஆணுக்கு அடிமையானவள் என்றும் சித்தரிக்கின்றன. சிவன், பிரம்மா, விஸ்ணு, முருகன், யேசு, அல்லா, புத்தர் எனக் கூறப்படும் தெய்வங்கள், மதத்தலைவர்கள், மதப்போதகர்கள் அனைவருமே ஆண்கள். ஆண்கள் தலையெடுத்த சமூக அமைப்பில் முதன்மையான தெய்வத்தையும், ஆண்களாகவே படைக்க முடிந்தது. இதனால் பெண்களின் மனதிலும் நினைவிலும் கருத்தியல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் நாம் தரம் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடிந்தது.

இன்றும் மக்களிடையே பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள புராண இதிகாசக் கதைகளும் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவே படைக்கின்றன. உதாரணமாக பஞ்சபாண்டவர்கள் திரௌபதியைத் தம் மனைவியாகக் கொண்டிருந்தனர். ஆனால் அவளுக்கு அவர்களில் ஒருவரை மட்டும் கணவனாக ஏற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது. குழந்தைப்பருவத்தில் ஆணும் பெண்ணும், சரிசமமாக வளர்கின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் பூப்பெய்துகின்றபோது உடல், உள ரீதியாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வருவதனால் சமூகம் அவளின் செய்ற்பாடுகளை சுதந்திரத்தினை மட்டுப்படுத்துகின்றது. இதன் ஒரு அங்கமாகவே அந்தக் காலத்தில் பெண் பூப்பெய்தினால் வீட்டை விட்டு சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறாள். அதன் உச்சக்கட்டமாக மாதவிடாய்க் காலத்தின்போது அவள் வாழும் வீட்டில் இருந்துகூட தூரத் தள்ளிவைக்கப்படுகின்றாள். எதுவித பணியுமின்றி வீட்டின் ஒரு மூலையில் கைதிபோல் அடைக்கப்பட்டிருக்கிறாள். இதற்கு குற்றம், துடக்கு என்ற சாட்டுக்களும், இரத்தப் போக்கு இருப்பதனால் ஓய்வு தேவை என்ற காரணமும் காட்டப்படுகின்றது. ஆனால் இன்று பெண்கள் மாதவிடாயின்போது நாளாந்தம் செய்து கொண்டு வந்த சகல பணிகளையும் இடைநிறுத்தாது, செய்கின்ற நிலையினைக் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது என்பதனை விஞ்ஞானாரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுகின்றபோது நான்கு அல்லது ஐந்து நாட்களிற்கு இரத்தப் போக்குக் காணப்படும். இது காயத்தின்போது ஏற்படுகின்ற குருதி இழப்புப் போல சடுதியாக ஏற்படுகின்ற குருதி இழப்பு அல்ல. ஓமோன்களின் செயற்பாட்டால் ஒரு மாதகாலமாகப் பருமன் தடித்து வழமைக்கு அதிகமாக குருதி விநியோகத்தைப் பெற்றிருந்த கருப்பை உட்சுவர் உடைந்து உதிர்வதனாலேயே இரத்தப் பெருக்கு ஏற்படுகின்றது. இதன்போது ஐந்து நாட்களுக்கும் சேர்த்து ஆகக் கூடுதலாக 300 மில்லிலீற்றர் இரத்தமே வெளியேறுகின்றது. எந்த ஒரு பெண்ணும் 18 வயதிற்கு மேல் 500 மில்லி லீற்றர் இரத்தத்தை உடலில் எதுவித பாதிப்பும் இன்றி இழக்கலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மையாகும். இந்த அடிப்படையில்தான் இரத்ததானம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ வாறு இரத்ததானம் செய்யப்படுகின்றபோது, உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இவ விழப்பிற்கு ஈடாக, புதிய இரத்தம் இரு கிழமைகளில் உருவாகி விடுகின்றது. இதனால் இரத்தத்தில் புதிய அணுக்கள் சேருகின்றன. இதேபோல் பெண்களும், மாதாமாதம் இரத்தத்தை வெளியேற்றுகின்றபோது அவ விரத்தம் இருகிழமைகளில் ஈடு செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதனால் உடல் புதுத்தெம்பு பெறுகின்றது. ஆகவே பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது ஓய்வெடுக்காமல் வேலை செய்யக்கூடிய உடல் உளபலம் உண்டு என்பதே உண்மையாகும்.

அடுத்ததாக மகப்பேற்றினை எடுத்துக் கொள்வோம். இங்கு பெண்ணானவள் ஒரு புதிய உயிரை பத்துமாதங்கள் தன்னகத்தே சுமந்து பிரசவ வேதனையைத் தாங்கி அவ வுயிரை வெளிக் கொணர்ந்து உலகிற்குத் தருகின்றாள். பின் இக்குழந்தையின் வளர்ப்புக்காக சிறுகாலம் தன் கடமையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இக்காலத்தில்தான் ஆண் கடமையில் முன்சென்று உயருகின்றாhன். ஓர் உயிரைப் பிரசவிப்பது என்பது பெரிய கடமை. ஆண்களிற்குக் கிடைக்காத பெரும் பாக்கியம் பெண்களுக்குக் கிடைக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பலவீனமாகப் பார்க்காது, பலமாகப் பார்க்க வேண்டும். மேலும் மாதவிடாய் நிற்றலையும் பெண்ணின் ஓர் பலவீனமான அறிகுறியாகப் பார்த்து வந்துள்ளனர். ஏனென்றால் மாதவிடாய் நிற்கின்றபோது ஓமோன்களின் சுரப்பு குறைவதனால் உடல் உள நோய்கள் ஏற்படுவதனால் அவர்கள் வேலை செய்வதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று காரணம் காட்டி ஓய்வில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இன்றைய உலகில் இதனைப் பல பெண்கள் பொய்யாக்கி உள்ளனர். மேலும் மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு பெண்களின் ஆற்றல் பல மடங்காக அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதவர்க்கவியல் நிபுணர்களான அற்றின்சீல்மான், நான்சீரானர் ஆகியோர் 1970இல் பழ ங்குடி மக்கள் மத்தியில் மேற்கொண்ட பல ஆய்வுத்தரவுகளின்படி அங்கு அவர்களின் நாளாந்த உணவில் 70 வீதமான உணவினைப் பெண்கள் சேகரித்து வருகின்ற தாவர உணவும், 30 வீதமானது ஆண்கள் வேட்டையாடி வரும் மாமிச உணவும் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஆனால் ஆண்கள் வேட்டைக்காரர்களாகவும், பெண் குகையில் இருந்து ஆண்களுக்கு அடிமை வேலை செய்வதாகவும், ஆதி மனித வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை இன்றைய ஆய்வாளர்கள் நிராகரிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் திவி இன பழங்குடி மக்களில் பெண்கள்தான் வேட்டைக்குச் செல்கின்றனர். அதேபோல் கொங்கோவில் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடிமக்கள், தங்கள் வேட்டைப்பணியில் முழுக்குடும்பத்தினையும் ஈடுபடுத்துவதாக கிறிஸ்நைற் என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார். மேற்குலகச் சம்பிரதாயங்களின்படி வேட்டைக்குரிய தெய்வங்கள் யாவரும் பெண்களாகவே இருக்கின்றனர்.

இறுதியாக பெண்ணில் ஏற்படுகின்ற சில தவிர்க்க முடியாத உடற் தொழில் மாற்றங்களினால் அவள் கடமையில் பின்தங்கும்போது அதனைப் பலவீனமாகப் பார்க்கும் நிலைதான் அன்று இருந்துள்ளது. இன்று இதனைப் பலமாகப்பார்க்கும் காலம் தொடங்கிவிட்டது. இதற்குப் பெண்கள் அனைவரும் தம்மிடம் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளைக் களைந்து தம் ஆற்றல் திறனையும் முற்போக்குச் சிந்தனையையும் வளர்க்க வேண்டும். அத்துடன் அறிவியல்hPதியாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ வாறு செயற்படும் போது பெண்கள் ஆண்களிற்குச் சரிசமனான பலமுள்ளவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

- வைத்திய கலாநிதி எழுமதி -

Mittwoch, August 13, 2003

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும்.......... கருணாகரன்.

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும்

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.

பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் இன்று தீவிரமான நிகழ்நிலையிலிருக்கின்றன. அல்லது சமூக நிகழ்ச்சித் திட்டத்திலிருக்கின்றன. பெண் எனும் அடையாளத்தை வைத்து சமூகம் பெண்கள் மீது விதிக்கும் நிபந்தனைகளை வெற்றி கொள்ளவும் கூறிய சிந்தனை விழிப்பும் செயற்பாடும் பெண்களிடையே வேண்டப்படுகிறது. இது பெண்களிடம் மட்டுமின்றி முழு சமூகத்திடமும் வேண்டப்படுகின்றது என்பதே பொருத தமானது. ஏனெனில் ஒடுக்கப்படுவோருடைய விடுதலை என்பது ஒடுக்குவோரினது விடுதலையுமாகும் என்ற உண்மையின் அடிப்படையிலானதாக இது அமைகிறது.
இன்று நமது பெண் நிலைப்பாடு எவ வாறிருக்கிறது. பெண் வாழ்வு எவ வாறிருக்கிறது என்று பார்ப்பது முதலில் முக்கியமாகிறது.

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.

இந்த நிலைபாட்டிலும் செயற்பாட்டிலும் இயங்கும் பெண்கள் பெண் சமத்துவம். பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளிலும் சமூகப் பிரக்ஞையிலும் சமூகமாற்றத்திலும் ஆர்வம் கொண்டோராகவும் தெளிவுடையவராகவும் இருக்கின்றனர். சிந்தனை விழிப்பு மட்டுமன்றி செயற்திறன் உடையோராகவும் இருக்கின்றனர்.
சமூகத்தின் பெரும் பகுதியாக பெண்கள் இருப்பதுபோல கல்வி கற்கும் நிலையிலும் பெண்களே இன்று கூடுதல் இடத்திலிருக்கிறார்கள். கல்வி மூலமான வேலைகளில் ஆரம்ப நிலை. இடைநிலை உத்தியோகம் பார்க்கும் பெண்களே அதிகமாக இருந்த நிலைமாறி உயர்நிலைகளிலும் தொழிநுட்பவியலிலும் இன்று அவர்கள் இடம் பிடித்து வருகிறார்கள். உடல் உழைப்பாளர்களாக விவசாயம் மற்றும் கூலி உழைப்பாளர்களாக இருக்கும் பெண்களும் தமது உரிமைகளிலும் உழைப்பு முறைகளிலும் தெளிவு பெற்று வருகின்றார்கள். சுமூக நிலைமை இதுவாக இருந்தாலும் பெண் சமத்துவம், பெண்விடுதலை குறித்த பெண்ணியம் பற்றிய தெளிவு அறிவும் சமூகமாற்றம் குறித்த சிந்தனையும் இந்தப் பெண்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே நிலைமையுள்ளது.

மரபுகளால் கட்டுண்டு, பண்பாட்டு இறுக்கங்களுள் சிக்குண்டு அவற்றை விட்டு வெளிவரத் தயங்கும் மனோ நிலையுடையோராகவே இருhகள் இருக்கின்றனர். போராடும் தரப்பினரும் பெண் விடுதலை, பெண்ணியம் குறித்துச் சிந்திப்போரும் ஒருகுறியீடாகவே இன்றும் நமது சூழலில் இருக்கின்றனர். இது நமக்கும் புதிதல்ல. எந்த நல்ல விடயங்களிலும் சீரியலான செயற்பாடுகளிலும் நமது சமூகம் அப்படித்தானிருக்கிறது.

அக்கறை பூர்வமாக இயக்கம் தரப்பு குறைவாகவும் மந்தத்தனமுடைய தரப்பு கூடுதலாகவுமே உள்ள சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாமென்பதால் நமது சூழல் அப்படித்தானிருக்கும்.
நமது கல்வி நமது சூழல் பற்றிய அறிவையோ அக்கறையையோ வழங்குவதில்லை. அதுபோல் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் கூடிய, தன்நிலை பற்றி தூர நோக்குடன் சமூகவியல் பண்பில் சிந்திக்கக்கூடிய ஆற்றலையோ பண்பையோ வழங்குவதுமல்ல. இந்நிலையில் கல்விக்கப்பாலன பொது அறிவூட்டல் சமூக அக்களினூடாகவே நாம் புதிய மலர்ச்சியை, சமூக அக்கறையை, தேடலை உருவாக்கவேண்டியுள்ளது. நமது எல்லா வகையதன சமூக வேலைத் திட்டங்களிலும் அவை முன்னைடுக் கப்பட்ட முறைகளிலும் இதனை நன்றாக அவதானிக்கலாம்.

சமூக சிந்ததனை என்பதே நிறுவனமயப்பட்ட கல்விக் கப்பாலான தனித்த புறம்பான ஒரு சங்கதியாகவே எப்போது மிருக்கிறது. அதேவேளையில் அத்தகைய புறநிலைச் சிந்தனையை செயற்பாட்டு ஆற்றலை நமது கல்வியும் அது சார்ந்த நிறுவனங்களும் ஏற்பதில்லை. அதேவேளை அதை விரோத நோக்குடனேயே பார்க்கின்றது.

நமது கல்வி தவிர நம் பண்பாடும் மரபுகளும் கூட இத்தகைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டேயிருக்கிறது. வாழ்வை கல்வியும் பண்பாடும் கணிசமான அளவு தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதால் இவற்றின் தாக்கம் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் முழச்சமூகத்தையும் பாதிப்பதுடன் பெண் வாழ்வையும் அதிகம் தாக்கத்துக்குட்படுத்துகின்றன. மரபின் குறைபாடுகளை உடைக்கக்கூடிய வல்லமையோடு துணிவையோ நமது கல்வி பெண்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே வழங்கவில்லை. ஆதே வேளை கல்விக் கருத்து நிலையிலும் பெண்ணை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாகவே வர்னிக்கப்படுகின்றது. கருதும்படி வைத்திருக்கின்றது. சமூக விதி முறைகள் நியமனங்கள் மரபுகளிலும் பண்பாட்டம் சங்களிலும் பெண் அடுத்தநிலைப் பிறவியாகவே கண்ப்பிடப் படுகிறாள். இவற்றை மீறும் துணிவைப் பெறும்விழிப்பு நிலைக்கு நாம் முழப்பெண்களையும் முழச் சமூகத்தையும் தயார்படுத்தவேண்டும். இந்தத் தயார்ப்படுத்தல் சிறு அளவிலாக இயங்கும் பெண் சிந்தனை வட்டத்தை மேலும் அகலமாக்கி முழு மனிதரிடத்தும் கலப்பதாகவேண்டும்.பெண் அடையாளத்தால் ஒடுக்கப்படும் பெண் மட்டும் தெளிவுபெற்றால் போதாது. ஓடுக்கும் முழச் சமூகமும் இந்தத் தெளிவைப் பெறவேண்டும். புதிய புரட்சிகர மாற்றத்துக்கான மனோ நிலைக்கு வளரவேண்டும். ஜனநாயகத்தின் உயரிய அம்சங்களால் புரிந்துகொண்டு அந்தத் தளத்துக்கு தன்னை விரிக்கும் பண்பைப் பெறவும் வேண்டும்.
போராடும் பெண் சமூகச் சிந்ததனையிலும் செயற்திறனிலும் தேசமாக முழமைபெற்று விரிந்திருக்கிறாள். வீட்டுக்குள், சுவர்களுக்குள், வேலிகளுக்குள் முடக்கப்பட்டும் முடங்கியுமிருந்த நிலையை விட்டு சமூகமாக, தேசமாக பரந்துவிட்டாள். சகல நிலைகளிலும் சமத்துவமாக ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வருகிறாள். இந்த வெளிப்பாட்டினூடகா அவள் செய்து வரும் செயற் பிரகடனத்தின் பின்னும் நாம் மரபுகளின் பின்னும் பண்பாட்டுக் குறைபாடுகளின் பின்னும் வழமைகளின் பின்னும் இன்னும் இருண்ட பதுங்கு குழிகளை எத்தனை நாளைக்குத்தான் மனச்சாட்சிக்கு விரோதமாக வைத்திருக்கமுடியும்.

பாரம்பரியங்களிலும் மரபு வழமை பண்பாடு சடங்கு என்ற வளையங்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆதரவான கல்வித்தடுப்புச் சுவர்களாலும் சிறையிடப்பட்டிருக்கும் பெண் வாழ்வை மீட்கும் நடைமுறையின் தேவைபற்றிய தெளிவே இன்று எல்லோரிடத்திலும் வேண்டப்படுவது. பெண் விடுதலை என்றால் என்ன என்று அறியாத, ஏன் என்று உணராத நிலையே பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ளது. பலரிடம் ஒருவித தவறான புரிதலும் விரோத மனப்பாங்குமே காணப்படுகின்றது.

நமது அறிவென்பது எத்தகைய பண்பையும் நாகரிகத்தையும் நமக்கு வழங்குகிறறது என்ற கேள்வியை பலரும் எழுப்புவதில்லை. ஓருவரை அடிமைப்படுத்துவதோ, அடுத்தநிலையில் வைத்திருப்பதோ கருதுவதோ எமது பண்பில் இருந்து எம்மைக் கீழிறக்கிவிடுகிறது. எம்மை நாகரிகமற்றவர்களாக்கி விடுகிறது.எம்மை அறிவற்றவர்களாக்கி விடுகிறது.

ஓரு அறிவார்ந்த சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகம் தன்னுள்ளிருக்கும் குறைபாடுகளை நீக்கிவிடும். இதற்குப் பிரதானமாக வேண்டப்படுவதும் சிந்தனையும் சீரிய செயற்பாடும். உண்மையைக் கண்டறிவதும் நிலைமையை உணர்ந்து கொள்வதும் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதும் அச்சமூகத்திற்கு அவசியமானது. நாம் இன்று இத்தகையதொ முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். புதிய வாழ்வுக்கான தொடக்கத்தில் புதிய பண்பாட்டுக்கான வேலைத்திட்டத்தில் இருக்கின்றோம்.

போராட்டமும் யுத்தமும் இருக்கும் தளைகளை அறுத்து புதிய வாழ்வை, விடுதலையைத் தருமென்பார்கள் ஆனால் எமது சூழலின் நிலையில் ஒருபக்கம் இந்த உண்மையைக் கொண்டிருந்தாலும் இன்னும் பெண் தொடர்பான அணுகுமறையிலிருந்து அதன் பாரம்hரியத் தன்மையை விட்டு புதிய பாதையில் பயணிக்க்கத் தயங்குகிறது என்பதே தோன்றுகிறது.
யுத்தம் சமூக நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும் நமது புலம்பெயர்வு ஏற்படுத்திய ஈடுகட்டல் எனடபது மீண்டும் பழமைகளையும் மரபையும் பேணிக்கொள்ள ஒருவகையில் இச்சமூகத்துக்கு உதவியளிக்கிறது. சீதனம் பெண் ஒரு அழகுப் பொம்மை. பெண் ஒரு இரண்டாம்தரப் பிரஜை என்ற மனப்பாங்கை இன்றும் காப்பாற்றிவருகிறது.
பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றிய புதிய வியாக்கியானங்களையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் உண்மையையும் கண்டுகொள்ள விருப்பவதா, காணவேண்டியில்லாத நிலையையே இவை தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இப்போது நமக்குள் முக்கிய பணியதார்த்தத்துக்குப் பொருத்தமான புதிய கருத்தூட்டல் உண்மை உணர்த்தல் விழிப்பும் ஆற்றல் வெளிப்பாடுமேயாகும்.

ஓருபக்கம் தேசமாக விரிந்திருக்கும் பெண் விடுதலை சிறகசைக்கும் பெண் சமூகமாய் மலர்ந்திருக்கும் பெண் இன்iனாரு பக்கம் கலாச்சாரம் என்ற வளையங்களுக்குள் ஒடுங்கிய பெண், மரபு என்ற வட்டங்களுக்குள் சுரண்டுகொண்டிருக்கும். பெண், வழமை னெ;ற சூத்திரத்துள் சுழலும் பெண், இந்த இரண்டு நிலையிலும் சமகாலத்தில் கொண்டிருக்கும் நமது சமூகம் எப்படி இனிப்பயணிக்க வேண்டும் என்பதே நமக்குள்ள தேர்வாகும்.

பெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி

ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது.
இன்றைக்கு சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்பூடகம், எனப் பல்வேறுபட்ட சகல கலாச்சாரச் செயற்பாட்டுத் தளங்களிலும் பெண்கள் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக்கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானம் எடுத்தல், ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், தலைமை ஏற்றல் போன்ற செயற்பாடுகளில் இன்றைக்கு பல பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டில் நிலவிய போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு தளத்தில் ஓரளவு இடைவெளி ஏற்படுத்த}ய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கண் முன்னாலேயே நாம் பார்க்கிறோம். இங்கே பெண்களின் பங்களிப்புக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்கள் வெளியே வந்து செயற்படுவதற்கான சாதகமான நிலை ஏற்படுகிறது. இவர்கள் தாம் சார்ந்த துறைகளின் செயற்பாடுகளில் இந்த கலாசாரத்தை எவ வகையில் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த கலாச்சாரத்தின் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகிறது. பெண்களின் செயற்பாடுகளினூடாக கணிக்கப்படுகின்ற இந்த கலாச்சாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பும் பெண்களிடமே உள்ளதை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும . இந்தப் பொறுப்பை எத்தனை பெண்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கலாச்சாரத்தின் தன்மை சரியானதுதானா என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். இந்த விதமாக அமைந்து விட்ட இந்த கலாச்சாரத்தின் ஆடம்பரங்கள் பெண்களுக்குத் தேவையா? என்ற கேள்வி இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்ற கருத்தாகிறது.

பட்டாடைகளும் நகைகளும் ஆடம்பரமான சடங்குகளும்தான் எமது கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறியாமையிலிருந்து நமது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நகையும் பட்டாடையும் ஆடம்பரமான வாழ்வும்தான் தனக்குப் பெருமைதரும் என்று பெண் நினைப்பாளேயானால் அது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை. தன் கல்வியாலும் தன்னம்பிக்கையாலும் ஆளுமையாலும் மனிதப் பண்புகளாலும் ஒரு பெண் நிமிர்ந்து நிற்பாளேயானால் அதுதான் சமூகத்தில் அவளுக்கு பெருமை தரும் விடயம குறைந்த பட்சம் இந்த விதமாய் நிமிரும் பெண்கள் என்றாலும் தமது வாழ்வை எளிமையானதாகவும் ஆடம்பரமற்றதாகவும் ஆக்கிக்கொண்டால் சமூகத்தில் மற்றவர்கள் பின்பற்றகூடிய முன் உதாரணமாக திகழ்பவர்களாக இருக்க முடியும்.
போரினால் நலிவுற்றிருக்கும் நமது தேசத்தின் இன்றைய தேவை ஆடம்பரங்களை துறத்தல். எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தல். இது சாத்தியமாவது பெண்களின் செயற்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.
சமூகத்தில் எந்தப்பிரச்சனை என்றாலும் அதற்கு முகம் கொடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. அநேகமான பெண்களின் வாழ்நிலை சராசரிக்கும் கீழாகவே அமைந்துள்ளது. போரின் நடுவேயான பல இழப்புக்களை தாங்கியவர்களாகவே இவர்களில் பலர் இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையில் எமது கலாச்சாரங்களின் ஆடம்பரங்கள் சுமைகளாக அழுத்துவதை பெண்கள் அனுமதிக்கக் கூடாது. எமது இயற்கை வளங்களுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் எமது கலாச்சாரத்தை அமைக்கத் தவறினால் எமது இனம் பாரிய அழிவை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாமல் இருக்கும்.
பொதுவாகவே பெண்கள் ஆடம்பரமோகம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் பலவிடையங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். பெண்ணே பெண்ணிடமிருந்து விடுதலை பெறவேண்டும் பெண்ணே பெண்ணை சமமாய் நடாத்த முன்வரவேண்டும்.
சகமனிதரை நேசிக்கும் மனிதப் பண்பையும் எளிமையான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் எமது கலாச்சாரமாக பெண்கள் ஏற்றுக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகிறது.

- தாமரைச்செல்வி -

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்.

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்களின் ஆளுமை

பெண்கள் காலம் காலமாக அடக்குமுறைக்குள்ளாவது பற்றியும், உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியும் இன்று பல்வேறு தரப்பினரும் விழிப்படைந்து வருகின்றனர். இதனையொட்டிய பல திட்டங்களும், செயற்பாடுகளும் தனிநபர்களாலும், சிறு குழுக்களாலும், நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் இவ விடயத்தில் சற்று விழிப்படைந்துள்ளது.
பால்நிலைக்கல்வி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பனவும் நடந்தேறி வருகின்றன. இதனால் பெண்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளதுடன், தமது உரிமைகளைப் பெறும் வகையில் தம்மை முன்னேற்றவும் துணிந்துள்ளனர். மாற்றங்கள் படிப்படியாக நிகழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் இணைந்து போர்க்களம் செல்கிறார்கள் என்ற விடயம் தமிழீழ எல்லைக்குள் வாழ்பவர்கள் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் ஏன் உலகநாடுகள் முழுவதும் அறிந்தவோர் விடயமாகும்.
ஆனால் இவர்களின் வளர்த்தெடுப்புமுறை பற்றியோ, பயிற்சி பற்றியோ, களத்தில் போரிடும் திறன் பற்றியோ இவர்களின் ஏனைய செயற்பாடுகள் பற்றிய ஆழ அகலங்கள், ஒட்டுமொத்த ஆளுமைவிருத்தி பற்றிய விடயங்கள் வெளித்தெரியாத தொன்றாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் வடக்கு, கிழக்கிலுள்ள சிலஇடங்களில் நடத்திய தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வில் முதன்முறையாக தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்த விளைந்துள்ளனர்.
இந்நிகழ்வு விடுதலைப்புலி உறுப்பினராக இணைந்து பல சாதனைகள் செய்து முதல் வீரச்சாவடைந்த 2ம் லெப். மாலதியின் நினைவு நாளான ஒக்டோபர் பத்தாம்திகதி நடாத்தப்பட்டது. இந்நாளையே விடுதலைப் புலிகள் தமிழீழ பெண்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இத்தினம் பற்றிய செய்தியே இதுவரை காலமும் பலராலும் அறியப்படாதிருந்தது.
10.10.2002 அன்று கிளிநொச்சியில் நடந்த மகளிர் பேரெழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டதில் என்னால் அவதானிக்க முடிந்தவற்றையும், ஏற்பட்ட மனப்பதிவுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.
தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வின் முதலாவது நிகழ்வான இராணுவ அணிவகுப்பே பார்ப்போரை திக்குமுக்காடச் செய்து விட்டது. ஏனெனில் அத்தனை நேர்த்தியும் வேகமும் கொண்டதாய் ஒவ வொரு அணிகளும் சென்று மறைந்தன. புகைப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் இவற்றைத் துரத்திக்கொண்டு தமது கமறாத்திரைகளுக்குள் அடக்கப் படாதபாடுபட்டனர்.
மகளிரின் பதினொரு படையணிகள் இதில் பங்கேற்றன. இவையனைத்தும் ஓர் அடிப்படைத்தளத்துள் நின்றிருந்த போதும் ஒவ வொன்றும் தமக்கான தனித்துவங்களைக் கொண்டிருந்தன. அணிந்திருந்த சீருடைகளிலும், பிடிக்கப்பட்ட கொடிகளிலும், சின்னங்களிலும் ஒவ வொரு அணிகளும் தம்மை வேறுபடுத்திக் காட்டின.
ஓர் இராணுவ அணியின் வடிவமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், பயன்படுத்திய மேலைத்தேயபாண்ட் வாத்திய இசைக் கருவிகளுக்கேற்பவும்
"புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகமென்றே நீ கூறு. "என்ற
விடுதலைக் கானங்களிலொன்று அணியின் வேக நடையின்போது இசைக்கப்பட்டது. பின்னர் மைதானத்துள் நடந்தமெதுவான அசைவுகளுக்கு 'எங்கள் தோழர்களின் புதைகுழியில்' என்ற பாடல் பொருத்தமாக அமைந்திருந்தது.
சிறு சிறு இடைவெளிகளில் கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பமான இவ வணிகள் கிளிநொச்சி மத்திய மைதானத்துள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து பெரும் பரப்பிலான இடத்தினைப் பிடித்து பெரும் இசைஎழுப்பி, பெரும் நகர்வினைப் புலப்படுத்தியது. இது சூழ நின்றிருந்தோரை பெரும் பரபரப்பிற் குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கையில் ஏ-9 பாதையூடான இராணுவ நகர்வினை எதிர்த்து மன்னகுளத்தில் பெண் போராளிகள் சமர் செய்ததன் 'மாதிரிச்சமர்' நிகழ்வொன்று நிகழ்த்திக்காட்டப்பட்டது.
பற்றைகளுக்குள்ளும், மரங்களுக்குள்ளும் நிகழ்த்திக் காட்டப்பட்ட இச்சமர் பெரும் வெடிச்சத்தங்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் கண்முன்னே காண்பித்தது.
மிகவும் தத்ரூபமான முறையில் நிகழ்த்தப்பட்ட இம்மாதிரிச்சமர், தமிழீழப் பெண்கள் படையணியின் இராணுவ வளர்ச்சியினையும் பலத்தினையும் காட்டி நின்றது. இது பெண்களின் உடல் உள ஆளுமை விருத்தியின் எல்லையினைக் கோடு காட்டியது.
பொதுவாக ஆசிய மரபில் வந்த பெண்கள் பயந்தவர்கள், மென்மையானவர்கள், நிதானமற்றுக் குழம்புபவர்கள், எதற்கும் தயங்கி நிற்பவர்கள், ஆண்களில் தங்கியிருப்பவர்கள், இலகுவில் அழும், சிரிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்ற கருத்துருவாக்கம், கணிப்பீடு அனைத்தையும் தகர்த்தெறியும் வகையில் தமிழீழப் பெண்கள் படையணி பெண்கள் உடல், உள ஆளுமை கொண்டுள்ளனர் என்பதனை இச்சமர் திட்டவட்டவமாக காட்டி நின்றது.
இவர்கள் தமிழீழ எல்லைக்குள் வாழும் பெண்களுக்கு மாத்திர மல்ல, உலகிலுள்ள பெண்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கையினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடியவர்கள் என்றால் அதில் மிகைப்பாடு ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.
மேலும் தொடர்ந்து நிகழ்ந்த கலைநிகழ்வுகள் மூலம் இவர்கள் பல்வேறு விடயங்களை மக்களிடம் முன்வைத்திருந்தனர். குறிப்பாக சாதாரணமாயிருந்த பெண்களாகிய தாம், காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் அறிந்து போராட்டத்தில் இணைந்தது பற்றியும் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தம் வளர்ச்சி நடந்தேறியது பற்றியும் குறிப்பிட்டனர்.
ஓர் இன ஒடுக்குமுறையில் ஆக்கிரமித்தல், ஆளுதலின் குறியீடாக சிங்களப் பேரினவாதம் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை பற்றியும் இவ விடத்தில் பெண்கள் போர்க்களம் செல்லும் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
மேலும் தாம் சும்மாயிருந்து சூம்லு}சூம் காளியென்று தாயத்துக் கட்டி அந்நியப் பேய்களை விரட்டவில்லை. நித்திரையற்ற இரவுகளை நிரந்தரமாக்கி உடலிலும், உள்ளத்திலும் பல வலிகளைத் தாங்கி, தியாகங்களை செய்து பெற்றதே இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை என்றனர்.
எனினும் நாம் மிகவும் சாதாரணமானவர்கள் எங்களைப் பற்றிய அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள் என்றனர்.
இக்கருத்தினை நிறுவுதற்போல் கூடியிருந்த பெருந்திரளில் சில விடயங்களை அவாதானிக்க முடிந்தது. சீருடையில் இருந்த பெண் போராளி ஒருவர் துவாயால் ஏந்திய ஒரு குழந்தையை மடியில் வைத்து பால் பருக்கிக் கொண்டிருந்தாள். பின்பு வாரியெடுத்து முத்தமிட்டு தோள்களில் போட்டுக்கொண்டாள்.
அது பெற்ற பிள்ளையா பிறர் பிள்ளையா என்ற ஆய்வுக்கு நான் போகவில்லை. அவளிடம் தாய்மை, அன்பு, பாசம் வெளிப்பட்டது. இதனை சீருடையில் கண்டபோதுதான் ஆச்சரியமாயிருந்தது. இருவேறு உன்னத நிலைகள் ஒருங்கே சங்கமித்தது. எனினும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை இல்லை என்பதை புரிய முடிந்தது. இதனைவிட பெண் போராளிகள் சிலர் திருமணமாகி தம் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.
சீருடையில் நின்ற பெண் போராளிகள் பலர் எழுச்சி நிகழ்வுக்கு வந்திருந்த பலருடன் மகிழ்வாக உறவாடுவதைக் காணமுடிந்தது. சிறு பிள்ளைகளுடன் விளையாடியதையும் காணமுடிந்தது.
கலை நிகழ்வுகளிலும் பெண் போராளிகள் தமது திறமைகளை நிலைநாட்டினர். மிக அழகாக ஆடவும் பாடவும் தெரிந்திருந்தனர்.
களத்தில் நிற்கும் போராளி பரதநாட்டியம் ஆடுவது என்பது போராளி பற்றிய பொதுவான நினைப்பிற்கு முரணானது. சீருடையற்று பாத்திரங்களுக்கேற்ப ஆடையணிந்து ஆடிய போது இவர்கள் போர்வீரர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. சீருடையுடன் வரும் பாத்திரங்கள் பல பாவங்களை அபிநயித்து நடனமாடிய போதுதான் போர்வீரர்கள் பற்றிய புதிய பரிமாணம் பெறப்பட்டது.
மற்றும் இப்பேரெழுச்சி நிகழ்விற்கான ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. இந் நிகழ்வுக்காக ஏலவே கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், கிளிநொச்சி மத்திய மைதானத்தில் கூடும் ஒன்றரை இலட்சம் மக்களினதும் வீதிக் கட்டுப்பாடுகள், வாகனப் போக்குவரத்து ஒழுங்குகள், இரவு நிகழ்வு சூழலில் மின்விளக்கு வசதிகள், மைதான அலங்காரங்கள், மைதானத்தில் இடப்பட்ட பெரிய மேடையும் இடமும், மேடை வடிவமைப்பு, இசைக்குழுவினருக்கான தனிமேடை, முழுப்பார்வையாளருக்கும் நிகழ்வுகள் தெரியும் வகையில் வைக்கப்பட்ட பெரும் திரைகள், மேடையின் இரு மருங்கிலும் நிகழ்ச்சி செய்வோர் கூடும் தனியான தகரக்கொட்டகைகள்,
மைதானத்தில் மக்கள் ஒழுங்காக நிகழ்வுகளுக்கேற்ற வகையில் அசையும் முறைக்கான கட்டுப்படுத்தல் கோடுகள், குடிநீர் தாங்கிகள், மலசலகூட வசதிகள், ஒலி ஒளி ஏற்பாடுகள், நிகழ்ச்சி அறிவிப்புக்கள், ஊடகவியலாளர் ஆசன ஒதுக்கீடுகள், சிற்றுண்டி, குடிபான பரிமாற்ற ஒழுங்குகள் என்பன மிக நேர்த்தியாக மிக வசதியாக காலக்கிரமத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலை யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட பிரதேசத்தில், வளங்களற்ற பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தல் என்பது பெரும் சவாலான விடயமே. இது மகளிர் படையணியின் மற்றுமொரு பக்கத்தினை, பொதுவிடயங்களை செயற்படுத்தும்திறனை, முகாமைத்துவதிறனைக் காட்டியது.
இப்பேரெழுச்சி நிகழ்வினை பெண்போராளிகளே பெரும்பாலும் நின்று நடத்திய போதும், விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்போராளிகளும் இணைந்தே இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இவர்களிடையே ஆண், பெண் படையணி என்ற பிரிக்கப்பட்ட மனப்பாங்கு கிடையாது. இரு படையணிகளும் இணைந்தே பல காரியங்களை சாதித்து வருகின்றனர்.
ஆரம்ப மகளிர் படையணிக்கான பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஆரம்ப கடற்புலி பெண் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் "ஆரம்பத்தில் கடற்படைத்தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை ஆண்போராளிகளே வழங்கினர். பின்னர் அவர்களிடம் பயிற்சி பெற்றுசிறப்புத் தளபதியாயிருந்த லெப்.கேணல் நளாயினி அக்கா என்பவரே எமக்கான பயிற்சிகளை வழங்கினார். அதன் வழியே பயிற்சிகள் தொடரப்படுகின்றன" என்றார்.
பெண்கள் இயல்பாகவே தொழில்நுட்ப அறிவும் நாட்டமும் குறைந்து காணப்படுகின்றனர். ஆண்களே இவ விடயங்களில் ஆர்வமாக விளங்குகின்றனர். காரணம் காலம் காலமாக ஆண்கள் வெளியில் சென்று பல்வேறு தொழில்முறைமைகளை பயின்றுவர பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளையும் வீட்டையும், சுற்றுப்புறச் சூழலையும் பராமரித்துக்கொண்டு ஓர் மாறுபாடற்ற வாழ்வு வாழ்ந்து வந்தமையாகும். ஆனால் கடற்புலி பெண் உறுப்பினர்கள் சிலர் இவ வெழுச்சி நிகழ்வில் தாக்குதல் படகொன்றினை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து அதன் இயக்கம் பற்றிய விளங்கங்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பெண் உறுப்பினர்கள் தாக்குதல் படகு தயாரிப்பது பற்றியும், அவற்றை இயக்குவது பற்றியும் தொலைநோக்கு தொடர்பு அறிதல் பற்றியும், விமான எதிர்ப்புப் பீரங்கி, கடற்தாக்குதலுக்குரிய 50 கலிபர்கள் என்பவற்றின் இயக்கு முறைகள் பற்றியும், ஆங்காங்கே கொண்டுள்ள தகவல்மையங்கள் பற்றியும், இலக்குகளை இனம்காணல், கணித்தல், குறிவைத்தல் என்பவை பற்றியும், கட்டளை அதிகாரியின் செயற்பாடு பற்றியெல்லாம் பேசிய போதும் படகில்நிற்கும் தாம் ஒவ வொரு வரும் படகின் ஒவ வொரு விடயம் பற்றியும் கூறிய போது காலம் காலமாக பெண்கள் வளர்க்கப்பட்ட மரபில் வளர்ந்தவர்கள் தானே இவர்கள். இவர்களிடம் இத்தனை திறன் எப்படி வந்தது என்றே எண்ணத்தோன்றியது.
இவர்களிடம் "தற்போது நீங்கள் தாக்குதல்படகு, ஆயுதங்களைப் பற்றிய விடயங்களை வெளியிடுகிறீர்கள். எதிரி இதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தக்கூடும் என்ற அச்சம் இல்லையா?" எனக் கேட்டபோது.

கடற்புலி ஆரம்ப உறுப்பினரும், தொலைநோக்கு தகவல் அறிபவருமான பெண் ஒருவர் மிக நிதானமாகவும் சிறு அலட்சியமாகவும் சிரித்துவிட்டு "எமது படகுகளையும், ஆயுதம் பற்றியும் அறியலாமே தவிர எமது போர் முறைகளையோ, உத்திகளையோ அறியமுடியாது. அவற்றையும் சரியான மனவலிமையையும் தலைவர் எமக்குத் தந்துள்ளார். அவை இருக்குமளவும் எமது வெற்றி நிச்சயமானது" என்றாள்.
தமிழீழ பெண்கள் படையணியினது மிகுந்த கருத்தியல் தெளிவினையும், நிதானமான போக்கினையும் கொண்டு விளங்குகிறது என்பதனை இவர்களின் உரையாடல்கள் மூலமும் மகளிரணி அரசியல் பொறுப்பாளரான தமிழினி அவர்களின் உரை, பேட்டி என்பவற்றிலிருந்து புரியமுடிகிறது.
இவர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற திறமையினையும், தமது செயற்பாடுகளைத்தாமே முன்னெடுக்கும்நிலையிலும் கட்டமைக்கப்படுவதனை ஒரு சில விடயங்கள் சுட்டிக்காட்டுகிறது.
இதில் மகளிர்படையணி உறுப்பினர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்திகளாக அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கின்றனர் என்பதே ஒரு முக்கிய விடயமாகும். மற்றும் பெண் போராளிகள் நடத்தும் பத்திரிகை-சுதந்திரப்பறவை, சஞ்சிகைகள் இங்கு வெளிவருவதும் பெண்களே தீர்மானிக்கும் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதனையும் தம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் தமது கொள்கைகளை பிரகடனப்படுத்தவும், வளர்க்கவும் உதவியாக அமையும்.

இன்று இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்களது செறிந்த வியாபாரமோ-அதோனோடொட்டிய காலாச்சாரமோ, பல்வேறு ஊடக கலாச்சாரமோ, மலிகைப்படங்களின் பாதிப்போ இடம்பெறாத ஒரு தேசம் என்றால் அது வன்னிப்பெருநிலப் பரப்பாகவே இருக் கிறது.
இதனால் இங்கு இருக்கும் ஒவ வொரு விடயங்களும் தனித்துவமானதாகவும், சூழல்சார்ந்ததாகவும், நிலைத்து நிற்பதாகவும் வலுவுடன் விளங்குகிறது. இவ வகையில் தமிழீழப் பெண்களும் அவர்கள் வளர்த்தெடுப்பும் ஆரோக்கிய மானதாக அமைந்துள்ளது.

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 5 கு. தீபா

போகுமிடமெல்லாம்,
கணவனில்லாமல் தனியே வாழும் பெண்கள் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளைத் துறந்து இன்னொரு பெண்ணுடன் கண்ணெதிரே வாழும் கணவன், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விட்டுப் பிரிந்து சென்று வேறொரு திருமணஞ் செய்து வாழும் கணவன், "வேலையாப் போனவர் வரேல்லை" என்ற காரணத்துடனான கணவன் என்று பலவிதக் கணவன்மார்களை இழந்து பல பெண்கள்.

பெருந்திரளான மக்கள் நெருங்கி வாழ்வதால் இவ விகிதம் கூடுதலாகத் தென்படுகிறதா அல்லது உண்மையிலேயே சமூகத்தில் சீர்கேடு மலிந்துவிட்டதா என்று ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்.

பெண்களில் ஒரு சாரார் கணவனின்றித் தனித்து வாழும் துணிவைப் பெற, இன்னுமொரு சாரார் தனதும் குடும்பத்தினதும் கௌரவம் பேண வேண்டி அனைத்து வேதனைகளையும் தாங்கி மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். அவர்களிற் சிலர் ஏதோ ஒருவகையில் அவ வழுத்தத்தை விடுவிக்கும் வகையில் மேலதிக உணவு, உடை, ஆபரணங்கள் என்று தமது கவனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்.
ஒரு சிலர்அதுதான் என் தலைவிதி என்று வாழ முற்படுகின்றனர்.

மிகவும் மென்மையான போக்குடன் வளர்க்கப்பட்ட பெண்கள் புத்தி பேதலித்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருபது வயதுடைய இளம் பெண்ணொருவர் முன் சூல்வலியெனும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில குழந்தை இறந்தது தாய்க்கு நன்மையே என அப்பெண்ணின் தாயாரும் ஏனையோரும் ஆறுதலுற்ற நிலையில் அவ விளம் பெண் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். குழந்தை இறந்ததே அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணம் என்று ஏனையோர் நம்பியிருக்க உண்மை வேறாக இருந்தது. கணவனுக்கும் அப்பெண்ணிற்கு மிடையில் ஏற்பட்ட பிணக்கும் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த காலத்தில்கூட கணவன் வராததும் அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது. மன நிலைக்குழப்பத்தில் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தாயின் மேல் எறிந்து "இவதான் எல்லாத்துக்கும் காரணம்" என்று கூறியபோது நானும் அதையே உணர்ந்தேன். தனது உடல்நிலை தொடர்பாகவோ, தனது பிள்ளை தொடர்பாகவோ எந்த முடிவையும் தானே எடுக்க முடியாது அனைத்திற்கும் தாயையே எதிர்பார்த்திருக்கும் வகையில் அப்பெண்ணின் வளர்ப்பு இருந்தது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் திடமற்ற மென்மைப்போக்குடன் அப்பெண் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அதன் விளைவு!?
"என்ரை பிள்ளை வீட்டைவிட்டு வெளியிலை போகாள். அவவுக்கு ஆட்களைக் கண்டாப்பயம். வடிவாக் கதைக்கமாட்டா. சரியான சொப ற் அவ" என்று தன் பிள்ளையைப் புகழ்ந்து பிழையான பாதையில் வழிகாட்டும் தாய்மார் வெளியுலகையும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ளும் திடமிக்க சிந்தனைத் தெளிவுடன் தமது பிள்ளைகளை வளர்த்தால் என்ன?

"உயர்கல்வி, உயர்தொழில், காதலித்தவனையே கைப்பிடித்த மகிழ்ச்சியான திருமணம், உயர்தர வாழ்க்கைமுறை, சமநிலையில் தன்னை மதித்து நடக்கும் கணவன், சிறிதும் பெரிதுமாகச் சிற்சில தனிப்பட்ட எதிர்கால இலட்சியங்கள் என என் வாழ்க்கை நம்பிக்கையூட்டுவதாகத்தான் இருந்தது. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் சிறு குழப்பங்கள், பிணக்குகளின்போது எனது கணவரின் விமர்சனங்கள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. எனது சமத்துவநிலை கண்டனத்துக்குரியதாகி என் நிலையைக் கேள்விக்குறியாக்குகிறது. என் நடத்தையையே சந்தேகத்திற்குரிய தாக்கிக் கேள்வி கேட்கும் கணவரை அனுசரித்துப் போவதையே நான் விரும்பவேண்டியிருக்கிறது. தவிர எனது பிரச்சினைகள் வெளியே எனது நெருங்கிய உறவுகளுக்குத் தெரிய வருவதுகூட எனது கௌரவத்திற்குப் பங்கம் என்பதால் என் மனதிற்குள்ளேயே வைத்துக்குமைந்து எந்நேரமும் நான் ஒரு மன அழுத்த நிலையிலேயே இருக்கிறேன்"

இது ஒரு குடும்பப் பெண்ணின் வேதனை மிகுந்ததொரு வாக்குமூலம். தனது நடத்தையையே கேள்விக்குள்ளாக்கி கணவன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போது கூட அவனை விட்டுப் பிரியாதது 'தமிழ்ப் பெண்மை'.

நூற்றாண்டு காலமாக எமது பெண்களை ஆணை விடக்கீழான நிலையில் வைத்திருக்கும் மரபைக் கொண்டவர்கள் நாம். இந்நூற்றாண்டு காலக் கருத்துப்பதிவுகளைக் கணத்தில் தூக்கியெறிந்து சமூகம் மாறுவதென்பது சாத்தியமற்றதொன்றே. எனினும் சிறிது சிறிதாக மனப்போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினரின் கருத்தமைவுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து புதியதொரு பரம்பரையை உருவாக்கும் என்று நம்புவோம்.

மேலே கூறிய பெண்ணைப் போன்று தன் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெண்கள் சமூகம் ஒன்று உருவாவது ஒரு மாற்றத்தின் அறிகுறியே. ஏனெனில் இதுவரை காலமும் நம் பெண்கள் குடும்பத்தில் தம் நிலை என்ன என்பதையே அறிந்தவர்களாக இருக்கவில்லை. தாமும் சமநிலையில் மதிக்கப்படவேண்டும், தமது தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாது என எதிர்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய மாற்றமே. கல்வியறிவு பெற்ற தொழில் பார்க்கும நடுத்தரவர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வதைவிட இப்போதெல்லாம் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வது அதிகமாகவே உள்ளது.

நீதிமன்றங்கள் பெண்ணின்பால் இரக்கங்கொண்டு அளிக்கும் தீர்ப்புகளை மறுதலித்து தமக்குத்தாமே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் புதுயுகப் பெண்களாக அப்பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனது கணவன், எனது உரிமை, அவன் என்னுடனேயே வாழ வேண்டும் என்று இடையில் வந்த இன்னொரு பெண்ணுடன் உரிமைப்போர் நடத்திக் கணவனை மீட்டு வந்த காலம் போய், 'என்னை மறந்து இன்னொரு பெண்ணுடன் சென்றவன் எனது கணவனல்ல, அவன் எனக்கு வேண்டாம ' என்று மறுக்கும் துணிச்சலுள்ள பெண்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், இளமையும் துடிப்பும் வேலையில் ஆர்வமுமிக்க அப்பெண்ணின் நெற்றி எந்தவித அடையாளமுமின்றி எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும். திருமணமாகாத சிறுபெண் என்று எண்ணியிருந்த எனக்கு அப்பெண் திருமணமானவர் என்ற உண்மை ஆச்சரியமளித்தது. அத்திருமணத்தின் சோக முடிவுரை சிறிதளவுகூட அப்பெண்ணின் முகத்தில் தென்படாதது அதைவிடப்பெரிய ஆச்சரியம். "இன்னொரு பொம்பிளையோட அவருக்குப் பழக்கம் இருந்ததக்கா. கனநாளா எனக்குத் தெரியும். தெரியாதது போல பொறுத்துப் போனனான். ஆனா வரவர எனக்கு அடி, பேச்சு என்று ஒரே பிரச்சினை. காசு கொண்டு வா என்று ஒரே கரைச்சல். அவவுக்குக் கொடுக்கிறதுக்காக. நான் என்ரை உரிமையை வெளிக்காட்ட வேண்டுமென்றதுக்காக நீதிமன்றில் கேஸ் போட்டனான். கேஸ் என்ரை பக்கமாத்தான் தீர்ந்தது. ஆனா நான் சேர்ந்து வாழமாட்டன், அவவோடை போகட்டு மென்று சொல்லிப் போட்டன். பிள்ளையளுக்குக் கொஞ்சக் காசு கட்டச்சொல்லி கோர்ட் சொன்னது. நான் அதுவும் வேண்டாமென்று சொல்லிப்போட்டன். பிச்சை எடுத்தென்றாலும் என்ரை பிள்ளையளை நான் வளர்ப்பன்" தெளிவும் உறுதியுமாக வெளிவந்தன வார்த்தைகள். அந்தத் தெளிவும் உறுதியும்தான் அந்தப்பெண் அமைதியாக சந்தோசமாக வாழ்வதன் ஆதாரம். இத்தெளிவு எத்தனை பேருக்குக் கைவரும்.

'திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இறுதி இலக்கு' என்ற சமூகத்தின் கருத்துப்படிமம் திருமணம் தவிர்ந்தும் ஒரு வாழ்க்கை உள்ளது என ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை எமது பெண்களுக்கு வழங்கவில்லை.

பெரும்பாலான பெண்கள் நிலையான, நிறைவான திருமண வாழ்க்கையை விரும்பும் போக்கு சரியானது, யதார்த்த பூர்வமானது. ஆனால் அநீதிகளும் கொடுமைகளும் இழைக்கப்படும்போது அவர்களின் வாழ்வு அத்துடன் முடிந்துவிடக்கூடாது. அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், அவற்றினால் நிலைகுலைந்து போய்விடாமல் வாழ்வின் தொடர்ச்சியை திடமான மனதுடன் தாம் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ளவும் அவர்கள் துணிவு பெற வேண்டியிருக்கிறது.
- கு.தீபா -