Donnerstag, März 16, 2006

சர்வதேச பெண்கள்தினம்-ஒரு கண்ணோட்டம்

- மதுமிதா -

உலகம் முழுவதும், சர்வதேச பெண்கள்தினம், பெண்கள் அமைப்புகளினால் மார்ச்-8 ஆம் தேதி என்று குறிக்கப்பட்டு நினைவு கூரப்படுகிறது. பல நாடுகளில் விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தேசத்தின் எல்லைக்கோடு, மொழி, கலாச்சாரம், பொருளதாரம், அரசியல் ரீதியாக அனைத்து கண்டங்களிலுள்ள பெண்களின் நிலை வேறு பட்டிருக்கின்றன. எனினும் 90 வருடங்களுக்கும் மேலாக சமத்துவம், நீதி, அமைதி, வளர்ச்சி குறித்த போராட்டங்களில் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

சர்வதேச பெண்கள் தினம் என்பது சாதாரண பெண்மணிகள், வரலாறு படைத்தவர்களாக உயர்ந்தவர்கள் எனும் கதையினைக் கூறும் நாள். சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக நடை பழக நடத்தப்பட்ட போராட்டத்தினை நினைவு கூறும் தினம் இது.

நூற்றாண்டுப் போராட்டம் இது.
வருட வரிசைப்படி பார்க்கலாம்.

1909:
ஐக்கிய அமெரிக்காவில் முதல் தேசிய பெண்கள் தினம் பிப்ரவரி 28 ஆம் நாள் குறிக்கப்பட்டது.

1913
வரை பிப்-கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

1910:
உலக முழுவதிலிருந்தும் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்மணிகள் கோபென்கனில்(Copenhagen) பெண்களின் உரிமை குறித்து கருத்துக்கள் முன்வைக்க சந்தித்தனர். சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மூன்று பெண்மணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1911:
1910
சந்திப்பில் கோபென்கனில் எடுக்கப்பட்ட முடிவின் படி மார்ச் 19-ல் முதல் முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு மில்லியன் பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டனர். ஓட்டளிக்கும் உரிமைதேவை, வேலைகளில் உரிமைதேவை எனும் தங்கள் உரிமைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

ஒரு வாரத்துக்குள் மார்ச் 25 சோக தினமாக ந்யூயார்க்-கில் தீ விபத்தில் 140 வேலை செய்யும் பெண்கள் உயிரிழந்தனர்.இவர்களில் இத்தாலி, யூதப் பெண்கள் அதிகம். இந்நிகழ்வு முக்கிய காரணியாகி வேலைக்குச் செல்லும்
பெண்களின் பாதுகாப்பு தேவை குறித்த சிந்தனையினை வளர்த்து அசாதாரண விளைவை ஏற்படுத்தியது.

1913-14:
ரஷ்ய பெண்கள் முதல் உலகப் போர் சமயத்தில் 1913-ல் பிப்ரவரி கடைசி ஞாயிறு பெண்கள் தினமாகக் கொண்டனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 8 ஆம் நாள் சகோதரிப் பெண்களால் கொண்டாடப்பட்டது.

1917
போரில் இரண்டு மில்லியன் ரஷ்ய படைவீரர்கள் இறந்தனர். ரஷ்ய பெண்கள் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையினை தேர்ந்தெடுத்து உணவுக்கும் அமைதிக்குமான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல் தலைவர்கள் இது வேலை நிறுத்தத்திற்கான சரியான நேரமில்லை என்று இதனை எதிர்த்தனர். ஆனால் பெண்மணிகள் விட்டுத் தரவில்லை. புது வரலாறு நிகழ்ந்தது. பெண்மணிகளுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது. அந்த வரலாறு பதித்த ஞாயிறு பிப்ரவரி 23 ரஷ்யாவின் ஜூலியன் நாட்காட்டியின்படி. ஆனால் மற்ற கிரிகேரியன் நாட்காட்டியின்படி மார்ச் 8 ஆம் நாள்.

சர்வதேச பெண்கள் நாள் வளர்ந்த, வளரும் நாடுகளில் முழுபரிமாணம் பெற்றது. உலகப் பெண்கள் மாநாடு அரசியல், பொருளாதார ரீதியில் உரிமை கோரிப்பெறும் ஆற்றல் நல்கியது.

சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது.

இந்த வரலாற்று பிண்ணனி அறியாது எல்லா தினங்கள் போல் இதுவும் ஒருதினமாகக் கொண்டாடப்படுகிறது என்று கேலி செய்யும் மனிதர்களும் உள்ளனர்.

இந்த நாளை நினைவு கூர்ந்து நம்மாலும் நாம் ஈடுபடும் துறையில் முன்னேற முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் முயன்றால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம்.

ஓரளவு பெண்களின் நிலையில் வளர்ச்சி தெரிந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். ஒரு கிரண்பேடி,ஒரு கல்பனா சாவ்லா, ஒரு அம்ரிதா ப்ரீதம்,ஒரு திலகவதி..... போதாது. அவர்கள் சார்ந்த அதே துறையில் இன்னும் பலர் பேரெடுக்கும் நிலையில் வரவில்லை. இது எதனைக் காட்டுகிறது? மனதளவில் உயரும் போதே சாதிக்க இயலும்.
வெள்ளத்தனைய மலர்நீட்டம் தான்.

பொதுவாகப் பார்த்தோமெனில், பெண்களின் வளர்ச்சியைத் தடுக்க மற்றவர் எடுக்கும் ஒரே ஆயுதம் பாலியல்ரீதியான ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டு. அடுத்தது தலைக்கனம் எனும் மாயப்போர்வை. இதற்கு பயந்து குடத்திலிட்ட விளக்காய் கிடப்பவர் கோடி. இந்நிலை மாற சமூகமும் தன் பார்வையினை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமுமே பெண்களை மதிக்கும் நாள் தூரத்திலில்லை. இந்நிலையில் பெண்ணும் தனக்கான உரிமையில், தடம் புரளாது தனது கடமையை செவ்வனே செய்ய வேண்டிய கட்டாய சுமையினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டிய நிலை. இன்னும் சிறிது காலம் இவ்விரு விஷயங்களையும் வெகு ஜாக்கிரதையாக கடந்து விட்டால், அடுத்து வரும் தலைமுறைப் பெண்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும் பரிசை வளர்த்தெடுத்து கொடுப்போம்.

பள்ளி பாடத்திட்டத்தில்,
அம்மா சமைக்கிறாள்
அக்கா பாத்திரம் தேய்க்கிறாள்
அப்பா செய்தித் தாள் படிக்கிறார்(இதற்கான படம் ஈஸி சேரில் அமர்ந்திருப்பார் அப்பா கையில் பேப்பருடன்) என்று அடிப்படையிலேயே போதித்து விடுகிறோம்.

அடுத்து, பெண் திருமணத்தை முன்னிறுத்தி வளர்க்கப்படுதல். இந்நிலை மாறினால் தான் பெண் முன்னேற்றம் சாத்தியப்படும். இன்றைய பல பெண்களின் நிலை இன்னும் கேளிவிக்குறியாகவே உள்ளது.

இன்னும் குடித்து விட்டு வரும் கணவனையும் காத்து, குழந்தைகளையும் காப்பாற்றும் பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் அப்பெண்களால் உழைப்பிற்கு மட்டுமே நேரம் ஒதுக்க முடிகிறதே தவிர குழந்தையின் படிப்பிற்கோ,மனமளர்ச்சிக்கோ சரியான வழிநடத்துதல் தர இயலவில்லை.

கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் பெண்ணைக் குறித்து சொல்கிறேன். இரு பெண் குழந்தைகள்.கணவன் குடிகாரன். இரவு மட்டுமே வீட்டுக்கு வருபவன். இரு குழந்தைகளுமே படுசுட்டிகள். படிப்பில் கவனம்.பாடும் திறமை அதிகம். யார் இக்குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியும், திறமையை ஊக்குவிக்கும் பணியும் செய்வது. அவரவர்களுக்கு அவரவர் குடும்பத்தினை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம். கணவன் குடித்துவிட்டு கமலாவின் ஊதியப்பணத்தையும் பறித்து, குடிக்கு செலவிடுகிறான். இப்படி ஒரு கணவன் தேவையா என சில பெரியவர்கள் அவளிடம் கேட்க அப்பெண்மணி சொன்ன பதில். "இதாவது குடிச்சிட்டு ராவானா வீட்டில விழுந்து கெடக்கும். இது இல்லைன்னு தெரிஞ்சா, வர்ற நாயிங்களுக்கெல்லாம் யார் பதில் சொல்றது. என் தலையெழுத்து இது. இந்த ரெண்டும் சாப்புட ஒழச்சா போதும்..."

இப்படி எத்தனை கமலாக்களோ...?

எத்தனை ஆண்டுகள் எத்தனை பெண்கள் தினம் கொண்டாடவேண்டுமோ!

- மதுமிதா -
quelle - காற்றுவெளி