Dienstag, Dezember 12, 2006

பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை

- தமிழ்நதி -

ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்க வேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்து விட முடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது ‘இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்…?’என்னும் கேள்வி ஊடுருவுகிறது. மனித குலத்திற்குள் ஒரு பாலாரின் மீது மற்றையவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது இயல்பேபோல நம்மில் பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த மனோபாவத்தின் மீது கேள்விகள் எழுப்ப அஞ்சுகிறோம். அவ்வாறு கேள்வி எழுப்புவதையே மரபுமீறலாகக் கொள்கிறோம்.

‘மிருகங்களைப்போல’ என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதிலுள்ள அபத்தத்தைப் பாருங்கள். ஏனைய மிருகங்களைக் காட்டிலும் பலமுள்ள சிங்கம் எப்படிக் காட்டின் ராஜா ஆனதுவோ அவ்வாறே மனிதனும் தன்னைவிட பலமற்ற உயிர் என்று கருதப்படும் (பெண் ஆணைவிட உடல்வலிமையில் குறைந்தவள் என்பது அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.) பெண்ணைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் நிறைவு காண்கிறான்.

‘வீடு’என்பது வாழும் இடமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆண் ஆசுவாசம் செய்துகொள்வதற்கான அமைதிக்கூடமாக, கட்டற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக, அவன் என்றென்றைக்கும் தலைவனாக இருக்கக்கூடிய ஒரு சாம்ராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது இன்னோரன்ன பழக்கவழக்கங்கள் கூட ஆண்களுடைய ஏகபோக (பெரிய சொத்துடமை பாருங்கள்) உரிமையெனவே கொள்ளப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மது அருந்தியபின் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைக்கும் கூட ஆண் பொறுப்பாக மாட்டான் என்பதுதான். தீமை பயக்கும் பழக்கவழக்கங்களுக்கே ஏகபோக உரிமை கொண்டாடும் ஆண், சமூகத்தை வழிநடத்தும் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல் இவற்றில் எவ்விதம் நடந்துகொள்வான் என்பது கண்கூடு.

‘எவருக்கும் எவருடைய உடல் மீதும் உரிமையில்லை’ என்றும் ‘சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்குநுனி வரைதான்’ என்றும் பேசிக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் வன்முறை என்பது அகற்றப்படமுடியாத ஒரு பூதமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. கணவனிடம் அடி வாங்கும் பெண்ணின் உடற்காயங்கள் நாளடைவில் ஆறிவிடக்கூடும். ஆன்மாவின் மீது விழும் அடிக்கு மருந்திடுவது யார்…? இழிவுபடுத்தப்பட்டதை அவளால் எப்படி மறக்க இயலும்…? வீட்டின் மூலைகளில் கரப்பான்பூச்சிகளைப்போன்று விரட்டி விரட்டி தாக்கப்படும்போது பெண் என்பவள் சக உயிர் என்ற நினைவு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

“அவர் எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் தந்திருக்கிறார்.” என்று சில பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘எல்லாவிதமான’என்பதற்கும் ‘எல்லைகள்’ உண்டு. அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது ஆணுடைய குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் பெண்ணுடைய சுதந்திர வெளி இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் பிரவேசிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மீறிப் பிரவேசித்தால் “உங்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேணும் என்று சும்மாவா சொன்னார்கள்…?” என்று வெகுண்டெழுதல் நிகழும். ‘வைக்கவேண்டிய இடம்’என்பதற்கான பொருளை விளக்கப்போனால் ‘பெண்ணடிமை’எனப் பதில் வருதல் சாத்தியம்.

சமையலில் தொடங்கி பிள்ளைகளின் திருமணம் வரை ஆணின் அதிகார நிழல் நீண்டு படர்ந்துள்ளது. முக்கியமான முடிவுகள் அவனாலேயே எடுக்கப்படுகின்றன என்பதை ‘தண்டோராக்காரன்’என்ற கவிதை சொல்லிப்போகிறது.

‘பெண்ணாதிக்கம் பெருகிவிட்டது’
போகிறான்
வேண்டுகோள்களைக் கையேந்தி
தீர்மானங்களுக்காகக் காத்திருக்கும்
பெண் வாழும் தெருவால்…
அறிவார்ந்த சபைகளில்
பரிமாறும் பணி மட்டும் விதிக்கப்பட்ட
அவளைக் கடந்து
அதிர்ந்தொலித்துப் போகிறது பறை.

பூமியென பெண் உவமிக்கப்படுகிறாள். ஆண் பெரும்பாலும் புயலோடு ஒப்பிடப்படுகிறான். பெரும் காற்றாய் வந்து மரங்களைச் சாய்த்து, கூரைகளைப் பிய்த்தெறிந்து, எதிர்ப்படுவனவெல்லாவற்றையும் துவம்சம் செய்து சுழன்றடித்துப் போய்விடுகிறது புயல். பூமி இருக்கிறது துக்கித்து. அதனால் பெயர்ந்து செல்லவியலாது. பெண்ணும் இருக்கிறாள் செயலற்று. குழந்தைகளின் அடைக்கலமாக, வீட்டை அடைகாப்பவளாக, சமூகத்தால் சூட்டப்படும் ‘ஓடுகாலி’ என்ற பட்டத்தைச் சுமக்கத் திராணியற்றவளாக வீட்டோடு அவளைக் கட்டிவைத்திருக்கிறது ஒரு மாயக்கயிறு.

பாட்டும், சத்தமும் என தன்னியல்பாக இருக்கும் வீடு ஒரு ஆணின் வருகையால் எப்படி ஒடுங்குகிறது என நாம் பார்க்கிறோம். ஓசைகள் ஒரு செருப்பொலியில் உறிஞ்சப்பட மௌனப்பந்தாய் கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்கிறது மகிழ்ச்சி. (இதற்கு விதிவிலக்கான வீடுகள் உண்டு. ஆனால், எத்தனை வீதம்…?)

“அப்பா வாறார்… ஓடிப்போய் படியுங்கோ…!”

“செருப்பெல்லாம் இப்பிடிச் சிதறிக்கிடந்தால் அவருக்குப் பிடிக்காது”

“அவருக்கு மச்சமில்லாட்டில் சரிவராது…”

அவரால், அவருக்காகவே இயங்கும் வீட்டில் பெண்ணின் இடம் எது…?

வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய வீட்டு வேலை அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா…? என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘இல்லை’என்றே பதிலளிப்பர். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பிள்ளைகளைப் பராமரிப்பது, இன்முகத்துடன் இருப்பது… இவையே நல்ல பெண்ணுக்குரிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதிலிருந்து பிறழ்பவள் ‘நீலி’என்றும் ‘அடங்காப்பிடாரி’என்றும் அடைமொழிகளால் சுட்டப்படுகிறாள்.

‘பெண் இரண்டாம் பிரஜைதான்’ என்று, எம்மால் கொண்டாடப்படும் இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கின்றன.

சீதைக்குக் கோடு…
நளாயினிக்குக் கூடை…
கண்ணகிக்கு பத்தினிப் பட்டம்…
அருந்ததிக்கு வானம்…
புராணம் படி! புரிந்துகொள்…!
நீ அகாலத்தில் இறந்தால்
புன்னகை உறைந்த
உன் புகைப்படத்திற்கு
மாலை போட
மூன்றே மாதங்களில் மற்றொருத்தி…!

மாதவியின் மீது கொண்ட மயக்கம் தீர்ந்து திரும்பிவந்த கோவலனை குற்றம்சொல்லாமல் ஏற்றுக்கொண்ட கண்ணகி கற்புத்தெய்வம். வயதான கணவனை கூடையில் வைத்து பரத்தை வீட்டிற்குத் தூக்கிச்சென்ற நளாயினி போற்றுதற்குரியவள். கல்லிலும் முள்ளிலும் கணவனை நிழலெனத் தொடர்ந்த சீதையின் மீது சந்தேகித்த இராமன் கடவுள். தோற்ற மயக்கத்தால் இந்திரனோடு கூடிய அகலிகை கல்லாய் சபிக்கத்தக்கவள். கோபியரோடு கூடிக்களித்த கிருஷ்ணன் வணங்கத்தக்கவன். நினைத்துப் பாருங்கள்… கிருஷ்ணனைப் போன்று ஒரு பெண் (அவள் தெய்வமேயானாலும்) யாதவர்களோடு கூடிக்களித்திருந்தால் அவளை வணங்கியிருப்போமா என்று. இந்த புராணங்கள், இதிகாசங்கள் வாழ்வியல் நீதியைப் போதித்திருக்கின்றன என்பது ஒரு பக்கம்தான். மறுபக்கம் பெண்ணைக் கீழ்மைப்படுத்தவும் செய்திருக்கின்றன.

புராணங்கள்தான் இப்படியென்றால் நம் பொழுதுபோக்குச் சாதனங்களுள் முதலிடம் வகிக்கும் சினிமாவைப் பாருங்கள். ஆணை முதன்மைப்படுத்தும் கதைகள்…! நேர்மையானவனாக, பத்துப் பேரை பந்தாடும் பலம் பொருந்தியவனாக, இலட்சியவாதியாக, இரக்கமுள்ளவனாக… சற்றேறக்குறைய கடவுளாக கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறான். பெண் அவனைச் சார்ந்தவளாக, அரைகுறை ஆடைகளோடு வெண்ணிற மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து நடனமாடுபவளாகவே பெரும்பாலான திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறாள். அதாவது கதாநாயகன் விருந்தின்போது தொட்டுக்கொள்ளும் ‘ஊறுகாய்’ மட்டுந்தான் அவள்.

பெண்கள் மீதான அநீதி என்பது காலகாலங்களுக்கும் தொடரும் ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. போரில் வெற்றிவாகை சூடிய தரப்பின் முதற் பார்வை விழுந்த இடமாக அந்தப்புரங்கள் இருந்திருக்கின்றன. கைப்பற்றப்பட்ட நிலத்திற்குரிய பெண்ணை இழிவுசெய்வது அந்த நிலத்தைச் சார்ந்த ஆண்களை இழிவுசெய்வதற்கொப்பானதாகக் கருதப்பட்டது. நிலத்தைப்போல, ஆநிரைகளைப் போல பெண்ணும் ஆணின் உடமை. அவளைக் கவர்ந்து அவள் உடலையும் ஆன்மாவையும் சிதைப்பது ஆண்மையாம். அதை நாம் இன்று எமது நாட்டிலேயே கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும், ஓசைநயம் என்பது காதுக்கு இனிமையான விடயமே. ஆனால், அந்த ஓசை நயத்தை பழமொழிகளை இயற்றியவர்கள் எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும்.
‘க’ல்லானாலும் ‘க’ணவன்-‘பு’ல்லானாலும் ‘பு’ருசன்
‘க’ணவனே ‘க’ண்கண்ட தெய்வம்
பொம்பிளை சிரிச்சாப் போச்சு… புகையிலை விரிச்சாப் போச்சு!

சிரிப்பிற்கும் சிறை! 21ஆம் நூற்றாண்டிற்கூட இத்தகைய பழமொழிகள் பிரயோகத்தில் இருக்கின்றன என்பது இன்னும் வேதனையான விடயம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று பலரும் பேசக் கேட்டிருக்கிறோம். அந்தக் காலக்கண்ணாடியைப் படைக்கும் சிருஷ்டி கர்த்தாக்கள் எழுத்தாளர்கள். சமூகத்தில் ஏனைய எல்லோரையும் விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாக, உணர்வுகளை வாசிப்பவர்களாக, அறிவுஜீவிகளாகப் போற்றப்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையும் ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. அந்த உலகத்திற்குள் எப்போதாவது வந்துபோகும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். வீட்டில், வேலைத்தளங்களில், அரசியலில், அறிவியலில், கலையுலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பழக்கதோஷம் விடவில்லை. அண்மைக்காலங்களில் பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் மொழியை வரையறுப்பவர்களாகவும் இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தையை நீ எப்படிப் பிரயோகிக்கலாம்’என ஆவேசம் கொள்ளுமளவிற்கு விரிந்திருக்கிறது அவர்களது கட்டற்ற அதிகார வெளி.

பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை. அன்பை, பரஸ்பர மதிப்பை, உணர்வுகளை, வாசிப்பை, நேசிப்பை, துக்கத்தை பகிர்ந்து, புரிந்து வாழக்கூடிய ஆறாம் அறிவைக் கொண்டவர்கள் மனிதர்கள். வெளிமனிதரைப் புரிதல் இரண்டாம் கட்டம். முதலில் வீட்டிலிருந்து பெருகட்டும் அன்பு. வீட்டினுள்ளே நுழையும்போதே செருப்போடு சிரிப்பையும் கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரும் ‘ஆண்மனம்’ மாறவேண்டும். எனது சக உயிர் பெண் என்று ஆண்கள் நினைக்கும் நாளுக்காக எத்தனை நூற்றாண்டுதான் துயரத்தோடு காத்திருப்பது…?

Quelle - Tmilnathy-இளவேனில்...