Dienstag, Dezember 12, 2006

பெண்: நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை

- தமிழ்நதி -

ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகாலில் காதலின் முகம் பார்த்துப் பரவசமடைகிறோம். இறந்தகாலத்துள் இழுத்துச் செல்லும் எகிப்திய பிரமிட் கண்டு வியக்கிறோம். கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பொங்கிப் பிரவகிக்கும் அழகிலிருந்து விழிகளை மீட்க முடியாமல் பிரமிக்கிறோம். இலங்கையின் சிகிரியா ஓவியத்தில் கலையின் வண்ணம் காண்கிறோம். ஆனால், உலகமெங்கும் தீரா வியப்பு ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் சென்று பார்க்க வேண்டியதில்லை. நமது வாழ்விலிருந்து பிரித்து விட முடியாத, எங்களோடு கூடவே இருக்கிற அதிசயம் அது. அதாவது, ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாரபட்சங்கள். நினைத்துப் பார்க்கும்போது ‘இது எப்படி நிகழ்ந்திருக்க முடியும்…?’என்னும் கேள்வி ஊடுருவுகிறது. மனித குலத்திற்குள் ஒரு பாலாரின் மீது மற்றையவர் ஆதிக்கம் செலுத்துவதென்பது இயல்பேபோல நம்மில் பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த மனோபாவத்தின் மீது கேள்விகள் எழுப்ப அஞ்சுகிறோம். அவ்வாறு கேள்வி எழுப்புவதையே மரபுமீறலாகக் கொள்கிறோம்.

‘மிருகங்களைப்போல’ என்று பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதிலுள்ள அபத்தத்தைப் பாருங்கள். ஏனைய மிருகங்களைக் காட்டிலும் பலமுள்ள சிங்கம் எப்படிக் காட்டின் ராஜா ஆனதுவோ அவ்வாறே மனிதனும் தன்னைவிட பலமற்ற உயிர் என்று கருதப்படும் (பெண் ஆணைவிட உடல்வலிமையில் குறைந்தவள் என்பது அறிவியல்ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.) பெண்ணைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பதில் நிறைவு காண்கிறான்.

‘வீடு’என்பது வாழும் இடமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ஆண் ஆசுவாசம் செய்துகொள்வதற்கான அமைதிக்கூடமாக, கட்டற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கக்கூடிய இடமாக, அவன் என்றென்றைக்கும் தலைவனாக இருக்கக்கூடிய ஒரு சாம்ராஜ்ஜியமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் புகை பிடிப்பது, மது அருந்துவது இன்னோரன்ன பழக்கவழக்கங்கள் கூட ஆண்களுடைய ஏகபோக (பெரிய சொத்துடமை பாருங்கள்) உரிமையெனவே கொள்ளப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், மது அருந்தியபின் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைக்கும் கூட ஆண் பொறுப்பாக மாட்டான் என்பதுதான். தீமை பயக்கும் பழக்கவழக்கங்களுக்கே ஏகபோக உரிமை கொண்டாடும் ஆண், சமூகத்தை வழிநடத்தும் அறிவியல், கலை, இலக்கியம், அரசியல் இவற்றில் எவ்விதம் நடந்துகொள்வான் என்பது கண்கூடு.

‘எவருக்கும் எவருடைய உடல் மீதும் உரிமையில்லை’ என்றும் ‘சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்குநுனி வரைதான்’ என்றும் பேசிக்கொள்கிறோம். ஆனால், வீட்டில் வன்முறை என்பது அகற்றப்படமுடியாத ஒரு பூதமாக இருந்துகொண்டுதானிருக்கிறது. கணவனிடம் அடி வாங்கும் பெண்ணின் உடற்காயங்கள் நாளடைவில் ஆறிவிடக்கூடும். ஆன்மாவின் மீது விழும் அடிக்கு மருந்திடுவது யார்…? இழிவுபடுத்தப்பட்டதை அவளால் எப்படி மறக்க இயலும்…? வீட்டின் மூலைகளில் கரப்பான்பூச்சிகளைப்போன்று விரட்டி விரட்டி தாக்கப்படும்போது பெண் என்பவள் சக உயிர் என்ற நினைவு முற்றிலும் அழிக்கப்படுகிறது.

“அவர் எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களையும் தந்திருக்கிறார்.” என்று சில பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ‘எல்லாவிதமான’என்பதற்கும் ‘எல்லைகள்’ உண்டு. அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது ஆணுடைய குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் பெண்ணுடைய சுதந்திர வெளி இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் பிரவேசிக்க பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மீறிப் பிரவேசித்தால் “உங்களையெல்லாம் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேணும் என்று சும்மாவா சொன்னார்கள்…?” என்று வெகுண்டெழுதல் நிகழும். ‘வைக்கவேண்டிய இடம்’என்பதற்கான பொருளை விளக்கப்போனால் ‘பெண்ணடிமை’எனப் பதில் வருதல் சாத்தியம்.

சமையலில் தொடங்கி பிள்ளைகளின் திருமணம் வரை ஆணின் அதிகார நிழல் நீண்டு படர்ந்துள்ளது. முக்கியமான முடிவுகள் அவனாலேயே எடுக்கப்படுகின்றன என்பதை ‘தண்டோராக்காரன்’என்ற கவிதை சொல்லிப்போகிறது.

‘பெண்ணாதிக்கம் பெருகிவிட்டது’
போகிறான்
வேண்டுகோள்களைக் கையேந்தி
தீர்மானங்களுக்காகக் காத்திருக்கும்
பெண் வாழும் தெருவால்…
அறிவார்ந்த சபைகளில்
பரிமாறும் பணி மட்டும் விதிக்கப்பட்ட
அவளைக் கடந்து
அதிர்ந்தொலித்துப் போகிறது பறை.

பூமியென பெண் உவமிக்கப்படுகிறாள். ஆண் பெரும்பாலும் புயலோடு ஒப்பிடப்படுகிறான். பெரும் காற்றாய் வந்து மரங்களைச் சாய்த்து, கூரைகளைப் பிய்த்தெறிந்து, எதிர்ப்படுவனவெல்லாவற்றையும் துவம்சம் செய்து சுழன்றடித்துப் போய்விடுகிறது புயல். பூமி இருக்கிறது துக்கித்து. அதனால் பெயர்ந்து செல்லவியலாது. பெண்ணும் இருக்கிறாள் செயலற்று. குழந்தைகளின் அடைக்கலமாக, வீட்டை அடைகாப்பவளாக, சமூகத்தால் சூட்டப்படும் ‘ஓடுகாலி’ என்ற பட்டத்தைச் சுமக்கத் திராணியற்றவளாக வீட்டோடு அவளைக் கட்டிவைத்திருக்கிறது ஒரு மாயக்கயிறு.

பாட்டும், சத்தமும் என தன்னியல்பாக இருக்கும் வீடு ஒரு ஆணின் வருகையால் எப்படி ஒடுங்குகிறது என நாம் பார்க்கிறோம். ஓசைகள் ஒரு செருப்பொலியில் உறிஞ்சப்பட மௌனப்பந்தாய் கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்கிறது மகிழ்ச்சி. (இதற்கு விதிவிலக்கான வீடுகள் உண்டு. ஆனால், எத்தனை வீதம்…?)

“அப்பா வாறார்… ஓடிப்போய் படியுங்கோ…!”

“செருப்பெல்லாம் இப்பிடிச் சிதறிக்கிடந்தால் அவருக்குப் பிடிக்காது”

“அவருக்கு மச்சமில்லாட்டில் சரிவராது…”

அவரால், அவருக்காகவே இயங்கும் வீட்டில் பெண்ணின் இடம் எது…?

வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய வீட்டு வேலை அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா…? என்ற கேள்விக்கு பெரும்பாலும் ‘இல்லை’என்றே பதிலளிப்பர். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பிள்ளைகளைப் பராமரிப்பது, இன்முகத்துடன் இருப்பது… இவையே நல்ல பெண்ணுக்குரிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதிலிருந்து பிறழ்பவள் ‘நீலி’என்றும் ‘அடங்காப்பிடாரி’என்றும் அடைமொழிகளால் சுட்டப்படுகிறாள்.

‘பெண் இரண்டாம் பிரஜைதான்’ என்று, எம்மால் கொண்டாடப்படும் இதிகாசங்களும் புராணங்களும் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கின்றன.

சீதைக்குக் கோடு…
நளாயினிக்குக் கூடை…
கண்ணகிக்கு பத்தினிப் பட்டம்…
அருந்ததிக்கு வானம்…
புராணம் படி! புரிந்துகொள்…!
நீ அகாலத்தில் இறந்தால்
புன்னகை உறைந்த
உன் புகைப்படத்திற்கு
மாலை போட
மூன்றே மாதங்களில் மற்றொருத்தி…!

மாதவியின் மீது கொண்ட மயக்கம் தீர்ந்து திரும்பிவந்த கோவலனை குற்றம்சொல்லாமல் ஏற்றுக்கொண்ட கண்ணகி கற்புத்தெய்வம். வயதான கணவனை கூடையில் வைத்து பரத்தை வீட்டிற்குத் தூக்கிச்சென்ற நளாயினி போற்றுதற்குரியவள். கல்லிலும் முள்ளிலும் கணவனை நிழலெனத் தொடர்ந்த சீதையின் மீது சந்தேகித்த இராமன் கடவுள். தோற்ற மயக்கத்தால் இந்திரனோடு கூடிய அகலிகை கல்லாய் சபிக்கத்தக்கவள். கோபியரோடு கூடிக்களித்த கிருஷ்ணன் வணங்கத்தக்கவன். நினைத்துப் பாருங்கள்… கிருஷ்ணனைப் போன்று ஒரு பெண் (அவள் தெய்வமேயானாலும்) யாதவர்களோடு கூடிக்களித்திருந்தால் அவளை வணங்கியிருப்போமா என்று. இந்த புராணங்கள், இதிகாசங்கள் வாழ்வியல் நீதியைப் போதித்திருக்கின்றன என்பது ஒரு பக்கம்தான். மறுபக்கம் பெண்ணைக் கீழ்மைப்படுத்தவும் செய்திருக்கின்றன.

புராணங்கள்தான் இப்படியென்றால் நம் பொழுதுபோக்குச் சாதனங்களுள் முதலிடம் வகிக்கும் சினிமாவைப் பாருங்கள். ஆணை முதன்மைப்படுத்தும் கதைகள்…! நேர்மையானவனாக, பத்துப் பேரை பந்தாடும் பலம் பொருந்தியவனாக, இலட்சியவாதியாக, இரக்கமுள்ளவனாக… சற்றேறக்குறைய கடவுளாக கதாநாயகன் சித்திரிக்கப்படுகிறான். பெண் அவனைச் சார்ந்தவளாக, அரைகுறை ஆடைகளோடு வெண்ணிற மேகங்களுக்கிடையில் மிதந்து மிதந்து நடனமாடுபவளாகவே பெரும்பாலான திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறாள். அதாவது கதாநாயகன் விருந்தின்போது தொட்டுக்கொள்ளும் ‘ஊறுகாய்’ மட்டுந்தான் அவள்.

பெண்கள் மீதான அநீதி என்பது காலகாலங்களுக்கும் தொடரும் ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. போரில் வெற்றிவாகை சூடிய தரப்பின் முதற் பார்வை விழுந்த இடமாக அந்தப்புரங்கள் இருந்திருக்கின்றன. கைப்பற்றப்பட்ட நிலத்திற்குரிய பெண்ணை இழிவுசெய்வது அந்த நிலத்தைச் சார்ந்த ஆண்களை இழிவுசெய்வதற்கொப்பானதாகக் கருதப்பட்டது. நிலத்தைப்போல, ஆநிரைகளைப் போல பெண்ணும் ஆணின் உடமை. அவளைக் கவர்ந்து அவள் உடலையும் ஆன்மாவையும் சிதைப்பது ஆண்மையாம். அதை நாம் இன்று எமது நாட்டிலேயே கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும், ஓசைநயம் என்பது காதுக்கு இனிமையான விடயமே. ஆனால், அந்த ஓசை நயத்தை பழமொழிகளை இயற்றியவர்கள் எப்படி நாசம் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் தலையிலடித்துக்கொள்ளத் தோன்றும்.
‘க’ல்லானாலும் ‘க’ணவன்-‘பு’ல்லானாலும் ‘பு’ருசன்
‘க’ணவனே ‘க’ண்கண்ட தெய்வம்
பொம்பிளை சிரிச்சாப் போச்சு… புகையிலை விரிச்சாப் போச்சு!

சிரிப்பிற்கும் சிறை! 21ஆம் நூற்றாண்டிற்கூட இத்தகைய பழமொழிகள் பிரயோகத்தில் இருக்கின்றன என்பது இன்னும் வேதனையான விடயம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று பலரும் பேசக் கேட்டிருக்கிறோம். அந்தக் காலக்கண்ணாடியைப் படைக்கும் சிருஷ்டி கர்த்தாக்கள் எழுத்தாளர்கள். சமூகத்தில் ஏனைய எல்லோரையும் விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாக, உணர்வுகளை வாசிப்பவர்களாக, அறிவுஜீவிகளாகப் போற்றப்படுபவர்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறையும் ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. அந்த உலகத்திற்குள் எப்போதாவது வந்துபோகும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். வீட்டில், வேலைத்தளங்களில், அரசியலில், அறிவியலில், கலையுலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பழக்கதோஷம் விடவில்லை. அண்மைக்காலங்களில் பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் மொழியை வரையறுப்பவர்களாகவும் இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். ‘இந்த வார்த்தையை நீ எப்படிப் பிரயோகிக்கலாம்’என ஆவேசம் கொள்ளுமளவிற்கு விரிந்திருக்கிறது அவர்களது கட்டற்ற அதிகார வெளி.

பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை. அன்பை, பரஸ்பர மதிப்பை, உணர்வுகளை, வாசிப்பை, நேசிப்பை, துக்கத்தை பகிர்ந்து, புரிந்து வாழக்கூடிய ஆறாம் அறிவைக் கொண்டவர்கள் மனிதர்கள். வெளிமனிதரைப் புரிதல் இரண்டாம் கட்டம். முதலில் வீட்டிலிருந்து பெருகட்டும் அன்பு. வீட்டினுள்ளே நுழையும்போதே செருப்போடு சிரிப்பையும் கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரும் ‘ஆண்மனம்’ மாறவேண்டும். எனது சக உயிர் பெண் என்று ஆண்கள் நினைக்கும் நாளுக்காக எத்தனை நூற்றாண்டுதான் துயரத்தோடு காத்திருப்பது…?

Quelle - Tmilnathy-இளவேனில்...

Donnerstag, August 24, 2006

தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்

- பாமதி பிரதீப் -
- அவுஸ்திரேலியா -

7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் வாசிக்கப்பட்டது

யுத்தம் , யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்களின் மேலைத்தேய புலம் பெயர்வு. இப்புலம்பெயர்வு தமிழ் மக்களின் வாழ்க்கையில் பலவகையான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வாழ்ந்ததை விட பொருளாதார லாபத்தை அவர்கள் இங்கே பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. அதே நேரம் இப்புலம்பெயர்வு மக்கள் வாழ்க்கையின் தன்மையை, இயந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிவோம். அத்தகையவாறு மற்றொரு வேதனைக்குரிய விளைவாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் பெண்கள் பலருக்கு வாழ்க்கைத் துணையை தமிழ் சமூக கலாச்சார வழிமுறையில் அதாவது திருமண வாழ்க்கையைப் பெறுவது கடினமான விடயமாக அமைந்துள்ளது.


நாம் நாடுவிட்டு நாடு வந்தாலும் கலாச்சார முறைகளால் நடைபெறும் இந்த திருமண சடங்குகளை தொடர்ந்தும் கடைப் பிடிக்கிறோம். எனினும் ஏன் திருமண நிகழ்வு என்பது தமிழ்ப் பெண்கள் வாழ்வில் சவாலாக அமைகின்றது. அதற்கான காரணிகள் என்ன என்பதை இக் கட்டுரையில் பார்ப்போம். ஈழத்தை எடுத்துக் கொண்டால் அங்கு வாழும் பல தமிழ்ப் பெண்கள் 30 வயதுக்குப் பின்பாகவும் திருமணமாகாமல் இருப்பதைக் காணலாம். தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் யுத்தத்தை இதற்கு ஒரு காரணமாகக் கருதலாம். ஏனெனில் பல இளைஞர்களின் உயிரை இந்த யுத்தம் இரையாக்கியுள்ளதால் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கொள்ளலாம்.


எமது சமூகம் இன்றுவரை திருமணம் என்பது இப்படித்தான் பேசப்பட்டு நடைபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறது. இது ஈழத்தில் வாழும் தமிழருக்கும் பொருந்தும். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் பொருந்தும். ஆனால் ஈழத்தில் இன்று மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக போர் இருப்பதால் இந்த போர்க்கால சூழ்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ எம் கலாச்சார சம்பிரதாயங்களுக்காக முக்கியத்துவம் ஓரளவு இரண்டாம் பட்சமாகின்றது. அதன் அடிப்படையில் முன்பு காலத்திற்குக் காலம் கவனிக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் மற்றைய சுமைகளால் இரண்டாம் பட்சமாகிறது. அதே நேரம் ஆண்கள் யுத்தத்தில் இறந்ததினால் பெண்கள் பொருளாதாரச் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள.

ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் 30 வயதுக்குப் பின்பு தமிழ்ப் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது ஏன் சவாலாக அமைகின்றது என்று பார்ப்போம் . ஏனெனில் இன்று இது வளர்ந்து வரும் ஒரு சமூகப் பிரச்சினை.

எமது சமூகம் திருமணம் என்பது பெண்ணின், ஆணின் வாழ்வில் நடைபெற வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாக கருதுகிறது. ஓரு பெண் திருமணம் என்ற சடங்குக்குப் பின்னாலே தாய்மையை அடைய வேண்டும் என்ற உறுதிப் பாடும் அத்திருமணம் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கும் என்ற கருத்தில் தெளிவாக நிற்பதை நாம் அறிவோம். அவ்வாறு உறுதியான நிலைப்பாட்டில் வாழும் சமூகத்தின் மத்தியில் திருமணமாகாத பெண்கள் எப்படி வாழ முடியும் என்று நாம் நோக்கினால் இச்சமூக அங்கத்தவர்களால் அவர்கள்மேல் ஒரு அனுதாப அலையை வீசுவதுடன் ஓரளவு தனிமைப் படுத்தலும் நிகழ்த்தப்படுகின்றது.

இத்தகைய நடவடிக்கைகள், தொடர்ச்சியான அனுதாப அலைகள் திருமணமாகாத பெண்களை மேலும் நோகடிப்பதுடன் தனிமைப் படுத்துமேயன்றி ஆதரவு அளிக்காது. எமது சமூகத்தில் வாழும் அங்கத்தவர்கள் ‘ தாலி பெண்ணுக்கு வேலி’ என்ற கருத்தியல் கொண்டிருப்பதால் தாலி இல்லாத பெண்கள் வேலி அற்றவர்கள் என்ற கருத்தை தமக்குள் எந்தளவு தேக்கி வைத்துள்ளனர் என்பதை நாம் காணலாம்.

புலம் பெயர்ந்த ஐரோப்பிய நாடாகட்டும் , கனடா , லண்டன் , அவுஸ்திரேலியாவாகட்டும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பெண்களுக்கு அதே நாட்டில் அல்லது மேலைத்தேய நாட்டில் வாழும் தமிழ் இளைஞர்களை வாழ்க்கைத் துணையாக இணைக்கப் பார்ப்பது இயல்பாக நிகழும் ஒரு நடைமுறை. இவ்வாறு கல்யாணத்தை பொருத்துவதற்கும் எமது சமூகத்திலேயே பலர் தரகர் போன்று இயங்குகின்றனர்.பல காலங்கள் மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து மேலைத்தேய கலாச்சாரத்தின் பல நவீன (ஆழனநசn) முறைகளைப் பழகிக் கொண்டாலும் பல தமிழ்க் குடும்பங்கள் திருமணம் என்று வரும்போது மிகவும் பிற்போக்கான முறைமைகளை - பழைய சிந்தனை முறைமைகளை கொண்டிருப்பதைக் காணலாம். அதாவது பெண் எவ்வளவு படித்து தன்னை வளர்த்திருந்தாலும் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் பண்டைய ஆணாதிக்க முறைகளை ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய நிலை இங்கு இருக்கின்றது. அதாவது பேசி முற்றாக்கப்படும் திருமணங்களில் ஒரு பெண் தனக்கு எத்தகைய கணவன் கிடைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதைவிட ஒரு ஆண் தனக்கு பிடித்தமான பெண்ணைத் தேடுவது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது.

ஒரு பெண்ணை தனக்குப் பொருத்தமானவளா என்று தீர்மானிக்கும் உரிமை ஆண்களின் கைகளிலேயே கொடுக்கப்படுகின்றது. இது பெண்களின் கைகளில் இருந்து அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமைமையைப் பறித்தெடுப்பது போன்ற செயற்பாடாகும். அதைவிட வேடிக்கையான விடயம் என்னவெனில் ஆண்கள் தமக்கு வாழ்க்கைத் துணையாக வரும் பெண்களிடமிருந்து எதிர்பார்க்கும் தகைமைகள். புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரர்கள் எதிர்பார்க்கும் முக்கிய தகைமை ‘பெண் அழகாக’ இருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் அழகு வெள்ளைத் தோலுடன் , மெலிந்த தோற்றத்துடன் ஏறத்தாள நடிகை சிம்ரன் , ஜோதிகா ,ரம்பா . சினேகா போன்ற தோற்றமுடைய பெண்களை மனதில் வைத்து தேடுகிறார்கள். அழகான பெண்ணை வாழ்க்கைத் துணையாக பெறுவது தமது கனவு , லட்சியம் என்று நினைக்கிறார்கள்.அதில் மற்றொரு வகையான ஆண்கள் பிரச்சினை மேலைத்தேய நாடுகளில் வாழும் பெண்களின் கற்பு பற்றியது. அதாவது இந்த நாட்டில் உள்ள சுதந்திரம் அவர்களின் ஒழுக்கத்தை உடைத்திருக்கும் என்ற சந்தேகம். அதன் காரணமாக மண்மணம் மறக்காத பெண்களைத் தேடி தாய்நாட்டிற்கு விஜயம். அத்துடன் பல ஆண்கள் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் பல வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.


இந்த திருமண பேச்சுவார்த்தை மனித நேயம் நிரம்பிய ஒரு செயற்பாடாக இல்லாமல் சந்தையில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போன்று நிகழ்கின்றது. அதனால் இவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இல்லாவிட்டால் பெண்களின் பெற்றோருக்கு மாப்பிளை தேடுவது என்பது கடும் போராட்டமாகவே அமைந்து விடுகிறது.

இந்த சிந்தனைப் போக்கின் அடித்தளம் பழங்கால ஆணாதிக்கமே. அதாவது ஆண், பெண்ணைவிட உயர்ந்தவன் சிறந்தவன் என்ற சிந்தனைப் போக்கு . இப்படியான போக்குகள் இன்று எத்தனை பெண்களை திருமண வயதைத் தாண்டி தனிமைப்படுத்தி வைத்துள்ளது என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும். ஒரு பெண்ணின்; வெள்ளைத்தோலா கறுப்புத்தோலா அவளின் வாழ்க்கைக்கான தேடுதலை தீர்மானிப்பது? எம் உடலையும் கடந்த ஆத்மா அதன் வாழ்தலுக்கான உரிமை இருப்பு மதிக்கப்பட வேண்டியதாகும்.

முக்கியமாக சமூக அங்கத்தவர்களாகிய நாங்கள் இத்தகைய பழமைவாத ஆணாதிக்க செயல்களை ஆதரித்து அவர்களது செயற்பாட்டுக்கு துணை நிற்கிறோம். முக்கியமாக திருமணங்களைப் பொருத்தி வைக்கும் நடுவில் நிற்கும் நபர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஆண்கள் கேட்கும் பொருட்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்காமல் மனித மனங்கள் ஒன்றுசேர அதற்கான ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதன்மூலம் தான் ஆண் என்ற தகைமையை மட்டும் வைத்துக் கொண்டு பேரம் பேசுபவர்களுக்கு தாம் தொடர்ந்து இப்படி இயங்க முடியாது என்று உணர்த்த முடியும். ஈழத்தில் ஒரு காலகட்டத்தில் சீதனம் , சாதி இரண்டும் பெண்களின் வாழ்வில் திருமண பந்தத்தை தீர்மானித்தது. என்னைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்த நாடுகளில் பெண்களின் வாழ்வின் தடையாக நிற்பது ஆண்களது ‘அழகு மோகம்’ என்பேன்.

இளம் பராயத்தை இலங்கையில் கழித்த பின்பு புலம் பெயர்ந்த பெண்களின் அடையாளங்கள் இன்றுவரை எமது கலாசாரத்தை சார்ந்தே நிற்கின்றது. தமக்கான உறவை தாமே தேடிக்கொள்ளும் துணிவையும் நம்பிக்கையையும் பலர் கொண்டிருப்பதில்லை. அவர் தமது வாழ்க்கைத் துணையை பெறுவதற்கு தமது பெற்றோரையோ, சமூக அங்கத்தவர்களையோ சார்ந்து இருக்கின்றார்கள். அதனால் எமக்கு ஒரு தார்மீக கடமை உண்டு. அவர்களின் எதிர்காலம் மேல் அக்கறை அவசியம். அதைவிட ஒரு பெண் தனியாக வாழும்போது அவளது தனிமையை தமது தேவைகளுக்கு பாவிக்க முயலும் சில ஆண்களும் எம்மத்தியில் இருக்கின்றனர். எனவே ஆணாதிக்க அம்சங்கள் நிறைந்த திருமணப் பேச்சுவார்த்தைகளை நாம் ஆதரிக்காமல் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

சமூக மாற்றம் என்பது எம் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலும் , தெளிந்த நிலைப்பாட்டிலுமே தங்கியுள்ளது. ஒரு குளத்தில் நுளம்புகளும் நோய்க் கிருமிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றால் அதன் சுற்றாடல்தான் காரணம். அதே மாதிரி சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் கிருமிகள் பெருகுவதற்கும் சூழல்தான் காரணம். அந்தச் சூழலாக நாம் இருக்காமல் அந்த கிருமிகளை ஒழிக்கும் சூழலாக மாற வேண்டும்.

Quelle - ஊடறு பெண்கள் இதழ்

Samstag, April 01, 2006

சர்வதேச மகளிர் தினம் - சில கருத்துக்கள்

பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்
சபேசன் (அவுஸ்திரேலியா)

சர்வதேச மகளிர் தினம் (International Womens Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்து நடைபெற்று வருகின்றது.

~சாதாரணப் பெண்கள் என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய பெண்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் ரஷ்ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஷ்யப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம்.

இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனிதஉரிமைகளையும் இடம்பெறச் செய்வதற்கும் வழி வகுத்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி MWM என்று அழைக்கப்பட்ட Militant Womens Movement என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.

சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன்முகப்பார்வைகளினூடாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.

முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம்.

ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம் குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்து மார்க்கசியப் பெண்ணியம் தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக அதாவது டீழைடழபiஉயட குழரனெயவழைn ஐ அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.

இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!

பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?

எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல. சொல் என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில் தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் FEMINISM என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.

முதலாளித்துவதற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pure Feminists என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY), சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (ஊடுயுளுளு) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

தமிழ் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.

உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன

(தொல்காப்பியம்-பொருள்-களவு-7)

-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல்
நிச்சமும் பெண்பாற் குரிய

- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (வுhந குயசை ளுநஒ) இரக்கம் உடையவளாக (வுhந புநவெடந ளநஒ) மெல்லியவளாக (வாந ளழகவநச ளநஒ) உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக (வுhந றநயமநச ளநஒ) உருவகிக்கப்படுகின்றாள்.

சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும்

வல்லிதின் விருந்து புறந்தருதலும்

சுற்றம் ஓம்பலும்

(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)

-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.

அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

இவை மட்டுமல்ல நேயர்களே,

கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலைமாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.

சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நூல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானூறில் ஒரு பாடலைப் பார்ப்போம். பூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்போப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினைக் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.

~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,
காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது,
அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம்,
வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து,
அட்டவேளை வெந்தை வல்சியாக,
நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்- (புறநானூறு 246)

இந்தப்பாடலின் கருத்தென்ன?

வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!

என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்- மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.

பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் தூண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம் என்கின்ற நூல் கீழ்வருமாறு கூறுகின்றது.

கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள் - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும் போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக்கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் தூண்டுகின்றது.

இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறு கொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.

இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நூல்களும் புராண நூல்களும் பரப்பின.

கற்பு என்பதற்குப் பலவிதமான பொருட்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

~ஆண்- பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்- பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது.

தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன்மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக தனது பெண்ணினத்தின் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்கதக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சம உரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,
இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு,
பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது.
ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.

இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானூறு, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நூல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

இவ் ஆய்வு 06.03.06 அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல் வானொலியின் ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

Quelle - Tamilnatham

Donnerstag, März 16, 2006

சர்வதேச பெண்கள்தினம்-ஒரு கண்ணோட்டம்

- மதுமிதா -

உலகம் முழுவதும், சர்வதேச பெண்கள்தினம், பெண்கள் அமைப்புகளினால் மார்ச்-8 ஆம் தேதி என்று குறிக்கப்பட்டு நினைவு கூரப்படுகிறது. பல நாடுகளில் விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தேசத்தின் எல்லைக்கோடு, மொழி, கலாச்சாரம், பொருளதாரம், அரசியல் ரீதியாக அனைத்து கண்டங்களிலுள்ள பெண்களின் நிலை வேறு பட்டிருக்கின்றன. எனினும் 90 வருடங்களுக்கும் மேலாக சமத்துவம், நீதி, அமைதி, வளர்ச்சி குறித்த போராட்டங்களில் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

சர்வதேச பெண்கள் தினம் என்பது சாதாரண பெண்மணிகள், வரலாறு படைத்தவர்களாக உயர்ந்தவர்கள் எனும் கதையினைக் கூறும் நாள். சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக நடை பழக நடத்தப்பட்ட போராட்டத்தினை நினைவு கூறும் தினம் இது.

நூற்றாண்டுப் போராட்டம் இது.
வருட வரிசைப்படி பார்க்கலாம்.

1909:
ஐக்கிய அமெரிக்காவில் முதல் தேசிய பெண்கள் தினம் பிப்ரவரி 28 ஆம் நாள் குறிக்கப்பட்டது.

1913
வரை பிப்-கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

1910:
உலக முழுவதிலிருந்தும் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்மணிகள் கோபென்கனில்(Copenhagen) பெண்களின் உரிமை குறித்து கருத்துக்கள் முன்வைக்க சந்தித்தனர். சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மூன்று பெண்மணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1911:
1910
சந்திப்பில் கோபென்கனில் எடுக்கப்பட்ட முடிவின் படி மார்ச் 19-ல் முதல் முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு மில்லியன் பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டனர். ஓட்டளிக்கும் உரிமைதேவை, வேலைகளில் உரிமைதேவை எனும் தங்கள் உரிமைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

ஒரு வாரத்துக்குள் மார்ச் 25 சோக தினமாக ந்யூயார்க்-கில் தீ விபத்தில் 140 வேலை செய்யும் பெண்கள் உயிரிழந்தனர்.இவர்களில் இத்தாலி, யூதப் பெண்கள் அதிகம். இந்நிகழ்வு முக்கிய காரணியாகி வேலைக்குச் செல்லும்
பெண்களின் பாதுகாப்பு தேவை குறித்த சிந்தனையினை வளர்த்து அசாதாரண விளைவை ஏற்படுத்தியது.

1913-14:
ரஷ்ய பெண்கள் முதல் உலகப் போர் சமயத்தில் 1913-ல் பிப்ரவரி கடைசி ஞாயிறு பெண்கள் தினமாகக் கொண்டனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 8 ஆம் நாள் சகோதரிப் பெண்களால் கொண்டாடப்பட்டது.

1917
போரில் இரண்டு மில்லியன் ரஷ்ய படைவீரர்கள் இறந்தனர். ரஷ்ய பெண்கள் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையினை தேர்ந்தெடுத்து உணவுக்கும் அமைதிக்குமான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசியல் தலைவர்கள் இது வேலை நிறுத்தத்திற்கான சரியான நேரமில்லை என்று இதனை எதிர்த்தனர். ஆனால் பெண்மணிகள் விட்டுத் தரவில்லை. புது வரலாறு நிகழ்ந்தது. பெண்மணிகளுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது. அந்த வரலாறு பதித்த ஞாயிறு பிப்ரவரி 23 ரஷ்யாவின் ஜூலியன் நாட்காட்டியின்படி. ஆனால் மற்ற கிரிகேரியன் நாட்காட்டியின்படி மார்ச் 8 ஆம் நாள்.

சர்வதேச பெண்கள் நாள் வளர்ந்த, வளரும் நாடுகளில் முழுபரிமாணம் பெற்றது. உலகப் பெண்கள் மாநாடு அரசியல், பொருளாதார ரீதியில் உரிமை கோரிப்பெறும் ஆற்றல் நல்கியது.

சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது.

இந்த வரலாற்று பிண்ணனி அறியாது எல்லா தினங்கள் போல் இதுவும் ஒருதினமாகக் கொண்டாடப்படுகிறது என்று கேலி செய்யும் மனிதர்களும் உள்ளனர்.

இந்த நாளை நினைவு கூர்ந்து நம்மாலும் நாம் ஈடுபடும் துறையில் முன்னேற முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் முயன்றால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம்.

ஓரளவு பெண்களின் நிலையில் வளர்ச்சி தெரிந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். ஒரு கிரண்பேடி,ஒரு கல்பனா சாவ்லா, ஒரு அம்ரிதா ப்ரீதம்,ஒரு திலகவதி..... போதாது. அவர்கள் சார்ந்த அதே துறையில் இன்னும் பலர் பேரெடுக்கும் நிலையில் வரவில்லை. இது எதனைக் காட்டுகிறது? மனதளவில் உயரும் போதே சாதிக்க இயலும்.
வெள்ளத்தனைய மலர்நீட்டம் தான்.

பொதுவாகப் பார்த்தோமெனில், பெண்களின் வளர்ச்சியைத் தடுக்க மற்றவர் எடுக்கும் ஒரே ஆயுதம் பாலியல்ரீதியான ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டு. அடுத்தது தலைக்கனம் எனும் மாயப்போர்வை. இதற்கு பயந்து குடத்திலிட்ட விளக்காய் கிடப்பவர் கோடி. இந்நிலை மாற சமூகமும் தன் பார்வையினை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமுமே பெண்களை மதிக்கும் நாள் தூரத்திலில்லை. இந்நிலையில் பெண்ணும் தனக்கான உரிமையில், தடம் புரளாது தனது கடமையை செவ்வனே செய்ய வேண்டிய கட்டாய சுமையினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டிய நிலை. இன்னும் சிறிது காலம் இவ்விரு விஷயங்களையும் வெகு ஜாக்கிரதையாக கடந்து விட்டால், அடுத்து வரும் தலைமுறைப் பெண்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும் பரிசை வளர்த்தெடுத்து கொடுப்போம்.

பள்ளி பாடத்திட்டத்தில்,
அம்மா சமைக்கிறாள்
அக்கா பாத்திரம் தேய்க்கிறாள்
அப்பா செய்தித் தாள் படிக்கிறார்(இதற்கான படம் ஈஸி சேரில் அமர்ந்திருப்பார் அப்பா கையில் பேப்பருடன்) என்று அடிப்படையிலேயே போதித்து விடுகிறோம்.

அடுத்து, பெண் திருமணத்தை முன்னிறுத்தி வளர்க்கப்படுதல். இந்நிலை மாறினால் தான் பெண் முன்னேற்றம் சாத்தியப்படும். இன்றைய பல பெண்களின் நிலை இன்னும் கேளிவிக்குறியாகவே உள்ளது.

இன்னும் குடித்து விட்டு வரும் கணவனையும் காத்து, குழந்தைகளையும் காப்பாற்றும் பெண்களைப் பார்க்கிறோம். ஆனால் அப்பெண்களால் உழைப்பிற்கு மட்டுமே நேரம் ஒதுக்க முடிகிறதே தவிர குழந்தையின் படிப்பிற்கோ,மனமளர்ச்சிக்கோ சரியான வழிநடத்துதல் தர இயலவில்லை.

கமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் பெண்ணைக் குறித்து சொல்கிறேன். இரு பெண் குழந்தைகள்.கணவன் குடிகாரன். இரவு மட்டுமே வீட்டுக்கு வருபவன். இரு குழந்தைகளுமே படுசுட்டிகள். படிப்பில் கவனம்.பாடும் திறமை அதிகம். யார் இக்குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியும், திறமையை ஊக்குவிக்கும் பணியும் செய்வது. அவரவர்களுக்கு அவரவர் குடும்பத்தினை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம். கணவன் குடித்துவிட்டு கமலாவின் ஊதியப்பணத்தையும் பறித்து, குடிக்கு செலவிடுகிறான். இப்படி ஒரு கணவன் தேவையா என சில பெரியவர்கள் அவளிடம் கேட்க அப்பெண்மணி சொன்ன பதில். "இதாவது குடிச்சிட்டு ராவானா வீட்டில விழுந்து கெடக்கும். இது இல்லைன்னு தெரிஞ்சா, வர்ற நாயிங்களுக்கெல்லாம் யார் பதில் சொல்றது. என் தலையெழுத்து இது. இந்த ரெண்டும் சாப்புட ஒழச்சா போதும்..."

இப்படி எத்தனை கமலாக்களோ...?

எத்தனை ஆண்டுகள் எத்தனை பெண்கள் தினம் கொண்டாடவேண்டுமோ!

- மதுமிதா -
quelle - காற்றுவெளி