Montag, August 18, 2003

பலவீனமாகக் கருதப் பட்ட பலங்கள்

- வைத்திய கலாநிதி எழுமதி -

அந்தக் காலத்தில் இருந்து 90 ஆண்டு காலப்பகுதிவரை பெண்ணியம் பற்றிய ஆய்வு நூல்களும், பொதுவான அபிப்பிராயங்களும் பெண்களுக்கு இரண்டாம் இடத்தையே ஒதுக்கியுள்ளன. ஆண்கள் வேலை செய்பவர்களாகவும், பெண்கள் வெறுமனே சமைப்பதும், படுக்கையப்பகிர்வதும்தான் என்ற ரீதியில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று பெண்கள் விமானம் ஓட்டுகின்றனர். விண்வெளிக்குச் செல்லுகின்றனர். களத்தில் ஆண்களுக்குச் சரிக்குச் சமனாக நின்று எதிரியை எதிர்த்துச் சமராடுகின்றனர். பெரிய தொழில் நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்களாகவும், வைத்திய நிபுணர்களாகவும், கட்டிட பொறியிலாளர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் வயலில் ஆண்களுடன் சேர்ந்து வேலையைப் பங்கு போட்டுச் செய்கின்றனர்.

உடலைமப்புரீதியாகவும், உடற்றொழில்ரீதியாகவும் ஒரே வயதுடைய ஆண்பெண் இருபாலாரையும் ஒப்பிட்டுப்பார்க்கும் இடத்தில் உயரம், நிறை, பலம் ஆகியவற்றில், ஆண்கள் பெண்களைவிட கூடியவர்களாகவே உள்ளனர். மேலும் பெண்ணின் வாழ்க்கையில் பிரத்தியேகமாக ஏற்படுகின்ற உடற்றொழிலியல் மாற்றங்களான மாதவிடாய் வருதல், மகப்பேறு அடைதல் ஆகிய விடயங்களையும் பெண்களின் பலவீனங்களாகப் பார்க்கின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் மனதில் நிறுத்திப் பெண்களை 2ம் இடத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனால் இக்காரணங்கள் அனைத்தும் பெண்களின் பலவீனம் அல்ல. அவை பலம் என்று வாதிடும் காலம் வந்துவிட்டது.. இதற்குப் பல ஆய்வுகளும் உறுதுணையாக நிற்கின்றன.

ஹெலன் பிஸர் ( Hellen Fisher ) என்ற பிரசித்தி பெற்ற அமெரிக்க மனித வர்க்கவியல் நிபுணர் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாகப் பெண் 21ம் நூற்றாண்டின் தலைவியாக வருவாளென்று எதிர்வு கூறுகின்றார். மேலும் அவர் தனது ஆய்வு நூலில் உளவியல் ரீதியாக ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் பல மடங்கு பலம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் தலைமைப்பதவியை வகிக்கத் தகுதிபெற்றவர்கள் என்றும் கூறுகின்றார். பெண்களின் தலை சிறிதாக இருப்பதனால் மூளையும் ஒப்பீட்டளவில் ஆண்களின் மூளையைவிட சிறிதாக உள்ளது. ஆனால் மூளையினுள் காணப்படுகின்ற நியூரோன்கள் எனப்படும் நரம்புக்கலங்களின் எண்ணிக்கை பெண்களில் கூடுதலாக உள்ளது. மேலும் ஆண்களின் குருதியில் ஈமோகுளோபினின் அளவு கூடுதலாகவும் பெண்களின் குருதியில் இமினோகுளோபினின் அளவு கூடுதலாகவும் உள்ளது. இதனைப் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் தங்களின் பணியை எதுவித ஓசையுமின்றி செய்து முடிப்பதினை வைத்தே கண்டு கொள்ளலாம்.

1995ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் ஓர் பரீட்சார்த்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்பு பயிற்சி எதிலும் ஈடுபடாத 41 பெண்கள் (இதில் மாணவிகள், வழக்கறிஞர்கள், வியாபாரநிலைய ஊழியர்கள், ஆறுமாதகாலத்திற்கு முன்பு, மகப்பேறு அடைந்த தாய்மார்கள் போன்றோர் அடங்குகின்றனர்) யாவரும் ஐந்திலிருந்து ஆறுமாதகாலப் பயிற்சியில் 34 கிலோ கிராம் பாரத்தினை தோளில் சுமந்தபடி 3 கிலோமீற்றர் தூரம் ஓடுவதற்கும், 45 கிலோகிராம் எடையைச் சுமந்தபடி நிலத்தில் இருந்து எழும்புவதற்கும் கற்றுக் கொண்டனர். ஆனால் அவர்களைப் போன்ற தரத்தில் உள்ள ஆண்களினால் அப்படி முன்னேற முடியவில்லை என்பதனையும் அப்பாPட்சார்த்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 1964 தொடக்கம் 1995 வரையான காலப்பகுதியில் மரதன் ஓட்டத்தில் பெண்களின் சாதனை விகித உயர்வு 32 வீதமாகவும், ஆண்களின் விகித உயர்வு 4.5 வீதமாகவும் காணப்பட்டது. இதுவும் பெண்களின் பரிணாம வளர்ச்சியின் மாற்றத்தினை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும்.

இவ வாறு ஆய்வுகளும் பரீட்சார்த்த செயற்பாடுகளும், பெண்களின் பலத்தினை வெளிக்கொண்டு வந்திருக்கும் இவ வேளையில் பெண்களும் பல பரிணாம வளர்ச்சிகளைத் தம் செயற்பாடுகளுடாகக் காட்டிவருகின்றனர். எனினும் இன்றும்கூட எம் மத்தியில் பெண்களைப் பலவீனமானவர்களாகவும், இரண்டாந்தர நிலையிலுள்ளவர்களாகவும் பார்க்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமாற வேண்டுமாயின் முதலில் பெண்கள் தம்பலத்தினை அறிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக என்னென்ன விடயங்களை வைத்துப் பெண்களைப் பலவீனமாக எடை போடுகின்றனர் என்று அறிந்து அவை, ஏன் பலவீனமான விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன என்பதையும் நோக்க வேண்டும். மேலும் இவ விடயங்கள் யாவும், இன்று பலமானவையாகச் செயற்படுகின்றன என்ற விஞ்ஞானாரீதியான ஆய்வு உண்மையையும் அறிந்திருக்க வேண்டும்.

முதலாவதாக மதக் கோட்பாடுகள் பெரும்பாலும் பெண்ணை ஆணுக்குக் கீழ்ப்பட்டவள் என்றும் ஆணுக்கு அடிமையானவள் என்றும் சித்தரிக்கின்றன. சிவன், பிரம்மா, விஸ்ணு, முருகன், யேசு, அல்லா, புத்தர் எனக் கூறப்படும் தெய்வங்கள், மதத்தலைவர்கள், மதப்போதகர்கள் அனைவருமே ஆண்கள். ஆண்கள் தலையெடுத்த சமூக அமைப்பில் முதன்மையான தெய்வத்தையும், ஆண்களாகவே படைக்க முடிந்தது. இதனால் பெண்களின் மனதிலும் நினைவிலும் கருத்தியல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் நாம் தரம் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடிந்தது.

இன்றும் மக்களிடையே பெரும் ஆதிக்கத்தைப் பெற்றுள்ள புராண இதிகாசக் கதைகளும் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவே படைக்கின்றன. உதாரணமாக பஞ்சபாண்டவர்கள் திரௌபதியைத் தம் மனைவியாகக் கொண்டிருந்தனர். ஆனால் அவளுக்கு அவர்களில் ஒருவரை மட்டும் கணவனாக ஏற்றுக் கொள்ளும் உரிமை கிடையாது. குழந்தைப்பருவத்தில் ஆணும் பெண்ணும், சரிசமமாக வளர்கின்றனர், வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் பூப்பெய்துகின்றபோது உடல், உள ரீதியாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை வருவதனால் சமூகம் அவளின் செய்ற்பாடுகளை சுதந்திரத்தினை மட்டுப்படுத்துகின்றது. இதன் ஒரு அங்கமாகவே அந்தக் காலத்தில் பெண் பூப்பெய்தினால் வீட்டை விட்டு சுதந்திரமாக நடமாட முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறாள். அதன் உச்சக்கட்டமாக மாதவிடாய்க் காலத்தின்போது அவள் வாழும் வீட்டில் இருந்துகூட தூரத் தள்ளிவைக்கப்படுகின்றாள். எதுவித பணியுமின்றி வீட்டின் ஒரு மூலையில் கைதிபோல் அடைக்கப்பட்டிருக்கிறாள். இதற்கு குற்றம், துடக்கு என்ற சாட்டுக்களும், இரத்தப் போக்கு இருப்பதனால் ஓய்வு தேவை என்ற காரணமும் காட்டப்படுகின்றது. ஆனால் இன்று பெண்கள் மாதவிடாயின்போது நாளாந்தம் செய்து கொண்டு வந்த சகல பணிகளையும் இடைநிறுத்தாது, செய்கின்ற நிலையினைக் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது என்பதனை விஞ்ஞானாரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் மாதம் ஒரு முறை ஏற்படுகின்றபோது நான்கு அல்லது ஐந்து நாட்களிற்கு இரத்தப் போக்குக் காணப்படும். இது காயத்தின்போது ஏற்படுகின்ற குருதி இழப்புப் போல சடுதியாக ஏற்படுகின்ற குருதி இழப்பு அல்ல. ஓமோன்களின் செயற்பாட்டால் ஒரு மாதகாலமாகப் பருமன் தடித்து வழமைக்கு அதிகமாக குருதி விநியோகத்தைப் பெற்றிருந்த கருப்பை உட்சுவர் உடைந்து உதிர்வதனாலேயே இரத்தப் பெருக்கு ஏற்படுகின்றது. இதன்போது ஐந்து நாட்களுக்கும் சேர்த்து ஆகக் கூடுதலாக 300 மில்லிலீற்றர் இரத்தமே வெளியேறுகின்றது. எந்த ஒரு பெண்ணும் 18 வயதிற்கு மேல் 500 மில்லி லீற்றர் இரத்தத்தை உடலில் எதுவித பாதிப்பும் இன்றி இழக்கலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மையாகும். இந்த அடிப்படையில்தான் இரத்ததானம் மேற்கொள்ளப்படுகின்றது. இவ வாறு இரத்ததானம் செய்யப்படுகின்றபோது, உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இவ விழப்பிற்கு ஈடாக, புதிய இரத்தம் இரு கிழமைகளில் உருவாகி விடுகின்றது. இதனால் இரத்தத்தில் புதிய அணுக்கள் சேருகின்றன. இதேபோல் பெண்களும், மாதாமாதம் இரத்தத்தை வெளியேற்றுகின்றபோது அவ விரத்தம் இருகிழமைகளில் ஈடு செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. இதனால் உடல் புதுத்தெம்பு பெறுகின்றது. ஆகவே பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது ஓய்வெடுக்காமல் வேலை செய்யக்கூடிய உடல் உளபலம் உண்டு என்பதே உண்மையாகும்.

அடுத்ததாக மகப்பேற்றினை எடுத்துக் கொள்வோம். இங்கு பெண்ணானவள் ஒரு புதிய உயிரை பத்துமாதங்கள் தன்னகத்தே சுமந்து பிரசவ வேதனையைத் தாங்கி அவ வுயிரை வெளிக் கொணர்ந்து உலகிற்குத் தருகின்றாள். பின் இக்குழந்தையின் வளர்ப்புக்காக சிறுகாலம் தன் கடமையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இக்காலத்தில்தான் ஆண் கடமையில் முன்சென்று உயருகின்றாhன். ஓர் உயிரைப் பிரசவிப்பது என்பது பெரிய கடமை. ஆண்களிற்குக் கிடைக்காத பெரும் பாக்கியம் பெண்களுக்குக் கிடைக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு பலவீனமாகப் பார்க்காது, பலமாகப் பார்க்க வேண்டும். மேலும் மாதவிடாய் நிற்றலையும் பெண்ணின் ஓர் பலவீனமான அறிகுறியாகப் பார்த்து வந்துள்ளனர். ஏனென்றால் மாதவிடாய் நிற்கின்றபோது ஓமோன்களின் சுரப்பு குறைவதனால் உடல் உள நோய்கள் ஏற்படுவதனால் அவர்கள் வேலை செய்வதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று காரணம் காட்டி ஓய்வில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இன்றைய உலகில் இதனைப் பல பெண்கள் பொய்யாக்கி உள்ளனர். மேலும் மாதவிடாய் நிறுத்தத்தின் பின்பு பெண்களின் ஆற்றல் பல மடங்காக அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதவர்க்கவியல் நிபுணர்களான அற்றின்சீல்மான், நான்சீரானர் ஆகியோர் 1970இல் பழ ங்குடி மக்கள் மத்தியில் மேற்கொண்ட பல ஆய்வுத்தரவுகளின்படி அங்கு அவர்களின் நாளாந்த உணவில் 70 வீதமான உணவினைப் பெண்கள் சேகரித்து வருகின்ற தாவர உணவும், 30 வீதமானது ஆண்கள் வேட்டையாடி வரும் மாமிச உணவும் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஆனால் ஆண்கள் வேட்டைக்காரர்களாகவும், பெண் குகையில் இருந்து ஆண்களுக்கு அடிமை வேலை செய்வதாகவும், ஆதி மனித வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை இன்றைய ஆய்வாளர்கள் நிராகரிக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் திவி இன பழங்குடி மக்களில் பெண்கள்தான் வேட்டைக்குச் செல்கின்றனர். அதேபோல் கொங்கோவில் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடிமக்கள், தங்கள் வேட்டைப்பணியில் முழுக்குடும்பத்தினையும் ஈடுபடுத்துவதாக கிறிஸ்நைற் என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார். மேற்குலகச் சம்பிரதாயங்களின்படி வேட்டைக்குரிய தெய்வங்கள் யாவரும் பெண்களாகவே இருக்கின்றனர்.

இறுதியாக பெண்ணில் ஏற்படுகின்ற சில தவிர்க்க முடியாத உடற் தொழில் மாற்றங்களினால் அவள் கடமையில் பின்தங்கும்போது அதனைப் பலவீனமாகப் பார்க்கும் நிலைதான் அன்று இருந்துள்ளது. இன்று இதனைப் பலமாகப்பார்க்கும் காலம் தொடங்கிவிட்டது. இதற்குப் பெண்கள் அனைவரும் தம்மிடம் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளைக் களைந்து தம் ஆற்றல் திறனையும் முற்போக்குச் சிந்தனையையும் வளர்க்க வேண்டும். அத்துடன் அறிவியல்hPதியாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ வாறு செயற்படும் போது பெண்கள் ஆண்களிற்குச் சரிசமனான பலமுள்ளவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

- வைத்திய கலாநிதி எழுமதி -