Sonntag, November 28, 2004

நிர்வாணமே ஆயுதம்

மாலதி மைத்ரி

எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மனித குரூரங்களைச் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்கூடங்களாக யுத்த கலகபூமி மாறிவிடுகிறது. எந்த ஒரு சமூக வன்முறை நிகழ்வுகளிலும் பெண்களே பெருமளவு பாதிக்கப்படுவதும், குறிப்பாக அவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் மிக இயல்பாக நிகழ்ந்து வருவதற்குக் காரணம், ஆணின் ஆதார அச்சமாக பெண் இருப்பதுதான். இதனால் இனத்தொடர்ச்சியை பெருக்கும் மையம் அழிக்கப்படுகிறது. இது அச்சமூகத்துக்குச் செய்யும் பெரும் தண்டனையாக யுத்தத்தில் கருதப்படுகிறது.

அமைதியை நிலைநாட்டச் சென்ற இந்திய நாட்டு ராணுவம் இலங்கையில் தமிழ்ப் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சியில் ஈடுபட்டது. (சமீபத்தில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘மற்றது’ பத்திரிகையின் முதல் இதழில் பிரசுரமான பேட்டியில், பார்வதி கந்தசாமி இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களையும் அந்நிகழ்வுக்குப் பிறகான பின்விளைவுகளையும் பேசுகிறார்.) இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போதும் 2002இல் நிகழ்ந்த குஜராத் கலவரங்களின்போதும் என, எல்லா இடங்களிலும் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிக் கொன்றது யுத்ததாக்குதல் தர்மமாகக் கைபிடிக்கப்படுவதன் அடிப்படை என்ன? இக்குற்றங்களுக்கான தண்டனைகளை இவர்கள் பெற்றதுண்டா? இவர்களுக்கெல்லாம் தண்டனையளிக்கும் அதிகாரம் யாருக்குள்ளது? இவர்கள் எப்படி சட்டத்திற்கு உட்படாமல் தப்பிக்க முடிகிறது? இக்கேள்விகள் நீண்டுகொண்டே போகும்...

பிற நாடு, பிற மதம் என்ற காரணங்களுக்காக இக்குற்றங்கள் நிகழ்ந்தன என்றால், சமீபத்தில் மணிப்பூரில் நடந்த அஸ்ஸாம் ரைபிள் படைப்பிரிவினரின் அத்துமீறல்களுக்கும் கொலைகளுக்கும் என்ன காரணம் கூற முடியும்? இரண்டு பால்களுக்கு இடையிலான, இரண்டு நபர்களுக்கிடையிலான, இரு குடும்பம், இரு இனக்குழு, இரு நிலப்பகுதிகளுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தமே சமூகம் என்ற கட்டமைப்பு. இச்சமூகக் கட்டமைப்பை, ஒழுங்கமைப்பை நிர்வாகம் செய்ய உருவானவையே அரசு எனப்படுகிறது. தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் வன்முறை என்பது, சமூக வன்முறையாகவும், இச்சமூக வன்முறையை தடுக்க, ஒடுக்க, ஒரு முடிவுக்குக் கொண்டுவர மேலிருந்து சமூகத்தின்மீது அரசு தொடுப்பது அரசு வன்முறையாகவும் உள்ளது. இந்த இரண்டுவித வன்முறைகள் இன்று ஒரே வடிவம் அடைந்துள்ளன. அரசு இயந்திரம் பாதுகாக்கப்பட அரசே சமூகத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவதும், வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதும் இன்று சகஜமான நிகழ்வாகி வருகிறது. உள்ளூர் ரௌடிகள் ஊராரை மிரட்டி தங்களின் தேவைகளை அடைய அடியாட்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு கோழி பிரியாணியும் வடி சாராயமும் கொடுத்து வளர்த்து வருவதுபோல், அரசு என்பதும் போலீஸ், இராணுவம் போன்ற அடியாட்களை தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர்கள் பொழுது போக்காகச் செய்துவரும் என்கௌண்டர், காலங்காலமாகப் பெண்ணுடல்மீது ஆணுடல் கொள்ளும் வெற்றியாகக் கருதப்படும் வன்புணர்ச்சி போன்றவை இன்று இந்திய பீனல்கோடால் அங்கீகரிக்கப்படும் விசாரணை யுத்தியாக மாறினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த அளவிற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை குக்கிராம போலீஸ் டெண்டிலிருந்து எல்லைப்பாதுகாப்புப்படையின் வரம்புக்குட்பட்ட ஆறுதிணையிலும் (பனி பொழியும் நிலத்தையும் சேர்த்து) வெளியில் தெரியவரும் ஒரு பங்குச் செய்திகளே நம் மரத்துபோன மூளைக்கு உயர் அழுத்த மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இயல்பிலேயே வன்முறையை தன் இயங்குதலாகக் கொண்ட மனித மிருகத்தைப் பண்படுத்த உருவாக்கப்பட்ட நீதி போதனைகள் இங்கு அதிகம். மனதை அடக்கவும் கட்டுப்படுத்தவும் அனைத்து மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. மனிதருக்கு மட்டுமல்ல, பிற ஜீவராசிகளுக்கும் தீங்கு இழைக்காதே என்கிறது பௌத்தம். சமணமும் இதையேதான் பேசுகிறது. இதெல்லாம் அளித்த வாழ்வியல் நெறியிலிருந்தும் அறத்திலிருந்தும் இந்த மண் எப்பொழுதோ துண்டித்துக்கொண்டது. இனி எந்தத் தத்துவ அறங்களாலும் வன்முறையின் பிடியிலிருந்துச் சமானிய மனிதர்களைக் காப்பாற்ற முடியாத காலத்தில் நிற்கிறோம். மனிதன், தான் சார்ந்த குழு அடையாளத்துடன் இருக்கும்போது பிற குழு எதிரியாகிறது. தான் சார்ந்த மத அடையாளத்துடன் இருக்கும்போது பிற மதம் எதிரியாகிறது. தான் சார்ந்த சாதி அடையாளத்துடன் இருக்கும்போது பிற சாதி எதிரியாகிறது. தான் சார்ந்த குடும்ப அடையாளத்துடன் இருக்கும்போது பிற குடும்பம் எதிரியாகிறது. குடும்பத்துள் ஆண் சார்ந்த அடையாளத்துடன் இருக்கும் போது அவனுக்கு பெண் எதிரியாகிறாள். இந்த வாக்கியங்களை அப்படியே திருப்பி அடுக்குங்கள்; குடும்பத்துக்குள் ஆண் சார்ந்த அடையாளத்துள் இருக்கும்போது அவனுக்கு பெண் எதிரியாகிறாள். மனிதகுல வன்முறையின் மூலச் சுரப்பு இங்கிருந்துதான் துவங்குகிறது. மனித வன்முறைக்கு அடிப்படை அலகாக ஆண், பெண் எதிரிடை உள்ளது. இந்த நுண்ணிய மனக்கூறு, ஆணின் எல்லா கால வெளிகளிலும் அவனது மூளைச்செல்களின் செய்தியை அவனது ஆழ்மனதில் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வன்மம் தொடர்ந்து பெண்ணுடலை வேட்டையாடுவதற்கான வெறியை அளிக்கிறது. மானுடவியல் அறிஞர்கள் மற்றும் மனோதத்துவ ஆய்வாளர்கள் வேறு என்ன காரணங்களை அளிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது பற்றி சிந்திக்கும்போது, இப்படித்தான் காரணங்களைக் கண்டடைய முடிகிறது.

இந்த வன்முறைகளிலிருந்து பெண் தன் உடலை எப்படி மீட்டுருவாக்கம் செய்வது. மஹாஸ்வேதா தேவி தனது ‘துரௌபதி’ கதையில் முன் வைக்கிறார்: ‘திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச்சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. அந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள், ‘‘துணி என்ன துணி..... யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும். ஆனா என்னைத் திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால்? சீ... நீ ஒரு ஆம்பிளையா...?’’

நாலாபக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் ரத்தம் கலந்த எச்சிலைத் ‘‘தூ...’’ வென்று துப்புகிறாள்.

‘‘நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிளை இங்க யாருமில்லை. என்மேல துணியைப் போட எவனையும் விடமாட்டேன். அப்போ என்ன செய்வே? வா... என்னைக் கௌண்ட்டர் பண்ணு... வா...கௌண்ட்டர் பண்ணு...’’

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல் முறையாக ஒரு நிராயுதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.’ (இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு: தொகுப்பு 2 -சிவசங்கரி)

ஜூலை 15ம் தேதி ‘அஸ்ஸாம் ரைப்பிள் தலைமையகம்’ முன்பு அரசுப்படையினர் அங்கு நிகழ்த்திவரும் என்கௌண்ட்டருக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நிர்வாணமாக நின்று போராட்டம் நடத்தினர். வன்முறைக்கெதிராக ஆடையற்ற தன் உடலையே ஆயுதமாக நிறுத்தியுள்ளனர். நிர்வாணம் என்பதன் மகா அர்த்தம் இன்று எனக்கு விளங்கியது.

மாலதி மைத்ரி
நன்றி - குமுதம்

Freitag, November 19, 2004

புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்

- சந்திரவதனா -

புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.

எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றி நடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ஆண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்குள்ளும் ஆண்களைப் போலவே ஆசை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்லா உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ஆண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது. பெண்விடுதலையின் சரியான பரிமாணத்தை உணர்ந்த பெண்கள், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு முன்னேற்பாடுடனேயே விடுதலையை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த விடுதலைப் பாதையின் முதற் படியில் இருப்பது பெண்கள் தாம் தமது காலில் நிற்பதற்கு ஏதுவான சுய சம்பாத்தியம். அதாவது பெண்கள் தாம் தமக்கெனச் சம்பாதிக்க வேண்டும். இன்றைய பெண்களில் அனேகமானோர் இந்த சூட்சுமத்தைப் புரிந்து வேலைக்குப் போகத் தொடங்கி வட்டார்கள். ஆனாலும் அத்தோடு அவர்களது கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து விடவில்லை.

வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ஆண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.

பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ஆண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள். அதே நேரம் வீட்டிலுள்ள மற்றைய வேலைகளையும் பெண்களே தனியாகச் சுமக்கிறார்கள். பெரும்பான்மையான ஆண்கள் அதைப் பங்கு போடத் தவறி விடுகிறார்கள்.

ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ஆண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருந்து குளிர் காய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள். மெளனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்வதாக ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.

சில ஆண்கள் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்வார்கள். அதாவது ஒரு ஆணால் சமைக்க முடியும். இன்னொருவரால் அயர்ண் பண்ண முடியும். இன்னொருவரால் வீட்டைத் துப்பரவாக்க முடியும். ஆனால் பெரும்பாலான ஆண்களால் ஒரு பெண்ணைப் போல வீட்டின் முழுவேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்யத் தெரிவதில்லை. அல்லது முடிவதில்லை. இதனால் வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.

இந்த நிலையில் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, "நீ பிள்ளையைச் சரியாக் கவனிக்கிறேல்லை." என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப் படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.

வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இப்படியாக இரட்டைச் சுமையைத் தலையில் தூக்கி வைத்ததற்குச் சமனாயிருக்கும் போது, வேலைக்குப் போகாத பெண்களின் நிலை, வேறு விதமான பரிதாபத்தை உணர்த்துகிறது. அவர்களின் வீட்டு வேலைகள் ஒரு வேலையாகக் கணிக்கப் படுவதே இல்லை.

அனேகமான சமயங்களில் "உன்ரை மனைவி என்ன செய்கிறாள்..?" என்று கணவனை யாராவது கேட்டால்.. "அவ சும்மாதான் இருக்கிறா." என்பதே வேலைக்குப் போகாத பெண்களின் கணவன்மார்களின் பதிலாக இருக்கிறது.

இந்த அளவில்தான் பெண்களின் வீட்டு வேலைகள் கணிக்கப் படுகின்றன. அவர்கள் சிறிதளவு பணத்தேவைக்கும் கணவனை எதிர் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் "உனக்கென்ன தெரியும். நீ சும்மா வீட்டிலை இருக்கிறாய். நான் எவ்வளவு கஸ்டப்பட்டு முறிஞ்சு வேலை செய்திட்டு வாறன்." என்று சொல்லிக் கணவன்மாரால் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள். வீட்டிலுள்ள சகல வேலைகளையும் செய்வது மட்டுமல்லாது "எதுவுமே செய்வதில்லை." என்ற குற்றச் சாட்டையும் கணவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலைக்குச் செல்லாத பெரும்பான்மையான புலம்பெயர் பெண்கள் பாரிய உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகிறார்கள்.

அவர்களது வாழ்க்கை சமையல், வீட்டுவேலை கணவனுக்குப் பணிவிடை.. என்றே போய் விடுகிறது. அனேகமான குடும்பங்களில் கணவன்மார்கள் "நான் உழைக்கிறேன். எனது பணம்." என்ற ஒரு திமிருடன்தான் இருக்கிறார்கள். தமது மனைவியரைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகவே கருதி, மனைவியரின் மனங்களிலும் "நீ தாழ்ந்தவள். எனது பணத்தில்தானே நீ வாழ்கிறாய். நான் எவ்வளவு வேலை செய்து விட்டு வருகிறேன். நீ சும்மா வீட்டில் இருந்து எனது பணத்தில்தானே சாப்பிடுகிறாய்." என்பது போன்றதான கருத்துக்களை விதைக்கிறார்கள். மிகச் சிறுபான்மையான ஆண்கள் மட்டுமே மனைவியரை மனைவியராக, உணர்வுள்ள ஜென்மங்களாக மதித்து, வீட்டு வேலைகளை வேலையாகக் கணித்து உதவுகிறார்கள்.

மொத்தத்தில் வேலைக்குப் போகும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி ஏதோ ஒரு வகையில் கஸ்டங்களையே சுமக்கிறார்கள். ஆனாலும் வெளிவேலை, வீட்டுவேலை இரண்டினாலுமான அதீத சுமைகளின் மத்தியிலும் வேலைக்குப் போகும் பெண்கள் வெளி உலகத்துடனான தொடர்பு, நானும் உழைக்கிறேன் என்ற மனநிறைவு.. போன்றதான விடயங்களால் நான், எனது பணம் என்று கர்வம் கொள்ளும் கணவனிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வைப் பெற்று, ஒரு வித தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். வேலைக்குப் போகாத பெண்களோ தாழ்வு மனப்பான்மை நிறைந்த உளவியல் தாக்கத்தினால் தன்னம்பிக்கை இழந்து ஒரு தனிமைச் சிறையில் வாழ்கிறார்கள்.

சந்திரவதனா
யேர்மனி
6.11.2004

பிரசுரம் - இ-சங்கமம் தீபாவளி சிறப்பிதழ்