Donnerstag, August 24, 2006

தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்

- பாமதி பிரதீப் -
- அவுஸ்திரேலியா -

7.1.2006 அன்று, அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் வாசிக்கப்பட்டது

யுத்தம் , யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்களின் மேலைத்தேய புலம் பெயர்வு. இப்புலம்பெயர்வு தமிழ் மக்களின் வாழ்க்கையில் பலவகையான மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வாழ்ந்ததை விட பொருளாதார லாபத்தை அவர்கள் இங்கே பெற்றிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. அதே நேரம் இப்புலம்பெயர்வு மக்கள் வாழ்க்கையின் தன்மையை, இயந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிவோம். அத்தகையவாறு மற்றொரு வேதனைக்குரிய விளைவாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் பெண்கள் பலருக்கு வாழ்க்கைத் துணையை தமிழ் சமூக கலாச்சார வழிமுறையில் அதாவது திருமண வாழ்க்கையைப் பெறுவது கடினமான விடயமாக அமைந்துள்ளது.


நாம் நாடுவிட்டு நாடு வந்தாலும் கலாச்சார முறைகளால் நடைபெறும் இந்த திருமண சடங்குகளை தொடர்ந்தும் கடைப் பிடிக்கிறோம். எனினும் ஏன் திருமண நிகழ்வு என்பது தமிழ்ப் பெண்கள் வாழ்வில் சவாலாக அமைகின்றது. அதற்கான காரணிகள் என்ன என்பதை இக் கட்டுரையில் பார்ப்போம். ஈழத்தை எடுத்துக் கொண்டால் அங்கு வாழும் பல தமிழ்ப் பெண்கள் 30 வயதுக்குப் பின்பாகவும் திருமணமாகாமல் இருப்பதைக் காணலாம். தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் யுத்தத்தை இதற்கு ஒரு காரணமாகக் கருதலாம். ஏனெனில் பல இளைஞர்களின் உயிரை இந்த யுத்தம் இரையாக்கியுள்ளதால் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கொள்ளலாம்.


எமது சமூகம் இன்றுவரை திருமணம் என்பது இப்படித்தான் பேசப்பட்டு நடைபெறவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறது. இது ஈழத்தில் வாழும் தமிழருக்கும் பொருந்தும். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் பொருந்தும். ஆனால் ஈழத்தில் இன்று மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக போர் இருப்பதால் இந்த போர்க்கால சூழ்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ எம் கலாச்சார சம்பிரதாயங்களுக்காக முக்கியத்துவம் ஓரளவு இரண்டாம் பட்சமாகின்றது. அதன் அடிப்படையில் முன்பு காலத்திற்குக் காலம் கவனிக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட திருமணம் மற்றைய சுமைகளால் இரண்டாம் பட்சமாகிறது. அதே நேரம் ஆண்கள் யுத்தத்தில் இறந்ததினால் பெண்கள் பொருளாதாரச் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள.

ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் 30 வயதுக்குப் பின்பு தமிழ்ப் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது ஏன் சவாலாக அமைகின்றது என்று பார்ப்போம் . ஏனெனில் இன்று இது வளர்ந்து வரும் ஒரு சமூகப் பிரச்சினை.

எமது சமூகம் திருமணம் என்பது பெண்ணின், ஆணின் வாழ்வில் நடைபெற வேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாக கருதுகிறது. ஓரு பெண் திருமணம் என்ற சடங்குக்குப் பின்னாலே தாய்மையை அடைய வேண்டும் என்ற உறுதிப் பாடும் அத்திருமணம் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கும் என்ற கருத்தில் தெளிவாக நிற்பதை நாம் அறிவோம். அவ்வாறு உறுதியான நிலைப்பாட்டில் வாழும் சமூகத்தின் மத்தியில் திருமணமாகாத பெண்கள் எப்படி வாழ முடியும் என்று நாம் நோக்கினால் இச்சமூக அங்கத்தவர்களால் அவர்கள்மேல் ஒரு அனுதாப அலையை வீசுவதுடன் ஓரளவு தனிமைப் படுத்தலும் நிகழ்த்தப்படுகின்றது.

இத்தகைய நடவடிக்கைகள், தொடர்ச்சியான அனுதாப அலைகள் திருமணமாகாத பெண்களை மேலும் நோகடிப்பதுடன் தனிமைப் படுத்துமேயன்றி ஆதரவு அளிக்காது. எமது சமூகத்தில் வாழும் அங்கத்தவர்கள் ‘ தாலி பெண்ணுக்கு வேலி’ என்ற கருத்தியல் கொண்டிருப்பதால் தாலி இல்லாத பெண்கள் வேலி அற்றவர்கள் என்ற கருத்தை தமக்குள் எந்தளவு தேக்கி வைத்துள்ளனர் என்பதை நாம் காணலாம்.

புலம் பெயர்ந்த ஐரோப்பிய நாடாகட்டும் , கனடா , லண்டன் , அவுஸ்திரேலியாவாகட்டும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பெண்களுக்கு அதே நாட்டில் அல்லது மேலைத்தேய நாட்டில் வாழும் தமிழ் இளைஞர்களை வாழ்க்கைத் துணையாக இணைக்கப் பார்ப்பது இயல்பாக நிகழும் ஒரு நடைமுறை. இவ்வாறு கல்யாணத்தை பொருத்துவதற்கும் எமது சமூகத்திலேயே பலர் தரகர் போன்று இயங்குகின்றனர்.பல காலங்கள் மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து மேலைத்தேய கலாச்சாரத்தின் பல நவீன (ஆழனநசn) முறைகளைப் பழகிக் கொண்டாலும் பல தமிழ்க் குடும்பங்கள் திருமணம் என்று வரும்போது மிகவும் பிற்போக்கான முறைமைகளை - பழைய சிந்தனை முறைமைகளை கொண்டிருப்பதைக் காணலாம். அதாவது பெண் எவ்வளவு படித்து தன்னை வளர்த்திருந்தாலும் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் பண்டைய ஆணாதிக்க முறைகளை ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய நிலை இங்கு இருக்கின்றது. அதாவது பேசி முற்றாக்கப்படும் திருமணங்களில் ஒரு பெண் தனக்கு எத்தகைய கணவன் கிடைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுப்பதைவிட ஒரு ஆண் தனக்கு பிடித்தமான பெண்ணைத் தேடுவது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது.

ஒரு பெண்ணை தனக்குப் பொருத்தமானவளா என்று தீர்மானிக்கும் உரிமை ஆண்களின் கைகளிலேயே கொடுக்கப்படுகின்றது. இது பெண்களின் கைகளில் இருந்து அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமைமையைப் பறித்தெடுப்பது போன்ற செயற்பாடாகும். அதைவிட வேடிக்கையான விடயம் என்னவெனில் ஆண்கள் தமக்கு வாழ்க்கைத் துணையாக வரும் பெண்களிடமிருந்து எதிர்பார்க்கும் தகைமைகள். புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரர்கள் எதிர்பார்க்கும் முக்கிய தகைமை ‘பெண் அழகாக’ இருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் அழகு வெள்ளைத் தோலுடன் , மெலிந்த தோற்றத்துடன் ஏறத்தாள நடிகை சிம்ரன் , ஜோதிகா ,ரம்பா . சினேகா போன்ற தோற்றமுடைய பெண்களை மனதில் வைத்து தேடுகிறார்கள். அழகான பெண்ணை வாழ்க்கைத் துணையாக பெறுவது தமது கனவு , லட்சியம் என்று நினைக்கிறார்கள்.அதில் மற்றொரு வகையான ஆண்கள் பிரச்சினை மேலைத்தேய நாடுகளில் வாழும் பெண்களின் கற்பு பற்றியது. அதாவது இந்த நாட்டில் உள்ள சுதந்திரம் அவர்களின் ஒழுக்கத்தை உடைத்திருக்கும் என்ற சந்தேகம். அதன் காரணமாக மண்மணம் மறக்காத பெண்களைத் தேடி தாய்நாட்டிற்கு விஜயம். அத்துடன் பல ஆண்கள் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் பல வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.


இந்த திருமண பேச்சுவார்த்தை மனித நேயம் நிரம்பிய ஒரு செயற்பாடாக இல்லாமல் சந்தையில் பேரம் பேசி பொருட்களை வாங்குவது போன்று நிகழ்கின்றது. அதனால் இவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இல்லாவிட்டால் பெண்களின் பெற்றோருக்கு மாப்பிளை தேடுவது என்பது கடும் போராட்டமாகவே அமைந்து விடுகிறது.

இந்த சிந்தனைப் போக்கின் அடித்தளம் பழங்கால ஆணாதிக்கமே. அதாவது ஆண், பெண்ணைவிட உயர்ந்தவன் சிறந்தவன் என்ற சிந்தனைப் போக்கு . இப்படியான போக்குகள் இன்று எத்தனை பெண்களை திருமண வயதைத் தாண்டி தனிமைப்படுத்தி வைத்துள்ளது என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும். ஒரு பெண்ணின்; வெள்ளைத்தோலா கறுப்புத்தோலா அவளின் வாழ்க்கைக்கான தேடுதலை தீர்மானிப்பது? எம் உடலையும் கடந்த ஆத்மா அதன் வாழ்தலுக்கான உரிமை இருப்பு மதிக்கப்பட வேண்டியதாகும்.

முக்கியமாக சமூக அங்கத்தவர்களாகிய நாங்கள் இத்தகைய பழமைவாத ஆணாதிக்க செயல்களை ஆதரித்து அவர்களது செயற்பாட்டுக்கு துணை நிற்கிறோம். முக்கியமாக திருமணங்களைப் பொருத்தி வைக்கும் நடுவில் நிற்கும் நபர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஆண்கள் கேட்கும் பொருட்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்காமல் மனித மனங்கள் ஒன்றுசேர அதற்கான ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதன்மூலம் தான் ஆண் என்ற தகைமையை மட்டும் வைத்துக் கொண்டு பேரம் பேசுபவர்களுக்கு தாம் தொடர்ந்து இப்படி இயங்க முடியாது என்று உணர்த்த முடியும். ஈழத்தில் ஒரு காலகட்டத்தில் சீதனம் , சாதி இரண்டும் பெண்களின் வாழ்வில் திருமண பந்தத்தை தீர்மானித்தது. என்னைப் பொறுத்தவரை புலம் பெயர்ந்த நாடுகளில் பெண்களின் வாழ்வின் தடையாக நிற்பது ஆண்களது ‘அழகு மோகம்’ என்பேன்.

இளம் பராயத்தை இலங்கையில் கழித்த பின்பு புலம் பெயர்ந்த பெண்களின் அடையாளங்கள் இன்றுவரை எமது கலாசாரத்தை சார்ந்தே நிற்கின்றது. தமக்கான உறவை தாமே தேடிக்கொள்ளும் துணிவையும் நம்பிக்கையையும் பலர் கொண்டிருப்பதில்லை. அவர் தமது வாழ்க்கைத் துணையை பெறுவதற்கு தமது பெற்றோரையோ, சமூக அங்கத்தவர்களையோ சார்ந்து இருக்கின்றார்கள். அதனால் எமக்கு ஒரு தார்மீக கடமை உண்டு. அவர்களின் எதிர்காலம் மேல் அக்கறை அவசியம். அதைவிட ஒரு பெண் தனியாக வாழும்போது அவளது தனிமையை தமது தேவைகளுக்கு பாவிக்க முயலும் சில ஆண்களும் எம்மத்தியில் இருக்கின்றனர். எனவே ஆணாதிக்க அம்சங்கள் நிறைந்த திருமணப் பேச்சுவார்த்தைகளை நாம் ஆதரிக்காமல் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

சமூக மாற்றம் என்பது எம் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலும் , தெளிந்த நிலைப்பாட்டிலுமே தங்கியுள்ளது. ஒரு குளத்தில் நுளம்புகளும் நோய்க் கிருமிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றால் அதன் சுற்றாடல்தான் காரணம். அதே மாதிரி சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் கிருமிகள் பெருகுவதற்கும் சூழல்தான் காரணம். அந்தச் சூழலாக நாம் இருக்காமல் அந்த கிருமிகளை ஒழிக்கும் சூழலாக மாற வேண்டும்.

Quelle - ஊடறு பெண்கள் இதழ்