Mittwoch, August 13, 2003

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 5 கு. தீபா

போகுமிடமெல்லாம்,
கணவனில்லாமல் தனியே வாழும் பெண்கள் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளைத் துறந்து இன்னொரு பெண்ணுடன் கண்ணெதிரே வாழும் கணவன், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விட்டுப் பிரிந்து சென்று வேறொரு திருமணஞ் செய்து வாழும் கணவன், "வேலையாப் போனவர் வரேல்லை" என்ற காரணத்துடனான கணவன் என்று பலவிதக் கணவன்மார்களை இழந்து பல பெண்கள்.

பெருந்திரளான மக்கள் நெருங்கி வாழ்வதால் இவ விகிதம் கூடுதலாகத் தென்படுகிறதா அல்லது உண்மையிலேயே சமூகத்தில் சீர்கேடு மலிந்துவிட்டதா என்று ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்.

பெண்களில் ஒரு சாரார் கணவனின்றித் தனித்து வாழும் துணிவைப் பெற, இன்னுமொரு சாரார் தனதும் குடும்பத்தினதும் கௌரவம் பேண வேண்டி அனைத்து வேதனைகளையும் தாங்கி மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். அவர்களிற் சிலர் ஏதோ ஒருவகையில் அவ வழுத்தத்தை விடுவிக்கும் வகையில் மேலதிக உணவு, உடை, ஆபரணங்கள் என்று தமது கவனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்.
ஒரு சிலர்அதுதான் என் தலைவிதி என்று வாழ முற்படுகின்றனர்.

மிகவும் மென்மையான போக்குடன் வளர்க்கப்பட்ட பெண்கள் புத்தி பேதலித்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருபது வயதுடைய இளம் பெண்ணொருவர் முன் சூல்வலியெனும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில குழந்தை இறந்தது தாய்க்கு நன்மையே என அப்பெண்ணின் தாயாரும் ஏனையோரும் ஆறுதலுற்ற நிலையில் அவ விளம் பெண் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். குழந்தை இறந்ததே அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணம் என்று ஏனையோர் நம்பியிருக்க உண்மை வேறாக இருந்தது. கணவனுக்கும் அப்பெண்ணிற்கு மிடையில் ஏற்பட்ட பிணக்கும் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த காலத்தில்கூட கணவன் வராததும் அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது. மன நிலைக்குழப்பத்தில் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தாயின் மேல் எறிந்து "இவதான் எல்லாத்துக்கும் காரணம்" என்று கூறியபோது நானும் அதையே உணர்ந்தேன். தனது உடல்நிலை தொடர்பாகவோ, தனது பிள்ளை தொடர்பாகவோ எந்த முடிவையும் தானே எடுக்க முடியாது அனைத்திற்கும் தாயையே எதிர்பார்த்திருக்கும் வகையில் அப்பெண்ணின் வளர்ப்பு இருந்தது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் திடமற்ற மென்மைப்போக்குடன் அப்பெண் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அதன் விளைவு!?
"என்ரை பிள்ளை வீட்டைவிட்டு வெளியிலை போகாள். அவவுக்கு ஆட்களைக் கண்டாப்பயம். வடிவாக் கதைக்கமாட்டா. சரியான சொப ற் அவ" என்று தன் பிள்ளையைப் புகழ்ந்து பிழையான பாதையில் வழிகாட்டும் தாய்மார் வெளியுலகையும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ளும் திடமிக்க சிந்தனைத் தெளிவுடன் தமது பிள்ளைகளை வளர்த்தால் என்ன?

"உயர்கல்வி, உயர்தொழில், காதலித்தவனையே கைப்பிடித்த மகிழ்ச்சியான திருமணம், உயர்தர வாழ்க்கைமுறை, சமநிலையில் தன்னை மதித்து நடக்கும் கணவன், சிறிதும் பெரிதுமாகச் சிற்சில தனிப்பட்ட எதிர்கால இலட்சியங்கள் என என் வாழ்க்கை நம்பிக்கையூட்டுவதாகத்தான் இருந்தது. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் சிறு குழப்பங்கள், பிணக்குகளின்போது எனது கணவரின் விமர்சனங்கள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. எனது சமத்துவநிலை கண்டனத்துக்குரியதாகி என் நிலையைக் கேள்விக்குறியாக்குகிறது. என் நடத்தையையே சந்தேகத்திற்குரிய தாக்கிக் கேள்வி கேட்கும் கணவரை அனுசரித்துப் போவதையே நான் விரும்பவேண்டியிருக்கிறது. தவிர எனது பிரச்சினைகள் வெளியே எனது நெருங்கிய உறவுகளுக்குத் தெரிய வருவதுகூட எனது கௌரவத்திற்குப் பங்கம் என்பதால் என் மனதிற்குள்ளேயே வைத்துக்குமைந்து எந்நேரமும் நான் ஒரு மன அழுத்த நிலையிலேயே இருக்கிறேன்"

இது ஒரு குடும்பப் பெண்ணின் வேதனை மிகுந்ததொரு வாக்குமூலம். தனது நடத்தையையே கேள்விக்குள்ளாக்கி கணவன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போது கூட அவனை விட்டுப் பிரியாதது 'தமிழ்ப் பெண்மை'.

நூற்றாண்டு காலமாக எமது பெண்களை ஆணை விடக்கீழான நிலையில் வைத்திருக்கும் மரபைக் கொண்டவர்கள் நாம். இந்நூற்றாண்டு காலக் கருத்துப்பதிவுகளைக் கணத்தில் தூக்கியெறிந்து சமூகம் மாறுவதென்பது சாத்தியமற்றதொன்றே. எனினும் சிறிது சிறிதாக மனப்போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினரின் கருத்தமைவுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து புதியதொரு பரம்பரையை உருவாக்கும் என்று நம்புவோம்.

மேலே கூறிய பெண்ணைப் போன்று தன் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெண்கள் சமூகம் ஒன்று உருவாவது ஒரு மாற்றத்தின் அறிகுறியே. ஏனெனில் இதுவரை காலமும் நம் பெண்கள் குடும்பத்தில் தம் நிலை என்ன என்பதையே அறிந்தவர்களாக இருக்கவில்லை. தாமும் சமநிலையில் மதிக்கப்படவேண்டும், தமது தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாது என எதிர்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய மாற்றமே. கல்வியறிவு பெற்ற தொழில் பார்க்கும நடுத்தரவர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வதைவிட இப்போதெல்லாம் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வது அதிகமாகவே உள்ளது.

நீதிமன்றங்கள் பெண்ணின்பால் இரக்கங்கொண்டு அளிக்கும் தீர்ப்புகளை மறுதலித்து தமக்குத்தாமே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் புதுயுகப் பெண்களாக அப்பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனது கணவன், எனது உரிமை, அவன் என்னுடனேயே வாழ வேண்டும் என்று இடையில் வந்த இன்னொரு பெண்ணுடன் உரிமைப்போர் நடத்திக் கணவனை மீட்டு வந்த காலம் போய், 'என்னை மறந்து இன்னொரு பெண்ணுடன் சென்றவன் எனது கணவனல்ல, அவன் எனக்கு வேண்டாம ' என்று மறுக்கும் துணிச்சலுள்ள பெண்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், இளமையும் துடிப்பும் வேலையில் ஆர்வமுமிக்க அப்பெண்ணின் நெற்றி எந்தவித அடையாளமுமின்றி எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும். திருமணமாகாத சிறுபெண் என்று எண்ணியிருந்த எனக்கு அப்பெண் திருமணமானவர் என்ற உண்மை ஆச்சரியமளித்தது. அத்திருமணத்தின் சோக முடிவுரை சிறிதளவுகூட அப்பெண்ணின் முகத்தில் தென்படாதது அதைவிடப்பெரிய ஆச்சரியம். "இன்னொரு பொம்பிளையோட அவருக்குப் பழக்கம் இருந்ததக்கா. கனநாளா எனக்குத் தெரியும். தெரியாதது போல பொறுத்துப் போனனான். ஆனா வரவர எனக்கு அடி, பேச்சு என்று ஒரே பிரச்சினை. காசு கொண்டு வா என்று ஒரே கரைச்சல். அவவுக்குக் கொடுக்கிறதுக்காக. நான் என்ரை உரிமையை வெளிக்காட்ட வேண்டுமென்றதுக்காக நீதிமன்றில் கேஸ் போட்டனான். கேஸ் என்ரை பக்கமாத்தான் தீர்ந்தது. ஆனா நான் சேர்ந்து வாழமாட்டன், அவவோடை போகட்டு மென்று சொல்லிப் போட்டன். பிள்ளையளுக்குக் கொஞ்சக் காசு கட்டச்சொல்லி கோர்ட் சொன்னது. நான் அதுவும் வேண்டாமென்று சொல்லிப்போட்டன். பிச்சை எடுத்தென்றாலும் என்ரை பிள்ளையளை நான் வளர்ப்பன்" தெளிவும் உறுதியுமாக வெளிவந்தன வார்த்தைகள். அந்தத் தெளிவும் உறுதியும்தான் அந்தப்பெண் அமைதியாக சந்தோசமாக வாழ்வதன் ஆதாரம். இத்தெளிவு எத்தனை பேருக்குக் கைவரும்.

'திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இறுதி இலக்கு' என்ற சமூகத்தின் கருத்துப்படிமம் திருமணம் தவிர்ந்தும் ஒரு வாழ்க்கை உள்ளது என ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை எமது பெண்களுக்கு வழங்கவில்லை.

பெரும்பாலான பெண்கள் நிலையான, நிறைவான திருமண வாழ்க்கையை விரும்பும் போக்கு சரியானது, யதார்த்த பூர்வமானது. ஆனால் அநீதிகளும் கொடுமைகளும் இழைக்கப்படும்போது அவர்களின் வாழ்வு அத்துடன் முடிந்துவிடக்கூடாது. அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், அவற்றினால் நிலைகுலைந்து போய்விடாமல் வாழ்வின் தொடர்ச்சியை திடமான மனதுடன் தாம் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ளவும் அவர்கள் துணிவு பெற வேண்டியிருக்கிறது.
- கு.தீபா -

Keine Kommentare: