Mittwoch, August 13, 2003

நல்லதொரு தலைவி நாட்டின் வழிகாட்டி-தென்றல்

குடும்பமே தலைமைத்துவத்தின் தோற்றுவாய்
என்ன! தலைவி, தலைமைத்துவம் என்ற சொற்களைப் பார்த்ததுமே பயந்துவிட்டீர்களா? அல்லது, இதற்கும் எங்களுக்கும் எட்டாப் பொருத்தமென்று எட்டிநடை போடுகிறீர்களா?
பரவாயில்லை, மீன்களைப் போன்று துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடும் உங்கள் விழிகளை சற்றே இப்பக்கத்தில் ஓடவிடுங்கள்.
ஆமாம். அவசரமில்லாது வாசித்து மகிழ்ந்த சிறுகதையோடு சேர்த்து இதனையும் வாசித்துப் பாருங்களேன். உங்களுக்குள்ளே உங்களையறியாமலே ஒளிந்துகொண்டிருந்த, இல்லை இல்லை ஒளிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு 'குட்டித்தலைவி' மெல்ல எட்டிப் பார்த்துச் சிரிப்பாள். ஏது அதிகம் யோசிக்கிறீர்கள் போலிருக்கிறது? சரி, விடயத்துக்கே வருவோம், உங்களை அதிகம் குழப்பாது, நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்திலே சில விடயங்கள் தொடர்பாகத் தீர்மானங்கள் எடுக்கின்ற பழக்கமுடையவர்கள் தானே? உங்கள் கணவருடனோ அல்லது தந்தை, சகோதரனுடனோ சரிசமனாக நின்று வாதிட டு வெல்லக்கூடிய உரிமைகொண்ட அதிஸ்டசாலிப் பெண்ணாக நீங்கள் சிலவேளைகளில் இல்லாதிருக்கலாம். ஆனாலும் ஒரு 'தீர்மானம்' (DICISION)) என்ற விடயம் குடும்பத்தில் எழுமிடத்து உங்களையும் ஒரு கருத்துக்கேட்பார்கள்தானே? இங்கேதான் பெண்களாகிய நீங்கள் உங்களது அசாத்திய ஆற்றலை வெளிப்படுத்தும் இடம் உருவாகிறது. அதுதான் 'தீர்மானம் எடுத்தல்' (DICISION MAKING) என்ற ஒரு பெரும் ஆற்றல்.

குடும்பத்தின் தலைவியின் தலைமைத்துவம்
உங்களது செல்லக் குழந்தைகள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, படிக்கும் படிப்பு, அவர்கள் செய்யும் குறும்பு, அவர்களின் முன்னேற்றம், ஆளுமை என்று எத்தனை எத்தனையோ, விடயங்களில் எடுக்கவேண்டிய தீர்மானங்களிற்கு தாயாகிய நீங்களும் ஒரு முக்கிய காரணியாகின்றீர்கள். இவற்றிலும் இவர்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சிப் படிநிலைகளில் நீங்கள் மட்டுமே தனித்து நின்று முடிவெடுக்கவேண்டி நேர்ந்த சூழ்நிலைகள் பல உங்கள் முன் உருவாயிருக்கும். இதைவிடவும், எத்தனையோ அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்மானங்கள் மேற்கொண்டு முடிவுகள் எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு பெண்களே அகப்படுகிறார்கள் என்பது யதார்த்த ரீதியிலான உண்மை.
ஆனாலும், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களையோ, முடிவுகளையோ பற்றிக் குறையாகப் பேசினாலும் பாராட்டிப் பேச ஒருவரும் முன்வந்திராததை நீங்களே இந் நேரம் வரைக்கும் உணர்ந்தீர்களோ என்பது யாருக்கும் தெரிந்திராது. அதை உணரத் தலைப்படாதது உங்களது குற்றம் என்று எவரும் கூறவும் முடியாது. ஏனெனில் சமுதாயம் இன்னும் பெண்களை நல்ல தலைவிகளாக ஏற்றுக்கொள்ளாமைக்கு நாங்களே காரணகர்த்தாவாகி விட்டமை எமது துரதிஸ்டமே.
தோழிகளே! எந்தச் சின்ன விடயமாக இருப்பினும், அது உங்கள் மகள் படிக்கும் புத்தகங்களாகட்டும், மகள் அணியும் உடைகளாகட்டும், சரியாக நீங்கள் எடுக்கும் தீர்மானங்களே உங்கள் குழந்தைகளைச் செதுக்குகின்றன. இந்த நுட்பமான உண்மையைப் புரிந்துகொண்டு செயலாற்றத் தொடங்குவீர்களேயானால் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு நாட்டையே கட்டி ஆளக்கூடிய வல்லமை பொருந்தியவர்களாக நீங்கள் மாறுவீர்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். குடும்பச் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் குடும்பத் தலைவிகளே! உங்களுள்ளே புதையுண்டு மறைந்து போயிருக்கும் எத்தனையோ ஆற்றல்களை இனியும் மூடிமறைத்துக் கொண்டிருக்க முனையாதீர்கள். காத்திரமான கருத்தாழமுள்ள இந்தச் சொல் குறித்து நிற்பது வெறுமனே ஒரு பெண்ணை மட்டுமல்ல, ஒரு உண்மையான சேவகியை, விசுவாசியை ஆத்மார்த்தமாக நேசிப்பவளை இதனிலும் பார்க்கத் துல்லியமாகத் தீர்மானங்கள் எடுப்பவளை, நல்லதொரு வழிகாட்டியை.
இவள் கொண்டிருக்கும் இத்தகைமைகள் எமது கண்களுக்குச் சாதாரணமாகத் தென்படினும் அவற்றின் வெளிப்பாடுகள் அவளைச் சார்ந்தோரில், அவளின் வழிகாட்டலைப் பின்பற்றுவோரில் மிளிருவதை நாம் காணலாம்.
இதுதான் நாம் 'தலைமைத்துவம்' என்று பெரிதும் மதிக்கும் தகைமை. உண்மையில் இந்தப் பதத்தை நீங்கள் ஒரு நிர்வாகியுடன் தான் சாதாரணமாக ஒப்பிட்டுப் பார்க்கக்கூடும். ஆனாலும் நிர்வாகி என்பவர் திட்டவட்டமாக சமயோசிதமான முறையில் தீர்மானங்கள் எடுப்பவர், ஆகவே நீங்களும் ஒரு திறமையான நிர்வாகியே என்று கூறுவதை யாரும் மறுக்கவியலாது.

தலைமைத்துவத்தை வளர்க்க வேண்டியது பெண்களின் தார்மீக பொறுப்பு
என்ன சகோதரிகளே! ஏதோ பெரிய பெரிய வார்த்தைகள் பற்றிக் கதைக்கின்றேனே எனப் பதட்டப்படுகிறீர்களா? அதிகம் பயப்படாமல் நான் சொல்லும் வழிமுறைகளைப் பின் பற்றப் பாருங்களேன், சரி ஒரு குடும்பத் தலைவி சிறந்த நிர்வாகி என்பதை ஏற்றுக்கொண்டாலும் நான் வேலைத் தளத்திற்கும் சென்று வீட்டுப் பணியும் செய்வதால் இரட்டைச் சுமைதான் ஏற்படுகிறது. சரியான தீர்மானங்கள் எடுக்க அவகாசமே இருப்பதில்லை எனக் கவலை அடைகிறீர்களா? அந்தக் கவலையே வேண்டாம், உங்களுக்கு முன்னே குவிந்து கிடக்கும் வேலைகளை முதலில் வகைப்படுத்துங்கள். முதலில் செய்து முடிக்கவேண்டியவற்றையும் காலதாமதமாகச் செய்து முடிக்கக் கூடியவற்றையும் பட்டியலிடுங்கள். அதற்கேற்ப உள்ள நேரத்தை ஒதுக்குங்கள், உசாராக நிற்பீர்கள் என்றால் வேலைகள் எதுவுமே தேங்கிக்கிடக்காது. ஆனால் ஒன்று வீட்டுப் பணி என்பது வீட்டிலுள்ள அனைவரும் செய்ய வேண்டியது, அதை முழுக்க உங்கள் தலையிலே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யச் சொல்லி யாரும் உங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லையே. ஆகவே தங்கள் கடமைகளைச் செய்ய உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் பழக்குவதோடு நின்றுவிடாது முக்கியமாக உங்கள் கணவரைப் பழக்குங்கள். சில நாட்களில் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த ஒற்றைத் தலைவலி தானாகப் பறந்துவிடும். உடலும் உள்ளமும் தானாகவே ஆறுதல் அடையும். வேலைத் தளத்தில் மட்டும் என்ன சளைக்கவா செய்வீர்கள். மனதிலே பாரமற்றிருந்தால் செய்யும் பணியைச் செவ வனே செய்யலாம். சரியானவற்றை சரியான விதத்தில் எடுத்துக் கூறலாம். நான்கு சுவருக்குள் மட்டுமல்லாமல் நான்குபேர் கூடும் இடத்தில் பணியாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அருமையானதல்லவா. தளர்ந்து போகாது கூச்சத்தை விட்டுத்தள்ளி செயலாற்றுங்கள். நன்கு யோசித்து தீர்மானங்கள் மேற்கொள்ளுங்கள், துணிவோடு அச்சம் ஏதுமில்லாமல் சரியாகப்பட்ட உங்கள் கருத்தை முன்வையுங்கள், அதன்படி செயற்படுங்கள். அவ வாறு நடப்பீர்களேயானால் வெற்றித்தேவதை உங்கள் காலடியில்.
நாங்கள் வீட்டில்தானே இருக்கிறோம். வேலைக்கு என்று வெளியே போவதுமில்லை.. வருவதுமில்லை என்று பொருமுகிறீர்களா? சற்றே உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் முதலில் குடும்பமே கதி என்று கிடக்கும் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மனதில் உறுதி எடுங்கள். உங்களுக்குச் சமைப்பது மட்டும் தான் வேலை என்றாலும், சமையலறையிலேயே குமைந்து கிடக்கும் போக்கை மாற்றுங்கள். சமையலோடு சேர்த்து வேறு ஆக்கபூர்வமான அல்லாதுவிடின் பொழுது போக்கான சில காரியங்களைச் செய்ய முனையுங்கள். தோட்டம் செய்வது, பூமரம் வளர்ப்பது, தைப்பது, இல்லாதுபோனால் நாவல் வாசிப்பது என்று சில மனதுக்கு இனிமையான செயற்பாடுகளிலும் ஈடுபட முனையுங்கள். உங்களையறியாமலே நீங்கள் நல்லதொரு ரசிகையாக மாறுவீர்கள். மாலை நேரங்களில் தாராளமாகவே ஓய்வு கிடைக்க, வெளியே சென்றுவர நாலு பேரின் அறிமுகம் கிடைக்கும் கற்பனைகளும் சிறகு விரிக்க கைகளும் கதை, கவிதை என்று வடித்திடத் துடிக்கும். பிறகென்ன நீங்கள் எழுதியவற்றை முதலில் சிலர் வாசிக்க பின் அதனைப் பலர் ரசிக்க. இவ வாறே ஒரு பிரபல்யமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தலைமையேற்று கடைசியில் ஒரு பேச்சாளராகவும் மாறி அசத்தி விடுவீர்கள்.
இது என்ன ஒரு ஐந்து வரியில் பேச்சாளர் ஒருவர் உருவாகிவிட்டார் என்று நகைக்கிறீர்களா? ஏன் நடக்காது? வேண்டுமானால் இந்த ஐந்து வரிகளும் ஈடேறும் காலப்பகுதி வேறுபடலாம். ஆனால் ஈடேறுவது நிச்சயமே. ஒருவேளை மேடைகளில் ஏறி கைகளை அசைத்து ஆக்கிரோஸமாக கதைக்கப் பிடிக்காவிட்டாலும், அவ வாறு கதைப்பவர்களின் பேச்சையாவது கேட்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளலாம் அல்லவா?
ஒரு மேடைப் பேச்சாளனைக் காட்டிலும் அப்பேச்சை ரசிக்கத் தெரிந்தவனே சிறந்த இலக்கிய கர்த்தா என்று அறிஞர் கூறுவர்.
உண்மையில் சகோதரிகளே! ஒரு சிறந்த தலைமை கொண்டுள்ள பண்புகள் பெண்களிடத்தேதான் அதிகம் குடிகொண்டுள்ளன என்று நான் கூறினால் நம்புவீர்களா? ஆனால், இது நூறுவீதம் உண்மை.
பலம், விடாமுயற்சி, வயப்படும் தன்மை என்ற ஒரு தலைமைக்குரிய மூன்று முக்கிய பண்புகளும் எதிர்ப்பாலரைக் காட்டிலும் உங்களிடம்தான் ஓங்கியிருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் மூன்றுக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். (POWER PERSEVERANCE PASSION) மேலும் இவ வாறு கூறுகிறார்கள். பெண்கள் இயல்பிலேயே பொறுத்துப்போகும் தன்மையும், வெளிப்படையான போக்கும் கொண்டிருப்பதோடு சிறந்த உறவாளராகவும் (COMMUNICATOR) விளங்குகிறார்கள். இதனால் தம் கீழுள்ளவர்களைச் சிறப்பாக உருவாக்குவதுடன் தகவல்களையும் இலகுவாகப் பரிமாறிக்கொள்கிறார்கள். கட்டளையிடுவதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்களே முன்நின்று காரியமாற்றுகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் தலைமையில் குற்றங்கள், குறைகள் கண்டுபிடிக்க முனைவது கடினமான காரியம் என மேற்குலக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ஏது, ஆச்சரியப்படுமாப்போல் தெரிகிறதே? உண்மைதான் தோழிகளே! இப்பண்புகளை உங்களுக்காக மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. நீங்கள் பெற்றுவளர்த்து ஆளாக்கும் குழந்தைகள் அதாவது எதிர்காலத்தில் உங்களை, இந்த நாட்டைக் காப்பாற்றப் போகும் அந்தக் குழந்தைகள் நாளைய சமுதாயத்தில் நற் பிரஜைகளாக தலை நிமிர்ந்து நடக்க, மற்றவர்களை வழிநடத்த இந்தச் சீரிய பண்புகளை அவர்களிடத்தே தழைக்கச் செய்வது உங்களது பொறுப்பல்லவா? இத்தகைய பாரிய பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் மட்டும் சோர்ந்து துவண்டு வாழலாமா? உங்களுக்குள்ளே கவனிப்பாரற்றுப் புதையுண்டு போய்க்கிடக்கும் இந்தப் பட்டை தீட்டாத இரத்தினங்களைச் சற்று சிரமம் எடுத்து மெருகேற்றிக்கொள்ளுங்கள். இந்தத் தளிர்கள் நாளை வளர்ந்து பெருவிருட்சமாகிக் காய்த்துக் கனிதந்து நற்பயனளிக்க அதனை தாங்கி நிற்கும் கொழுகொம்புகள் வைரமாக இருக்கவேண்டாமா?
உங்களுக்காக மட்டும் நாம் இதனைக் கேட்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்தைச் செதுக்கப் போகும் சிற்பிகளுக்காக யாசிக்கின்றோம்.
எங்கே உங்களுடைய குட்டித் தலைவி குட்டிக் கட்டளைகள் இட ஆரம்பித்துவிட்டாள் போலிருக்கிறதே?

Keine Kommentare: