சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய
போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமூதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும்.
வீடும் நாடும் வளம்பெறும்
பெண்ணிலை மாற்றம் தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் யாரது கருத்திற்கும் எட்டாமல் சத்தமேயில்லாமல் புரட்சி ஒன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. தாங்கள் ஒரு புரட்சி செய்வதை அப்பெண்கள் அறியாமலிருப்பதும், அப்பெண்ணின் புரட்சிகர நடவடிக்கையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் போவதோடு அதனை விமர்சிப்பதும் அத்தகைய புரட்சியை மேற்கொள்ள பிறபெண்கள் முயலாததற்குக் காரணமாக அமைகிறது.
கல்வியறிவு, பொருளாதாரப்பலம் என்பனவற்றையெல்லாம் மீறி ஒரு பெண்ணின் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அப்பெண் பொங்கியெழும் சம்பவங்கள் இடம்பெறினும் பின்னர் அப்பெண்ணுக்குப் போதிய ஆதரவு சமூகத்திலும் குடும்பத்திலும் கிடைக்காமற் போவது அப்பெண்ணை குற்றவுணர்விற்கு உள்ளாக்குகிறது. தான் காதலித்த ஒருவனை ஒரு பெண் மறுக்கத் தலைப்படும்போது, அப்பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாகிறது. சமூகத்தின் அப்பார்வை ஆணிண் அடக்கு முறைகளுக்குப் பெண்ணைப் பணிந்து போகச் செய்கிறது.
தான் காதலித்த ஒருவன், 'சீதனமில்லாமல் வீட்டுக்காரர் கல்யாணம் செய்யவிட மாட்டினமாம்' என்று தன் காதலைப் பெற்றோரைக் காட்டி விலை பேசிய போது, அவனைத் திருமணம் செய்வதற்காக இரண்டு வருடங்கள் உழைத்துப் பணம் சேர்த்தார் ஒரு பட்டதாரிப்பெண். இரண்டு வருடக் கடின உழைப்பின் பின் பணத்திற்காக என்னை மறுதலித்த ஒருவன் என்ற எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட பின்னும் அப்பெண் அவனை மணக்கத் துணிந்தது காதலுக்காகவல்ல, குடும்பத்தின், சமூகத்தின் நிர்ப்பந்தத்திற்காகவே. தான் அவனை மறுப்பின் தனதும் தன கீழுள்ள சகோதரிகளினதும் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற நிலையில் அப்பெண் மனதில் தோன்றிய வெறுப்புடனேயே மணவாழ்க்கைக்குள் நுழைகிறாள்.
இன்னொரு பெண்ணோ பலவருடங்களாகத் தன்னை விரும்பிய ஒருவன் சீதனம் வேண்டித் தன்னை மறுத்த போது, அவனை மறுக்கும் உரிமை தனக்குமுண்டென உணர்ந்தாள். திருமண தினத்தன்று அருட்தந்தை 'இவரைத் திருமணம் புரியச் சம்மதமா?' என வினாவியபோது அவனை மறுத்தாள். 'தான் செய்தது சரியே' என்ற நிமிர்வுடன் அவள் வெளியேறிச்சென்ற போது அந்த 'நிமிர்வு' சமூகத்தின் பார்வையில் 'திமிர்' ஆனது. அந்த நிமிர்வை அவள் தொடர்ந்து பேண முடியாத வகையில் குடும்பமும் சமூகமும் அவளை நிந்தித்தபோது 'நீ செய்தது சரியே' என அவளைத் தட்டிக்கொடுத்து உளப்பூர்வமான ஆதரவைத் தர யாரும் வராத நிலையில், பிறப்பாலும் வளர்ப்பாலும், 'ஒரு தமிழ்ப்பெண் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றூட்டப்பட்ட உணர்வுகளே அவளை மனச்சிதைவு நிலைக்குள்ளாக்கியபோது அவளது புரட்சி பயனற்றதாகிப்போனது.
சூழ நின்ற சமூகம், அப்பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன வேதனையையும், அதன் பலனாகவே எதிர்காலத்திலும் தன் திருமண வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய முடிவையெடுக்க அவள் துணிந்தாள் என்பதையும் புரிந்துகொள்ளாது. 'ஒரு பொம்பிளை இப்பிடியே நடக்கிறது' எனக் கடுமையாக விமர்சித்தது. மறைமுகமாக 'ஒரு ஆம்பிளை செய்தாலும் பரவாயில்லை' என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது. தன் தன்மானத்திற்கு விழுந்த அடியைத்திருப்பிக்கொடுக்க முனைந்த அவள் நிமிர்வு 'அவளுக்கு ஆணவம் தலைக்கேறிப்போச்சு' என விமர்சிக்கப்பட்டது. இத்தகைய விமர்சனங்கள் அப்பெண்ணைத் தன்னுள் மேலும் ஒடுங்கச்செய்தது. இப்பெண்ணுக்கு உளப்பூர்வமான ஆதரவைக் கொடுத்து இனிவரும் வாழ்க்கையை அவள் நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டப்போவது யார்?
பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கத் தயங்குவதற்குச் சமூகத்தின் இத்தகைய விமர்சனங்களே காரணமாக அமைகின்றன.
எதிர்பார்க்காத இடத்தில் இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் 'இந்தப் பெண்ணிடம் இவ வளவு தெளிவா? என ஆச்சரியப்படவைத்தன. பதினேழு வயதுடைய அப்பெண் கல்வியறிவோ, பொருளாதாரப் பலமோ அற்றவள். ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் ஏந்திய வண்ணம் வந்த அப்பெண்ணை ஏனைய பெண்கள் நோக்கியவிதம், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலொன்றை அவள் புரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்பெண்ணுடன் தனியே பேசமுற்பட்ட எனக்கு அப்பெண்மேல் பெருமதிப்பு ஏற்பட்டது. திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் ஒருவனிடம் தன்னை இழந்து கர்ப்பிணியானாள். திருமணம் செய்ய அவன் மறுத்தபோது நீதிமன்றத்தை அணுகினாள். அவளைத் திருமணஞ்செய்யும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அப்பெண் எடுத்த முடிவு வியக்கத்தக்கது.
'என்னை ஏமாத்தினவனை ஏனக்கா நான் கல்யாணம் செய்யவேணும்? என்ரை பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆரெண்டு சனத்துக்குக் காட்டத்தான் நான் கோர்ட்டிற்குப் போனனான்' சுயமரியாதை மிக்கதொரு பதில். சமூகத்தினரால் ஏற்கமுடியாத பதில். ஏனெனில் சமூகத்தின் பார்வையில் அவள் நடத்தை சரியில்லாதவள் பிள்ளை, தகப்பன் பேர் தெரியாத பிள்ளை. கூலி வேலைக்குச் சென்று தன் மகனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்பெண்ணை அவளைச் சூழவுள்ளோர் மதிக்கத் தவறியதேன்?
அரச திணைக்களமொன்றில் தொழில் புரியும் பெண்ணொருவர் சோகம் ததும்பிய முகத்துடனேயே தினமும் வேலைக்கு வருவார். எந்நேரமும் 'அவர்லு} அவர்லு}' என்று தனது கணவரைப்பற்றியே ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்.
சிறிது காலமாக எதுவும் பேசாது அப்பெண் அமைதியாயிருந்தது ஆச்சரியமளித்தது. 'என்ன கதையையே காணேல்லை' என்ற கேள்விக்குப் பதிலாக அப்பெண் கண்ணீர் உருக்கத் தொடங்கினாள்.
திருமணம் செய்த நாளிலிருந்தே 'நான் உன்னை வீட்டுக்காரரின்ரை ஆய்க்கினைக்காண்டித்தான் கட்டினனான்' என்று சண்டைபிடித்து அப்பெண்ணை உளவியல் ரீதியான வன்முறைக்குள்ளாக்கிய அவளது கணவன், அச்சண்டையின் உச்சக்கட்டமாக குழந்தையைப் பிரசவித்த பதினான்காம் நாள் தனது அடிவயிற்றில் அடித்தததாகக் கூறி 'இப்பவும் அடி வயிற்றிலை அந்த வலி நிரந்தரமாத் தங்கீற்றுதக்கா' என்று அழுதாள்.
அண்மையில் தனது கணவன் ஒரு பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்ததைக் கூறியபோது, வேதனையிலும் அவமானத்திலும் அவள் முகம் கன்றியது. 'என்னாலை அந்த அவமானத்தைத் தாங்க முடியேல்லையக்கா அப்பவே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டை போயிட்டன். தாயும் மகனுமாவந்து நிற்கினம். மணவிலக்குத் தரட்டாம், சீதனமா வாங்கின காசைத்திருப்பித் தாங்கோ, மணவிலக்குத் தாறன் என்று சொல்லிப்போட்டன். என்ர காசை ஏனக்கா நான் விடுவான்' என்று ஆவேசப்பட்டாள். இவ வளவு துணிச்சலும், தன்னம்பிக்கையும் உரிமைக்காகப் போராடும் குணமும் இந்தச் சின்ன உருவத்தினுள்ளா என்ற ஆச்சரியங்கலந்த மௌனத்தில் இருந்த என்னை 'என்னக்கா! நான் செய்தது பிழையே, நீங்களும் பேசாமல் இருக்கிறீங்கள்?' என்று கவலை தொனிக்க வினாவினாள். சுற்றமும் உறவும் ஏற்படுத்திய கண்டனங்களும், விமர்சனங்களும் உளாPதியான ஆதரவைத் தேடும் மனோநிலையை அவளுள் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றினேன். 'மூன்று வருட காலமாக வேதனையை அனுபவித்த உங்களுக்குத்தான் நீங்கள் எடுத்த முடிவின் பரிமாணம் தெரியும். நீங்கள் சரியான முடிவையே எடுத்திருப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனத்தையிட்டுக் கவலைப்படாதீர்கள்' என்று கூறினேன்.
'மூன்று வருடத்தில் எனது திருமண வாழ்க்கை முறிந்தது எனக்கு எவ வளவு வேதனையாயிருக்கும் என்று இந்தச் சனத்திற்கு ஏனக்கா விளங்குதில்லை?' என்று கண்ணில் நீருடன் வினாவினாள். 'உங்கள் வாழ்க்கை உங்கள் பொறுப்புத்தான். நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. பிள்ளையை நல்லவனாக வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்' என்று மட்டுமே என்னால ஆறுதல் கூறமுடிந்தது.
சமூகத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமுதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம்பெறும்.
-கு. தீபா
Mittwoch, August 13, 2003
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 4 கு. தீபா
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:31:00 PM
Labels: சிகரங்களைத் தொட்ட பின்னும்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen