Samstag, September 20, 2003

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண் பற்றிய வர்ணனைகள்

சஞ்சீவி சிவகுமார்

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண் பற்றிய வர்ணனைகள் உத்திகளாயின! இந்த மிலேனியம் ஆண்டு வரை பெண் தன் அழகு இரகசியங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதிலும் கற்புத் தன்மையை நிரூபிப்பதிலுமே ஆர்வமுடையவளாக இருக்கிறாள். அல்லது தன் ஆளுமை திறமை என்பவற்றை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்திலும் பார்க்க அதிக ஈடுபாட்டை மேற் குறித்த விடயங்களில் காட்டுகிறாள்.

சினிமா மொடலிங் நாடகம் மற்றும் ஏனைய பொழுதுபோக்கு முதலான துறைகள் கலை சார்ந்த துறைகளாக விருத்தியுறுவதிலும் பார்க்க அதாவது கலைப் பெறுமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் பார்க்க தசை சார்ந்த விரச விபசார பண்புகளை நோக்கிய தளத்தில் இயங்குவதும் உணரக் கூடியதாக உள்ளது. இதற்குத் தனியே இத்துறை சார்ந்தவர்களை மட்டும் குறை கூறுவது போதுமானதல்ல. இது குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இதுவாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

ஓருவருக்கு இயல்பாகவே எழும் எதிர்பாலார் மீதான இரசனையையும் கலைக் கூறாகக் கொள்ளுவது இறுக்கமான பண்பாட்டு உணர்வாளர்களால் மறுக்கப்படலாம். ஆனால் நீண்டகால நிதர்சனமாக இதுவே நிகழ்கின்றது. தடித்த பொன்முலைத் தடம் கடந்து அருவி போய்த்தாழ' என்ற வர்ணணை முதல் இராவணன் சீதையைச் சந்திக்க அசோக வனத்துக்கு வரும் போது அவன் அணிந்திருந்த மாலையிலிருந்து உதிரும் மலர்களினை புணர்ச்சியின் பின் சோர்ந்துக் கிடக்கும் விபசாரிக்கு ஒப்பிட்டது வரையிலான பல்வேறு உதாரணங்களை இதற்குக் கூறலாம். இத்தகைய வரிகளை எல்லாம் கலையுணர்வு மிக்கது என்று யாரும் சொல்லி விட முடியாது.

இலக்கியத்தை விற்பனைப் பொருளாக்க பெண்ணையும் 'பெண் குறித்த வர்ணணையையும் பயன் படுத்திய உத்தி என்பதுவே இதற்கு மிகப் பொருத்தம். இக்கால சினிமாவின் மசாலாக் கூத்தையும் இத்தகைய வர்ணணையும் ஒரே தராசில் இரு தட்டுக்களில் சமப்படுத்தலாம்.

மறுபுறத்தில் இயல்பான வாழ்வியலில் பாலியலும் எதிர்பால் உணர்வும் முக்கியத்துவம் பெறுவதால் கலை இலக்கியங்களில் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்ற சூடான வினா எழத்தான் செய்கின்றது. ஆனால் இரசனை என்பது உள்ளார்ந்த ஆர்லம். இதனைக் கலையுணர்வு குறித்த தளத்திலிருந்து தசை விரசத்திற்குத் தடம் புரட்டி விடுவது ஆரோக்கியமானதல்ல.

சரி சமூக இலக்கியங்கள்தான் இப்படி என்றால் கட்டுக்கோப்புகளையே வரையறுக்கும் சமய இலக்கியங்களும் இதனையே செய்திருக்கிறது. தேவதாசி கந்தருவப்பெண் தேவலோக அரம்பை என்று வர்ணித்தது போதாமல் அரக்கி பேய்ப்பெண் என்று நீண்டு செல்லும் பாத்திரங்களுக்கு தசை அழகு வர்ணிப்பது தவிர காத்திரமான இலக்கிய முக்கியத்துவம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அத்தகைய வர்ணிப்பையும் பாத்திர அலங்காரத்தையும் தவிர்த்தே கதையை நகர்த்தியிருக்கலாம் போலவும் படுகின்றது.

பெண்ணைத் தனியே போகப்பொருளாக நினைத்து ஆக்கும் படைப்புக்கள் கிராக்கியுள்ள விற்பனையையும் பிரபல்யங்களையும் பெற்றுக் கொள்ளும் என்ற கருத்தே இத்தகைய பாத்திரங்களைத் தேவைப்படுத்துகின்றது. காமசாத்திரம் காமசூத்திரம் மதனசிந்தாமணி என்பவற்றைப் புறநிலையில் நின்று வாசிக்கும் போது இந்த ஆணாதிக்க நிலைப்பாடு தெட்டத்தெளிவாகும். அதிலும் வாசகர்களை முழுதாக ஆண்களாகக் கருதிக்கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களில் பெண் தாய் சகோதரி என்ற உறவு நிலைகளைக் கடந்து ஆணைத் தூண்டற் பேறடையச் செய்யும் ஒரு கூறாகவே காட்டப்படுகிறாள். இந்தக் காட்சி நிலையிலிருந்து மீள முடியாத அளவுக்கு சமூக இறுக்கத்தைத் தக்க வைத்தது தவிர வேறு எதனையும் இத்தகைய பண்பாடுகளால் அடைய முடிவதில்லை.

இவை தவிர சமூகத்திற்குப் போதனை வழங்கும் சமூக சீர்திருத்தக் கருவிகளாகத் தம்மை இனங்காட்டிக் கொள்ளும் கிராமிய நிகழ்த்துக் கலைகள் கூட பெண்ணைத் தன் போக்கில் வகைப்படுத்திக் கொள்வதும் வசைப்பாடிக் கொள்வதும் முட்டாள் தனத்துடன் கூடிய பிற்போக்காகவே கொள்ளக்கூடியது. சிறுவயதில் என்னை மிகப்பாதித்த காத்தவராயன் கூத்தில்
ஆரியப்பூமாலையைப் பற்றிய ஒரு பாட்டில். . . . .

கெண்டை பெருத்தவளுடா மகனே!
பெருத்தவளுடா அவள் குடிவழிக்கு ஆகாதுடா மகனே!
ஆகாதுடா
கூந்தல் பெருத்தவளுடா மகனே!
பெருத்தவளுடா. . . '
என்று நீண்டு செல்லும் பாடல் நச்சு விதையை சமுதாயத்தில் தூவுவன. பெண் குறித்த இந்த அளவீடு ஆதாரமின்றிய ஒரு அடக்கு முறையாக சமூக அநீதியாகவே அமைகிறது. பெண் செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுவதிலும் பார்க்க குற்றம் செய்து விடுவாளோ என்ற அச்சம் காரணமாக தண்டிக்கப்படும் சமூக சட்டங்களே அநேகம். இத்தகைய சமுதாய மாறாட்டம் வக்கிரத்தையே விளைவிக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆண் எதிர்ப்பு வாதமாக வரும் தஸ்லிமா நஸ்லிமின் கவிதையைக் கவனிப்பது பொருத்தமென நினைக்கிறேன்.

நான் ஒரு
ஆணை வாங்க விரும்புகிறேன்
சுத்தமான உடை சவரம் செய்த முகம்
வாரிய தலைமுடி
அவன்-ப10ங்கா இருக்கையில்
இருக்கிறான்.
தடவைக்கு
ஐந்து அல்லது பத்து டக்கா
எனும்
மலிவான விலையில்
அவனை நான் வாங்குவேன்

என்று தொடங்கி தன் ஆண் வக்கிரத்தை எல்லாம் கொட்டிய பின்

' பின் அவனை
. . . . . . . . . . .
. . . . . . . . . .
. . . . . . . . . .
நான் அழிப்பேன்'
என்று முடிக்கிறார். இத்தகைய வெறுப்பின் அத்திவாரம் என்ன? சமூகத்தின் எந்தச் செயலுக்கு இந்தப் பதில்? ஏன்பவற்றை நாம் ஊன்றி நோக்க வேண்டும். ஓட்டுமொத்தமான சடத்துவ இருப்பை பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்காக தன்னை நிலை நிறுத்தவும் நிர்ணயம் செய்யவும் சமூகத்தின் ஓர வஞ்சமான சட்டங்களிலிருந்து மீட்புப் பெறவும் அவள் துணிந்துவிட்டாள் என்பதுவே இத்தகைய எழுச்சிகளின் அறிவிப்பாகும்.

சமூகம், சமத்துவம் நோக்கிப் பண்படுத்தப்படாதவரை ஆணாதிக்க சிந்தனை அறுபடாத வரை பால்நிலை வக்கிரம் சீர்படுத்தப்படாதவரை இந்த நிலைப்பாடு பெண்களின் மனநிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும.

சஞ்சீவி சிவகுமார்

Keine Kommentare: