Freitag, September 19, 2003

கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே!

தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே!

"பெண்கள் இப்போது மிகவும் முன்னேறிவிட்டார்கள்."
இன்று பலராலும் முன்வைக்கக்கூடிய கூற்று இது. இக்கூற்று ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதுதான். ஆனாலும் இந்த முன்னேற்றம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதாகிறது. முன்னேற்றம் என்பது துணிச்சல் தன்னம்பிக்கை என்கின்ற இரண்டு விடயங்களில் தங்கியிருக்கின்றது. இந்த இரண்டு விடயங்களுமில்லாத பெண்கள் மட்டுமல்ல மனிதர்கள் யாருமே முன்னேற முடியாது.

எமது சமூகத்தில் பெண்கள் மிகவும் வேகமாக முன்னேற வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனென்றால் பாதிப்புகளும் பிரச்சினைகளும் மூடக் கொள்கைகளும் முரண்பாடுகளும் பெண்களிடமே அதிகம் காணப்படுகின்றன. இவை நிச்சயமாக முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். இந்தத் தடைகளை உடைத்து அல்லது தகர்த்து முன்னேற வேண்டிய பெரும் பொறுப்பு பெண்களுக்குரியது. அப்பொழுதுதான் பெண்கள் இலகுவில் முன்னேற முடியும்.

பெண்கள் பல கோணங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். பெண்ணின் ஒவ்வொரு திசையும் பயங்கரமானதாக, கரடு முரடானதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இதை விட காலங்கலமாக பெண் பற்றி நிலவி வந்த உருவகங்களும் இன்றைய பெண்களின் முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடுவனவாகவே இருப்பதை காண்கின்றோம்.

பெண்ணின் ஆற்றல், ஆளுமை என்பன பெரியளவில் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவே இருப்பதை பல இடங்களில் பெண்ணின் ஆளுமை வெளிப்படுவதை அவள் சார்ந்தோர் விரும்பாத நிலையும் இருக்கின்றது. பெண் என்பவள் இரண்டாம்படி நிலையில் இருப்பதுதான் அவளின் பெண்மைக்கு புனிதம் கற்பிப்பது என்ற மாதிரியான கருத்தும் இருந்து வருகின்றது. பல இடங்களில் |பெண்தானே| என்கின்ற அலட்சியம் அல்லது அக்கறையின்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியான பார்வைகளையும், படிநிலைகளையும் தாண்டி முன்னேற வேண்டிய நிலையிலேயே இன்றைய சாதாரண பெண் இருக்கின்றாள்.

இன்று பெண் தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டவும் ஆற்றல்களை வெளிப்படுத்தவும் பல வழிகள் இருக்கின்றன. எமக்கு முந்தைய சந்ததியினரைப் போல பெண்கள் ஏக்கம் நிறைந்தவர்களாகவோ இன்னொருவரில் தங்கியிருக்க வேண்டியவர்களாகவோ இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அருகிவிட்டன. பாதைகள் பல முனைகளில் திறந்திருக்கின்றன.

இருந்தும், எத்தனை பேர் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஏதோ ஒரு விதத்தில் ஏற்படும் பயமும், தயக்கமும் அநீதிக்குட்பட்டவர்களின் உணர்வுகளை மரக்கச் செய்து விடுகின்றன. அல்லது மௌனிக்க வைத்து விடுகின்றன. என்றே சொல்ல வேண்டும். உண்மையில் எப்பொழுதும் அநீதி இழைப்பவர்கள் தான் அச்சமுறவேண்டும். ஆனால் இங்கே மாறாக அநீதிக்குட்படுபர்களே அச்ச முறுகின்றார்கள்.

காலங்காலமாய் பெண் இப்படித்தான் இருப்பதற்குப் பழக்கப்பட்டிருக்கின்றாள். அநீதிக்கெதிராககுரல் கொடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பது என்பது பெண்ணுக்கு அவமானம், களங்கம் என்று அன்றைய காலம் போதித்தது. ஆகவே, அன்றைய பெண் எப்படி வாழ்ந்தாள், அந்தக் கருத்தும், ஆழமான வழி நடத்தலும் இன்றும் சில இடங்களில் ஊறி இருப்பதை நாம் காண்கின்றோம். இவை களையப்பட வேண்டிய கருத்துக்களாக இருக்கின்றன.

சிறிலங்காவின் தேச வழமைச்சட்டம் பெண்களுக்கு மனத்துணிவை ஏற்படுத்துவதாக இல்லை. ஆனால் எமது தமிழீழச் சட்;டங்கள் பெண்களுக்கு உரிய முறையில் நீதி வழங்கக்கூடிய வகையில் இருக்கின்றன. இருந்தும், அநீதிகளுக்கு எதிராக துணியாதவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சட்டம் தெரியாதவர்கள் என்பவர்களைவிட சட்டம் பற்றி முழுமையான தெளிவிருந்தும் முன்வராதவர்கள் தான் அதிகம்.

சமூக மட்டங்களில் இன்னமும் துன்புறுத்தப்படும், ஏமாற்றப்படும், அவதிக்கப்படும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் எல்லோருமே இந்த அநீதிகளை எதிர்த்து போராட முன் வருகின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.

ஏன் இவர்கள் இப்படி ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அவமானம் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயம் |என்ன செய்வது பெண் என்றால் இதெல்லாம் சகஜம்| என நினைக்கும் மனோபாவம் என்பவையே காரணங்களாக அமைகின்றதை அறிய முடிகின்றது.

இதன் மூலம் அநீதி இழைப்பவர்கள் தப்பிக் கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலுடனும், மாற முடியாத துன்பத்துடனும் வாழ நேரிடுகிறது. மேலும், அநீதி இழைப்பவர்கள் மீண்டும் மீண்டும் இதே அநீதியை இவர்களுக்ககோ, அல்லது இன்னும் பலருக்கோ இழைக்கும் மனத்துணிவும் இதன் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. தவறு செய்வது மட்டுமல்ல, தவறு செய்யப்படுவதை வெறுமனே அனுமதித்திருப்தும் மாபெரும் தவறாகிறது.

தவறிழைப்பவர்களை மன்னித்துவிடுகிறோம். அல்லது அலட்சியம் செய்துவிடுகின்றோம். இதனால் தவறிழைப்பவர்கள் மனச்சாட்சியின் உறுத்தலால் திருந்திக் கொள்வார்கள் என்பது எல்லாம் முழுமையான உண்மையல்ல. மன்னிப்பது பெருந்தன்மையை வெளிப்படுத்துவது என்று கருதப்பட்டாலும் கூட, இது எல்லா அநீதிகயாளர்களையும் திருத்தி நல்லவர்களாக்கும் என்று கூறிவிட முடியாது.

ஆகவே, பெண்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டியது. போராட வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. இந்தக் கிளர்ச்சி அல்லது போராடும் மனப்பான்மை தான் பெண்களின் முன்னேற்றங்களுக்கு உந்துதலாக அமையும்.

ஆதிலட்சுமி சிவகுமார்
நன்றி - ஈழநாதம்

Keine Kommentare: