Sonntag, November 02, 2003

மலேசியத் தமிழ்ப் பெண்களும் சமூக சிந்தனையும்.

ந. மகேஸ்வரி

இன்றைய நவீன உலகில் மலேசியத் தமிழ்ப் பெண்களின் சமூக சிந்தனை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

மலேசியப் பெண்கள் என்று பொதுவாகக் காணும்போது முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைந்திருப்பதாகத் தோற்றம் தருகின்றது.

ஆனால் தமிழ்ப் பெண்கள் என தனியாகப் பிரித்து நோக்கினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். பிற இனப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கல்வி, பொருளாதாரம், அரசியல், வாழ்க்கைத்தரம் சமூகப்பணி யாவற்றிலுமே இன்னமும் வெகுதூரம் பின் தங்கிய நிலையிலேதான் இருக்கின்றனர்.

ஆரம்பக் கல்வியைப் பெறுவதில் ஓரளவு வாய்ப்புக் கிட்டியுள்ளது என்று கூறலாம். நகர்ப்புறத்திலும் அதையொட்டியுள்ள இடங்களிலும் பெண்கள் சற்று தெளிவடைந்து வருகின்றனர் என்று கூறலாம். சின்னச் சின்ன மாறுதல்களைக் காண முடிகின்றது. ஆனால் ஆழ்ந்து கவனித்தால் மற்ற இனப் பெண்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிர்ச்சிக் குரிய ஏமாற்றமே மிஞ்சும்.

மலேசியா போன்ற வளமிகுந்த, வாய்ப்புகளும் வசதிகளும் பெருகியுள்ள நாட்டிலும் நமது பெண்களின் நிலை இப்படி இருக்கிறது என்றால் அதற்கு அவர்களின் அறியாமை மட்டுமே காரணமாகி விடாது. அவர்கள் சார்ந்துள்ள குடும்பம், சுற்றம் மற்றும் நமது சமூகத்தில் நிலவும் குறைபாடுகள்தான் காரணமாக இருக்கும். தனி மனிதரால் நிவர்த்தி செய்து விடக்கூடியதல்ல. நமது சமூகம் சார்ந்த எல்லாத் தரப்பினரின் சிந்தனையிலும் மாற்றமும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

சுயநலத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு பொது நல நோக்குடன் செயல்பட வேண்டும். அறியாமை, இயலாமை, ஏழ்மை போன்றவற்றை அகற்ற அதிக அக்கறையும் ஈடுபாடும் காட்ட வேண்டும். விளக்கிருந்து கண்களில் ஒளியில்லையேல் யாவும் இருண்டு போகுமல்லவா.

அதைப் போன்ற நிலையில் தான் நமது பெண்கள். அறிவுக் கண்களைத் திறக்க கல்வி வேண்டும். அறியாமை அகல சிந்தனை வளர வேண்டும். சிந்தனைதான் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும். விழிப்புணர்ச்சி பெற்றால்தானே சமூகத்தைப் பற்றியும் முன்னேற்ற வழிவகைகளைப் பற்றியும் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். இன்றைய நம் பெண்களில் பெரும்பாலோருக்கு ஆரம்ப இடைநிலைப் பள்ளிகளில் கல்வி கற்கும் அளவிற்காவது வாய்ப்புகிட்டியுள்ளது.

இதுவும் ஓர் ஆறுதலுக்குரிய மகிழ்ச்சிதான் என்றாலும் இன்றைய கணினி யுகத்திற்கு இது போதுமா? கிடைக்கும் சொற்ப அறிவைக்கொண்டு தங்களையே செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட வகை தெரியாமல் வழியறியாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில் சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்க இயலுமா? செயல்படத்தான் முடியுமா?

முதலில் நமது பெண்களின் அறிவுக் கண்களைத் திறந்து சிந்தனை மாற்றத்திற்குரிய அடிப்படை உணர்வுகள் பெறுதலுக்குரிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மனோபாவங்களில் மாற்றம் தேவை. உயர்கல்வி பெறவும் வெளி உலக அனுபவம் பெறவும் வாய்ப்பளிக்க வேண்டும். சுதந்திர மனப்பான்மை, சுயநிர்ணய அறிவு சுயகாலில் நிற்கும் துணிவு பொறுப்பேற்கும் திறன், மன உறுதி யாவும் பெற்றுத் திகழ வேண்டும்.

சுதந்திரமென்றால் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிதலும் வீண் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்வதுமல்ல என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். தங்களின் உரிமைகளைப் புரிந்து கொண்டு பண்பாட்டு மீறல்களின்றி பணியாற்ற வேண்டும். பண்படுத்திப் பக்குவப்படுத்தாதவரை எவ்வித முன்னேற்றமோ மாற்றங்களோ நிகழப்போவதில்லை.

சிவப்பழகியாகிவிட்டால் நாளைக்கே திருமணம், அடுத்த ஆண்டே கையில் குழந்தை என்ற வணிக விளம்பரத்தைத் தாரக மந்திரமாக்கிக் கொண்டு கடைகளிலும் பேரங்காடிகளிலும் சுற்றித் திரிவதுதான் சுதந்திரம், முன்னேற்றம் என்ற தவறான வழிகாட்டுதல்களைப் பின்பற்றித்திரிந்தால் அடுத்த நூற்றாண்டில் கூட நம் பெண்கள் விழிப்புணர்வை அடையப் போவதில்லை.

வணிகர்களும் விளம்பரதாரர்களும் தங்களின் வியாபாரம், பொருளீட்டல் போன்வற்றுடன் சமூக நலன்களிலும் சற்றே தார்மீக உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்திலுள்ள எலலாத் தரப்பினருமே நம் இனப் பெண்களின் முன்னேற்றத்திற்குரிய பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு குடும்பமும் அதில் வாழ்பவரும் சமுதாயத்தின் அங்கம்தானே!

நமது பெண்களிடம் சமூக சிந்தனையே கிடையாது என்று சொல்ல வரவில்லை. சேவை மனப்பான்மை இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள்தான். தன் குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூகத்திற்காக உழைப்பைச் சிந்துவதாகவே உணரப்பட வேண்டும். வெளியில் சென்று செய்வது மட்டுமே சேவை என்பதல்ல.

குடும்பத்திற்காக ஒவ்வொரு வினாடியும் செய்கின்ற செயல் யாவுமே சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் சேவையாகவே கருதப்பட வேண்டும். ஆனால், வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுக் கொள்ளும் இத்தகைய சேவை மனப்பான்மையை சமூகம் வரையில் விசாலப்படுத்த வேண்டும். பரவலாக அது பயன்பட வேண்டும்.

தனிமனிதனுக்கு மட்டுமே என்றும் தான், தன் சுகம் என்கிற குறுகிய மனப்பான்மையோடு சுயநலத்துக்காக அடக்கியாளும் போக்கைத் தவிர்க்க வேண்டும். தகுதியுள்ள பெண்களையாவது அடையாளங்கண்டு ஊக்குவித்து சமுதாய விழிப்புணர்ச்சிக்கு வித்திட வேண்டும்.

நமது பெண்களிடையே விழிப்புணர்ச்சியே கிடையாது என்பதல்ல! இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்னும் ஒரு சிலரால் நம் சமூகம் ஒளிமயமாகி விட இயலாது.

சமூகப் பணி என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல! விழாக்களுக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் அலங்காரமாக வந்து போவதும் காட்சிப் பொருளாக அணிவகுத்து நிற்பதும் மலர் தூவி வரவேற்பதும் சமுதாய சேவையாகி விடாது.

தரிசாகக் கிடக்கும் நிலத்தைப் பண்படுத்தி நல்ல விளை நிலமாக்குவதற்கு ஒப்பானதே சமூகப் பணி. அவ்விதப் பணிகளைச் செய்யும் தகுதி படைத்தவர்களாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூக அமைப்புகளும் அதற்கு ஆவன செய்ய வேண்டும். சமூக சிந்தனையுடைய சில பெண்களும் எப்படிச் செய்வது, என்ன செய்வது போன்ற வழிமுறைகள் தெரியாமல் வழிகாட்டி இல்லாமல் இருந்து வருகின்றனர்.

நமது பெண்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நமது சமூக அமைப்புக்கள் வழிவகுத்துக் கொடுக்கவும் இல்லை. விரிவான செயலாக்கமும் காணப்படவில்லை. காலங்கடந்து அரும்பியிருக்கும் இப்புதிய சிந்தனையை ஆவலோடும் அக்கறையோடும் ஏற்றுக் கொண்டு முன்வரும் பெண்களுக்கு மகளிர் அமைப்புகள் நல்ல அடித்தளம் அமைத்துத் தர வேண்டும்.

வலுவான தலைமைத்துவமும், முறையான செயல் திட்டங்களும் இருந்தால் நமது பெண்களுக்கும் புதிய பாதைகள் அமையும். அதன் மூலம் விழிப்புணர்வும் மாற்றங்களும் வரக்கூடும். பெண்களின் சிந்தனை மாற்றங்கள் சமூகத்தையே மாற்றி அமைக்கவல்லதாக அமையலாம்.

பெண்களே சமுதாயத்தின் கண்கள் என்று மேடையில் முழங்கி விட்டுப் போனால் மட்டும் போதாது. அதற்குரிய செயல்பாடுகளில் தீவிரமாக இறங்க வேண்டும். வழிவகுக்கப்பட வேண்டும். வசதிகள் செய்யப்படவும் நமது பெண்களின் சிந்தனை மாற்றத்திற்கு உதவ கல்வியாளர்கள் முன்வர வேண்டும்.

அதன் மூலம் சமூகம் நற்பயனை அடையும். நலிவுற்று நசிந்து கொண்டிருக்கும் சமூக சீர்கேடுகளைத் துடைத்தொழிக்க ஒன்றுபடுவோம்.

ந. மகேஸ்வரி
நன்றி-செம்பருத்தி

1 Kommentar:

MMU hat gesagt…

Very true and nice article,keep it up your good work.