ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது.
இன்றைக்கு சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்பூடகம், எனப் பல்வேறுபட்ட சகல கலாச்சாரச் செயற்பாட்டுத் தளங்களிலும் பெண்கள் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக்கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானம் எடுத்தல், ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், தலைமை ஏற்றல் போன்ற செயற்பாடுகளில் இன்றைக்கு பல பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எமது நாட்டில் நிலவிய போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு தளத்தில் ஓரளவு இடைவெளி ஏற்படுத்த}ய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கண் முன்னாலேயே நாம் பார்க்கிறோம். இங்கே பெண்களின் பங்களிப்புக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்கள் வெளியே வந்து செயற்படுவதற்கான சாதகமான நிலை ஏற்படுகிறது. இவர்கள் தாம் சார்ந்த துறைகளின் செயற்பாடுகளில் இந்த கலாசாரத்தை எவ வகையில் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த கலாச்சாரத்தின் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகிறது. பெண்களின் செயற்பாடுகளினூடாக கணிக்கப்படுகின்ற இந்த கலாச்சாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பும் பெண்களிடமே உள்ளதை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும . இந்தப் பொறுப்பை எத்தனை பெண்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கலாச்சாரத்தின் தன்மை சரியானதுதானா என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். இந்த விதமாக அமைந்து விட்ட இந்த கலாச்சாரத்தின் ஆடம்பரங்கள் பெண்களுக்குத் தேவையா? என்ற கேள்வி இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்ற கருத்தாகிறது.
பட்டாடைகளும் நகைகளும் ஆடம்பரமான சடங்குகளும்தான் எமது கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறியாமையிலிருந்து நமது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நகையும் பட்டாடையும் ஆடம்பரமான வாழ்வும்தான் தனக்குப் பெருமைதரும் என்று பெண் நினைப்பாளேயானால் அது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை. தன் கல்வியாலும் தன்னம்பிக்கையாலும் ஆளுமையாலும் மனிதப் பண்புகளாலும் ஒரு பெண் நிமிர்ந்து நிற்பாளேயானால் அதுதான் சமூகத்தில் அவளுக்கு பெருமை தரும் விடயம குறைந்த பட்சம் இந்த விதமாய் நிமிரும் பெண்கள் என்றாலும் தமது வாழ்வை எளிமையானதாகவும் ஆடம்பரமற்றதாகவும் ஆக்கிக்கொண்டால் சமூகத்தில் மற்றவர்கள் பின்பற்றகூடிய முன் உதாரணமாக திகழ்பவர்களாக இருக்க முடியும்.
போரினால் நலிவுற்றிருக்கும் நமது தேசத்தின் இன்றைய தேவை ஆடம்பரங்களை துறத்தல். எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தல். இது சாத்தியமாவது பெண்களின் செயற்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.
சமூகத்தில் எந்தப்பிரச்சனை என்றாலும் அதற்கு முகம் கொடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. அநேகமான பெண்களின் வாழ்நிலை சராசரிக்கும் கீழாகவே அமைந்துள்ளது. போரின் நடுவேயான பல இழப்புக்களை தாங்கியவர்களாகவே இவர்களில் பலர் இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையில் எமது கலாச்சாரங்களின் ஆடம்பரங்கள் சுமைகளாக அழுத்துவதை பெண்கள் அனுமதிக்கக் கூடாது. எமது இயற்கை வளங்களுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் எமது கலாச்சாரத்தை அமைக்கத் தவறினால் எமது இனம் பாரிய அழிவை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாமல் இருக்கும்.
பொதுவாகவே பெண்கள் ஆடம்பரமோகம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் பலவிடையங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். பெண்ணே பெண்ணிடமிருந்து விடுதலை பெறவேண்டும் பெண்ணே பெண்ணை சமமாய் நடாத்த முன்வரவேண்டும்.
சகமனிதரை நேசிக்கும் மனிதப் பண்பையும் எளிமையான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் எமது கலாச்சாரமாக பெண்கள் ஏற்றுக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகிறது.
- தாமரைச்செல்வி -
Mittwoch, August 13, 2003
பெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:48:00 PM
Labels: பெண்ணின் கலாசாரம்
Abonnieren
Kommentare zum Post (Atom)
2 Kommentare:
தாமரைச் செல்வி எழுதிய எங்கேயும் எப்போதும் அது நிகழலாம் என்ற சிறுகதை தமிழில் தேவைப்படுகிறது. தங்களிடம் இருந்தால் அனுப்ப இயலுமா.
shahjiaar@yahoo.com
தாமரைச் செல்வி எழுதிய எங்கேயும் எப்போதும் அது நிகழலாம் என்ற தமிழ்ச் சிறுகதை இருந்தால் அனுப்பி வைக்கவும்.
ஷாஜஹான், புதுதில்லி
shahjahanr@gmail.com
Kommentar veröffentlichen