Montag, August 11, 2003

தமிழீழ மண்ணில் இருந்து தரணிக்கோர் செய்தி -அர்த்தநாரி

தன்னைச்சுற்றி மிகமிகஇறுக்கமான வேலிகளைப் போட்டிருந்தவளை சீருடை தரிக்க வைத்து, ஆயுதம் ஏந்தி களத்தில் எதிரியைச் சந்திக்க வைத்து,வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என்பதை செயலுருப்படுத்திய தேச விடுதலைப் போராட்டம், பெண்கள் விடுதலையை நோக்கிய தனித்துவமான பாதையைத் திறந்துவிட்டிருக்கின்றது. இத்தனித்துவப் போக்கை உலகிற்கு உணர்த்தவென இந்த மண்ணில் கொண்டாடும் மாலதி தினம், தன்னம்பிக்கை மிக்க, தனித்து தீர்மானம் எடுக்கும் ஆற்றல் உள்ள, குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் தற்துணிவுள்ள பெண்ணை உருவாக்கிய தேசவிடுதலைப் போரின் ஒரு குறியீடேயென்றால், இக்குறியீடு இவ வுலகிற்குச் சொல்லுகின்ற, இனிச் சொல்லப்போகின்ற செய்திகள், அனைத்துலகப் பெண்கள் தினம் இவ வுலகிற்கு உணர்த்தும் செய்திகளைவிடக் காத்திரம் மிக்கதாக முன்னுதாரணமிக்கதாகஇருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

மானுட நெஞ்சங்களே! மார்ச் 8, இனம், மதம், நிறம், மொழி, கலாச்சாரம், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் பலதரப்பட்ட போதிலும், பெண் என்ற அடையாளத்தால் ஒன்றுபட்டுநிற்கும் பெண்ணினம் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் சமூகநீதி, சம உரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காகவும் ஒன்றுதிரண்டு, அகிலம் எங்கனும் குரல்கொடுக்கும் ஒருநாள் இது. உலகின் சரிபாதிக்கு மேற்பட்ட மக்கள் தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் உலக உழைப்புச் சக்தியில் மூன்றில் இரண்டு பங்கை தமதாகக் கொண்டிருந்தபோதும் உலக வருமானத்தில் பத்தில் ஒரு பங்கினை மட்டுமே பெறுபவர்களுமான பெண்கள் தமது உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடவெனத் தீர்மானிக்கப்பட்ட ஒரு நாள். குறைந்த கூலியில் கொள்ளைலாபம் அடிக்கும் நோக்குடன் பெண்களின் உழைப்பைச் சுரண்டிய முதலாளித்துவத்திற்கு எதிராக முதன் முதலில் அணிதிரண்டு பெண்கள் போர்க்கொடி தூக்கிய ஒரு நாள்.


இத்தனை சிறப்பு ஏன்?
பெண்களின் அரசியல் பொருளாதார சமூக சமத்துவத்திற்காகப் போராடுவதை இலக்காகக் கொண்டு 18ம் நூற்றாண்டிலேயே பல பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றி, பெண்ணொடுக்கு முறைக்கெதிராக போராட்டங்கள் நடத்தியமையை வரலாறு தெளிவாக எடுத்தியம்பும்போது மார்ச் 8 மட்டும் இத்தனை சிறப்புடையதாக மாறியதேன் என்ற சந்தேகம் பலருக்கு எழுவது இயல்பு.
ஆணுக்கு ஈடாகப் பெண் உழைத்து, உழைப்பின் பலனைச் சமமாகப் பங்கிட்டு, தமது தலைவனைக் கூட்டாகத் தேர்ந்தெடுத்து வாழ்க்கை நடத்திய சுய ஆளுமை நிலையில் இருந்து ஆடு, மாடு, கோழி போல் சொத்து என்ற நிலைக்குக் கீழிறக்கியது நில பிரபுத்துவ சமூகம். ஆற்றல் வாயில்கள் அனைத்தும் செத்தைக்குள் முடங்கிவிட 'செத்தை மறைவே சொர்க்கம்' எனப் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் உழைப்பில் கொள்ளை இலாபம் அடிக்கும் நோக்குடன் அவளுக்கு விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறிக்கொண்டு பெண் அடிமைத்தனத்திற்கு பெண்விடுதலை என்னும் மூலாம் பூசி அவளை வெளியே வரத் தூண்டியது முதலாளித்துவ சமூகம். நாகாPக உடையும் கேளிக்கை விருந்துகளுமே பெண்விடுதலை என உயர்மட்ட சீமான்களின் சீமாட்டியர் பயிற்றுவிக்கப்பட, சீழுழைப்பும் போட்டியும் நிறைந்த உலகில் வயிற்றுப் பசியைப் போக்க போட்டி போட்டு வேலை தேடுவது எவ வாறு என பெரும்பான்மைப் பெண் சமூகம் பயின்றது. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக சுயசிந்தனைக்கும் கருத்துத் தெளிவுக்கும் வாய்ப்பின்றி இருந்தவர்கள் விடுதலை என்ற பெயரில் அந்தச் சமயத்தில் தம்முள் கருக்கொண்ட சிந்தனைகளுக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு வசதிகளுக்குமமைய பெண்விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் போக்கு உருவாகத் தொடங்கியது. முதலாளித்துவ சமூகம் ஒன்றில் தனது கணவர் அல்லது தகப்பன் அல்லது சகோதரன் அனுபவித்த அதே நன்மைகளை, அதிகாரத்தை, உரிமைகளைப் பெறுவதையே நோக்காகக் கொண்ட முதலாளித்துவ பெண்ணியவாதிகளினால் வழிநடத்தப்பட்ட பல பெண்விடுதலை அமைப்புக்கள் வெற்றுக் கோசங்களிலும் வேடிக்கைப் பேச்சுக்களிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் கொடுமைகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி நாளொன்றிற்கு 10 மணிநேர வேலையும் ஆண்களுக்கு இணையான ஊதியமும் கோரி பெண் நெசவுத் தொழிலாளர் 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி தொழிற்சங்க hPதியாக ஒன்றுதிரண்டு உரிமைப் போராட்டத்தில் குதித்த அதிசயம் முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்க மண்ணில் நிகழ்ந்தபோது அது மற்றெல்லா உரிமைப் போராட்டங்களையும்விட முக்கியத்துவம் பெற்றதில் வியப்பேதும் இல்லை.


சன்னமாய்த் தெரிந்த ஒளிக்கீற்று
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்து 1910ம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கொப்பன்நேகனில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக சோசலிச பெண்கள் மாநாட்டில்தான் மார்ச் 8ஐ அனைத்துலக பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை முன்வைத்தவர்களில் இரு பெண்கள் முக்கியமானவர்கள். ஒருவர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும் பெண்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தருவதில் முன்னின்று பாடுபட்டவருமான கிளாரா செட்கின் அம்மையார். இன்னொருவர் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த ரஸ்யாவை கம்யூனிசப் பாதைக்கு இட்டுச் செல்லும் கடினபணியில், மாவீரன் லெனினுக்கு தோள் கொடுத்தவர்களில் முதன்மையானவரும், பெண்விடுதலை என்ற பெரும் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருமான ரஸ்யப் பெண் இராஜதந்திரி அலெக்சாண்டிரா கொலன்ராமி என்பவர்.


பெண் தொழிலாளரைச் சுரண்டுவதன் மூலம் உருவாக்கப்பட்ட உலகில், வசதியாகவும், பாதுகாப்பாகவும் தமது வழியில் முன்னேற உதவும் வழிமுறைகளை நாடும் பெண்ணியவாதிகளின் பாதை வேறு. பிறப்பால் அல்லது செல்வநிலையால் பெறப்படும் சலுகைகளை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்ட பெண் தொழிலாளர்களின் பாதை வேறு என்று இற்றைக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னரே குரல்கொடுத்து, ரஸ்யப் பெண் தொழிலாளருக்கு உரிமைகள் பெற்றுக்கொடுப்பதில் வெற்றிகண்டவர் கொலன்ரோய். கருத்துத் தெளிவு, அதிகாரம், தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அத்தனையும் வாய்ந்த இத்தகைய பெண்களின் ஆதரவில் மார்ச் 8 அனைத்துலகப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது ஒடுக்குமுறைகளுக்குட்பட்ட பெண்ணியத்தின் விடிவு கண்ணுக்கெட்டிய தூரமாகத் தோன்றியதில் வியப்பேதும் இல்லை.


சூட்டோடு, சூடாக 1918ஆம் ஆண்டு ஜப்பான் துறைமுகப் பெண் தொழிலாளர்கள் கப்பலில் இருந்து அரிசியை இறக்க மறுத்து, செய்த வேலைநிறுத்தம் 'அரிசிக்கலகம்' எனப் புகழ்பெற்றதுடன் நீண்ட போராட்டமாகி ஜப்பானில் அரசியல் நெருக்கடியையே தோற்றுவித்ததாகும். அதைத் தொடர்ந்து 1922இல் சீனாவில் 70 பட்டுத் தொழிற்சாலைகளில் வேலைபார்த்த ஆயிரக்கணக்கான பெண்கள் முதன்முதலாக ஊதிய உயர்வு கேட்டு மேற்கொண்ட வேலைநிறுத்தம் சீன சமூகத்தையே உலுக்கியதாகும். பெண் ஒடுக்குமுறை அதிகம் மிக்க இத்தகைய நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் பெண்விடுதலை நோக்கிய பாதையை சீரியதொன்றாகத் தோன்றச்செய்தன.

ஆட்டம் கண்ட அடித்தளம்
முதலாளித்துவம் போட்ட அடிக்கட்டுமானம் அவ வளவு லேசாக அசைக்கப்படக் கூடியதல்ல என்பது சொற்ப காலத்துள்ளேயே தெளிவாகியது. அரிசிக்கலகம் உலுப்பிய இரு தசாப்தங்களுக்குள்ளேயே தனது பலத்தையும் பலாத்காரத்தையும் பிரயோகித்து ஒரு லட்சம் சீன-கொரியப் பெண்களை தனது இராணுவத்தின் பாலியல் வேட்கைகளைத் தீர்க்கவென ஜப்பான் 'உல்லாசப் பெண்டிர்' ஆக்கியபோது உலகம் வாய்மூடி மௌனம் காத்தது. பெண்ணொடுக்குமுறைகளைக் களைந்தெறிய கூடுதலானவரை பாடுபட்டு வெற்றியும் கண்ட கம்யூனிச சீனா இப்போது அமெரிக்க மயமாக்கத்தின் கீழ் தன்வயமிழந்துகொண்டு போவதையும், இலைமறை காயாக இருந்த மனைவியரைத் தாக்குதல், மணமகள் விற்பனை, பாதங்கட்டுதல் போன்றன அதிகளவில் தலையெடுப்பதனையும் பார்க்கும்போது அநீதிக்கெதிராகக் குரல் கொடுக்கும் மனோபாவம்கூட 'மழைக்கு முளைக்கும் காளான்' போல குறுகிய ஆயுட்காலம் கொண்டதோ என்னும் எண்ணப்பாட்டையே உருவாக்கியுள்ளது.
பெண்களின் உரிமையைப் பேசவென்று எத்தனை மாநாடுகள், ஊர்வலங்கள், விவாதங்கள், ஆய்வுப்பட்டறைகள், எழுச்சி தினங்களை இவ வுலகம் சந்தித்திருக்கின்றது. தனிப்பட்ட hPதியிலும் நிறுவன மயப்பட்டும் எத்தனை உரிமைப் போராட்டங்களை நடத்தியபோதும் பெண்விடுதலை பற்றிய தெளிவான கருதுகோள் இன்மை, பெண்ணிடமிருந்து கருக்கொள்ளும் பெண்ணிய சிந்தனைகள்கூட அவள் வாழும் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார சூழலின் தாக்கத்திற்குட்பட்டு நிற்றல் போன்றவற்றின் காரணமாக பெண்ணுரிமைப் போராட்டங்கள் ஒருபுறம், உள்ளாடை எரிப்பு, கட்டற்ற பாலுறவு, தன்னினச்சேர்க்கை என்று புதுப்புது வடிவங்களை எடுத்துக் கொண்டிருப்பதையும் மறுபுறம் போராடும் அறிவோ வலுவோ இன்றி பட்டினி, அறியாமைகளை பிரதான பண்பாகக் கொண்ட கூலித்தொழிலாளர் கீழுழைப்பு, கூடிய வேலை நேரம், பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதையுமே காணக்கூடியதாக இருக்கின்றது. பெண்ணுரிமைகள் பற்றிக் குரல் எழும்ப எழும்ப பெண்ணுக்கு எதிரான வன்முறை வடிவங்களும் உச்சநிலையடைகின்றன.
அனைத்துலகப் பெண்கள் தினம் வெறும் அடையாளமாகிப்போய் தசாப்தங்கள் கடந்துவிட்ட ஒருநிலையில் தமிழீழப் பெண்கள் தொடர்பாக ஏற்பட்டுவரும் புதியதோர் மாற்றத்தை உலக சமூகத்திற்கு அறியத்தரவேண்டும் என்ற ஒரு உந்துணர்வு தோன்றுவது தவிர்க்கமுடியாதது.


வேரும் வேரடி மண்ணும்
இந்த மண்ணில் பெண்விடுதலை நோக்கிய பாதையொன்று திட்டமிட்டதொன்றாகச் சீரியதாகத் தெரிகின்றது. 'பொருளுலகத்தை எந்தெந்த வடிவில் சீரமைத்தாலும் ஆண்களின் மனவுலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமில்லை' என்று கூறும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்கும் ஒரு பெண்கள் சமூகத்தின் மத்தியில்தான் இந்த மாற்றம் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.
அடக்குமுறையின் உச்சக்கட்டத்தில் அணிதிரண்டு உரிமைப்போராட்டம் நடத்தும் தொழிலாளி வர்க்கப் பெண்ணோ அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகூடிய சலுகைகளுக்காக கொடியுயர்த்தும் மேல்த்தட்டு வர்க்கப்பெண்ணோ அல்ல தமிழீழப் பெண், 'எத்தனைதான் எண்ணுக்கணக்கற்ற தகுதிகளைப் பெற்றிருக்கும் பெண்ணும் திருமணத்தின் மூலம் ஆணுடன் இணைக்கப்படும்போது அது சமுத்திரத்தில் கலந்த ஆறு போன்றது' எனக்கூறும் மனுநீதி சாத்திரம் இன்றும் ஆழமாய் வேரோடி இருக்கும் சமூகத்தின் வார்ப்பு இவள். கல்விச் சுதந்திரமோ, திறமையின் அடிப்படையில் தொழில் பார்க்கும் சுதந்திரமோ மறுக்கப்படாதபோதும் தகப்பன், சகோதரன், கணவன், பிள்ளை என்று படிநிலையில் தங்கிவாழப் பயிற்றுவிக்கப்பட்டவள். பட்டினி கிடந்தாலும் நல்லநாள் பெருநாளில் நாலுபேர் 'நாக்கு வளைக்காம' நல்லதாய் உடுத்துக்கொண்டு நிற்க வேண்டும். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டியாவது நகைநட்டுச் சேர்க்க வேண்டும். குடிகாரனோ கூத்தியர் வீட்டுக்குப் போறவனோ, இருப்பதை வித்துச் சுட்டாவது பிள்ளையைக் கரைசேர்க்க வேண்டும். ஆழமாய்ப் படித்து அதிகமாய் உழைத்தாலும் அடியுதை வாங்கிக்கொண்டு கணவனுடனேயே இருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஆழமாய்ப் புரையோடிப் போயிருக்கும் தமிழீழப் பெண்களில் ஏற்படும் மாற்றம் சாதாரணமாக நோக்கப்படக்கூடியதல்ல. அறியாமையில் உழல்பவளை அறிவுசார் நடவடிக்கையில் மாற்ற முனையலாம். அதிகம் படித்துவிட்டும் தன்னைச்சுற்றி தானே விலங்குகளைப் போட்டுக் கொள்பவளை கருத்தரங்குகளோ கண்டனப் பேரணிகளோ மாற்றுவதென்பது இலேசானதொன்றல்ல, போதனைகள் தமிழீழப் பெண்களிடம் எடுபடுவது குறைவு.


பாதை புதியது
தமிழீழ மண்ணில் மாநாடுகள் கூட்டப்படாமலேயே தமிழீழப் பெண்ணுக்கான விடுதலைப் பாதையை காலத்தின் கட்டாயம் திறந்து வைத்திருக்கின்றது. சொந்த மண்ணில் இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் உள்வாங்கப்பட வேண்டிய தேவையொன்றினூடாகவே பெண்ணைச் சுற்றியுள்ள தளைகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிகின்றது. கண்ணுக்குத் தெரியும் மாற்றங்கள் ஆக்கபூர்வமானதாக, நம்பிக்கையூட்டுவனவாக தோற்றமளிக்கின்றன.
அதிகரித்து வரும் பெண்களின் கல்விநிலை, அழகான படித்த வேலைபார்க்கும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பதனால் அத்தகைய ஆண்களுக்கான தேடல் தன்னிச்சையாகவே விடுபட்டுக் கொண்டு போவது கண்கூடாகத் தெரிகின்றது. காதலித்தலோ, காதலித்து கைவிடப்படுதலோ தனித்து பெண்ணின் குற்றமல்ல என்ற மனோபாவம் ஆண்களிடம் உருவாவதன் காரணமாக திருமணத்திற்கு முந்திய காதல் உறவுகள் பரஸ்பரம் தெளிவு படுத்தப்பட்டு திருமண பந்தத்தில் இணையும் போக்கு மேலோங்கி வருகின்றது. காதலித்து உறவாடிவிட்டு கைகழுவ முனையும் ஆணுக்கு தனது எதிர்கால வாழ்வையும் துச்சமாக மதித்து தண்டனை பெற்றுக்கொடுக்க விளையும் மனப்போக்கும், தனக்கு இழைக்கப்பட்ட பால்சார் கொடுமைகளை சமூக மானத்திற்குப் பயந்து மறைத்து வைக்கும் நிலையில் இருந்து மாறி அதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி குற்றவாளியை நீதியின் முன் நிறுத்தும் தன்மையும் போராடும் சமூகத்தின் புதியதோர் மாற்றமாகவே தெரிகின்றது. பெண்மையின் இலக்கணங்களான இரக்கசுபாவம், சகிப்புத் தன்மை, சமூக உறவு பேணல் என்பன பெண்கள் ஆயுதம் ஏந்துவதால் மாற்றமடைகின்றது என பதறித்துடிக்கும் கொழும்பு வாழ் பெண்ணியவாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் மிகவும் சிறப்புற இயங்குகின்றன. ஆதரவற்ற பெண்களுக்கென பெண்களே முன்னின்று நடத்தும் பெண்கள் நலன் பேணும் அமைப்புக்கள், 'இருப்புக் கொள்ளாமல் வெளிக்கிட்டதுகள்' என்று சமூகத்தால் சாடப்பட்டவர்களே அச்சமூகத்தின் முன் மதிப்புமிக்க போராளிகளாக, போராளி மனைவியராக, போராளித் தாயாராக உலாவரும் போக்கும் இன்று கண்ணுக்குத் தெரியும் மாற்றங்கள். அனைத்துலகுக்கும் மேலாக உடலுறுப்புக்களின் பெரும்பகுதி இயங்காத நிலையிலும்கூட தான் விரும்பியவனை அல்லது விரும்பியவளை மணம் செய்து அவனுக்கு அல்லது அவளுக்கு தானே எல்லாமுமாகி தோள்கொடுக்கும் மாற்றம் என்பது இம்மண்ணுக்கே உரித்தான மானுடத்தின் போராட்ட வழிவந்த புதிய பிரசவங்கள் என்றுதான் கூறவேண்டும்.
தன்னைச்சுற்றி மிகமிக இறுக்கமான வேலிகளைப் போட்டிருந்தவளை சீருடை தரிக்க வைத்து, ஆயுதம் ஏந்தி களத்தில் எதிரியைச் சந்திக்க வைத்து, வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆணுக்குப்பெண் சளைத்தவள் இல்லை என்பதை செயலுருப்படுத்திய தேச விடுதலைப் போராட்டம், பெண்கள் விடுதலையை நோக்கிய தனித்துவமான பாதையைத் திறந்து விட்டிருக்கின்றது. இத்தனித்துவப் போக்கை உலகிற்கு உணர்த்தவென இந்த மண்ணில் கொண்டாடும் மாலதி தினம் தன்னம்பிக்கை மிக்க, தனித்து தீர்மானம் எடுக்கும் ஆற்றல் உள்ள, குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் தற்துணிவுள்ள பெண்ணை உருவாக்கிய தேசவிடுதலைப் போரின் ஒரு குறியீடேயென்றால், இக்குறியீடு இவ வுலகிற்குச் சொல்லுகின்ற, இனிச் சொல்லப்போகின்ற செய்திகள், அனைத்துலகப் பெண்கள் தினம் இவ வுலகிற்கு உணர்த்தும் செய்திகளைவிடக் காத்திரம் மிக்கதாக முன்னுதாரணம் மிக்கதாக இருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

Keine Kommentare: