Montag, August 11, 2003

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்.....2 கு.தீபா

குற்றமிழைத்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என உணராது, குசுகுசுப்பதும், கேலி பேசுவதுமாய் பாதிக்கப்பட்டவரை நடைபிணங்களாக்கும் எமது பெண்கள் மாறுவது எப்போது?
தனிவழியே, தன்னையே துணை கொண்டு பெண்ணொருத்தி நடமாடும் காலமதை உருவாக்கும் சக்திகளாக பெண்கள் மாற வேண்டும்.
சீ தைகளாகவும், நளாயினிகளாகவும் பெண்களை உருவகப்படுத்தும் காலங்கள் எப்பொழுதோ சென்றொழிந்துதான்விட்டன. இன்றைய பெண்கள் விண்ணிலும், கடலிலும் தரையிலும் விரியும் பல கள முனைகளில் தங்களை நிலைநாட்டும் புதுவேகம் கொண்டு புறப்பட்டுவிட்டார்கள்.
எனினும் ஆங்காங்கே இலைமறைகாயாக இன்னும் தங்கள் மென்மையையும், பெண்மையையும் நிரூபிக்கும் சீதைகள் பலர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
தன்னை இன்னொரு பெண்ணிடமும், ஆணிடமும் சமூகத்திடமும் குற்றமற்றவளென நிரூபிக்கவேண்டி தற்கொலைக்கு முயற்சிப்பதும், அதற்கான உள உரன் அற்றவர்கள் நடைப் பிணங்களாக மாறுவதுமான நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். அதற்கான முதற்படி, சிந்தனையில் எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றங்களே.
சிறந்ததொரு குடும்பத்தின், சமூகத்தின் ஆதாரம் பெண்ணே. அப்பெண் 'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்' கொண்டவளாக உருவாக வேண்டும், உருவாக்கவேண்டும்.


அந்த மருத்துவ விடுதி வராந்தாவில் நுழையும் போதே வேதனை மிகுந்த அரற்றலொன்று காதில் விழுந்தது. கண்களால் அரற்றல் வரும் திசையைத் துழாவியபடியே விடுதியினுள் நுழைந்தேன். உடல் முழுவதும் திட்டுத் திட்டான எரிகாயங்களுடன் முனகியவாறு இருந்த அப்பெண்ணின் தோற்றம் வெகுவாய் என் மனதை அதிரவைக்கத் திகைத்துப் போய் நின்ற என்னை, எனது தோழியின் கரங்கள் உலுக்கி நடப்புக்குக் கொண்டு வந்தன. 'என்ன! என்னைக் காண வந்திட்டு இதிலை திகைச்சுப் போய் நிற்கிறீர்?' மருத்துவமாதுவாகப் பணிபுரியும் என் தோழி என் மனநிலையைப் புரிந்துகொண்டவரை ஆதரவாக என்னை அழைத்துச் சென்றாள்.
'என்னப்பா? என்ன நடந்தது இந்தப் பிள்ளைக்கு?'
'மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைச்சவவாம்?'
'தனக்குத்தானேயோ?'
'ஓமோம்'
'ஏன்? ஏன் அப்பிடிச் செய்தவா?' பதைபதைத்த மனதுடன் கேட்டேன்.
'ஒரு பொடியனை விரும்பிக் கல்யாணம் செய்தவவாம், கொஞ்ச நாளிலையே அவன் சீதனம் கேட்டு பிள்ளைக்கு அடியாம். அதோடை ஒரே சந்தேகமாம். ஒருத்தரோடையும் கதைக்கப் பேசக் கூடாது, இந்தச் சம்பவம் நடந்த அன்றும் சீதனம் கொண்டுவா என்று அடிச்சுப்போட்டு, அவனோட என்ன கதை என்று யாரோ தெரிஞ்ச ஆளோடை கதைச்சதுக்கு அடிச்சவனாம். பிள்ளை உடனை ஓடிப்போய் 'நான் பத்தினியடா, நான் பத்தினிதாண்டா' என்று சொல்லிக்கொண்டு நெருப்புப் பத்த வைச்சிட்டுது. அவன் நல்லா எரியுமட்டும் பார்த்துக்கொண்டு நின்றிட்டு. பிள்ளையின்ரை அலறலுக்குச் சனம் ஓடிவர ஓடிப்போனவன்தான் ஆள் திரும்பி வரேல்லை. சனம்தான் கொண்டு வந்து சேர்த்தது. பாவம் பிள்ளைக்குப் பத்தொன்பது வயதுதான். மனதில் ஓடிய காட்சிகளை தோற்றுவித்த வேதனையையே என்னால் தாங்க முடியாதபோது இப்பெண் எவ வாறு அதைத் தாங்கியிருப்பாள்.
ஆறேழு மாதங்கள் வைத்தியசாலைப் படுக்கையோடு படுக்கையாக அழுந்தியபோது, மனதிலும் உடம்பிலும் ஏற்பட்ட வடுக்கள் காலம் முழுவதும் அவள் சீதையாகித் தீக்குளித்ததற்குச் சான்றாய்லு}
கொடுமையான சாவைத் தாங்குவதற்கு மனதில் ஏற்பட்ட உரம், ஏன் வாழ்வதற்கு ஏற்படவில்லை? தீக்குளித்துத் தன்னை நிரூபிக்கத் துணிந்த பெண்ணால் ஏன் வாழ்ந்து நிரூபிக்க முடியவில்லை.
ஆணிடம் வதைபட்டுத் தன்னை வாழவைப்பதற்காக அவனுக்குப் பணம் கொடுத்து, அவனின் சந்தேகத்துக்குள்ளாகி, அவனிடம் தன்னைத் தனது கற்பை நிரூபித்து, வாழ்க்கையின் நியமங்கள் இவை தானென்று அப்பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? காவியங்களும், காப்பியங்களும் உருவாக்கிய பெண்மையின் வரைவிலக்கணங்களை மாற்றி, வாழ்க்கை நீ வாழ்ந்து காட்டுவதற்காகவே என்ற எண்ணப்போக்கை இப்பெண்ணின் மனதில் ஏற்படுத்தப் போவது யார்?
நான் காத்திருக்கிறேன், தன்னைத் தன் சூழ்நிலையை அப்பெண் உணர்ந்துகொள்ளும் நாளிற்காக.

உருவமும் முகத்தில் தாழ்ந்த புன்னகையும் அப்பெண்ணின் மேல் இயல்பான விருப்பையேற்படுத்தின. சிரித்த முகத்துடன் என்னை வரவேற்ற அப்பெண்ணின் புன்னகை தனது எட்டு வயது மகனைக் கண்டதும் திடீரென மறைந்தது. மகன் அவனது கடந்த காலத்தின் சின்னமாய் இருந்ததுதான் அவனது புன்னகை மறையக் காரணமாயிருக்கலாம்.
தனது கடந்தகால வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்த அப்பெண்ணின் அப்பாவித் தனமான பேச்சு என் மனதைச் சுட்டது. ஏனெனில் அவளுக்கு அநீதி இழைத்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம்.
'ஒன்பது வருசத்திற்கு முதல் அவர் எங்கடை பக்கத்து வீட்டிலைதான் இருந்தவர். அப்பதான் நாங்கள் ஒராளை ஒராள் விரும்பினம். அயல்லை எல்லோருக்கும் தெரியும். அதாலை அவர் கட்டாயம் கல்யாணம் செய்வார் என நினைச்சனான்' ஆனால் பிள்ளை வந்தாப்பிறகு அவர் அது தன்ரை பிள்ளை இல்லை, தனக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லை என்று சொல்லிப்போட்டாருங்கோ'
'அப்ப அயலுக்கையெல்லாம் தெரியுமென்று சொன்னீங்கள். அவை ஒருதரும் கல்யாணம் செய்துவைக்க முயற்சி எடுக்கேல்லையோ?'
'இல்லை எல்லோரும் என்னைத்தான் பேசிச்சினம். அவற்றை வீட்டுக்காரர் அவரை வேறையாருக்கோ அவசரமா கல்யாணம் செய்து வைச்சிட்டினம்'
'அப்ப நீங்கள் ஏனக்கா பேசாம இருந்தனீங்கள்? உங்கடை உரிமையை நீங்களெல்லோ சண்டை போட்டுப் பெற்றிருக்கவேணும்'
'நானப்ப சனத்தின்ரை பேச்சுக்குப் பயந்து வீட்டை விட்டே வெளியிலை வரவில்லை. வீட்டுக்காரரும் எனக்கு ஒரே பேச்சு'
'அப்ப மகனுக்கு அப்பாவைத் தெரியுமே'
'ஓ! ஒழுங்கையாலை போகேக்கை காட்டினனான்'
என்ன கொடுமை தனது தந்தையை மகன் தெருவில் கண்டு அறிந்துகொள்ளும் நிலை. மனிதர்களால் கைவிடப்பட்ட பெண்ணை இயற்கையும் தனது பங்கிற்குக் கொடுமைப்படுத்தியது. மார்பகங்களில் கட்டியேற்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருக்கும் அப்பெண்ணிற்கு வாழ்க்கை பெரும் சுமையாய்.
தெரு வழியே தலை நிமிர்ந்து குற்றம் புரிந்த அம்மனிதன் சென்று கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணோ வீட்டிற்குள் முடங்கிப் போய்லு}.
அப்பெண்ணின் குழந்தைக்கு இவனே தந்தையென்று அறிந்திருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்து நின்று பெண்ணையே குற்றவாளியாக்கும் சமூகம்லு}.
அப்பெண்ணினது முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சோகம். அப்பையனது கண்களில் தென்பட்ட ஏக்கம். இவையிரண்டும் நிரந்தரமாய் தீர்க்க முடியாமல்லு}.


பரிசோதனைக்காக கட்டிலில் ஏறிப்படுத்த அப்பெண்ணிற்கு வயது 16 தான் இருக்கும். கண்களில் இருந்த மிரட்சி அவனது குழந்தைத்தனத்திற்கு இன்னும் சான்றாய்லு} பல முகங்கள் ஆளையாள் பார்த்தன, குசுகுசுத்தன. ஓ! இந்தப் பெண்ணிற்குப் பின்னால் ஏதோ கதை உள்ளது போலுள்ளது என எண்ணிக்கொண்டேன்.
யாரையும் ஏறெடுத்துப்பார்க்காமல் குனிந்த தலையுடன் இருந்த பெண் என்னுடன் பேசத் தொடங்கியதைக் கண்ட மற்றவர்களின் வியப்பு அப்பெண் உறவுகள் நட்புகளில் இருந்து வெகு தூரம் தனித்துவிட்டாள் என விளக்கியது.
முகத்தின் குழந்தைத் தனத்தைப் பொய்ப்பிப்பதாய் வயிறு இருந்தது. ஏழுமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண், இதுவரை சிகிச்சை நிலையத்திற்கே வரவில்லை என மருத்துவமாது குறைகூறினார்.
'ஏனம்மா வரேல்லை?' என்ற என் கேள்விக்கு கலங்கிய கண்களுடன் விடை பகர்ந்தாள் அப்பெண்.
'நான் புதுக்குடியிருப்புக்கு மாமி வீட்டை போட்டு வந்துகொண்டிருந்தனான். காட்டுப் பாதையாலை வரேக்கை யாரோ ஒருத்தன் வந்து என்னைப் பிடிச்சு காட்டுக்கை இழுத்துக்கொண்டு போய் ஏதோ செய்து போட்டான்' கண்களில் இருந்து கண்ணீர் விழ அவள் கூறிய 'ஏதோ' அவளின் குழந்தைத்தனம், அறியாமையை இனங்காட்ட அந்த 'யாரோ ஒருத்தனை' எவ வாறு இனங்காண்பது எனத் திகைத்தேன்.
அந்த 'ஏதோ' வைத்திருக்கும் அறிவும் வல்லமையும் அப்பெண்ணிற்கு இல்லாமல் போனமையும், அதனை அப்பெண்ணிற்கு அளிக்க மறுத்த குடும்பமும் சமூகமுமே இப்பெண்ணின் நிலைக்கு காரணகர்த்தாக்கள் என்ற உணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் கடமை எங்கள் முன்னேலு}.
குற்றமிழைத்த சமூகத்தில் தாமும் ஒரு அங்கம் என உணராது குசுகுசுப்பதும், கேலி பேசுவதுமாய் பாதிக்கப்பட்டவரை நடைப் பிணங்களாக்கும் எமது பெண்கள் மாறுவது எப்போது?
தனிவழியே, தன்னையே துணை கொண்டு பெண்ணொருத்தி நடமாடும் காலமதை உருவாக்கும் சக்திகளாக பெண்கள் மாற வேண்டும்.

Keine Kommentare: