Sonntag, Februar 22, 2004

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...

கலாநிதி சந்திரலேகா வாமதேவா

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான கோட்பாடல்ல. அது ஆண்களுக்குச் சமமாகச் சகல துறைகளiலும் சுதந்திரமாக பெண்கள் இயங்குவதை நோக்கமாகக் கொண்டது. அம்மாச்சி என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமயி அம்மையார் பெண்கள் பற்றி வழங்கிய கருத்துக்களில் சிலவற்றை இங்கு தருகிறேன். அமிர்தானந்தமயி அம்மா சில இடங்களில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகளால் அவர்களை சற்று கடுமையாகக் கூறுகிறார். ஆயினும் சுதந்திரம் என்பதைப் பெண்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதையும் அவர் எடுத்துக் கூறத் தயங்கவில்லை. அவரது கருத்துக்களுடன் இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்

உலக அமைதிக்காக 2002 அக்டோபர் 6-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை ஆன்மீக பெண் தலைவர்களின் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் நூற்றி இருபத்தைந்து நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான சமாதானத்துக்குரிய 'காந்தி கிங்' விருது மாதா அமிர்தானந்தமயிக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் 'பெண்ணே உன்னால் முடியும்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். விகடன் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து இதனை உங்களுக்குத் தருகிறேன்.

உறங்கிக் கொண்டிருக்கும் பெண் சக்தி விழித்தெழ வேண்டும். இந்தக் காலகட்டத்தின் மிகவும் முக்கிய மான தேவைகளில் இது ஒன்றாகும். மதமும், ஆசாரங்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு, குறுகிய மனப்பான்மையால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள் என்ற நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாடுகளில் உள்ள பெண்கள், புதுமையான சிந்தனைகளைப் பெற வேண்டும். கல்வியறிவின் மூலமும், உலகியல் ரீதியான வளர்ச்சியின் மூலமும் பெண்ணும், அவளைச் சுற்றியுள்ள சமூகமும் விழிப்படையும், பண்பாடு வளரும் என்று நாம் கருதினோம். ஆனால், இந்த நம்பிக்கை தவறானது என்பதைக் காலம் தெளிவாக்கியுள்ளது.

பெண்ணை விழிப்புறச் செய்வது யார்? அவள் விழிப்படையத் தடையாக நிற்பது எது? உண்மையில் பெண்ணையும், அவளது பிறவிக் குணமான தாய்மை உணர்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. பெண்ணைப் பெண்ணே விழிப்புறச் செய்யவேண்டும். அதற்குத் தடையாக நிற்பது அவளுடைய மனமாகும்.

கடந்தகால சமூகம் படைத்த சட்ட திட்டங்களும், குருட்டு நம்பிக்கைகளும் இன்றும் பெண்ணுக்கு எதிராக நிலை பெற்றுள்ளன. சுரண்டுவதற்கும், அடக்கி ஆள்வதற்கும் ஆண்கள் உருவாக்கிய காட்டு மிராண்டித்தனமான சம்பிரதாயங்களும் தொடர்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து உருவாக்கிய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கிடக்கிறது பெண்ணின் மனம். அவளுடைய மனமே அவளை வசியம் செய்து வைத்திருக்கிறது. இந்த வளையத்திலிருந்து வெளிவர அவள் தனக்குத்தானே உதவ வேண்டும்.

பெரிய மரங்களைக்கூட வேரோடு பெயர்த்து எடுக்கும் சக்தியுள்ள யானையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். குட்டியாக இருக்கும்போது மிகவும் பலமுள்ள வடம் அல்லது சங்கிலியால் மரத்தில் கட்டி வைப்பார்கள். வடத்தை அறுத்துக் கொண்டோ, மரத்தை வேரோடு சாய்த்தோ கட்டிலிருந்து விடுபடும் சக்தி குட்டியானைக்கு இல்லை. காட்டில் சுதந்திரமாகத் திரிந்து பழகிய குட்டியானை, கட்டிலிருந்து விடுபட தன்னால் இயன்றவரை முயற்சி செய்யும். கட்டிலிருந்து விடுபடத் தேவையான அளவு பலம் தனக்கில்லை என்று அறியும்போது, அது தனது முயற்சிகளை எல்லாம் கைவிட்டு விடும். அவ்வாறு பழகிவிட்ட குட்டி யானை வளர்ந்து பெரியதாகும்போது, அதை சிறிய மரத்தில், அதிக வலுவில்லாத கயிற்றினால் கூடக் கட்டி வைப்பார்கள். அந்த யானை நினைத்தால் மிக எளிதில் மரத்தை வேரோடு சாய்த்து விட்டோ, கயிற்றை அறுத்துக்கொண்டோ கட்டிலிருந்து விடுபட முடியும். ஆனால் குட்டியாக இருந்தபோது அதற்கு ஏற்பட்ட பழைய அனுபவமானது, அதன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மனதில் ஏற்பட்டுவிட்ட முன்பதிவால், அது விடுதலை பெற முயற்சி செய்வதில்லை. பெண்களின் விஷயத்தில் இதுதான் நடந்து வருகிறது. அவளது ஆத்ம சக்தி விழிப்படைவதை அனுமதிக்க நாம் மறுக்கிறோம். அந்த மகாசக்தியை அணை கட்டித் தடுத்து நிறுத்துகிறது இன்றைய சமூகம்.

எச்செயலையும் செய்வதற்கான எல்லையற்ற சக்தி ஆண்-பெண் ஆகிய இருவரிடமும் சமமான அளவில் உள்ளது. சமூகம் பெண்ணின் மீது திணித்துள்ள நியதிகள், நிபந்தனைகள் என்னும் சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியில் வரப் பெண்ணால் முடியும். கடந்தகாலம் பெண்ணின் மனதில் உருவாக்கிய குறைகள் நிறைந்த பதிவுகள் எல்லாம் பெண்ணின் முன்னேற்றத்துக்குத் தடையாக நிற்கின்றன. பெண்ணின் மனதில் பயத்தையும், சந்தேகத்தையும் வளர்க்கும் நிழல்கள் அவை. நிழல் உண்மையானதல்ல. பொய்யாகும்.
ஆண்கள் பொதுவாக உடலின் வலிமையில் நம்பிக்கை உள்ளவர்கள். வெளிப்பார்வையில் பெண்ணைத் தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் காணவும், ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். ஆனால், மனதளவில் அவளை முறையாகப் புரிந்துகொள்ளவோ, புரிந்துகொண்டு அங்கீகரிக்கவோ அவர்களுக்கு இன்றும்கூட கஷ்டமாக இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வைப்பதில் பயனேதுமில்லை.

இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது.. ஒரு பெண்மணி, பலனை எதிர்பாராது பிறருக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையெனக் கருதி, அதில் மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். அந்நாட்டின் மதத்தலைவர்கள் அவரை ஒரு அர்ச்சகராக (புரோகிதையாக) நியமித்தார்கள். அந்நாட்டில் ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுவே முதல் முறையாகும். அவரைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்ததை மற்ற அர்ச்சகர்கள் சிறிதும் விரும்பவில்லை. அதுமட்டுமல்ல. அவர்களுக்கு அளவற்ற கோபமும் வந்தது. ஆனால், பணிவும், நிஷ்டையும், ஆன்மீகிக அறிவும் நிறைந்த அந்தப் பெண் அர்ச்சகர் மிக விரைவில் பிரசித்தி அடைந்தார். எல்லோரும் அவரைப் புகழ ஆரம்பித்தனர்.
இதனால் அர்ச்சகர்களின் பொறாமை ஆதரித்தது. ஒருமுறை, அருகிலிருந்த தீவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அர்ச்சககள் அனைவரும் புறப்பட்டனர். வேண்டுமென்றே அவர்கள் பெண் அர்ச்சகரை அழைக்கவில்லை. ஆனால், படகில் ஏறியபோது அந்தப் பெண்மணி படகில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர். ''இங்கேயும் இது வந்துவிட்டதா?'' என்று அவர்கள் முணுமுணுத்தனர். தீவை அடைவதற்கு இரண்டு மூன்று மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். சுமார் ஒருமணி நேரம் கழிந்தபோது படகு நின்றது. படகின் சொந்தக்காரன் பரிதவிப்புடன், ''நாம் நன்றாக மாட்டிக்கொண்டோம். டீசல் தீர்ந்துவிட்டது. போதுமான அளவு டீசல் எடுத்துவர நான் மறந்து விட்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வேறு படகு எதுவும் வருவதாகவும் தெரியவில்லை'' என்றான். செய்வதறியாமல அனைவரும் திகைத்தனர். அப்போது அந்தப் பெண் அர்ச்சகர் முன்வந்து, ''சகோதரர்களே, கவலை வேண்டாம். நான் சென்று டீசலுடன் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் படகிலிருந்து இறங்கி, கரையை நோக்கி நீரின்மீது நடக்க ஆரம்பித்தார். இந்தக் காட்சியைக் கண்ட அர்ச்சகர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். சட்டென சுதாரித்துக்கொண்ட அவர்கள் பரிகாசம் நிறைந்த குரலில், ''பார்த்தீர்களா, அவளுக்கு நீச்சல் கூடத் தெரியவில்லை'' என்றனர்.
இதுவே பெரும்பாலான ஆண்களின் மனோபாவம். பெண்ணின் சாதனைகளை அலட்சியமாகக் காண்பதும், அவற்றைக் குறைகூறுவதும் ஆணின் இயல்பாகும்.


ஆணின் கையில் சிக்கியுள்ள வெறும் அலங்காரப் பொருளல்ல பெண். ஆண், ஒரு பூந்தொட்டியில் வளர்க்கும் செடியைப் போல் பெண்ணை ஆக்கி வைத்திருக்கிறான். ஆணுக்கு உணவு தயாரிப்பதற்கு மட்டும் பிறந்தவளல்ல பெண். பெண்ணை முன்னேற அனுமதிக்காமல், அவளைத் தனது விருப்பத்துக்கு ஏற்ப இயக்ககூடிய டேப்ரெக்கார்டரைப் போல் ஆக்கவே ஆண் முயற்சி செய்கிறான்.

உண்மையில் எல்லா ஆண்களும் பெண்ணின் ஒரு பாகமே. எல்லாக் குழந்தைகளும் தாயாரின் உடலின் ஒரு பாகமாகவே கர்ப்பப்பையில் வளர்கின்றன. ஒரு குழந்தைக்குப் பிறப்பளிப்பதைப் பொருத்தவரை, அவனுக்கு ஒரு நிமிட வேலை. அவ்வளவுதான். அத்துடன் ஆணின் பங்கு முடிந்துவிடுகிறது. ஆனால், பெண் அதனை ஏற்று, அதனைத் தனது உடலின் அம்சமாக மாற்றி, ஜீவனாக உருவாக்குகிறாள். அது வளர்வதற்குத் தேவையான சூழ்நிலையை தனக்குள் அவள் ஏற்படுத்திக் கொடுக்கிறாள். அதன்பிறகு, அதற்குப் பிறப்பளித்து, கவனத்துடன் வளர்க்கவும் செய்கிறாள். பெண் தாயாவாள்.

உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பெண்களாகும். ஆகவே, பெண்ணுக்கு உரிய இடமும், சுதந்திரமும் அளிக்கவில்லை எனில், அது உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல.

ஆரம்பம் நன்றாக இருந்தால் இடைப்பகுதியும் முடிவும் சரியாக இருக்கும். தவறான அடிப்படையில் ஆரம்பிக்கும் காரணத்தால்தான் பெண் பல நலன்களை இழக்க நேரிடுகிறது. உதாரணமாக, ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியே. அதற்கு ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இன்று இந்த ஆரம்பம் தவறாகிவிட்டது. அதைக் குறித்து உருவான கருத்தும் தவறாகிவிட்டது. ஆரம்பத்தை விட்டுவிட்டு, முடிவை நோக்கி அவள் ஒரேடியாகத் தாவ முனைகிறாள்.
வாழ்வின் அஸ்திவாரம் எது? பெண்ணைப் பெண்ணாக்குவது எது? அவளுடைய அடிப்படைக் குணங்களான தாய்மை, அன்பு, கருணை, பொறுமை போன்றவையாகும். பெண்ணின் அடிப்படை தத்துவம் தாய்மையாகும்.

தாய் ஆவதும், மனைவி ஆவதும், கணவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நண்பனாவதும் அவளுக்கு எளிதான செயலாகும். இல்லற வாழ்வையும், உத்யோக வாழ்வையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல் இருக்க அவளால் முடியும். அலுவலகத்தையும், பதவியையும் வீட்டிற்குக் கொண்டு வருவதும், அதன் விளைவான உணர்ச்சிகளை மனைவியிடமும், குழந்தைகளிடமும் வெளிப்படுத்துவதும் பெரும்பாலான ஆண்களின் இயல்பாகும்.

சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் திறமையைப் பெண்ணுக்கு அளிப்பது அவளுடைய தாய்மையின் சக்தியாகும். அந்தப் பண்பில் அவள் எந்த அளவுக்கு மனம் ஒன்றுபடுகிறாளோ, அந்த அளவிற்கு அவளுக்குள்ளே ஆற்றல் பெருகும். அவளது குரலை உலகம் உற்றுக் கேட்க ஆரம்பிக்கிறது.

இன்றைய உலகில் போலித்தன்மை ஒரு தொத்துவியாதி போல் பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பெண்மையும், தாய்மையும் கலப்படத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஆணின் முழு மனதுடன் கூடிய ஒத்துழைப்பு அவளுக்குத் தேவை.
ஆணும், பெண்ணும் பரஸ்பரம் உதவினால் இன்று உலகில் காணும் அமைதியின்மையும், சமாதான மின்மையும், போராட்டமும், யுத்தமும் பெருமளவில் குறையும். இவ்வாறு உதவும் மனநிலை இன்று தாறுமாறாகிக் கிடக்கிறது. இதை நாம் மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் பிரபஞ்சத்தின் சமநிலையைச் சீராக்க முடியும்.

மனிதப் பண்பாடு உருவாகி, ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து விட்டன. ஆயினும், நாம் இன்றும் பெண்ணுக்கு இரண்டாம் இடத்தையே அளிக்கிறோம். ஆண் உருவாக்கிய கட்டுப்பாடுகள் எனும் வேலிக்குள்ளே பெண்களின் திறமை மொட்டுகள் விரியாமல் வாடிப்போகின்றன.
சமூகத்தின் சட்ட திட்டங்களும், மத ஆசாரங்களும் அவை தோன்றிய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே உருவாயின. பெண்ணின் வளர்ச்சிக்காக அன்று உருவாக்கப்பட்ட அந்த சட்ட திட்டங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டன. அதுமட்டுமல்லாமல், அவை பெண்ணின் இன்றைய வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கின்றன.

ஆண், அவனுக்காகப் படைத்த ஒரு உலகத்தில்தான் இன்று பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த உலகத்திலிருந்து வெளியில் வந்து, அவள் தனக்குரிய தனித்தன்மையை நிறுவ வேண்டும். அதேசமயம், பெண் விடுதலை என்பது, அவள் மனம்போன போக்கில் வாழ்வதற்கும், நடந்துகொள்வதற்கும் உரிய சுதந்திரமல்ல. பெண்ணின் உயர்வு அவளது மனதிற்குள்ளிருந்தே ஆரம்பமாக வேண்டும்.

ஆண்களைப் போல் நடந்துகொள்ள முனைவதால் இது கிடைக்காது. பெண்ணிடம் சக்தி விழிப்புற வேண்டுமெனில், முதலில் தனது பலவீனங்களை அவள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
மாறாக, தனது சுதந்திரத்திற்காகப் போராடும் பெண், தன்னிடமுள்ள பெண்மையையே இழக்கின்ற குறைபாட்டை இன்று பல இடங்களில் காண்கிறோம். இது உண்மையான பெண் விடுதலை ஆகாது; அது, பெண்ணினத்திற்கும், சமூகத்திற்கும் தோல்வியாகவே மாறும். பெண்ணும் ஆணைப்போல் ஆகிவிட்டால், உலகிலுள்ள பிரச்னைகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ஒருவிதத்தில், பெண்ணின் உலகை மிகக் குறுகியதாக்கியவள் பெண்ணே ஆவாள். உடல் அலங்காரத்திற்கும், புற அழகிற்கும் அளவற்ற முக்கியத்துவம் அளிக்கும் போது, ஆண் உருவாக்கிய கூட்டிற்குள் அவள் தானே சிக்கிக் கொள்கிறாள். சமூகத்திலிருந்து எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூகத்திற்கு எதைக் கொடுக்க முடியும் என்று பெண் சிந்திக்க வேண்டும். இந்த மனோபாவம் ஏற்பட்டால் அவளால் நிச்சயமாக முன்னேற முடியும்.
தாய்மை என்பது குழந்தைகளை ஈன்ற பெண்களிடம் மட்டும் காணப்படும் பண்பல்ல. எல்லாப் பெண்களிடமும், எல்லா ஆண்களிடமும் இயல்பாகக் காணப்படும் உள்ளார்ந்த பண்பாகும். அது மனதின் ஒரு பேருணர்வாகும் - அது அன்பாகும். அன்பு நம்முடைய சுவாசத்திற்கு நிகரானது. ''நான் என் உற்றார், உறவினர் முன்னால் மட்டுமே சுவாசிப்பேன். வேறு யார் முன்னாலும் சுவாசிக்க மாட்டேன்'' என்று யாரும் சொல்வதில்லையே? அன்பு அல்லது தாய்மை என்பது அதுபோன்றதுதான். அதற்கு எல்லைகள் இல்லை. பேத உணர்வில்லை.
இனி வருங்காலம் பெண்களின் பொற்காலமாக ஆக வேண்டும். பெண்மையின் நற்பண்புகளுக்கும், தாய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஒரு உலகை உருவாக்கும் முயற்சி வெற்றியடையும். இது நம்மால் இயலாத காரியமல்ல.

கலாநிதி சந்திரலேகா வாமதேவா
நன்றி - உயிர்ப்பு

Mittwoch, Februar 18, 2004

பெண் கல்வி

கந்தர்

அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இதற்காக பல தந்திரங்களைக் கையாண்டுள்ளது. பால்ய விவாகம் கற்புக் கோட்பாடு தாய்மையைக் கொண்டாடுவது குழந்தைபேறு என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்தது. இது பெண்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. அவர்களுக்கு சுமையாக மாறியது.

குறிப்பாக பால்ய விவாகம் அறிவைத் தரும் கல்வியைப் பெறுவதிலிருந்து பெண்ணைப் பெரிதும் விலக்கி வைத்துவிட்டது. வளர்ந்த இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் புத்தமதத்திலும் சமணசமயத்திலும் சந்நியாசிகளாகச் சேர்வதைத் தடுப்பதாகத்தான் இந்தியச் சமூகத்தில் பால்ய விவாகம் கொண்டுவரப்பட்டது என எழுதுகிறார் பி. குப்புசாமி (Social change in India)

இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கிக் கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையே அழகு என்றும் புனைந்துவிட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்துவிட்டது.

இத்தகைய இந்தியப் பெண்நிலைமை இந்தியாவை ஆண்ட ஐரோப்பியரின் குறிப்பாக ஆங்கிலேயரின் 'கல்வி கொள்கையினால்' பெரிதும் மாறத் தொடங்கின.

ஆங்கிலேயர் கல்வியை ஜனநாயகப்படுத்தினர். ஜாதி மதம், பால் வர்க்கம், இனம் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என அறிவித்தனர். அதுவும் ஒரே மாதிரியான கல்வி என்றனர். இந்த ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களும் சிந்தனைப் புரட்சிகளும் ஏற்பட வழிகோலிற்று.

வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சமய போதகர்கள் மிஷனரிகள் பல்வேறு சீர்த்திருத்த சமூக பணிகளை மேற்கொண்டன. அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.

பெண்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூகச் சீர்த்திருத்தவாதிகளும் அவர்களோடு இணைந்து பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்விக்கூடங்கள் திறந்துவிடப்பட்டன.

ஆங்கில ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியவர்கள் குடியேற்ற நிர்வாகிகளும் சமயக் குழுவினர்களுமாவர். ஆயினும் கல்விமுறை எவ்வாறு வளர்ச்சியுற வேண்டும் என்பது பற்றி அவர்களிடத்து ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

கிறிஸ்தவ சமய போதகர்கள் மாநிலவாரியாகப் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களை நிறுவத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தரங்கைவாசத்தில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை தொடங்கினார்கள்.

சென்னையில் 1715ல் முதல் ஆங்கிலோ- இந்தியப் பெண்கள் பள்ளியான 'புனித மரியாள் ஷேரிட்டி பள்ளி' தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் புரட்டஸ்டாண்ட் மதப்பிரிவைச் சார்ந்த ஏழை மாணவ மாணவிகள் சேர்ந்து பயில ஆரம்பித்தனர். அவர்களில் பதினெட்டு பேர் ஆண்கள். பன்னிரண்டு பேர் பெண்கள். 1821 ம் ஆண்டு இப்பள்ளிக் குழுவைச் சார்ந்த பள்ளிகளில் 654 பெண்களும் 4290 ஆண்களும் கல்வி பயின்றார்கள். அவர்கள் யாவரும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலியில் ஜேம்ஸ் ஹக் என்பவர் 1816ம் ஆண்டில் பன்னிரண்டு பள்ளிகளை நிறுவினார். அவற்றுள் மூன்று பெண்களுக்காக தொடங்கப்பட்டது. நாசரேத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான பள்ளியே சென்னை மாகாண அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகும்.

1823ம் ஆண்டு நாகர்கோயிலில் தொடங்கப்பட்ட பள்ளியில் 1827ம் ஆண்டு ஐம்பது மாணவிகள் பயின்றனர். 1845 ஆம் ஆண்டு முதன்முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இப்பள்ளியே பின்னர் பெண்கள் பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாகத் திகழ்ந்தது.

1854 இல் சென்னை மாநிலத்தில் 256 பெண்களுக்கான பள்ளிக்கூடங்களும் 7878 மாணவிகளும் இருந்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு சடங்கான பின்பு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1891-92 இல் 3 லட்சம் பள்ளி சிறுமிகளில் 100க்கு இரண்டு பேர் மட்டுமே சடங்கான பின்பும் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கல்வியும் எப்படி நல்ல மாணவியாக, நல்ல தாயாக குடும்பத்தை சுத்தமாகப் பேணுபவளாக வாழ்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுத்தது.

கல்விச் சீர்த்திருத்தங்கள் செய்வதற்கான நோக்கத்தோடு அரசு கல்வி தொடர்பான பல விபரங்களை சேகரிக்கத் தொடங்கின. சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். தாமஸ் மன்றோ அவ்வாறு பல தகவல்களை சேகரித்து 1826 ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்படி மொத்த மக்கள் தொகையான 1,34,76,923 பேரில் 1,84,110 ஆண்களும், 4,540 பெண்களும் கல்வி பயின்று வந்தனர்.

அதே காலத்தில் வங்காளத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி அம்மாகாணத்தில் பெண்கல்வி சிறிய அளவில்கூட இடம் பெற்றிருக்கவில்லை என்று தெரிய வருகிறது.

1854ம் ஆண்டு சார்லஸ் வுட் என்பவர் இந்திய கல்விநிலை தொடர்பான அறிக்கை ஒன்றினை அரசுக்கு சமர்ப்பித்தார். அதுவே சார்லஸ் வுட் டெஸ் பாட்ச் என்னும் பெயரில் பிரசித்தம் பெற்றது. இவ்வறிக்கை ஆண் கல்வியைக் காட்டிலும் பெண் கல்வியின் வாயிலாகச் சமுதாயத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை அரசுக்கு உணர்த்தியதோடு பெண்கல்விக்குப் போதிய ஊக்கமளிக்கவும் வேண்டியிருந்தது. இவ்வறிக்கையின் அடிப்படையில் மகளிர் பள்ளிக்கூடங்கள் பலவற்றுக்கும் அரசுநிதி உதவியளித்தது. அதன் வாயிலாக பெண்களின் கல்வி மேம்பாட்டுக்கு சிறந்ததொரு அடித்தளம் அமைக்கப்பட்டது. தன்னார்வ குழுக்களும் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களுக்கும் பல இடங்களில் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவிச் சேவை செய்யலாயினர்.

1882 இல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியக் கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைத் திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்குத் தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக் குழு தெரிவித்துள்ளது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக இக்கல்விக்குழு பின்வரும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

1. பெண் கல்விக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

2. பெண்கள் பள்ளிகள் மற்றும் அநாதை விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவைஅளிக்கும் போது அந்நிறுவனங்களுக்கு சமய வேறுபாடின்றி உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும்.

3. ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

4. தொடக்கப்பள்ளி நிலையிலும் ஆண்களின் கல்விமுறைப் பாடத்திட்டத்தைக் காட்டிலும் பெண்களின் கல்விமுறைப் பாடத்திட்டம் எளிமையாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதாகவும் வேலைவாய்ப்பு அளிப்பதற்குரியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. கல்விக்காகக் கொடுக்கப்படும் உதவித் தொகையை தேர்வுக்குப்பின் கொடுப்பதன் மூலமாக பெண்கள் மேலும் கல்வியைத் தொடர வாய்ப்பாக அமையும். தவிர பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களின் கல்விக்காக தனிநிதி ஒதுக்க வேண்டும்.

6. பெண்கள் பள்ளிகள் தகுந்த இடங்களில் நிறுவப்பட வேண்டும். தாய்மொழி மற்றும் ஆங்கிலம் வாயிலாக கல்வி புகட்டப்பட வேண்டும். விடுதிகளோடு தொடங்கப்படும் பெண்கள் பள்ளிகளுக்கு சிறப்பான முறையில் நிதியுதவி அளிக்கவேண்டும்.

7. இந்தியக் கலாச்சாரச் சூழலில் ஆண்-பெண் இணைந்து கல்வி கற்கும் நிலை சமுதாயத்திற்கு ஏற்புடையதாகாது என்பதால் பால்வாடிகள் தவிர ஏனைய கல்விக்கூடங்களில் கூட்டுக்கல்வி முறைக்கு ஆதரவு மறுக்கப்படுதல் வேண்டும். ஆனால் பெண்கள் பள்ளிகள் அமைக்க முடியாத −டங்களில் மட்டும் கூட்டுக்கல்வி முறை தொடரலாம்.

8. அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்குப் பதிலாக பெண் ஆசிரியர்களையே நியமிக்கப்பட வேண்டும்.

ஹாண்டர் குழு ஆண் பெண் இரு பாலார்க்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. உயர்சாதிப் பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் சனனா (Zenana) முறையையும் பரிந்துரைத்துள்ளது.

1881 ஆம் ஆண்டில் சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்களான 1,57,49,588 பேரில் 39,104 பெண்கள் படித்துக் கொண்டிருந்ததாகவும் 94,571 பெண்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களென்றும் அறியமுடிகிறது.

இந்தியா முழுமையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 2,13,428 பெண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தார்களென்றும் தெரிய வந்தன. இந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருந்த போதிலும் 1878 ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த 78,678 பெண்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் வியத்தகு முன்னேற்றம் என்றே கூறலாம்.

டாக்டர் குக்கான் என்பவர் 1889-90 ஆம் ஆண்டின் கல்வி அறிக்கையில் பெண்களின் ஒட்டுமொத்தக் கல்வியின்மை நிலையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவ முன்வந்தனர்.

இதன்பின்னரே பெண்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனாலும் இந்தியாவின் கல்விமுறை பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமூகப் போக்கை வலியுறுத்திப் போவதாகவே இருந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கல்விக்காக அமைக்கப்பட்ட குழுக்கள் பலவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.

ஆதாரம் - ஆறாம்திணை