Mittwoch, Februar 18, 2004

பெண் கல்வி

கந்தர்

அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இதற்காக பல தந்திரங்களைக் கையாண்டுள்ளது. பால்ய விவாகம் கற்புக் கோட்பாடு தாய்மையைக் கொண்டாடுவது குழந்தைபேறு என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்தது. இது பெண்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. அவர்களுக்கு சுமையாக மாறியது.

குறிப்பாக பால்ய விவாகம் அறிவைத் தரும் கல்வியைப் பெறுவதிலிருந்து பெண்ணைப் பெரிதும் விலக்கி வைத்துவிட்டது. வளர்ந்த இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் புத்தமதத்திலும் சமணசமயத்திலும் சந்நியாசிகளாகச் சேர்வதைத் தடுப்பதாகத்தான் இந்தியச் சமூகத்தில் பால்ய விவாகம் கொண்டுவரப்பட்டது என எழுதுகிறார் பி. குப்புசாமி (Social change in India)

இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கிக் கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையே அழகு என்றும் புனைந்துவிட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்துவிட்டது.

இத்தகைய இந்தியப் பெண்நிலைமை இந்தியாவை ஆண்ட ஐரோப்பியரின் குறிப்பாக ஆங்கிலேயரின் 'கல்வி கொள்கையினால்' பெரிதும் மாறத் தொடங்கின.

ஆங்கிலேயர் கல்வியை ஜனநாயகப்படுத்தினர். ஜாதி மதம், பால் வர்க்கம், இனம் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என அறிவித்தனர். அதுவும் ஒரே மாதிரியான கல்வி என்றனர். இந்த ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களும் சிந்தனைப் புரட்சிகளும் ஏற்பட வழிகோலிற்று.

வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சமய போதகர்கள் மிஷனரிகள் பல்வேறு சீர்த்திருத்த சமூக பணிகளை மேற்கொண்டன. அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.

பெண்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூகச் சீர்த்திருத்தவாதிகளும் அவர்களோடு இணைந்து பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்விக்கூடங்கள் திறந்துவிடப்பட்டன.

ஆங்கில ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியவர்கள் குடியேற்ற நிர்வாகிகளும் சமயக் குழுவினர்களுமாவர். ஆயினும் கல்விமுறை எவ்வாறு வளர்ச்சியுற வேண்டும் என்பது பற்றி அவர்களிடத்து ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

கிறிஸ்தவ சமய போதகர்கள் மாநிலவாரியாகப் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களை நிறுவத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தரங்கைவாசத்தில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை தொடங்கினார்கள்.

சென்னையில் 1715ல் முதல் ஆங்கிலோ- இந்தியப் பெண்கள் பள்ளியான 'புனித மரியாள் ஷேரிட்டி பள்ளி' தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் புரட்டஸ்டாண்ட் மதப்பிரிவைச் சார்ந்த ஏழை மாணவ மாணவிகள் சேர்ந்து பயில ஆரம்பித்தனர். அவர்களில் பதினெட்டு பேர் ஆண்கள். பன்னிரண்டு பேர் பெண்கள். 1821 ம் ஆண்டு இப்பள்ளிக் குழுவைச் சார்ந்த பள்ளிகளில் 654 பெண்களும் 4290 ஆண்களும் கல்வி பயின்றார்கள். அவர்கள் யாவரும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலியில் ஜேம்ஸ் ஹக் என்பவர் 1816ம் ஆண்டில் பன்னிரண்டு பள்ளிகளை நிறுவினார். அவற்றுள் மூன்று பெண்களுக்காக தொடங்கப்பட்டது. நாசரேத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான பள்ளியே சென்னை மாகாண அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகும்.

1823ம் ஆண்டு நாகர்கோயிலில் தொடங்கப்பட்ட பள்ளியில் 1827ம் ஆண்டு ஐம்பது மாணவிகள் பயின்றனர். 1845 ஆம் ஆண்டு முதன்முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இப்பள்ளியே பின்னர் பெண்கள் பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாகத் திகழ்ந்தது.

1854 இல் சென்னை மாநிலத்தில் 256 பெண்களுக்கான பள்ளிக்கூடங்களும் 7878 மாணவிகளும் இருந்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு சடங்கான பின்பு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1891-92 இல் 3 லட்சம் பள்ளி சிறுமிகளில் 100க்கு இரண்டு பேர் மட்டுமே சடங்கான பின்பும் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கல்வியும் எப்படி நல்ல மாணவியாக, நல்ல தாயாக குடும்பத்தை சுத்தமாகப் பேணுபவளாக வாழ்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுத்தது.

கல்விச் சீர்த்திருத்தங்கள் செய்வதற்கான நோக்கத்தோடு அரசு கல்வி தொடர்பான பல விபரங்களை சேகரிக்கத் தொடங்கின. சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். தாமஸ் மன்றோ அவ்வாறு பல தகவல்களை சேகரித்து 1826 ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்படி மொத்த மக்கள் தொகையான 1,34,76,923 பேரில் 1,84,110 ஆண்களும், 4,540 பெண்களும் கல்வி பயின்று வந்தனர்.

அதே காலத்தில் வங்காளத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி அம்மாகாணத்தில் பெண்கல்வி சிறிய அளவில்கூட இடம் பெற்றிருக்கவில்லை என்று தெரிய வருகிறது.

1854ம் ஆண்டு சார்லஸ் வுட் என்பவர் இந்திய கல்விநிலை தொடர்பான அறிக்கை ஒன்றினை அரசுக்கு சமர்ப்பித்தார். அதுவே சார்லஸ் வுட் டெஸ் பாட்ச் என்னும் பெயரில் பிரசித்தம் பெற்றது. இவ்வறிக்கை ஆண் கல்வியைக் காட்டிலும் பெண் கல்வியின் வாயிலாகச் சமுதாயத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை அரசுக்கு உணர்த்தியதோடு பெண்கல்விக்குப் போதிய ஊக்கமளிக்கவும் வேண்டியிருந்தது. இவ்வறிக்கையின் அடிப்படையில் மகளிர் பள்ளிக்கூடங்கள் பலவற்றுக்கும் அரசுநிதி உதவியளித்தது. அதன் வாயிலாக பெண்களின் கல்வி மேம்பாட்டுக்கு சிறந்ததொரு அடித்தளம் அமைக்கப்பட்டது. தன்னார்வ குழுக்களும் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களுக்கும் பல இடங்களில் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவிச் சேவை செய்யலாயினர்.

1882 இல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியக் கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைத் திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்குத் தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக் குழு தெரிவித்துள்ளது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக இக்கல்விக்குழு பின்வரும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

1. பெண் கல்விக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

2. பெண்கள் பள்ளிகள் மற்றும் அநாதை விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவைஅளிக்கும் போது அந்நிறுவனங்களுக்கு சமய வேறுபாடின்றி உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும்.

3. ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

4. தொடக்கப்பள்ளி நிலையிலும் ஆண்களின் கல்விமுறைப் பாடத்திட்டத்தைக் காட்டிலும் பெண்களின் கல்விமுறைப் பாடத்திட்டம் எளிமையாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதாகவும் வேலைவாய்ப்பு அளிப்பதற்குரியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. கல்விக்காகக் கொடுக்கப்படும் உதவித் தொகையை தேர்வுக்குப்பின் கொடுப்பதன் மூலமாக பெண்கள் மேலும் கல்வியைத் தொடர வாய்ப்பாக அமையும். தவிர பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களின் கல்விக்காக தனிநிதி ஒதுக்க வேண்டும்.

6. பெண்கள் பள்ளிகள் தகுந்த இடங்களில் நிறுவப்பட வேண்டும். தாய்மொழி மற்றும் ஆங்கிலம் வாயிலாக கல்வி புகட்டப்பட வேண்டும். விடுதிகளோடு தொடங்கப்படும் பெண்கள் பள்ளிகளுக்கு சிறப்பான முறையில் நிதியுதவி அளிக்கவேண்டும்.

7. இந்தியக் கலாச்சாரச் சூழலில் ஆண்-பெண் இணைந்து கல்வி கற்கும் நிலை சமுதாயத்திற்கு ஏற்புடையதாகாது என்பதால் பால்வாடிகள் தவிர ஏனைய கல்விக்கூடங்களில் கூட்டுக்கல்வி முறைக்கு ஆதரவு மறுக்கப்படுதல் வேண்டும். ஆனால் பெண்கள் பள்ளிகள் அமைக்க முடியாத −டங்களில் மட்டும் கூட்டுக்கல்வி முறை தொடரலாம்.

8. அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்குப் பதிலாக பெண் ஆசிரியர்களையே நியமிக்கப்பட வேண்டும்.

ஹாண்டர் குழு ஆண் பெண் இரு பாலார்க்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. உயர்சாதிப் பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் சனனா (Zenana) முறையையும் பரிந்துரைத்துள்ளது.

1881 ஆம் ஆண்டில் சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்களான 1,57,49,588 பேரில் 39,104 பெண்கள் படித்துக் கொண்டிருந்ததாகவும் 94,571 பெண்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களென்றும் அறியமுடிகிறது.

இந்தியா முழுமையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 2,13,428 பெண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தார்களென்றும் தெரிய வந்தன. இந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருந்த போதிலும் 1878 ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த 78,678 பெண்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் வியத்தகு முன்னேற்றம் என்றே கூறலாம்.

டாக்டர் குக்கான் என்பவர் 1889-90 ஆம் ஆண்டின் கல்வி அறிக்கையில் பெண்களின் ஒட்டுமொத்தக் கல்வியின்மை நிலையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவ முன்வந்தனர்.

இதன்பின்னரே பெண்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனாலும் இந்தியாவின் கல்விமுறை பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமூகப் போக்கை வலியுறுத்திப் போவதாகவே இருந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கல்விக்காக அமைக்கப்பட்ட குழுக்கள் பலவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.

ஆதாரம் - ஆறாம்திணை