Sonntag, März 18, 2007

மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் திகதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் திகதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.

இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!

தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.

1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜேர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.

ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!

Quelle - Thinakural

7 Kommentare:

Santhosh hat gesagt…

நல்ல பயனுள்ள தகவல் சந்திரவதனா மேடம்.

Unknown hat gesagt…

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

தினேஷ் hat gesagt…

மகளிர்க்கான மகத்தான பதிவு...

தினேஷ்

Inilan hat gesagt…

Great Information
-Inilan
http://inilan.blogspot.com/

தமிழ்நதி hat gesagt…

நீங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியிருப்பதுபோல, உழைக்கும் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்களுக்கு இந்தப் பெண்கள் தினம் பற்றி என்ன தெரியும்? அவர்களது மாய்ச்சல் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. சில விடயமறிந்தவர்கள் அந்த ஒருநாள் திடீரென விழித்தெழுந்து ஊர்வலம் போவார்கள். பிறகெல்லாம் வழமைபோல... நல்ல கட்டுரை சந்திரவதனா.

butterfly Surya hat gesagt…

தகவலுக்கு நன்றி.

இதை முகபுத்தகத்தில் பதிகிறேன்.

Muruganandan M.K. hat gesagt…

நல்ல கட்டுரை. பல பயனுள்ள தகவல்கள் நன்றி. Facebook ல் பகிர்ந்து கொள்கிறேன்.