Sonntag, Juni 26, 2005

புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள்

எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.

ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்...? ஏதற்கு...? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.

பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்
ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.

தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.

வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.

பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.
அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?

அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து... அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு... இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா?

வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.

இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.
பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.

இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.

பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.

அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து
"நீ பெண் - அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றோ
"நீ பெண் - அதனால் இப்படித்தான் பேச வேண்டும்" என்றோ அல்லது
"நீ பெண் - அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்" என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.

ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.

ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.

அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.

மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சந்திரவதனா
யேர்மனி
2000

ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் - அக்கினி-கலா (2001)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ்(27.12.2001-2.1.2002)
பிரசுரம் - திண்ணை June24-30,2005

Freitag, Juni 17, 2005

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.

ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.

"என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு...! வேறையென்ன அவவுக்குத் தேவை...?" என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.

அதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது.... என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அமைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.

இரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மௌனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

மூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் "நீ வேலைக்குப்போவதுதான் காரணம்" என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை... இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கிவராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன்.
இவைகளைவிட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர் காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன்
வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவியுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள்.
இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவுமே அமையும்.

அடுத்து, பெற்றோருடன் வாழும் திருமணமாகாத பெண் பிள்ளைகளைப் பார்ப்போமேயானால் அவர்களும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அவர்களுக்கும் எத்தனையோ தடைக்கற்கள். முட்டுக் கட்டைகள். இவைகளைத் தாண்டுவதற்கிடையில் அவர்கள் படும் கஸ்டங்கள், துன்பங்கள். அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

சந்திரவதனா
ஜேர்மனி
1999

ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் (அக்கினி-23.5.2001- கலா)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ் (10-16 ஜனவரி 2002)
பிரசுரம் - திண்ணை (17-23 June 2002)

Mittwoch, Juni 08, 2005

நாளைய பெண்கள் சுயமாக வாழ,

இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.

சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.

35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

கற்காலத்திலிருந்து மனிதன் கணனி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.

இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின் தங்கியுள்ளார்கள். முக்கியமாக ஆசிய நாட்டு ஆண்களும், முஸ்லிம் ஆண்களும் எப்போதும், பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு, பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக நடை பெற்று வரும் இத் திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள்.

இரண்டு வரிக் குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரிலிருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள் வரை பெண்கள் விடயத்தில் ஓர வஞ்சகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக...
புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறன் கேளு கண்ணே....

என்ற பாடலில், புருஷன் வீட்டுக்குப் போகப் போகும் பெண்ணுக்கு எத்தனையோ புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு, பெற்று வளர்த்த பெற்றோர், கூடப் பிறந்த சகோதரர்கள், இன்னும் எத்தனையோ அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி, பூனைக்குட்டி, நாய்க்குட்டி, மரம் செடிகள்... என்று எல்லாவற்றையும் விட்டு, புருஷன் என்றொருவனை நம்பி அவன் வீட்டுக்குப் போகிறாள். "அவளின் வேதனைகளைப் புரிந்து அவளை அநுசரித்து வாழ்" என்று ஏன் கணவன்மார்களுக்கு ஒரு பாட்டு எழுதப்பட வில்லை? ஏன் இந்த வஞ்சனை?

இதே போல் பழகத் தெரியவேண்டும் பெண்ணே...
என்ற பாடலும் கூட ஒரு பெண்ணுக்குத்தான். ஏன் ஒரு ஆணுக்கு பழகத் தெரிய வேண்டிய அவசியமில்லையோ?

இன்னும் இப்படி எத்தனையோ பாடல்கள், பெண்கள் இப்படி இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கின்றன. அப்படியென்றால் ஆண்கள் எப்படியும் வாழலாமோ?

மானே, தேனே, கனியே, கற்கண்டே, என்று பெண்களை வர்ணிக்கும் அதே கவியுள்ளங்கள்தான் பெண்களை அடங்கிப் போகும் படியும் கவி புனைந்துள்ளன. இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிகமிக வருத்தமான விடயம்.

ஆணென்ன? பெண்ணென்ன? எல்லோரும் மனிதப் பிறவிகள்தான். ஏன் இது மறுக்கப் பட்டது? மறைக்கப் பட்டது?

முதலாம் உலகப்போர் வரை ஐரோப்பியப் பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள, வர்த்தக நிறுவனங்கள், போன்றவற்றில் வேலைக்கமர்த்தப் பட்ட போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்தெழுந்து கோசமிட்டார்களாம். ஏன் இன்று ஆசியப் பெண்களான நமது தமிழீழப் பெண்கள் கூட...

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலிகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
போர்க் கொடி ஏந்தி - அங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்.
இருந்தும்...
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை!
ஆணாதிக்கமும் அடக்கு முறையும்
முற்றாக ஒழியவுமில்லை!


புகுந்த வீடுதான் பெண்ணுக்கு நிரந்தரமாம். பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம்? ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா, சகோதரங்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்குப் பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப் புத்தகத்தில் உள்ளது? ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம். பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து, வெந்து மாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கிவரும் கண்ணீரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே! இந்த நிலையில் இன்றும், இன்னும் எத்தனை பெண்கள்!

ஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாச்சாரம், பண்பாடு, மரபு... என்று சில ஆயுதங்களைப் பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு வாழ்வதைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே! தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் பெண்களுக்கு மட்டுந்தானா? ஆண்களுக்கென்று எதுவுமே இல்லையா? ஏன் இன்னும் பல பெண்கள் இதை உணராமல் வாழ்கிறார்கள்?

பட்டிமன்றங்களும் ஒட்டு வெட்டுக்களும் கலாச்சாரம், பண்பாடு என்று வந்தால் தாலி, பொட்டு, சேலை இவைகளைத்தான் விவாதத்துக்குரிய பாரிய விடயங்களாக எடுத்துக் கொள்கின்றன. மீறினால் பெண்களின் மறுமணம்.
ஆண்களின் மறுமணம் பேசப்படக் கூடிய அதிசயமான விடயமே இல்லை. ஆனால் பெண்களின் மறுமணமோ நடக்கவே கூடாத மரபு மீறிய, கலாச்சாரம் கெட்ட, பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தொனிக்கிறது.

இந்தக் கலாச்சாரங்களை, பண்பாடுகளை இது எமக்கு மேல் திணிக்கப் பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே எமது பெண்கள் இன்னும் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களே! இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும். தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண்... தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு நிலையிலும் குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண்... அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன?

அடங்குதல், ஒடுங்குதல், ஆக்கிப் போடுதல், அடித்தாலும் உதைத்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று தொழுதல், புகுந்த வீட்டில் பணிந்து நடந்து பிறந்த வீட்டுப் பெருமை காத்தல்... இவை எல்லாமே ஆண்கள் தமது சுயநலத்துக்காகத் தயாரித்து வைத்த பெண் அடிமை அட்டவணைகள்.

ஆண்களின் வக்கிரமான கருத்துத் திணிப்புகளில் உதாரணத்துக்கு ஒன்று-
வேதநாயகம் பிள்ளையின்,
அடித்தாலும் வைதாலும்
அவரே துணையல்லால்
ஆர் துணையடி மானே
மடித்தாலும் அவருடன்
வாய் மிதமிஞ்சலாமோ?
வனத்தின் கீழிருந்து
மழையிடிக்கஞ்சலாமோ?


இப்படியே நாம் இவைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல்
இருந்தோமென்றால் ஆண்கள் எம்மை விடவே மாட்டார்கள். தொடருவார்கள்.

பெண்களே! நீங்கள் நினைக்கலாம், இப்போது நாங்கள் விடுதலை பெற்று விட்டோம் என்று. ஆனால் இன்னும் முழுதாக இல்லை.

ஆண் பெண் இருபாலாரும் சமநிலைக்கு வர, இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும். உங்கள் காலில் நீங்கள் நிற்பதற்கு, சொந்தமாகத் தொழில் பார்க்க வேண்டும். போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து, எது தேவை என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

முக்கியமாக, உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பேதம் காட்டாது சமனாக வளருங்கள். "நீ பெண் குழந்தை! நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும்"" என்று உங்கள் ஆண் குழந்தைக்கும், பெண் குழந்தைக்குமான தகராறின் போது, நீங்கள் சொல்வீர்களானால்... அங்கு நீங்கள் பெரிய தவறு செய்கிறீர்கள். இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப் படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையின் மனமும்தான்.

ஆண் குழந்தையின் மூளையில் அது அப்போதே, `பெண்கள் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டியவர்கள்தான்` என்று பதிந்து விடுகிறது.
அதுவே நாளடைவில் அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் தனக்கு விட்டுக் கொடுத்து வாழவேண்டியவர்கள் என அவனை எண்ண வைக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும், பெண்பிள்ளைகளுக்கு "நீ பெண்ணல்லவோ!" எனப் போதிக்கப் படும் விடயங்கள், கூடவே வளரும் ஆண்பிள்ளையின் மூளையில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமெனப் பதியப்பட்டு விடுகிறது.

ஆகவே பெண்களே! உங்கள் பிள்ளைகளை, ஆண் பெண் பேதம் காட்டாது, விட்டுக் கொடுத்தலிலிருந்து சமையல், வீட்டுவேலை, கல்வி, தொழிற்கல்வி, தொழில் மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற் பாடுகளிலும் சமத்துவத்தைப் பேணி வளருங்கள்.

எந்தக் கட்டத்திலும் உங்கள் பெண் பிள்ளையை "நீ பெண்!" என்று கூறி சமையற் கட்டுக்கும், ஆண் பிள்ளையை வெளி வேலைக்கும் அனுப்பாதீர்கள்.

இன்றைய பிள்ளைகளாவது நாளை, `இந்த வேலை ஆணுக்கு, இந்த வேலை பெண்ணுக்கு` என்று நினைக்காமல் இருக்க ஆண் பிள்ளைகளையும் சமையற் கட்டுக்கு அனுப்புங்கள். பெண் பிள்ளைகளையும் வெளி வேலைக்கு அனுப்புங்கள்.

பெண்களுக்கு நடனமும் பாடலும்தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள், (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள்.

உங்கள் வளர்ப்பில், `பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன்` என்ற நிலை முற்றாக மாற வேண்டும்.

இதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூற வேண்டும் என நீங்கள் எண்ணலாம். நாங்கள் குனிந்து நின்று கொண்டு ஆண்களைப் பிழை கூற முடியாது. நாங்கள் தான் நிமிர வேண்டும்.

நாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.

சந்திரவதனா
யேர்மனி.


ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் (அக்கினி - 2000)
பிரசுரம் - புலம்-12 (சித்திரை-வைகாசி - 2000)
பிரசுரம் - ஈழமுரசு (11-17 - வைகாசி - 2000)
பிரசுரம் - சக்தி - நோர்வே

Samstag, Juni 04, 2005

பெண்விடுதலையும் மானுட விடுதலையின் ஓர் அம்சமே!

- சந்திரகாந்தா முருகானந்தன் -

பெண்விடுதலையை வெண்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும்போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இது ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச்சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும், பல துறைசார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும். ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பல தரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம்.

வாசற்கதவு திறந்திருக்கிறது ஆனால் இங்கே யாருமே வருகிறார்களில்லை. பெண்விடுதலையை மீட்டெடுக்க! இதுதான் இன்றைய பெண்ணிய செயற்பாட்டு நிலை என்றால் அது தவறான கூற்றாகாது. பெண்ணுரிமை அமைப்புக்கள் புற்றீசல்போல் உருவான அளவுக்கு அவற்றின் செயற்பாடுகள் துரிதமாக எடுத்துச் செல்ல முடியாமைக்குப் பரவலான முயலாமையை முதற்காரணமாகக் கூறமுடியும். அடுத்த அம்சமாக இத்தேக்கத்திற்கான காரணம் ஆண்கள் உள்வாங்காத அல்லது முழுமையாக ஈர்க்கப் படாமையும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியமையையும் குறிப்பிடலாம்.

பெண்ணுரிமை இயக்கங்களின் மலர்தலுக்குப் பின் பெண்கள் வாழ்நிலையிலும் சில மலர்வுகள் ஏற்பட்டுத்தானுள்ளன. கல்வி, வேலைவாய்பு, வாழ்க்கைத்தரம் என்பவற்றின் உயர்வோடு, புதிய தலை முறை பெண்களிடையே பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளமை சாதகமான பலாபலன்கள். ஆனால் தொலை நோக்குடன் பெண்விடுதலை நடவடிக்கைகளைத் திட்டமிடாமல் போனதால் சில எதிர்வினைகளும் ஏற்பட்டிருக்கின்றன. பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தமும், நஞ்சும் தோன்றினபோல் பெண்டுணுரிமை இயக்கங்களின் செயற்பாடுகளினாலும் நன்மை, தீமை இரண்டுமே ஏற்பட்டுள்ளன என்பார்.

உலகமயமாதலில் எல்லாமே மேற்கத்தைய நாடுகளிலிருந்து இறக்குமதியாவது போல் பெண்ணியச் சிந்தனைகளும் அச்சொட்டாக எதுவித மாற்றமுமின்றி இங்கும் இறக்குமதியாகி செயலுருவம் பெற முயன்றமையே இப்பின்னடைவுக்கும், தேக்க நிலைக்கும் காரணமென சிலர் கூறுவர். இதை மறுத்து நிற்கும் வேறு சிலர் இது வெறும் ஆணாதிக்கக் கூற்று என்று வாதிடுகின்றனர்.

இன்று உலகில் மிகப்பரவலாக பெண்ணுரிமை வாதமும், அதன் சட்டதிட்டங்களும் விவாதிக்கப்படுகின்றன. பால்நிலைச் சமத்துவம் பற்றிய கருத்தாடல்கள் பரவலாகி வருகின்றமை ஆரோக்கியமான சூழ்நிலை தான். ஏனெனில் பல்நிலைச் சமத்துவம் என்பதை ஏற்றுக்கொள்ளல் என்பது இன்னமும் இறுக்கமாகவே நிற்கின்றது. பெண்கள் வாழ்வில் நிதர்சனமாகவுள்ள அடிமைத்தனமும், சமத்துவமின்மையும் ஆண்களால் மட்டுமன்றி இன்னமும் கூட பல பெண்களாலும் புரிந்து கொள்ளப்படாமை வேதனைக்குரியது. பெண்களின் வாழ்வைப் பின்தள்ளுகின்ற கசப்பான உண்மைகள், அவற்றில் உள்ளிருக்கும் அவலமான துன்பங்கள் மட்டுமன்றி, பெண்ணின் மதிக்கப் படவேண்டிய மகோன்னதங்கள், பெறுமதிகள் என்பவற்றையுமே உணர விடாதபடி மரபு, பண்பாடு, வழமை, சடங்கு சம்பிரதாயங்கள், மதம்சார்ந்த அழுத்தங்கள் திரையிட்டு மூடிநிற்கின்றன.

பொதுவாக இருந்து வருகின்ற தற்போதைய பெண்களின் நிலைமையை மாற்றியமமைக்க விரும்பாமலும், புதிய வீச்சான பார்வைகளை, மதிப்பீடுகளை, செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கி நிற்கின்றபோக்கும் பரவலாக அவதானிக்கப்படுகின்றது. பாமரர்கள் மத்தியில் மாத்திரமன்றி படித்தமேலோர் வட்டத்திலும் கூட பெண்விடுதலை பற்றி சுமூகமாக ஆராய முடியாத நிலை இருக்கின்றது. பெண்ணியச் சிந்தனைகள் பற்றிய கருத்தியல் ரீதியிலான புரிதலுக்கும், தெளிவடைதலுக்கும் தயார் இல்லாத மந்தத் தனமும், ஆர்வமின்மையும் மாத்திரமன்றி இன்னும் சிலர் மத்தியில் வெறுப்பும், பரிகசிப்பும் கூட அவதானிக்கப்படுகிறது. இத்தனைக்கும் மத்தியில் எதரிர்நீச்சல் போட்டுத் தான் பெண்களின் திறமை, ஆற்றல், வெளிப்பாடு, ஆளுமை விருத்தி, பால் சமத்துவம் மற்றும் சுதந்திரம் முதலானவை வெளிப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான சிரமமான விளைவுகளுக்கான காரணி எதிரும் புதிருமாக ஆணாதிக்கவாதிகளிடமும், பெண்ணிநிலை வாதிகளிடமும் இருக்கின்றன. ஆண்வர்க்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து, பெண்வர்க்கம் தமது விடுதலைக்குக் குரல் கொடுக்கின்றது. நியாயத்திற்காகக் குரல் கொடுக்கின்ற பெண்கள் தமது நிலையைச் சமூகத்தில் மேம்படுத்துவதை விடுத்து ஆணினத்துடன் மோதிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இல்லறத்தில் ஒருமித்து ஒத்த கருத்தை எட்ட வேண்டியவர்கள். இரு துருவமாக நின்றால் எதுவும் சீராடையப்போவதில்லை. பதிலாக மோதல்களும், பூசல்களும் வலுத்து எதிரான அம்சங்கள்தான் வலுவடையும். இதுவே இன்றைய நிதர்சனம்.

ஒரு குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்குமிடையே புரிதலும், பகிர்தலும் இருந்துவிட்டால் சுதந்திரத்தின் பாதைகள் தானாகவே திறக்கும். இதை ஏற்றுக்கொண்டு குடும்பத்திலும், சமூகத்திலும் இருபாலரும் தமக்குரிய பொறுப்புக்களை உதறித் தள்ளாமல் அதேசமயம் சுயமாக இருக்கும் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணின் கல்வியும், பொருளாதார நிலைமையும் மேம்படுதல் முதலில் அவசியமானது. பெண்ணுக்குரிய சொத்துடமையும், அங்கீகாரம் பெறவேண்டியது முக்கியம். சீதனம் என்கிற அரக்கனின் அசூரத் தனமும் களையப்பட வேண்டும். இவ்விடயங்களில் பெண்களுக்கு எதிரான செயற்பாட்டில் பெண்களே செயற்படுகின்ற அவலநிலை முதலில் மாற்றம் காணவேண்டும்.
நிஐக் குற்றவாளியானது ஆணாதிக்கமே அன்றி, ஆண்வர்க்கம் அல்ல என்ற தெளிவும், புரிதலும் புதிய திட்டவடிவங்களின் அம்சங்களில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

பெண்ணின் உரிய இடம் நிலைநிறுத்தப்பட்ட வேண்டுமாயின் முதலில் பெண்களின் ஆர்வமும், பங்களிப்பும் புரிதலைத் தொடர்ந்து ஏற்பட வேண்டும். சரியானவற்றை, அவசியமானவற்றை நடைமுறைக்குச் சாத்தியமான வழிகளை இனம் கண்டு செயற்படுவதன் மூலம் பெண்விடுதலையை எட்டுவதில் இணைந்து படிப்படியாக முன்னேறி சவால்களை முறியடித்து உரிய இலக்கை எட்ட முடியும்.

சிறப்பான பெண்ணிய ஆய்வுகளும், விவாதங்களும் வினைத்திறனான செயற்பாடுகளும், பல்கலைக்கழக மற்றும் மேலோர் வட்டப் படிதாண்டி, பரவலாகி, தீங்குறு பிரிவினர் மத்தியில் கொண்டு செல்லப்படுதல் காலத்தின் தேவையாகும். ஊடகங்களாலும், கலை இலக்கியங்களாலும் சாமனியர்களை அணுகும் அதேவேளை நேரில் சென்று அழைப்புக்களைப் பரவலாக ஏற்படுத்தி செயலாக்கம் பெறுவது முக்கியமாகும். இச்செயற்பாட்டில் ஆண்களையும் இணைத்துச் செயற்படவேண்டும். காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு இசைவாக்கம் பெற்றுவிட்ட சில மரபுப் பூச்சாண்டிகளும், பண்பாட்டுப் போலிகளும் மறுதலிக்கப்பட வேண்டும். இவ்விலக்கை எட்டுவது இலேசுப்பட்ட காரியமல்ல. துறைமுக அலை (சுனாமி) கணப்பொழுதில் அழித்தது போல் இவற்றைச் சடுதியில் ஏற்படுத்தி விட முடியாது.

பொதுவாகவே இசைவாக்கமுற்று அதன் அடிப்படையில் செயற்படும் ஒரு சமூகத்தில் புதிய மாற்றங்கள் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதிலும் எதிர்த்து நிற்கும் போது எதிர்ப்புணர்வும், பிரதி அனுகூலமும் ஏற்படும் சாத்தியமும் உள்ளதால் நிதானமான இணைந்த போராட்ட முறைகளே முனைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது இலேசுப்பட்ட காரியமல்ல. பெண்ணிய முன்னெடுப்புக்கள் மழையில் உப்பு வித்தது போல் மாறிவிடாமல், கால நேர மனநிலையை அறிந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எதிரியுடன் ஆயுதம் தூக்குவது போன்ற காரியங்கள் இங்கு பலனளிக்காது என்பதை பெண்ணிலை வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். தேசத்தைப் பிரித்தெடுத்தால் அது வெற்றி. ஆனால் தேகத்தைப் பிரித்தெடுத்தால் அது குடும்பத்தில் தோல்விதான்! பிரிதலை விட இங்கே புரிதலும், புரியவைத்தலுமே அவசியமாகிறது.

பெண்விடுதலையை வென்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும் போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இரு ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. உதாரணமாக சகோதரிகளுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய இளைஞர்களின் வாழ்வும் பாதிக்கப்படுகின்றதல்லவா? எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச் சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும்,பலதுறை சார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும். ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம்.

எனவே பெண்களுடைய பிரச்சினைகள் என்பது அவர்களது மாத்திரமல்ல அவை சமூகத்தின் பொதுப்பிரச்சினை. சமூக மேம்பாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் பங்காற்றினால் தான் பெண்விடுதலையை எட்டமுடியும். இதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம். பால் நிலைச் சமத்துவ வழிகாட்டல் பற்றிய பிரக்ஞை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். செயலூக்கம் பெற வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் தொடங்கி, பாடசாலையிலும் சமத்துவம் பேனப்படுதலும், போதிக்கப்படுதலும் அவசியமான செயற்பாடாக வேண்டும். பாடத்திட்டங்களிலுள்ள அலகுகளில் ஆணாதிக்க சிந்தனைகள், இனவாதச் சிந்தனைகள் போலவே அகற்றப்பட வேண்டும். குடும்பத்திலும் பண்பாடு, கலாச்சாரம் என்பவை மாறாவிதிகள் அல்ல என்ற புரிதல் ஏற்படுத்தப்படல் வேண்டும். நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். அடிப்படை அம்சங்கள் சிதைவுறாமலே!

எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களே பெண்களுக்கு மாறாகப் பெண்விடுதலையை மறுத்துச் செயற்படுகின்றமையைக் களையப்பட வேண்டியது அவசரமாதும், அவசியமானதுமான செயற்பாடாகும்.

சமூகத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படும் போது பெண் விடுதலையையும் எட்டப்பட்டு விடும். பால் பேதமற்ற மனித நேயமே இன்று தேவைப் படுகின்றது. பால் மோதல் அல்ல!


சந்திர காந்தா முருகானந்தன்.
Quelle - Erimalai - March 2005