Dienstag, März 08, 2005

சர்வதேசப் பெண்கள் தினம்

மார்ச் - 8

இன்று சர்வதேசப் பெண்கள்தினம்.
ஆணாதிக்க அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் அர்த்தம் நிறைந்த நாள். ஒடுக்கப் பட்டும், மனம் நெரிக்கப் பட்டும் இருந்த பெண்கள் தம் வலிமையை உணர்ந்து விலங்கை ஒடிக்கத் துணிந்து ஓங்கிக் குரல் கொடுத்த நாள்.

1857 ம் ஆண்டில், போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் நிலக்கரிச் சுரங்கங்களிலும், புடவை ஆலைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பெண்கள் வேலை செய்ய வேண்டியதொரு கட்டாயம் ஏற்பட்டது.

அது வரை காலமும், மென்மையானவர்கள், வீட்டு வேலைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள்.... என்ற பல்விதமான அட்டவணைகளுக்குள் அடக்கப்பட்டு, தாம் வலிமையற்றவர்கள்தான் என்ற ஒரு மாயையில் மதிமயங்கிக் கிடந்த பெண்கள், அப்போதுதான் தமது வலிமையை உணர்ந்து விழித்துக் கொண்டார்கள்.

ஆனாலும் அவர்களுக்கான வேலை நேரம், ஊதியம், சமஉரிமை போன்ற விடயங்களில் பேதம் காட்டப்பட்டது. இதன் விளைவாக கிளர்ந்தெழுந்த அமெரிக்கத் தொழிலாளப் பெண்கள் 10 மணி நேர வேலை கேட்டும் ஆண்களுக்குச் சமமான ஊதியம் கேட்டும் 1857 மார்ச் 8ந் திகதி புடவை ஆலைப் பெண்களின் முன்நடாத்தலில், ஒரு போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

இப்போராட்டம் முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்குள் அடக்கப்பட்டுப் போனாலும் 1907 இல் மீண்டும் தோற்றம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மகாநாடு 1910 இல் டென்மார்க்கில் கோப்பன்காகன் நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சோசலிசப் பெண்கள் கலந்து கொண்டார்கள். இதன் போதுதான் யேர்மனியின் பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிளாரே செற்கினேயினால் மார்ச் 8 ந் திகதி பெண்கள் தினமாக பிரகடனப்படுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுத்து வைக்கப்பட்டது.

கிளாரே செற்கினே அவர்களின் கோரிக்கையின் பயனாக முதன் முதலாக 1911 ம் ஆண்டு மார்ச் மாதம் 8ந் திகதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப் பட்டது. ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ந் திகதி ரஷ்யாவில் உள்ள சென்பீற்றர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஸ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார்.

இப்போராட்டத்தையடுத்து 1921 ம் ஆண்டு மார்ச் 8ந் திகதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் அனுடிக்கப் பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.

இருந்தும் என்ன...?
இத்தனை வருடங்கள் போயும் என்ன...?
கொம்பியூட்டர் யுகம் வந்துமென்ன...?

ஆணாதிக்கப் பண்பாட்டில் பெண் என்பவள் ஆணின் உடைமை என்பது மறுக்கப்பட்டு விட்டதா...?
இல்லையே !

பெண் என்பவள் உற்பத்தி மெசின் என்பது மறுக்கப்பட்டு விட்டதா...?
இல்லையே!

இப்படி இன்னும் எத்தனை இல்லைகள்!

இந்தப் பெண் என்பவள் தனக்கே தான் சொந்தமாக இருக்கிறாளா...?
அது கூட இல்லையே!

அவள் எதை உடுக்க வேண்டும்,
எப்படி வாழ வேண்டும்,
எப்படிச் சிரிக்க வேண்டும்,
எதைப் படிக்க வேண்டும்,
யாருடைய குழந்தையை எந்த முறையில் தனக்குள் சுமக்க வேண்டும்,
இவையெல்லாமே மற்றவர்களால்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
அது மட்டுமன்றி இவைகளெல்லாம் மற்றவர்களுடைய சர்ச்சச்சைக்குரிய விடயங்களாகவுமே கருதவும் படுகின்றன.

பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று ஆங்காங்கு கூக்குரல்கள் கேட்கிறதுதான். ஆனாலும் இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. எமது பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும். பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்விடுதலை என்பது, சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை... இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்.... வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விடயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தார்ப்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.

பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

நாம் நாமாக வாழாது
நரகத்துழன்று
ஊருக்காய் வாழ்வது
வீணல்லவா
பெண்ணே!
ஊருக்காய் வாழாதே!
உனக்காய் வாழ்.

சந்திரவதனா
யேர்மனி
8.3.1997