Sonntag, November 28, 2004

நிர்வாணமே ஆயுதம்

மாலதி மைத்ரி

எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மனித குரூரங்களைச் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்கூடங்களாக யுத்த கலகபூமி மாறிவிடுகிறது. எந்த ஒரு சமூக வன்முறை நிகழ்வுகளிலும் பெண்களே பெருமளவு பாதிக்கப்படுவதும், குறிப்பாக அவர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் மிக இயல்பாக நிகழ்ந்து வருவதற்குக் காரணம், ஆணின் ஆதார அச்சமாக பெண் இருப்பதுதான். இதனால் இனத்தொடர்ச்சியை பெருக்கும் மையம் அழிக்கப்படுகிறது. இது அச்சமூகத்துக்குச் செய்யும் பெரும் தண்டனையாக யுத்தத்தில் கருதப்படுகிறது.

அமைதியை நிலைநாட்டச் சென்ற இந்திய நாட்டு ராணுவம் இலங்கையில் தமிழ்ப் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சியில் ஈடுபட்டது. (சமீபத்தில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘மற்றது’ பத்திரிகையின் முதல் இதழில் பிரசுரமான பேட்டியில், பார்வதி கந்தசாமி இலங்கையில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களையும் அந்நிகழ்வுக்குப் பிறகான பின்விளைவுகளையும் பேசுகிறார்.) இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போதும் 2002இல் நிகழ்ந்த குஜராத் கலவரங்களின்போதும் என, எல்லா இடங்களிலும் பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிக் கொன்றது யுத்ததாக்குதல் தர்மமாகக் கைபிடிக்கப்படுவதன் அடிப்படை என்ன? இக்குற்றங்களுக்கான தண்டனைகளை இவர்கள் பெற்றதுண்டா? இவர்களுக்கெல்லாம் தண்டனையளிக்கும் அதிகாரம் யாருக்குள்ளது? இவர்கள் எப்படி சட்டத்திற்கு உட்படாமல் தப்பிக்க முடிகிறது? இக்கேள்விகள் நீண்டுகொண்டே போகும்...

பிற நாடு, பிற மதம் என்ற காரணங்களுக்காக இக்குற்றங்கள் நிகழ்ந்தன என்றால், சமீபத்தில் மணிப்பூரில் நடந்த அஸ்ஸாம் ரைபிள் படைப்பிரிவினரின் அத்துமீறல்களுக்கும் கொலைகளுக்கும் என்ன காரணம் கூற முடியும்? இரண்டு பால்களுக்கு இடையிலான, இரண்டு நபர்களுக்கிடையிலான, இரு குடும்பம், இரு இனக்குழு, இரு நிலப்பகுதிகளுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தமே சமூகம் என்ற கட்டமைப்பு. இச்சமூகக் கட்டமைப்பை, ஒழுங்கமைப்பை நிர்வாகம் செய்ய உருவானவையே அரசு எனப்படுகிறது. தனிமனிதர்களுக்கிடையில் உருவாகும் வன்முறை என்பது, சமூக வன்முறையாகவும், இச்சமூக வன்முறையை தடுக்க, ஒடுக்க, ஒரு முடிவுக்குக் கொண்டுவர மேலிருந்து சமூகத்தின்மீது அரசு தொடுப்பது அரசு வன்முறையாகவும் உள்ளது. இந்த இரண்டுவித வன்முறைகள் இன்று ஒரே வடிவம் அடைந்துள்ளன. அரசு இயந்திரம் பாதுகாக்கப்பட அரசே சமூகத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவதும், வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதும் இன்று சகஜமான நிகழ்வாகி வருகிறது. உள்ளூர் ரௌடிகள் ஊராரை மிரட்டி தங்களின் தேவைகளை அடைய அடியாட்களை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு கோழி பிரியாணியும் வடி சாராயமும் கொடுத்து வளர்த்து வருவதுபோல், அரசு என்பதும் போலீஸ், இராணுவம் போன்ற அடியாட்களை தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர்கள் பொழுது போக்காகச் செய்துவரும் என்கௌண்டர், காலங்காலமாகப் பெண்ணுடல்மீது ஆணுடல் கொள்ளும் வெற்றியாகக் கருதப்படும் வன்புணர்ச்சி போன்றவை இன்று இந்திய பீனல்கோடால் அங்கீகரிக்கப்படும் விசாரணை யுத்தியாக மாறினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த அளவிற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை குக்கிராம போலீஸ் டெண்டிலிருந்து எல்லைப்பாதுகாப்புப்படையின் வரம்புக்குட்பட்ட ஆறுதிணையிலும் (பனி பொழியும் நிலத்தையும் சேர்த்து) வெளியில் தெரியவரும் ஒரு பங்குச் செய்திகளே நம் மரத்துபோன மூளைக்கு உயர் அழுத்த மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இயல்பிலேயே வன்முறையை தன் இயங்குதலாகக் கொண்ட மனித மிருகத்தைப் பண்படுத்த உருவாக்கப்பட்ட நீதி போதனைகள் இங்கு அதிகம். மனதை அடக்கவும் கட்டுப்படுத்தவும் அனைத்து மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன. மனிதருக்கு மட்டுமல்ல, பிற ஜீவராசிகளுக்கும் தீங்கு இழைக்காதே என்கிறது பௌத்தம். சமணமும் இதையேதான் பேசுகிறது. இதெல்லாம் அளித்த வாழ்வியல் நெறியிலிருந்தும் அறத்திலிருந்தும் இந்த மண் எப்பொழுதோ துண்டித்துக்கொண்டது. இனி எந்தத் தத்துவ அறங்களாலும் வன்முறையின் பிடியிலிருந்துச் சமானிய மனிதர்களைக் காப்பாற்ற முடியாத காலத்தில் நிற்கிறோம். மனிதன், தான் சார்ந்த குழு அடையாளத்துடன் இருக்கும்போது பிற குழு எதிரியாகிறது. தான் சார்ந்த மத அடையாளத்துடன் இருக்கும்போது பிற மதம் எதிரியாகிறது. தான் சார்ந்த சாதி அடையாளத்துடன் இருக்கும்போது பிற சாதி எதிரியாகிறது. தான் சார்ந்த குடும்ப அடையாளத்துடன் இருக்கும்போது பிற குடும்பம் எதிரியாகிறது. குடும்பத்துள் ஆண் சார்ந்த அடையாளத்துடன் இருக்கும் போது அவனுக்கு பெண் எதிரியாகிறாள். இந்த வாக்கியங்களை அப்படியே திருப்பி அடுக்குங்கள்; குடும்பத்துக்குள் ஆண் சார்ந்த அடையாளத்துள் இருக்கும்போது அவனுக்கு பெண் எதிரியாகிறாள். மனிதகுல வன்முறையின் மூலச் சுரப்பு இங்கிருந்துதான் துவங்குகிறது. மனித வன்முறைக்கு அடிப்படை அலகாக ஆண், பெண் எதிரிடை உள்ளது. இந்த நுண்ணிய மனக்கூறு, ஆணின் எல்லா கால வெளிகளிலும் அவனது மூளைச்செல்களின் செய்தியை அவனது ஆழ்மனதில் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த வன்மம் தொடர்ந்து பெண்ணுடலை வேட்டையாடுவதற்கான வெறியை அளிக்கிறது. மானுடவியல் அறிஞர்கள் மற்றும் மனோதத்துவ ஆய்வாளர்கள் வேறு என்ன காரணங்களை அளிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது பற்றி சிந்திக்கும்போது, இப்படித்தான் காரணங்களைக் கண்டடைய முடிகிறது.

இந்த வன்முறைகளிலிருந்து பெண் தன் உடலை எப்படி மீட்டுருவாக்கம் செய்வது. மஹாஸ்வேதா தேவி தனது ‘துரௌபதி’ கதையில் முன் வைக்கிறார்: ‘திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச்சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. அந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள், ‘‘துணி என்ன துணி..... யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும். ஆனா என்னைத் திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால்? சீ... நீ ஒரு ஆம்பிளையா...?’’

நாலாபக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் ரத்தம் கலந்த எச்சிலைத் ‘‘தூ...’’ வென்று துப்புகிறாள்.

‘‘நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிளை இங்க யாருமில்லை. என்மேல துணியைப் போட எவனையும் விடமாட்டேன். அப்போ என்ன செய்வே? வா... என்னைக் கௌண்ட்டர் பண்ணு... வா...கௌண்ட்டர் பண்ணு...’’

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல் முறையாக ஒரு நிராயுதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.’ (இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு: தொகுப்பு 2 -சிவசங்கரி)

ஜூலை 15ம் தேதி ‘அஸ்ஸாம் ரைப்பிள் தலைமையகம்’ முன்பு அரசுப்படையினர் அங்கு நிகழ்த்திவரும் என்கௌண்ட்டருக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நிர்வாணமாக நின்று போராட்டம் நடத்தினர். வன்முறைக்கெதிராக ஆடையற்ற தன் உடலையே ஆயுதமாக நிறுத்தியுள்ளனர். நிர்வாணம் என்பதன் மகா அர்த்தம் இன்று எனக்கு விளங்கியது.

மாலதி மைத்ரி
நன்றி - குமுதம்

Freitag, November 19, 2004

புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்

- சந்திரவதனா -

புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.

எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றி நடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ஆண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்குள்ளும் ஆண்களைப் போலவே ஆசை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்லா உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ஆண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது. பெண்விடுதலையின் சரியான பரிமாணத்தை உணர்ந்த பெண்கள், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு முன்னேற்பாடுடனேயே விடுதலையை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த விடுதலைப் பாதையின் முதற் படியில் இருப்பது பெண்கள் தாம் தமது காலில் நிற்பதற்கு ஏதுவான சுய சம்பாத்தியம். அதாவது பெண்கள் தாம் தமக்கெனச் சம்பாதிக்க வேண்டும். இன்றைய பெண்களில் அனேகமானோர் இந்த சூட்சுமத்தைப் புரிந்து வேலைக்குப் போகத் தொடங்கி வட்டார்கள். ஆனாலும் அத்தோடு அவர்களது கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து விடவில்லை.

வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ஆண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.

பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ஆண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள். அதே நேரம் வீட்டிலுள்ள மற்றைய வேலைகளையும் பெண்களே தனியாகச் சுமக்கிறார்கள். பெரும்பான்மையான ஆண்கள் அதைப் பங்கு போடத் தவறி விடுகிறார்கள்.

ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ஆண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

ஆதிகாலத்தில் வேட்டைக்குப் போன ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருந்து குளிர் காய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பெரியளவாகப் பேச மாட்டார்கள். மெளனமாக இருந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்வதாக ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.

சில ஆண்கள் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்வார்கள். அதாவது ஒரு ஆணால் சமைக்க முடியும். இன்னொருவரால் அயர்ண் பண்ண முடியும். இன்னொருவரால் வீட்டைத் துப்பரவாக்க முடியும். ஆனால் பெரும்பாலான ஆண்களால் ஒரு பெண்ணைப் போல வீட்டின் முழுவேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்யத் தெரிவதில்லை. அல்லது முடிவதில்லை. இதனால் வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.

இந்த நிலையில் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, "நீ பிள்ளையைச் சரியாக் கவனிக்கிறேல்லை." என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப் படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.

வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இப்படியாக இரட்டைச் சுமையைத் தலையில் தூக்கி வைத்ததற்குச் சமனாயிருக்கும் போது, வேலைக்குப் போகாத பெண்களின் நிலை, வேறு விதமான பரிதாபத்தை உணர்த்துகிறது. அவர்களின் வீட்டு வேலைகள் ஒரு வேலையாகக் கணிக்கப் படுவதே இல்லை.

அனேகமான சமயங்களில் "உன்ரை மனைவி என்ன செய்கிறாள்..?" என்று கணவனை யாராவது கேட்டால்.. "அவ சும்மாதான் இருக்கிறா." என்பதே வேலைக்குப் போகாத பெண்களின் கணவன்மார்களின் பதிலாக இருக்கிறது.

இந்த அளவில்தான் பெண்களின் வீட்டு வேலைகள் கணிக்கப் படுகின்றன. அவர்கள் சிறிதளவு பணத்தேவைக்கும் கணவனை எதிர் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் "உனக்கென்ன தெரியும். நீ சும்மா வீட்டிலை இருக்கிறாய். நான் எவ்வளவு கஸ்டப்பட்டு முறிஞ்சு வேலை செய்திட்டு வாறன்." என்று சொல்லிக் கணவன்மாரால் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள். வீட்டிலுள்ள சகல வேலைகளையும் செய்வது மட்டுமல்லாது "எதுவுமே செய்வதில்லை." என்ற குற்றச் சாட்டையும் கணவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலைக்குச் செல்லாத பெரும்பான்மையான புலம்பெயர் பெண்கள் பாரிய உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகிறார்கள்.

அவர்களது வாழ்க்கை சமையல், வீட்டுவேலை கணவனுக்குப் பணிவிடை.. என்றே போய் விடுகிறது. அனேகமான குடும்பங்களில் கணவன்மார்கள் "நான் உழைக்கிறேன். எனது பணம்." என்ற ஒரு திமிருடன்தான் இருக்கிறார்கள். தமது மனைவியரைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகவே கருதி, மனைவியரின் மனங்களிலும் "நீ தாழ்ந்தவள். எனது பணத்தில்தானே நீ வாழ்கிறாய். நான் எவ்வளவு வேலை செய்து விட்டு வருகிறேன். நீ சும்மா வீட்டில் இருந்து எனது பணத்தில்தானே சாப்பிடுகிறாய்." என்பது போன்றதான கருத்துக்களை விதைக்கிறார்கள். மிகச் சிறுபான்மையான ஆண்கள் மட்டுமே மனைவியரை மனைவியராக, உணர்வுள்ள ஜென்மங்களாக மதித்து, வீட்டு வேலைகளை வேலையாகக் கணித்து உதவுகிறார்கள்.

மொத்தத்தில் வேலைக்குப் போகும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி ஏதோ ஒரு வகையில் கஸ்டங்களையே சுமக்கிறார்கள். ஆனாலும் வெளிவேலை, வீட்டுவேலை இரண்டினாலுமான அதீத சுமைகளின் மத்தியிலும் வேலைக்குப் போகும் பெண்கள் வெளி உலகத்துடனான தொடர்பு, நானும் உழைக்கிறேன் என்ற மனநிறைவு.. போன்றதான விடயங்களால் நான், எனது பணம் என்று கர்வம் கொள்ளும் கணவனிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வைப் பெற்று, ஒரு வித தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். வேலைக்குப் போகாத பெண்களோ தாழ்வு மனப்பான்மை நிறைந்த உளவியல் தாக்கத்தினால் தன்னம்பிக்கை இழந்து ஒரு தனிமைச் சிறையில் வாழ்கிறார்கள்.

சந்திரவதனா
யேர்மனி
6.11.2004

பிரசுரம் - இ-சங்கமம் தீபாவளி சிறப்பிதழ்

Montag, Oktober 11, 2004

மகளிருக்கொரு மகுடம் வைத்த இரண்டாம் லெப்டினென்ட் மாலதி

- கலி -

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள்.

அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.

இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.

அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள்.
தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

கலி

Sonntag, Mai 09, 2004

மாறவேண்டிய கருத்துருவாக்கங்கள்

ஆதிலட்சுமி சிவகுமார்

பெண்கள் எவ்வளவு தான் முன்னேற்றங் கண்ட பொழுதிலும் பெண்கள் பற்றிய சமூகபார்வை என்பது இன்னமும் சாபக்கேடானதாகவே இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பெண்ணிற் பெருத்தக்க யாவுள' என்று வள்ளுவர் எழுப்பிய கேள்வி முதலாக இன்று வரை பெண்ணினம் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

பெண்களின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவில் இருந்தாலும் பெரும்பாலும் துயரமும் ஆதங்கமும் நிறைந்ததாகவே இருக்கினறன. அண்மையில் நண்பர் ஒருவர். 'நீங்கள் (பெண்கள்) எல்லாம் நத்தைகள் ஓட்டுக்குள் தான் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட சமூகத்தில் காலம் காலமாய் பெண்கள் பற்றிய பார்வை இப்படித் தான் இருந்து வருகிறது என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.

பெண்களின் ஆற்றல்களை பலமாக அங்கீகரிக்க பலரும் விரும்புவதில்லை. உதாரணமாக, யாருக்கும் அடங்காமல் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த கொம்பன் யானையை தன் வலிமையால் அடக்கிக்காட்டிய வீரப்பெண் அரியாத்தை. ஆனால் இந்தப்பெண் தெய்வஅருளாலேயே யானையைப் பணியவைத்ததாக கூறுவோரும் உள்ளனர். அதாவது பெண்னின் ஆற்றலை ஜீரணித்துக் கொள்ளமுடியாத நிலையில் வெளிப்படுத்தும் கருத்தே இதுவெனக் கொள்ளலாம். தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல உலகிலுள்ள பெரும்பாலான இனச் சூழலில் சமூகத்தில் இப்படியான கருத்துக்கள் இருப்பதை நாம் அறியலாம். பிரான்சின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கரங்கள் நீண்டு விரிந்து தெரிந்த போது ஆர்க் எனும் கிராமத்திலிருந்து ஆவேசமாய் புறப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களை மோதிவென்று படைநடாத்திய வீரப்பெண் ஜோன் ஓப் ஆர்க் பின்னாளில் சூனியக்காரியென்று எள்ளி நகையாடப்பட்டு, உயிருடன் தீமூட்டிக் கொளுத்தப்பட்டாள் என்பது வரலாறு.

இன்றைக்கும் பல கிராமங்களில் பெண் பிள்ளைகள் பரீட்சைகளில் கூடிய பெறுபேறு பெற்றால், விளையாட்டுக்களில் பரிசுகள் பெற்றால் அதை பிள்ளையின் கெட்டித்தனம் என்று மெச்சுவதை விடுத்து 'கடவுளின் கிருபை' என்று மாற்றுவதை நாம் கண்கூடாய் பார்க்கின்றோம். காலம் காலமாக பெண்கள் பற்றி ஊன்றப்படுகின்ற கருத்து கருவூலங்களின் தோற்றப்பாடுகளே இவைகள் பெண்களின் உலகம் விரிவடைந்து வருகின்றது. பெண்கள் முன்னேறி வருகின்றார்கள். பெண்கள் சாதித்து வருகின்றார்கள். ஆனாலும் பெண்கள் மீதான சமூகப்பார்வை என்பது மாற்றம் காணாததாகவே இருக்கிறது.

இத்தகைய நிலைக்கு எந்த ஒரு தனிநபரையும் குற்றவாளியாக கூற முடியாது சமூகத்தில் பெண்கள் பற்றி ஆழப்பதிந்திருக்கும் அடிப்படைக் கருத்தில் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் என்பவள் யார்? இந்த உலக இயக்கத்தில் பெண்னின் பங்களிப்பு என்ன? அவள் தனது பங்களிப்பை முழுமையாக செய்யவிடாமல் தடுத்துநிற்கும் காரணிகள் என்ன என்பவை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.

எமது தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல, 'ஆண்மைக்கும், பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது'. எனவே படைப்பியல் ரீதியாக பெண் வேற்றுமை காட்டப்படவேண்டியவள் அல்ல, மாறாக பெண் என்பவள் சமூகச் சுழற்சிக்கு உந்து சக்தியாகத் திகழவேண்டியவள்.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள் தம் நிலை உணர்வதில்லை. அகங்கள் குறுகியிருப்பதால் முன்னேற்றங்கள் தடைப்படுகின்றன. முன்னேற்றங்கள் தடைப்பட்டு குறுகிய வட்டத்துக்குள் வாழும் போது அவள் தன்னாலும் பிறராலும் சுமையாக உணரப்படுகிறாள். இந்த உணர்வு காலப் போக்கில் பெண்ணுக்குள் தாழ்வுச் சிக்கலை உண்டு பண்ணுகிறது.

காலம்காலமாய் பெண்பற்றி ஊன்றப்படும் பிற்போக்கான கருத்துகளும் பெண்ணுக்குள் உருவாகும் தாழ்வுச் சிக்கலும் சேர்ந்து அவளை அடிமைப்படுத்தி விடுகின்றன. அடிமையாகிப் போகும் மனநிலை காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே வாழ்வாகிப்போகிறது. உண்மையில் பெண் என்பவள் தனக்குள் இருக்கின்ற திறமையை ஆற்றலை உணர்ந்து கொள்ளக்கூடியவளாக வேண்டும். கல்வியில் நாட்டங் கொண்டு சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைத்துவப் பண்புகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும்.

நிர்வாகம் என்பது பெண்களுக்கும் ஏற்ற விடயம் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னம்பிக்கை அற்று ஒதுங்கிக்கொள்ளும் நிலையை மாற்றவேண்டும். 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்றாலும் பதிலளிக்க வேண்டும் உலக சனத்தொகையில் சரிபாதி பெண்கள் என்கிறார்கள். முன்னேற்றங் காட்டும் அல்லது ஆற்றல்களை வெளிப்படுத்தும் பெண்களின் தொகை மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. உலகம் அறிவியலில் எவ்வளவோ தூரம் முன்னேறி விட்ட பொதிலும் பிற்போக்கான எண்ணங்களையும், சிந்தனைகளையும் பற்றிப்பிடித்து தொங்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இன்றைக்கும் சீதனப் பிரச்சினையால் திருமணமாகாத பெண்களின் பட்டியல் இருக்கின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் முகவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்கும் பெண்களின் கதைகள் வெளிவருகின்றன. காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பெண்களின் உலகம் அறியாமையிலிருந்து இன்னமும் முற்றாக விடுபடவில்லை என்றே கூறமுடிகிறது. குடும்பம் பல பெண்களுக்கு சுமையாக அழுத்துகிறது. 'யாராவது என் பாரத்திற் பாதியைச் சுமக்க முன்வரமாட்டார்களா?' என்று ஏங்கும் பெண்கள் பலர் இருக்கின்றார்கள். பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் பெண்கள் இருக்கின்றார்கள்.

பெண்கள் தம்மனவுலக இருளில் இருந்து வெளிவரவேண்டும். ஒளிமையான எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். 'நன்மையும் தீமையும் பிறர்தர வாரா' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். எமது வாழ்வும் வலுவும் எமது கரங்களிலேயே தங்கியிருக்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை - தேசத்தைக் கட்டி எழுப்பவேண்டுமென்றால் பெண்கள் அகவிடுதலை அடையவேண்டும். பெண்கள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற பிற்போக்குத்தனமான கருத்துக்கள் களைந்தெறியப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல்களும், ஆளுமைகளும் வெளிக் கொண்டு வரப்படவேண்டும் தம்மீது ஆழப்புரையோடி நிற்கும் சமூக கொடுமையும் அநீதியுமான ஒடுக்குமுறையைப் பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.

nantri - Eelanatham & Sooriyan.com

Montag, März 08, 2004

பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

சந்திரவதனா

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு
சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன்றிப் புளகாங்கிதத்தையோ உணர முடியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையைத் தான் சுமந்து தாயான லிபேரியக் கறுப்புஇன
இளம் பெண்போராளி ஒருத்தி சொல்கிறாள் ஒரு ஆணை விட ஒரு பெண்ணினால்தான் முழுமன ஈடுபாட்டுடனும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியுமென்றும் ஒரு ஆணை விடப் பெண்ணிடம்தான் வலிமை அதிகம் என்றும்.

அது உண்மைதான்.
பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.

இருந்தும் பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போக வேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.

இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்க வேண்டிய காரணி உருவாகத் தொடங்கியது.

குழந்தை பிறந்திருக்கும் சமயங்களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைகளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குகளுக்கு உண்டு.

ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழந்தார்கள். ஆனால் எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம்மைக் கண்டு பிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்து கொண்டார்கள்.

அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்து வரக் கூடிய விலங்குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத்துக்களும் ஏற்படாவண்ணம் காவலும் வைத்து விட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.

இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மை விடப் பலமான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள குட்டி போட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப் போக வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கும் இருந்தது.

இந்த விலங்குகளிடமிருந்தான பாதுகாப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கியது.

காலங்காலமாக இந்த நடை முறை தொடர்ந்த போது - எப்படித் தோல் நாட்டின் சீதோசண நிலைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதோ அதே போல மூளையும் மெது மெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.

ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவு படுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும்............. என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்ற போது
பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவனிப்பதிலும்........... என்று சற்றுப் பரந்து விரிந்தது.

இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவலுக்கு விடுவதுடன் நின்று விட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத் தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதானத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறி போய் விடாத படி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாத படி பாதுகாப்புக் கொடுக்கும் தன்மையும் என்றிருந்தது. அதுவே அவர்களிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன்மையை ஏற்படுத்தியது.

இதுவே மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறு வழிகளில் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய நிலை வந்த பின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாதவிலக்கு என்று சொல்லி பெண்ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற்கும்,
மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக்கும் என்று சொன்னதற்குமான அடிப்படைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில் விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்களிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.

இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் விலங்குகளை அடைத்துக் காட்சி வைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டு வாழ்கிறோம்.
இந்த நிலையில் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடர வேண்டிய அவசியமில்லை.

ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.
புறாவைத் தூது விட்ட நாம் மின்னஞ்சலில் அசத்துகிறோம்.
பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம். அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின்றன.
காட்டு வாழ்க்கையை விட்டு நாட்டில் வீடு கட்டி பாதுகாப்பாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்து விட்டோம்
.

இருந்தும் மூளையில் பதியப் பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்சனையை கருத்தில் கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் எனக் கண்மூடித்தனமாக் கருதுகிறோம்.
அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப்புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள்... வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டுமென நினைக்கிறோம்
.

உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத்தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத்தையோ கூட்டாகக் கொண்டு நடத்தி கூடுதலாக வெற்றி பெற வைக்க முடியும். ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தம்தான் கண்டு பிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள்.
ஓரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புகள்.

ஓரு ஆணின் மூளை ஓரு பெண்ணின்; மூளையை விட 130கிராம் நிறை அதிகமானது. ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் - ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான சூழ்நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று வௌ;வேறு வழிகளில் செயற் படுகின்றன. இங்கு ஆண் உசத்தி என்றோ பெண் உசத்தி என்றோ எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைப் படுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள்தான் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள்தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்.

இதே நேரம் இவையெல்லாம் பிழை. முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன. இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவறவில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.

இப்போது கூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்படலாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே..! இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.

உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டு மென்று சமூகத்தின் அடி மனதில் எழுதி வைக்கப் பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.

கருப்பையில் மூன்று மாதக் கருவாக இருக்கும் போதே ஒரு குழந்தை தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள்.. என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கி விடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக் கூட மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடும். இது இன்றைய ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.

இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். பிறந்த பின்னும் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விடயத்திலும்; ஆண் குழந்தை பெண் குழுந்தை என்ற பேதமின்றி பாரபட்சமின்றி அவர்களை வளர்க்க வேண்டும். அவர்கள் முன் பேசுவது கூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்த விதமான தாழ்வு மனப் பான்மையையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்க வேண்டும்.

இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள் மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டியவள்தான் என்ற உள்ளுணர்வை அழித்தொழிக்க ஏதுவாக அமையும்.

காலப்போக்கில் ஆண்களின் மூளையும் இந்த நடைமுறையுடன் இசைவாக்கம் பெற்று விடும். அப்போதெல்லாம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
28.2.2004


பிரசுரம் - ஈழமுரசு (3.3.2004 - 9.3.2004)

Sonntag, Februar 22, 2004

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்...

கலாநிதி சந்திரலேகா வாமதேவா

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான கோட்பாடல்ல. அது ஆண்களுக்குச் சமமாகச் சகல துறைகளiலும் சுதந்திரமாக பெண்கள் இயங்குவதை நோக்கமாகக் கொண்டது. அம்மாச்சி என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமயி அம்மையார் பெண்கள் பற்றி வழங்கிய கருத்துக்களில் சிலவற்றை இங்கு தருகிறேன். அமிர்தானந்தமயி அம்மா சில இடங்களில் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகளால் அவர்களை சற்று கடுமையாகக் கூறுகிறார். ஆயினும் சுதந்திரம் என்பதைப் பெண்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதையும் அவர் எடுத்துக் கூறத் தயங்கவில்லை. அவரது கருத்துக்களுடன் இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்

உலக அமைதிக்காக 2002 அக்டோபர் 6-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை ஆன்மீக பெண் தலைவர்களின் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் நூற்றி இருபத்தைந்து நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான சமாதானத்துக்குரிய 'காந்தி கிங்' விருது மாதா அமிர்தானந்தமயிக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் 'பெண்ணே உன்னால் முடியும்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். விகடன் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து இதனை உங்களுக்குத் தருகிறேன்.

உறங்கிக் கொண்டிருக்கும் பெண் சக்தி விழித்தெழ வேண்டும். இந்தக் காலகட்டத்தின் மிகவும் முக்கிய மான தேவைகளில் இது ஒன்றாகும். மதமும், ஆசாரங்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு, குறுகிய மனப்பான்மையால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள் என்ற நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாடுகளில் உள்ள பெண்கள், புதுமையான சிந்தனைகளைப் பெற வேண்டும். கல்வியறிவின் மூலமும், உலகியல் ரீதியான வளர்ச்சியின் மூலமும் பெண்ணும், அவளைச் சுற்றியுள்ள சமூகமும் விழிப்படையும், பண்பாடு வளரும் என்று நாம் கருதினோம். ஆனால், இந்த நம்பிக்கை தவறானது என்பதைக் காலம் தெளிவாக்கியுள்ளது.

பெண்ணை விழிப்புறச் செய்வது யார்? அவள் விழிப்படையத் தடையாக நிற்பது எது? உண்மையில் பெண்ணையும், அவளது பிறவிக் குணமான தாய்மை உணர்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. பெண்ணைப் பெண்ணே விழிப்புறச் செய்யவேண்டும். அதற்குத் தடையாக நிற்பது அவளுடைய மனமாகும்.

கடந்தகால சமூகம் படைத்த சட்ட திட்டங்களும், குருட்டு நம்பிக்கைகளும் இன்றும் பெண்ணுக்கு எதிராக நிலை பெற்றுள்ளன. சுரண்டுவதற்கும், அடக்கி ஆள்வதற்கும் ஆண்கள் உருவாக்கிய காட்டு மிராண்டித்தனமான சம்பிரதாயங்களும் தொடர்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து உருவாக்கிய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கிடக்கிறது பெண்ணின் மனம். அவளுடைய மனமே அவளை வசியம் செய்து வைத்திருக்கிறது. இந்த வளையத்திலிருந்து வெளிவர அவள் தனக்குத்தானே உதவ வேண்டும்.

பெரிய மரங்களைக்கூட வேரோடு பெயர்த்து எடுக்கும் சக்தியுள்ள யானையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். குட்டியாக இருக்கும்போது மிகவும் பலமுள்ள வடம் அல்லது சங்கிலியால் மரத்தில் கட்டி வைப்பார்கள். வடத்தை அறுத்துக் கொண்டோ, மரத்தை வேரோடு சாய்த்தோ கட்டிலிருந்து விடுபடும் சக்தி குட்டியானைக்கு இல்லை. காட்டில் சுதந்திரமாகத் திரிந்து பழகிய குட்டியானை, கட்டிலிருந்து விடுபட தன்னால் இயன்றவரை முயற்சி செய்யும். கட்டிலிருந்து விடுபடத் தேவையான அளவு பலம் தனக்கில்லை என்று அறியும்போது, அது தனது முயற்சிகளை எல்லாம் கைவிட்டு விடும். அவ்வாறு பழகிவிட்ட குட்டி யானை வளர்ந்து பெரியதாகும்போது, அதை சிறிய மரத்தில், அதிக வலுவில்லாத கயிற்றினால் கூடக் கட்டி வைப்பார்கள். அந்த யானை நினைத்தால் மிக எளிதில் மரத்தை வேரோடு சாய்த்து விட்டோ, கயிற்றை அறுத்துக்கொண்டோ கட்டிலிருந்து விடுபட முடியும். ஆனால் குட்டியாக இருந்தபோது அதற்கு ஏற்பட்ட பழைய அனுபவமானது, அதன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மனதில் ஏற்பட்டுவிட்ட முன்பதிவால், அது விடுதலை பெற முயற்சி செய்வதில்லை. பெண்களின் விஷயத்தில் இதுதான் நடந்து வருகிறது. அவளது ஆத்ம சக்தி விழிப்படைவதை அனுமதிக்க நாம் மறுக்கிறோம். அந்த மகாசக்தியை அணை கட்டித் தடுத்து நிறுத்துகிறது இன்றைய சமூகம்.

எச்செயலையும் செய்வதற்கான எல்லையற்ற சக்தி ஆண்-பெண் ஆகிய இருவரிடமும் சமமான அளவில் உள்ளது. சமூகம் பெண்ணின் மீது திணித்துள்ள நியதிகள், நிபந்தனைகள் என்னும் சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியில் வரப் பெண்ணால் முடியும். கடந்தகாலம் பெண்ணின் மனதில் உருவாக்கிய குறைகள் நிறைந்த பதிவுகள் எல்லாம் பெண்ணின் முன்னேற்றத்துக்குத் தடையாக நிற்கின்றன. பெண்ணின் மனதில் பயத்தையும், சந்தேகத்தையும் வளர்க்கும் நிழல்கள் அவை. நிழல் உண்மையானதல்ல. பொய்யாகும்.
ஆண்கள் பொதுவாக உடலின் வலிமையில் நம்பிக்கை உள்ளவர்கள். வெளிப்பார்வையில் பெண்ணைத் தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் காணவும், ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். ஆனால், மனதளவில் அவளை முறையாகப் புரிந்துகொள்ளவோ, புரிந்துகொண்டு அங்கீகரிக்கவோ அவர்களுக்கு இன்றும்கூட கஷ்டமாக இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வைப்பதில் பயனேதுமில்லை.

இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது.. ஒரு பெண்மணி, பலனை எதிர்பாராது பிறருக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையெனக் கருதி, அதில் மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். அந்நாட்டின் மதத்தலைவர்கள் அவரை ஒரு அர்ச்சகராக (புரோகிதையாக) நியமித்தார்கள். அந்நாட்டில் ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுவே முதல் முறையாகும். அவரைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்ததை மற்ற அர்ச்சகர்கள் சிறிதும் விரும்பவில்லை. அதுமட்டுமல்ல. அவர்களுக்கு அளவற்ற கோபமும் வந்தது. ஆனால், பணிவும், நிஷ்டையும், ஆன்மீகிக அறிவும் நிறைந்த அந்தப் பெண் அர்ச்சகர் மிக விரைவில் பிரசித்தி அடைந்தார். எல்லோரும் அவரைப் புகழ ஆரம்பித்தனர்.
இதனால் அர்ச்சகர்களின் பொறாமை ஆதரித்தது. ஒருமுறை, அருகிலிருந்த தீவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அர்ச்சககள் அனைவரும் புறப்பட்டனர். வேண்டுமென்றே அவர்கள் பெண் அர்ச்சகரை அழைக்கவில்லை. ஆனால், படகில் ஏறியபோது அந்தப் பெண்மணி படகில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர். ''இங்கேயும் இது வந்துவிட்டதா?'' என்று அவர்கள் முணுமுணுத்தனர். தீவை அடைவதற்கு இரண்டு மூன்று மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். சுமார் ஒருமணி நேரம் கழிந்தபோது படகு நின்றது. படகின் சொந்தக்காரன் பரிதவிப்புடன், ''நாம் நன்றாக மாட்டிக்கொண்டோம். டீசல் தீர்ந்துவிட்டது. போதுமான அளவு டீசல் எடுத்துவர நான் மறந்து விட்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வேறு படகு எதுவும் வருவதாகவும் தெரியவில்லை'' என்றான். செய்வதறியாமல அனைவரும் திகைத்தனர். அப்போது அந்தப் பெண் அர்ச்சகர் முன்வந்து, ''சகோதரர்களே, கவலை வேண்டாம். நான் சென்று டீசலுடன் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் படகிலிருந்து இறங்கி, கரையை நோக்கி நீரின்மீது நடக்க ஆரம்பித்தார். இந்தக் காட்சியைக் கண்ட அர்ச்சகர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். சட்டென சுதாரித்துக்கொண்ட அவர்கள் பரிகாசம் நிறைந்த குரலில், ''பார்த்தீர்களா, அவளுக்கு நீச்சல் கூடத் தெரியவில்லை'' என்றனர்.
இதுவே பெரும்பாலான ஆண்களின் மனோபாவம். பெண்ணின் சாதனைகளை அலட்சியமாகக் காண்பதும், அவற்றைக் குறைகூறுவதும் ஆணின் இயல்பாகும்.


ஆணின் கையில் சிக்கியுள்ள வெறும் அலங்காரப் பொருளல்ல பெண். ஆண், ஒரு பூந்தொட்டியில் வளர்க்கும் செடியைப் போல் பெண்ணை ஆக்கி வைத்திருக்கிறான். ஆணுக்கு உணவு தயாரிப்பதற்கு மட்டும் பிறந்தவளல்ல பெண். பெண்ணை முன்னேற அனுமதிக்காமல், அவளைத் தனது விருப்பத்துக்கு ஏற்ப இயக்ககூடிய டேப்ரெக்கார்டரைப் போல் ஆக்கவே ஆண் முயற்சி செய்கிறான்.

உண்மையில் எல்லா ஆண்களும் பெண்ணின் ஒரு பாகமே. எல்லாக் குழந்தைகளும் தாயாரின் உடலின் ஒரு பாகமாகவே கர்ப்பப்பையில் வளர்கின்றன. ஒரு குழந்தைக்குப் பிறப்பளிப்பதைப் பொருத்தவரை, அவனுக்கு ஒரு நிமிட வேலை. அவ்வளவுதான். அத்துடன் ஆணின் பங்கு முடிந்துவிடுகிறது. ஆனால், பெண் அதனை ஏற்று, அதனைத் தனது உடலின் அம்சமாக மாற்றி, ஜீவனாக உருவாக்குகிறாள். அது வளர்வதற்குத் தேவையான சூழ்நிலையை தனக்குள் அவள் ஏற்படுத்திக் கொடுக்கிறாள். அதன்பிறகு, அதற்குப் பிறப்பளித்து, கவனத்துடன் வளர்க்கவும் செய்கிறாள். பெண் தாயாவாள்.

உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பெண்களாகும். ஆகவே, பெண்ணுக்கு உரிய இடமும், சுதந்திரமும் அளிக்கவில்லை எனில், அது உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல.

ஆரம்பம் நன்றாக இருந்தால் இடைப்பகுதியும் முடிவும் சரியாக இருக்கும். தவறான அடிப்படையில் ஆரம்பிக்கும் காரணத்தால்தான் பெண் பல நலன்களை இழக்க நேரிடுகிறது. உதாரணமாக, ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியே. அதற்கு ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இன்று இந்த ஆரம்பம் தவறாகிவிட்டது. அதைக் குறித்து உருவான கருத்தும் தவறாகிவிட்டது. ஆரம்பத்தை விட்டுவிட்டு, முடிவை நோக்கி அவள் ஒரேடியாகத் தாவ முனைகிறாள்.
வாழ்வின் அஸ்திவாரம் எது? பெண்ணைப் பெண்ணாக்குவது எது? அவளுடைய அடிப்படைக் குணங்களான தாய்மை, அன்பு, கருணை, பொறுமை போன்றவையாகும். பெண்ணின் அடிப்படை தத்துவம் தாய்மையாகும்.

தாய் ஆவதும், மனைவி ஆவதும், கணவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நண்பனாவதும் அவளுக்கு எளிதான செயலாகும். இல்லற வாழ்வையும், உத்யோக வாழ்வையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல் இருக்க அவளால் முடியும். அலுவலகத்தையும், பதவியையும் வீட்டிற்குக் கொண்டு வருவதும், அதன் விளைவான உணர்ச்சிகளை மனைவியிடமும், குழந்தைகளிடமும் வெளிப்படுத்துவதும் பெரும்பாலான ஆண்களின் இயல்பாகும்.

சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் திறமையைப் பெண்ணுக்கு அளிப்பது அவளுடைய தாய்மையின் சக்தியாகும். அந்தப் பண்பில் அவள் எந்த அளவுக்கு மனம் ஒன்றுபடுகிறாளோ, அந்த அளவிற்கு அவளுக்குள்ளே ஆற்றல் பெருகும். அவளது குரலை உலகம் உற்றுக் கேட்க ஆரம்பிக்கிறது.

இன்றைய உலகில் போலித்தன்மை ஒரு தொத்துவியாதி போல் பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பெண்மையும், தாய்மையும் கலப்படத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஆணின் முழு மனதுடன் கூடிய ஒத்துழைப்பு அவளுக்குத் தேவை.
ஆணும், பெண்ணும் பரஸ்பரம் உதவினால் இன்று உலகில் காணும் அமைதியின்மையும், சமாதான மின்மையும், போராட்டமும், யுத்தமும் பெருமளவில் குறையும். இவ்வாறு உதவும் மனநிலை இன்று தாறுமாறாகிக் கிடக்கிறது. இதை நாம் மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் பிரபஞ்சத்தின் சமநிலையைச் சீராக்க முடியும்.

மனிதப் பண்பாடு உருவாகி, ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து விட்டன. ஆயினும், நாம் இன்றும் பெண்ணுக்கு இரண்டாம் இடத்தையே அளிக்கிறோம். ஆண் உருவாக்கிய கட்டுப்பாடுகள் எனும் வேலிக்குள்ளே பெண்களின் திறமை மொட்டுகள் விரியாமல் வாடிப்போகின்றன.
சமூகத்தின் சட்ட திட்டங்களும், மத ஆசாரங்களும் அவை தோன்றிய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே உருவாயின. பெண்ணின் வளர்ச்சிக்காக அன்று உருவாக்கப்பட்ட அந்த சட்ட திட்டங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டன. அதுமட்டுமல்லாமல், அவை பெண்ணின் இன்றைய வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கின்றன.

ஆண், அவனுக்காகப் படைத்த ஒரு உலகத்தில்தான் இன்று பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த உலகத்திலிருந்து வெளியில் வந்து, அவள் தனக்குரிய தனித்தன்மையை நிறுவ வேண்டும். அதேசமயம், பெண் விடுதலை என்பது, அவள் மனம்போன போக்கில் வாழ்வதற்கும், நடந்துகொள்வதற்கும் உரிய சுதந்திரமல்ல. பெண்ணின் உயர்வு அவளது மனதிற்குள்ளிருந்தே ஆரம்பமாக வேண்டும்.

ஆண்களைப் போல் நடந்துகொள்ள முனைவதால் இது கிடைக்காது. பெண்ணிடம் சக்தி விழிப்புற வேண்டுமெனில், முதலில் தனது பலவீனங்களை அவள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
மாறாக, தனது சுதந்திரத்திற்காகப் போராடும் பெண், தன்னிடமுள்ள பெண்மையையே இழக்கின்ற குறைபாட்டை இன்று பல இடங்களில் காண்கிறோம். இது உண்மையான பெண் விடுதலை ஆகாது; அது, பெண்ணினத்திற்கும், சமூகத்திற்கும் தோல்வியாகவே மாறும். பெண்ணும் ஆணைப்போல் ஆகிவிட்டால், உலகிலுள்ள பிரச்னைகள் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ஒருவிதத்தில், பெண்ணின் உலகை மிகக் குறுகியதாக்கியவள் பெண்ணே ஆவாள். உடல் அலங்காரத்திற்கும், புற அழகிற்கும் அளவற்ற முக்கியத்துவம் அளிக்கும் போது, ஆண் உருவாக்கிய கூட்டிற்குள் அவள் தானே சிக்கிக் கொள்கிறாள். சமூகத்திலிருந்து எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூகத்திற்கு எதைக் கொடுக்க முடியும் என்று பெண் சிந்திக்க வேண்டும். இந்த மனோபாவம் ஏற்பட்டால் அவளால் நிச்சயமாக முன்னேற முடியும்.
தாய்மை என்பது குழந்தைகளை ஈன்ற பெண்களிடம் மட்டும் காணப்படும் பண்பல்ல. எல்லாப் பெண்களிடமும், எல்லா ஆண்களிடமும் இயல்பாகக் காணப்படும் உள்ளார்ந்த பண்பாகும். அது மனதின் ஒரு பேருணர்வாகும் - அது அன்பாகும். அன்பு நம்முடைய சுவாசத்திற்கு நிகரானது. ''நான் என் உற்றார், உறவினர் முன்னால் மட்டுமே சுவாசிப்பேன். வேறு யார் முன்னாலும் சுவாசிக்க மாட்டேன்'' என்று யாரும் சொல்வதில்லையே? அன்பு அல்லது தாய்மை என்பது அதுபோன்றதுதான். அதற்கு எல்லைகள் இல்லை. பேத உணர்வில்லை.
இனி வருங்காலம் பெண்களின் பொற்காலமாக ஆக வேண்டும். பெண்மையின் நற்பண்புகளுக்கும், தாய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஒரு உலகை உருவாக்கும் முயற்சி வெற்றியடையும். இது நம்மால் இயலாத காரியமல்ல.

கலாநிதி சந்திரலேகா வாமதேவா
நன்றி - உயிர்ப்பு

Mittwoch, Februar 18, 2004

பெண் கல்வி

கந்தர்

அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இதற்காக பல தந்திரங்களைக் கையாண்டுள்ளது. பால்ய விவாகம் கற்புக் கோட்பாடு தாய்மையைக் கொண்டாடுவது குழந்தைபேறு என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்தது. இது பெண்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. அவர்களுக்கு சுமையாக மாறியது.

குறிப்பாக பால்ய விவாகம் அறிவைத் தரும் கல்வியைப் பெறுவதிலிருந்து பெண்ணைப் பெரிதும் விலக்கி வைத்துவிட்டது. வளர்ந்த இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் புத்தமதத்திலும் சமணசமயத்திலும் சந்நியாசிகளாகச் சேர்வதைத் தடுப்பதாகத்தான் இந்தியச் சமூகத்தில் பால்ய விவாகம் கொண்டுவரப்பட்டது என எழுதுகிறார் பி. குப்புசாமி (Social change in India)

இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கிக் கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையே அழகு என்றும் புனைந்துவிட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்துவிட்டது.

இத்தகைய இந்தியப் பெண்நிலைமை இந்தியாவை ஆண்ட ஐரோப்பியரின் குறிப்பாக ஆங்கிலேயரின் 'கல்வி கொள்கையினால்' பெரிதும் மாறத் தொடங்கின.

ஆங்கிலேயர் கல்வியை ஜனநாயகப்படுத்தினர். ஜாதி மதம், பால் வர்க்கம், இனம் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என அறிவித்தனர். அதுவும் ஒரே மாதிரியான கல்வி என்றனர். இந்த ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களும் சிந்தனைப் புரட்சிகளும் ஏற்பட வழிகோலிற்று.

வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சமய போதகர்கள் மிஷனரிகள் பல்வேறு சீர்த்திருத்த சமூக பணிகளை மேற்கொண்டன. அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.

பெண்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூகச் சீர்த்திருத்தவாதிகளும் அவர்களோடு இணைந்து பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்விக்கூடங்கள் திறந்துவிடப்பட்டன.

ஆங்கில ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியவர்கள் குடியேற்ற நிர்வாகிகளும் சமயக் குழுவினர்களுமாவர். ஆயினும் கல்விமுறை எவ்வாறு வளர்ச்சியுற வேண்டும் என்பது பற்றி அவர்களிடத்து ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

கிறிஸ்தவ சமய போதகர்கள் மாநிலவாரியாகப் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களை நிறுவத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தரங்கைவாசத்தில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை தொடங்கினார்கள்.

சென்னையில் 1715ல் முதல் ஆங்கிலோ- இந்தியப் பெண்கள் பள்ளியான 'புனித மரியாள் ஷேரிட்டி பள்ளி' தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் புரட்டஸ்டாண்ட் மதப்பிரிவைச் சார்ந்த ஏழை மாணவ மாணவிகள் சேர்ந்து பயில ஆரம்பித்தனர். அவர்களில் பதினெட்டு பேர் ஆண்கள். பன்னிரண்டு பேர் பெண்கள். 1821 ம் ஆண்டு இப்பள்ளிக் குழுவைச் சார்ந்த பள்ளிகளில் 654 பெண்களும் 4290 ஆண்களும் கல்வி பயின்றார்கள். அவர்கள் யாவரும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலியில் ஜேம்ஸ் ஹக் என்பவர் 1816ம் ஆண்டில் பன்னிரண்டு பள்ளிகளை நிறுவினார். அவற்றுள் மூன்று பெண்களுக்காக தொடங்கப்பட்டது. நாசரேத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான பள்ளியே சென்னை மாகாண அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகும்.

1823ம் ஆண்டு நாகர்கோயிலில் தொடங்கப்பட்ட பள்ளியில் 1827ம் ஆண்டு ஐம்பது மாணவிகள் பயின்றனர். 1845 ஆம் ஆண்டு முதன்முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இப்பள்ளியே பின்னர் பெண்கள் பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாகத் திகழ்ந்தது.

1854 இல் சென்னை மாநிலத்தில் 256 பெண்களுக்கான பள்ளிக்கூடங்களும் 7878 மாணவிகளும் இருந்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு சடங்கான பின்பு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1891-92 இல் 3 லட்சம் பள்ளி சிறுமிகளில் 100க்கு இரண்டு பேர் மட்டுமே சடங்கான பின்பும் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கல்வியும் எப்படி நல்ல மாணவியாக, நல்ல தாயாக குடும்பத்தை சுத்தமாகப் பேணுபவளாக வாழ்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுத்தது.

கல்விச் சீர்த்திருத்தங்கள் செய்வதற்கான நோக்கத்தோடு அரசு கல்வி தொடர்பான பல விபரங்களை சேகரிக்கத் தொடங்கின. சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். தாமஸ் மன்றோ அவ்வாறு பல தகவல்களை சேகரித்து 1826 ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்படி மொத்த மக்கள் தொகையான 1,34,76,923 பேரில் 1,84,110 ஆண்களும், 4,540 பெண்களும் கல்வி பயின்று வந்தனர்.

அதே காலத்தில் வங்காளத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி அம்மாகாணத்தில் பெண்கல்வி சிறிய அளவில்கூட இடம் பெற்றிருக்கவில்லை என்று தெரிய வருகிறது.

1854ம் ஆண்டு சார்லஸ் வுட் என்பவர் இந்திய கல்விநிலை தொடர்பான அறிக்கை ஒன்றினை அரசுக்கு சமர்ப்பித்தார். அதுவே சார்லஸ் வுட் டெஸ் பாட்ச் என்னும் பெயரில் பிரசித்தம் பெற்றது. இவ்வறிக்கை ஆண் கல்வியைக் காட்டிலும் பெண் கல்வியின் வாயிலாகச் சமுதாயத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை அரசுக்கு உணர்த்தியதோடு பெண்கல்விக்குப் போதிய ஊக்கமளிக்கவும் வேண்டியிருந்தது. இவ்வறிக்கையின் அடிப்படையில் மகளிர் பள்ளிக்கூடங்கள் பலவற்றுக்கும் அரசுநிதி உதவியளித்தது. அதன் வாயிலாக பெண்களின் கல்வி மேம்பாட்டுக்கு சிறந்ததொரு அடித்தளம் அமைக்கப்பட்டது. தன்னார்வ குழுக்களும் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களுக்கும் பல இடங்களில் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவிச் சேவை செய்யலாயினர்.

1882 இல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியக் கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைத் திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்குத் தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக் குழு தெரிவித்துள்ளது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக இக்கல்விக்குழு பின்வரும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

1. பெண் கல்விக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

2. பெண்கள் பள்ளிகள் மற்றும் அநாதை விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவைஅளிக்கும் போது அந்நிறுவனங்களுக்கு சமய வேறுபாடின்றி உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும்.

3. ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

4. தொடக்கப்பள்ளி நிலையிலும் ஆண்களின் கல்விமுறைப் பாடத்திட்டத்தைக் காட்டிலும் பெண்களின் கல்விமுறைப் பாடத்திட்டம் எளிமையாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதாகவும் வேலைவாய்ப்பு அளிப்பதற்குரியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. கல்விக்காகக் கொடுக்கப்படும் உதவித் தொகையை தேர்வுக்குப்பின் கொடுப்பதன் மூலமாக பெண்கள் மேலும் கல்வியைத் தொடர வாய்ப்பாக அமையும். தவிர பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களின் கல்விக்காக தனிநிதி ஒதுக்க வேண்டும்.

6. பெண்கள் பள்ளிகள் தகுந்த இடங்களில் நிறுவப்பட வேண்டும். தாய்மொழி மற்றும் ஆங்கிலம் வாயிலாக கல்வி புகட்டப்பட வேண்டும். விடுதிகளோடு தொடங்கப்படும் பெண்கள் பள்ளிகளுக்கு சிறப்பான முறையில் நிதியுதவி அளிக்கவேண்டும்.

7. இந்தியக் கலாச்சாரச் சூழலில் ஆண்-பெண் இணைந்து கல்வி கற்கும் நிலை சமுதாயத்திற்கு ஏற்புடையதாகாது என்பதால் பால்வாடிகள் தவிர ஏனைய கல்விக்கூடங்களில் கூட்டுக்கல்வி முறைக்கு ஆதரவு மறுக்கப்படுதல் வேண்டும். ஆனால் பெண்கள் பள்ளிகள் அமைக்க முடியாத −டங்களில் மட்டும் கூட்டுக்கல்வி முறை தொடரலாம்.

8. அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்குப் பதிலாக பெண் ஆசிரியர்களையே நியமிக்கப்பட வேண்டும்.

ஹாண்டர் குழு ஆண் பெண் இரு பாலார்க்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. உயர்சாதிப் பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் சனனா (Zenana) முறையையும் பரிந்துரைத்துள்ளது.

1881 ஆம் ஆண்டில் சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்களான 1,57,49,588 பேரில் 39,104 பெண்கள் படித்துக் கொண்டிருந்ததாகவும் 94,571 பெண்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களென்றும் அறியமுடிகிறது.

இந்தியா முழுமையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 2,13,428 பெண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தார்களென்றும் தெரிய வந்தன. இந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருந்த போதிலும் 1878 ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த 78,678 பெண்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் வியத்தகு முன்னேற்றம் என்றே கூறலாம்.

டாக்டர் குக்கான் என்பவர் 1889-90 ஆம் ஆண்டின் கல்வி அறிக்கையில் பெண்களின் ஒட்டுமொத்தக் கல்வியின்மை நிலையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவ முன்வந்தனர்.

இதன்பின்னரே பெண்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனாலும் இந்தியாவின் கல்விமுறை பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமூகப் போக்கை வலியுறுத்திப் போவதாகவே இருந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கல்விக்காக அமைக்கப்பட்ட குழுக்கள் பலவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.

ஆதாரம் - ஆறாம்திணை