Mittwoch, August 13, 2003

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்.

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்களின் ஆளுமை

பெண்கள் காலம் காலமாக அடக்குமுறைக்குள்ளாவது பற்றியும், உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியும் இன்று பல்வேறு தரப்பினரும் விழிப்படைந்து வருகின்றனர். இதனையொட்டிய பல திட்டங்களும், செயற்பாடுகளும் தனிநபர்களாலும், சிறு குழுக்களாலும், நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் இவ விடயத்தில் சற்று விழிப்படைந்துள்ளது.
பால்நிலைக்கல்வி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பனவும் நடந்தேறி வருகின்றன. இதனால் பெண்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளதுடன், தமது உரிமைகளைப் பெறும் வகையில் தம்மை முன்னேற்றவும் துணிந்துள்ளனர். மாற்றங்கள் படிப்படியாக நிகழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் இணைந்து போர்க்களம் செல்கிறார்கள் என்ற விடயம் தமிழீழ எல்லைக்குள் வாழ்பவர்கள் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் ஏன் உலகநாடுகள் முழுவதும் அறிந்தவோர் விடயமாகும்.
ஆனால் இவர்களின் வளர்த்தெடுப்புமுறை பற்றியோ, பயிற்சி பற்றியோ, களத்தில் போரிடும் திறன் பற்றியோ இவர்களின் ஏனைய செயற்பாடுகள் பற்றிய ஆழ அகலங்கள், ஒட்டுமொத்த ஆளுமைவிருத்தி பற்றிய விடயங்கள் வெளித்தெரியாத தொன்றாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் வடக்கு, கிழக்கிலுள்ள சிலஇடங்களில் நடத்திய தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வில் முதன்முறையாக தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்த விளைந்துள்ளனர்.
இந்நிகழ்வு விடுதலைப்புலி உறுப்பினராக இணைந்து பல சாதனைகள் செய்து முதல் வீரச்சாவடைந்த 2ம் லெப். மாலதியின் நினைவு நாளான ஒக்டோபர் பத்தாம்திகதி நடாத்தப்பட்டது. இந்நாளையே விடுதலைப் புலிகள் தமிழீழ பெண்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இத்தினம் பற்றிய செய்தியே இதுவரை காலமும் பலராலும் அறியப்படாதிருந்தது.
10.10.2002 அன்று கிளிநொச்சியில் நடந்த மகளிர் பேரெழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டதில் என்னால் அவதானிக்க முடிந்தவற்றையும், ஏற்பட்ட மனப்பதிவுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.
தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வின் முதலாவது நிகழ்வான இராணுவ அணிவகுப்பே பார்ப்போரை திக்குமுக்காடச் செய்து விட்டது. ஏனெனில் அத்தனை நேர்த்தியும் வேகமும் கொண்டதாய் ஒவ வொரு அணிகளும் சென்று மறைந்தன. புகைப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் இவற்றைத் துரத்திக்கொண்டு தமது கமறாத்திரைகளுக்குள் அடக்கப் படாதபாடுபட்டனர்.
மகளிரின் பதினொரு படையணிகள் இதில் பங்கேற்றன. இவையனைத்தும் ஓர் அடிப்படைத்தளத்துள் நின்றிருந்த போதும் ஒவ வொன்றும் தமக்கான தனித்துவங்களைக் கொண்டிருந்தன. அணிந்திருந்த சீருடைகளிலும், பிடிக்கப்பட்ட கொடிகளிலும், சின்னங்களிலும் ஒவ வொரு அணிகளும் தம்மை வேறுபடுத்திக் காட்டின.
ஓர் இராணுவ அணியின் வடிவமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், பயன்படுத்திய மேலைத்தேயபாண்ட் வாத்திய இசைக் கருவிகளுக்கேற்பவும்
"புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகமென்றே நீ கூறு. "என்ற
விடுதலைக் கானங்களிலொன்று அணியின் வேக நடையின்போது இசைக்கப்பட்டது. பின்னர் மைதானத்துள் நடந்தமெதுவான அசைவுகளுக்கு 'எங்கள் தோழர்களின் புதைகுழியில்' என்ற பாடல் பொருத்தமாக அமைந்திருந்தது.
சிறு சிறு இடைவெளிகளில் கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பமான இவ வணிகள் கிளிநொச்சி மத்திய மைதானத்துள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து பெரும் பரப்பிலான இடத்தினைப் பிடித்து பெரும் இசைஎழுப்பி, பெரும் நகர்வினைப் புலப்படுத்தியது. இது சூழ நின்றிருந்தோரை பெரும் பரபரப்பிற் குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கையில் ஏ-9 பாதையூடான இராணுவ நகர்வினை எதிர்த்து மன்னகுளத்தில் பெண் போராளிகள் சமர் செய்ததன் 'மாதிரிச்சமர்' நிகழ்வொன்று நிகழ்த்திக்காட்டப்பட்டது.
பற்றைகளுக்குள்ளும், மரங்களுக்குள்ளும் நிகழ்த்திக் காட்டப்பட்ட இச்சமர் பெரும் வெடிச்சத்தங்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் கண்முன்னே காண்பித்தது.
மிகவும் தத்ரூபமான முறையில் நிகழ்த்தப்பட்ட இம்மாதிரிச்சமர், தமிழீழப் பெண்கள் படையணியின் இராணுவ வளர்ச்சியினையும் பலத்தினையும் காட்டி நின்றது. இது பெண்களின் உடல் உள ஆளுமை விருத்தியின் எல்லையினைக் கோடு காட்டியது.
பொதுவாக ஆசிய மரபில் வந்த பெண்கள் பயந்தவர்கள், மென்மையானவர்கள், நிதானமற்றுக் குழம்புபவர்கள், எதற்கும் தயங்கி நிற்பவர்கள், ஆண்களில் தங்கியிருப்பவர்கள், இலகுவில் அழும், சிரிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்ற கருத்துருவாக்கம், கணிப்பீடு அனைத்தையும் தகர்த்தெறியும் வகையில் தமிழீழப் பெண்கள் படையணி பெண்கள் உடல், உள ஆளுமை கொண்டுள்ளனர் என்பதனை இச்சமர் திட்டவட்டவமாக காட்டி நின்றது.
இவர்கள் தமிழீழ எல்லைக்குள் வாழும் பெண்களுக்கு மாத்திர மல்ல, உலகிலுள்ள பெண்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கையினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடியவர்கள் என்றால் அதில் மிகைப்பாடு ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.
மேலும் தொடர்ந்து நிகழ்ந்த கலைநிகழ்வுகள் மூலம் இவர்கள் பல்வேறு விடயங்களை மக்களிடம் முன்வைத்திருந்தனர். குறிப்பாக சாதாரணமாயிருந்த பெண்களாகிய தாம், காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் அறிந்து போராட்டத்தில் இணைந்தது பற்றியும் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தம் வளர்ச்சி நடந்தேறியது பற்றியும் குறிப்பிட்டனர்.
ஓர் இன ஒடுக்குமுறையில் ஆக்கிரமித்தல், ஆளுதலின் குறியீடாக சிங்களப் பேரினவாதம் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை பற்றியும் இவ விடத்தில் பெண்கள் போர்க்களம் செல்லும் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
மேலும் தாம் சும்மாயிருந்து சூம்லு}சூம் காளியென்று தாயத்துக் கட்டி அந்நியப் பேய்களை விரட்டவில்லை. நித்திரையற்ற இரவுகளை நிரந்தரமாக்கி உடலிலும், உள்ளத்திலும் பல வலிகளைத் தாங்கி, தியாகங்களை செய்து பெற்றதே இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை என்றனர்.
எனினும் நாம் மிகவும் சாதாரணமானவர்கள் எங்களைப் பற்றிய அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள் என்றனர்.
இக்கருத்தினை நிறுவுதற்போல் கூடியிருந்த பெருந்திரளில் சில விடயங்களை அவாதானிக்க முடிந்தது. சீருடையில் இருந்த பெண் போராளி ஒருவர் துவாயால் ஏந்திய ஒரு குழந்தையை மடியில் வைத்து பால் பருக்கிக் கொண்டிருந்தாள். பின்பு வாரியெடுத்து முத்தமிட்டு தோள்களில் போட்டுக்கொண்டாள்.
அது பெற்ற பிள்ளையா பிறர் பிள்ளையா என்ற ஆய்வுக்கு நான் போகவில்லை. அவளிடம் தாய்மை, அன்பு, பாசம் வெளிப்பட்டது. இதனை சீருடையில் கண்டபோதுதான் ஆச்சரியமாயிருந்தது. இருவேறு உன்னத நிலைகள் ஒருங்கே சங்கமித்தது. எனினும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை இல்லை என்பதை புரிய முடிந்தது. இதனைவிட பெண் போராளிகள் சிலர் திருமணமாகி தம் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.
சீருடையில் நின்ற பெண் போராளிகள் பலர் எழுச்சி நிகழ்வுக்கு வந்திருந்த பலருடன் மகிழ்வாக உறவாடுவதைக் காணமுடிந்தது. சிறு பிள்ளைகளுடன் விளையாடியதையும் காணமுடிந்தது.
கலை நிகழ்வுகளிலும் பெண் போராளிகள் தமது திறமைகளை நிலைநாட்டினர். மிக அழகாக ஆடவும் பாடவும் தெரிந்திருந்தனர்.
களத்தில் நிற்கும் போராளி பரதநாட்டியம் ஆடுவது என்பது போராளி பற்றிய பொதுவான நினைப்பிற்கு முரணானது. சீருடையற்று பாத்திரங்களுக்கேற்ப ஆடையணிந்து ஆடிய போது இவர்கள் போர்வீரர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. சீருடையுடன் வரும் பாத்திரங்கள் பல பாவங்களை அபிநயித்து நடனமாடிய போதுதான் போர்வீரர்கள் பற்றிய புதிய பரிமாணம் பெறப்பட்டது.
மற்றும் இப்பேரெழுச்சி நிகழ்விற்கான ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. இந் நிகழ்வுக்காக ஏலவே கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், கிளிநொச்சி மத்திய மைதானத்தில் கூடும் ஒன்றரை இலட்சம் மக்களினதும் வீதிக் கட்டுப்பாடுகள், வாகனப் போக்குவரத்து ஒழுங்குகள், இரவு நிகழ்வு சூழலில் மின்விளக்கு வசதிகள், மைதான அலங்காரங்கள், மைதானத்தில் இடப்பட்ட பெரிய மேடையும் இடமும், மேடை வடிவமைப்பு, இசைக்குழுவினருக்கான தனிமேடை, முழுப்பார்வையாளருக்கும் நிகழ்வுகள் தெரியும் வகையில் வைக்கப்பட்ட பெரும் திரைகள், மேடையின் இரு மருங்கிலும் நிகழ்ச்சி செய்வோர் கூடும் தனியான தகரக்கொட்டகைகள்,
மைதானத்தில் மக்கள் ஒழுங்காக நிகழ்வுகளுக்கேற்ற வகையில் அசையும் முறைக்கான கட்டுப்படுத்தல் கோடுகள், குடிநீர் தாங்கிகள், மலசலகூட வசதிகள், ஒலி ஒளி ஏற்பாடுகள், நிகழ்ச்சி அறிவிப்புக்கள், ஊடகவியலாளர் ஆசன ஒதுக்கீடுகள், சிற்றுண்டி, குடிபான பரிமாற்ற ஒழுங்குகள் என்பன மிக நேர்த்தியாக மிக வசதியாக காலக்கிரமத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலை யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட பிரதேசத்தில், வளங்களற்ற பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தல் என்பது பெரும் சவாலான விடயமே. இது மகளிர் படையணியின் மற்றுமொரு பக்கத்தினை, பொதுவிடயங்களை செயற்படுத்தும்திறனை, முகாமைத்துவதிறனைக் காட்டியது.
இப்பேரெழுச்சி நிகழ்வினை பெண்போராளிகளே பெரும்பாலும் நின்று நடத்திய போதும், விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்போராளிகளும் இணைந்தே இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இவர்களிடையே ஆண், பெண் படையணி என்ற பிரிக்கப்பட்ட மனப்பாங்கு கிடையாது. இரு படையணிகளும் இணைந்தே பல காரியங்களை சாதித்து வருகின்றனர்.
ஆரம்ப மகளிர் படையணிக்கான பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஆரம்ப கடற்புலி பெண் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் "ஆரம்பத்தில் கடற்படைத்தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை ஆண்போராளிகளே வழங்கினர். பின்னர் அவர்களிடம் பயிற்சி பெற்றுசிறப்புத் தளபதியாயிருந்த லெப்.கேணல் நளாயினி அக்கா என்பவரே எமக்கான பயிற்சிகளை வழங்கினார். அதன் வழியே பயிற்சிகள் தொடரப்படுகின்றன" என்றார்.
பெண்கள் இயல்பாகவே தொழில்நுட்ப அறிவும் நாட்டமும் குறைந்து காணப்படுகின்றனர். ஆண்களே இவ விடயங்களில் ஆர்வமாக விளங்குகின்றனர். காரணம் காலம் காலமாக ஆண்கள் வெளியில் சென்று பல்வேறு தொழில்முறைமைகளை பயின்றுவர பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளையும் வீட்டையும், சுற்றுப்புறச் சூழலையும் பராமரித்துக்கொண்டு ஓர் மாறுபாடற்ற வாழ்வு வாழ்ந்து வந்தமையாகும். ஆனால் கடற்புலி பெண் உறுப்பினர்கள் சிலர் இவ வெழுச்சி நிகழ்வில் தாக்குதல் படகொன்றினை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து அதன் இயக்கம் பற்றிய விளங்கங்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பெண் உறுப்பினர்கள் தாக்குதல் படகு தயாரிப்பது பற்றியும், அவற்றை இயக்குவது பற்றியும் தொலைநோக்கு தொடர்பு அறிதல் பற்றியும், விமான எதிர்ப்புப் பீரங்கி, கடற்தாக்குதலுக்குரிய 50 கலிபர்கள் என்பவற்றின் இயக்கு முறைகள் பற்றியும், ஆங்காங்கே கொண்டுள்ள தகவல்மையங்கள் பற்றியும், இலக்குகளை இனம்காணல், கணித்தல், குறிவைத்தல் என்பவை பற்றியும், கட்டளை அதிகாரியின் செயற்பாடு பற்றியெல்லாம் பேசிய போதும் படகில்நிற்கும் தாம் ஒவ வொரு வரும் படகின் ஒவ வொரு விடயம் பற்றியும் கூறிய போது காலம் காலமாக பெண்கள் வளர்க்கப்பட்ட மரபில் வளர்ந்தவர்கள் தானே இவர்கள். இவர்களிடம் இத்தனை திறன் எப்படி வந்தது என்றே எண்ணத்தோன்றியது.
இவர்களிடம் "தற்போது நீங்கள் தாக்குதல்படகு, ஆயுதங்களைப் பற்றிய விடயங்களை வெளியிடுகிறீர்கள். எதிரி இதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தக்கூடும் என்ற அச்சம் இல்லையா?" எனக் கேட்டபோது.

கடற்புலி ஆரம்ப உறுப்பினரும், தொலைநோக்கு தகவல் அறிபவருமான பெண் ஒருவர் மிக நிதானமாகவும் சிறு அலட்சியமாகவும் சிரித்துவிட்டு "எமது படகுகளையும், ஆயுதம் பற்றியும் அறியலாமே தவிர எமது போர் முறைகளையோ, உத்திகளையோ அறியமுடியாது. அவற்றையும் சரியான மனவலிமையையும் தலைவர் எமக்குத் தந்துள்ளார். அவை இருக்குமளவும் எமது வெற்றி நிச்சயமானது" என்றாள்.
தமிழீழ பெண்கள் படையணியினது மிகுந்த கருத்தியல் தெளிவினையும், நிதானமான போக்கினையும் கொண்டு விளங்குகிறது என்பதனை இவர்களின் உரையாடல்கள் மூலமும் மகளிரணி அரசியல் பொறுப்பாளரான தமிழினி அவர்களின் உரை, பேட்டி என்பவற்றிலிருந்து புரியமுடிகிறது.
இவர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற திறமையினையும், தமது செயற்பாடுகளைத்தாமே முன்னெடுக்கும்நிலையிலும் கட்டமைக்கப்படுவதனை ஒரு சில விடயங்கள் சுட்டிக்காட்டுகிறது.
இதில் மகளிர்படையணி உறுப்பினர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்திகளாக அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கின்றனர் என்பதே ஒரு முக்கிய விடயமாகும். மற்றும் பெண் போராளிகள் நடத்தும் பத்திரிகை-சுதந்திரப்பறவை, சஞ்சிகைகள் இங்கு வெளிவருவதும் பெண்களே தீர்மானிக்கும் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதனையும் தம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் தமது கொள்கைகளை பிரகடனப்படுத்தவும், வளர்க்கவும் உதவியாக அமையும்.

இன்று இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்களது செறிந்த வியாபாரமோ-அதோனோடொட்டிய காலாச்சாரமோ, பல்வேறு ஊடக கலாச்சாரமோ, மலிகைப்படங்களின் பாதிப்போ இடம்பெறாத ஒரு தேசம் என்றால் அது வன்னிப்பெருநிலப் பரப்பாகவே இருக் கிறது.
இதனால் இங்கு இருக்கும் ஒவ வொரு விடயங்களும் தனித்துவமானதாகவும், சூழல்சார்ந்ததாகவும், நிலைத்து நிற்பதாகவும் வலுவுடன் விளங்குகிறது. இவ வகையில் தமிழீழப் பெண்களும் அவர்கள் வளர்த்தெடுப்பும் ஆரோக்கிய மானதாக அமைந்துள்ளது.

Keine Kommentare: