Montag, Mai 30, 2005

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா!?

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன.

ஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?

கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது பட்டிமன்றங்களும், ஒட்டுவெட்டுக்களும் பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன.

அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம். அவனுக்குத் துணை தேவையாம்.

ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியைக் கழற்றி, வெள்ளைச் சேலை உடுத்த வைத்து, "இனி உனக்கு ஆசாபாசம் எதுவுமே வரக்கூடாது" என்று சொல்லி, மூலையில் தள்ளி விடுகிறார்கள். ஏனென்றால் அவள் ஒரு பெண்ணாம். அவளுக்குத் துணையே தேவையில்லையாம். ஆசையே வரக் கூடாதாம். இனி அவள் இறக்கும் வரை தனிமைத் தீயில் வெந்து துடிக்க வேண்டுமாம்.

இது என்ன நியாயம்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று இப்படி வெவ்வேறு கலாச்சாரத்தையோ பண்பாட்டையோ உருவாக்கியது யார்?

பெண் ஒன்று பிறந்து விட்டாலே பொன் வேண்டும், பொருள் வேண்டும், அவளை நல்லவன் கையில் கொடுத்து விடவேண்டும். என்று சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள் பெற்றோர்கள். தமது ஆசைகளைக் குறைத்து, தேவைகளைத் தவிர்த்து அந்தப் பெண்பிள்ளைக்காகச் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். முக்கியமாக ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகி விடுகிறார்கள்.

ஆசை ஆசையாகப் பெண்ணைப் பெற்று விட்டு அவளது ஒவ்வொரு வளர்ச்சியிலும் களிக்க வேண்டியவர்கள், நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வாழ்வது போல தவிப்புடன் வாழ்கிறார்கள். வாழ வைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்களுக்கே இந்தக் கதி என்றால், நான்கைந்து பெண்களைப் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை.

ஏதோ - ஒரு பெண் பிறந்ததே - இன்னொருவன் கையில் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டு, அவனிடம் அடங்கி, ஒடுங்கி, அவனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் அடித்தாலும், உதைத்தாலும் அக்கம் பக்கம் தெரிய விடாது அவன் மானத்தைக் காத்து, அவனைத் தாய்மையுடனும், தோழமையுடனும் கவனித்து, பிறந்த வீட்டின் பெருமையைக் காப்பதற்கே, என்பது போல் இருக்கும் அவர்கள் செயற்பாடு.

இந்த நியதியில் எந்த மாற்றமும் ஏற்படக் கூடாது. அப்படி மாற்றம் ஏற்படுவதே ஒரு தப்பான விடயம் என்பது போலவே காலங்காலமாக எல்லாம் நடைபெற்றுக் கொண்டும் வருகின்றன. யாராவது ஒரு பெண் இந்த நிலை மாற வேண்டும் என்று குரல் கொடுத்தாலே, "அவள் கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் காலுக்குள் மிதிக்கிறாள்." என்று கூச்சலிடுகிறது எமது சமுதாயம்.

எமது பண்பாட்டின் படி "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற வரையறையான கோட்பாடு, மிகவும் போற்றப் பட வேண்டிய ஒன்றுதான். ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் போது மனதுக்கும் மகிழ்ச்சி. நிறைவு. முக்கியமாக எய்ட்ஸ் பிரச்சனை இல்லை. வேறு பாலியல் சம்பந்தமான நோய்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை.

ஆனால் ஆண்கள் மனைவி இருக்கையில் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால், "ஆண்கள் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவுவார்கள். பெண்கள் கண்டு கொள்ளக் கூடாது" என்கிறார்களே. இதுவும் தமிழர் பண்பாடா?

பெண்ணுக்கு மட்டும் "பொம்பிளை சிரிச்சாப் போச்சு. புகையிலை விரிச்சாப் போச்சு.......... " என்கிறார்களே.

எமது பண்பாட்டில் ஏனிந்தப் பாகுபாடு? எமது கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா? ஏனிந்தப் பாரபட்சம்?


தாலி, பொட்டு

அத்தோடு தாலி என்று இன்று விவாதிக்கப் படுகிறதே. இந்தத் தாலிக்காய் ஆதிகாலத்தில் வெறும் மஞசள் காயாகவே இருந்தது. அதாவது நாம் சமையலுக்குப் பாவிக்கும் மஞ்சள். ஏன் தெரியுமா? மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினி. இருவர் திருமண பந்தத்தில் இணையும் போது, ஒருவரில் இருக்கும் தொற்றுக் கிருமிகளோ, நோய்களோ மற்றவரை அணுகாமல் இருக்கவும், கிருமிகளைச் சாகடிக்கவுமே இந்த மஞ்சள் காய் பயன் படுத்தப் பட்டது.

இதே காரணுத்துக்காகத்தான் மணமக்களின் உடைகளிலும் மஞ்சள் பூசப்பட்டது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு அனுப்பப் படும் திருமண அழைப்பிதழுடன் நோய்க் கிருமிகள் சென்று விடாதிருக்கவே, அழைப்பிதழ் மஞ்சள் பூசி அனுப்பப் பட்டது. இதுவே நாளடைவில் மஞசள் பத்திரிகை என்ற பெயரில் வரத் தொடங்கியது. மஞ்சள் காயை, மஞ்சள் தண்ணீரில் தோய்த்தெடுத்த நூலில் கட்டித் தாலியாக அணிந்த காரணமே வேறு. ஆனால் அதுவே நாளடைவில் தங்கத்துக்கு மாறிவிட்டது.

இப்போது இங்கே வெளி நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப 30 பவுணிலும் 40, 50, 60, 70 பவுண்களில் கூடத் தாலிக் கொடி செய்து போட்டுத் திரிகிறார்கள். இதற்குப் போய் கலாச்சாரம் என்றும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். எமது கலாச்சாரம் என்ன 70 பவுணில் கொடி போடச் சொல்கிறதா?

இதே நேரத்தில் நவரத்தினங்கள், தங்கங்கள்... இவைகளுக்கு சில நோய்கள் எம்மை அணுகாமல் தடுக்கும் தன்மைகளும், சில நோய்களைத் தீர்க்கும் தன்மைகளும் உள்ளன. அத்தோடு காது குத்துதல், மூக்குக் குத்துதல் போன்றவை அக்கு பஞ்சர் ரீதியிலான நன்மைகளை எமக்குத் தருகின்றன.

இதே போலத்தான் பொட்டும். மூலிகைகள் கொண்டு செய்யப்படும் பொட்டை, நெற்றிப் பொட்டில் வைக்கும் போது அது மருத்துவ ரீதியாக உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் நன்மையையும் தருகிறது.

இப்படியான நல்ல காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் இப்போ தடம் மாறி, அவரவர் வசதிக்கேற்ப பல அடாவடித் தனங்கள் புகுத்தப்பட்டு, கலாச்சாரம் பண்பாடு என்பதற்கு என்ன அர்த்தங்கள் என்று தெரியாமலே பெண்கள் மேல் திணிக்கப் பட்டுள்ளன. கலாச்சாரம, பண்பாடு என்ற பெயரில் எமது பெண்கள் அடக்கப் படுகின்றனர். அடிமைப் படுத்தப் படுகின்றனர்.

முதலில் எமது கலாச்சாரத்தில், பண்பாட்டில் புகுத்தப் பட்ட அடாவடித் தனங்கள் களையப் பட்டு, தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப் பட வேண்டும்.

கொட்டும் பனியில் சேலை அணிவதுதான் எமது பண்பாடு என்று சொல்லிச் சேலையுடன் செல்ல முடியுமா? அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா?

சில விடயங்கள் காலத்துக்கேற்ப நேரத்துக்கேற்ப இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும். கலாச்சாரம் என்ற முறையில் கட்டிக் காக்க எம்மிடம் வேறு எத்தனையோ நல்ல விடயங்கள் உள்ளன. அவைகளைக் கட்டிக் காப்போம்.

சந்திரவதனா.
ஜேர்மனி
1999

ஒலிபரப்பு - ஐபிசி தமிழ்(உலகப்பெண்கள்தினம் சிறப்பு நிகழ்சி - 8.3.2000) பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ் (20-26சித்திரை-2000)

Kommentare:

காஞ்சி பிலிம்ஸ் hat gesagt…

அனைத்து மதங்களும் பெண்களை கட்டுப்படுத்த தோன்றியவையே. குறிப்பாக "மநுநீதியை"அடிப்படையாக கொண்டு தோன்றிய "ஹிந்து" மதம் பெண்களுக்கு விலங்கிட்டு, பாவயோனியிலிருந்து பிறந்தவள் பெண் என்று நிந்திப்பதையே தலையாய கடமையாக கொண்டுள்ளது.

உடலுறவிற்கு சம்மதிக்காத பெண்ணை(மனைவியை)சம்மதிக்கும் வரை அவளை அடித்து துன்புறுத்தலாம் என்கிறது மநுநூல்.- இதற்கு என்ன சொல்வீர்கள் ?

கலாச்சாரம் எங்கிற பெயரில் வீதி வீதியாக இதிகாச கடவுள்களை ஐரோப்பிய மற்றும் கனேடிய வீதிகளில் இழுத்துக்கொண்டு தமிழர்கள் திரிவதை நீங்கள் என்னவென்று கூறுவீர்கள்?

மதத்தின் அடிப்படையில் தோன்றிய கலாச்சாரங்கள் அனைத்தையும் களைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Kannan hat gesagt…

விடாமல் தள்ளுவோம்...பாறை ஒரு நாள் நகர்ந்து கொடுத்தாக வேண்டும்

துளசி கோபால் hat gesagt…

நல்ல பதிவு!!!!

நிஜமாவா 70 பவுனுலே தாலிக்கொடி? கழுத்தே கனத்தாலே தேஞ்சுடாதா?

பாவம் அந்தப் பொம்பளைங்க!!!

காஞ்சி பிலிம்ஸ் hat gesagt…

//நிஜமாவா 70 பவுனுலே தாலிக்கொடி? கழுத்தே கனத்தாலே தேஞ்சுடாதா?//

அதை எப்போதும் போட்டுக் கொள்வதில்லை. வெரும் விஷேச நாட்களில் மட்டும் தான் அணிவார்கள். அதுவரை பரவாயில்லை.

Vaa.Manikandan hat gesagt…

நல்ல பதிவு....

எல்லாவற்றிலும் பெண்களுக்கு பாகுபாடு இருக்கிறது தான்.பென்னுரிமை என்னும் பெயரில் ஆண் அடிமயாக்கப்படல் வேண்டும் என்பது தான் இப்போது நிகழ்வதாக உணர்கிறேன்.

ஒரு திருத்தம்....கலாச்சாரம் என்பதன் தமிழாக்கம் தான் பண்பாடு.

பத்மா அர்விந்த் hat gesagt…

சந்திரவதனா
இன்னொன்றை கேள்விபட்டிருக்கிறீர்களா? பெண்ணுக்குக் தங்கம் கேட்பது வறுமை வருமேயானால் அதை விற்று வாழத்தான் என்ற சப்பைக்கட்டு. முதுகெலும்பின்றி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பெற்றோர் சொலவதை கேட்கும் இராமனாக ஆண்!!பார்ப்பன வீடுகளில் மூக்கில் கூட வைர மூக்குத்தி வேண்டும் என்று கதைக்கும் கூட்டமும் உண்டு.மற்றப்படி கலாச்சாரத்தை தாங்கள் தான் கட்டிகாப்பது போல சில பெண்களே மற்ற பெண்களை கேவல்மாக பேசுவதும் உண்டு. பெண்களுக்கு முதலில் விழிப்புணர்வௌ வேண்டும். காரடையான் நோம்புகளும் கார்வாசொத்துகளும் மூட நம்பிக்கை என்று புரிந்து கொள்ள. இன்னும் திரைப்படங்களில் இவற்றை உணர்ச்சி பூர்வமாக காட்டுவதும் மேலும் பெண்களை அடக்குவதையும் பெண்கள் அமைப்பு எதிர்க்க வேண்டும்.

Chandravathanaa hat gesagt…

காஞ்சி பிலிம்ஸ், கண்ணன், துளசி கோபால் , மணிகண்டன், பத்மா அர்விந்த்
உங்களனைவரதும் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

காஞ்சி பிலிம்ஸ்
பத்மா அர்விந்தின் சந்தேகத்திற்கான உங்கள் பதிலுக்கும் நன்றி.
மற்றும் மதநூல்களை எழுதியவர்கள் எல்லாம் அனேகமாக ஆண்கள்தானே. அவர்கள் தமக்குச் சார்பாகவும், தாம் சுகிப்பதற்கு ஏதுவாகவும் பலவற்றையும் எழுதியுள்ளார்கள். சில விடயங்களின் நடைமுறைகளுக்கான காரணங்களே வேறாக இருக்க, இப்படி இடையிடையே எழுதியவர்கள் தமக்கு இசைவானதாக அவைகளை மாற்றி, தமக்குச் சார்பான காரணங்களையும் சொல்லி விட, அவைகள் இன்னும் தொடர்கின்றன. மதங்களைச் குற்றம் சாட்டுவதை விட சில மதசார் முறைகளில் எது நல்லது? எது தற்போதைய வாழ்வுக்குத் தேவையானது? எது மனிதர்களை முன்னேற்றக் கூடியது? என்பவைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு, மூடத்தனங்களை களைந்து விட்டால் பிரச்சனைகள் ஒழியத் தொடங்கும். மதநம்பிக்கையாளர்கள் அதற்கு ஒத்து வர மாட்டார்கள்தான். இன்றைய இளம் பெற்றோர் தமது பிள்ளைகளிடமாவது அவைகளைத் திணிக்காது இருப்பார்களேயானால், எதிர் காலச் சந்ததியிடம் மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

///விடாமல் தள்ளுவோம்...பாறை ஒரு நாள் நகர்ந்து கொடுத்தாக வேண்டும் ///
உண்மைதான் கண்ணன். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

மணிகண்டன்
கலாசாரம், பண்பாடு இரண்டும் ஒன்றென்று சொல்பவர்களும் உண்டு. கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்பவர்களும் உண்டு. இது பற்றி முடிந்தால் பின்னர் அலசுவோம்.
மற்றும் நீங்கள் குறிப்பிட்ட... ஆண்கள் அடக்கப் படுவது ஆங்காங்கு நடக்காமலில்லை. அதற்கு பெண்விடுதலை, பெண்ணுரிமைதான் காரணம் என்று சொல்லி விட முடியாது. பெண் முற்று முழுதாக அடக்கப் பட்டிருந்த காலங்களில் கூட ஆண்கள் எங்காவது ஒரு மூலையில் தாக்கப் பட்டிருக்கலாம். அதன் வீதம் ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு மிகமிகச் சிறியதே.

அத்தோடு பெண்ணொருத்தி சமையலறையில் நாள் முழுக்க இருந்தாலும் கண்டு கொள்ளாத சமூகம் ஆண் இருந்தால் தாங்காது. பெண்ணுக்கு ஆண் அடித்தால், அடித்தாலும் உதைத்தாலும் புருசன்தானே என்னும் அதே சமூகம் , ஒரு பெண் ஒரு ஆணுக்கு அடித்தால் மட்டும் வெகுண்டெழுந்து விடும். அந்தப் பெண்ணுக்கு அரக்கி என்ற பெயரும் கொடுத்து விடும்.
பாதிப்புகள் ஒரு பெண்ணால் ஒரு ஆணுக்கு வரும் போது அது வேறு கண் கொண்டே பார்க்கப் படுகிறது.

Chandravathanaa hat gesagt…

காஞ்சி பிலிம்ஸ் தீர்த்தது பத்மா அர்விந்தின் சந்தேகத்தையல்ல, துளசி போபாலின் சந்தேகத்தை.

துளசி இங்கு இந்தப் பவுணோடு நடக்கும் கூத்தைப் பார்த்தீர்ளென்றால் சிரிப்பதா அழுவதா என யோசிப்பீர்கள்.

பத்மா அர்விந்
உங்கள் கருத்து அருமையான கருத்து. மிகத்திடமான.. தம்காலில் நிற்கும் ஆண்கள் கூட கல்யாணம், சீதனம் என்று வரும் போது பெற்றோரைச் சாட்டி விட்டு கஸ்டம் வந்தால் விற்றுப் பிழைக்க என்று.. பெண்ணிடமும் பெண் வீட்டிடமும் கையேந்தி விடுகிறார்கள்.

கொடுமை என்னவென்றால், பலபெண்கள் நீங்கள் குறிப்பிடுவது போல தாம்தான் கலாசாரத்தைக் கட்டிக் காப்பவர்கள என்பது போலப் பாவனை செய்து கொண்டு, தம்மையும் தாழ்த்தி, மற்றைய பெண்களையும் தாழ்த்தி விடுகிறார்கள். தொலைக்காட்சித் தொடர்கள் இப்படியான பெண்களின் மூளைகளை உருப்படவிடாமல் சலவை செய்து கொண்டே இருக்கின்றன..

காஞ்சி பிலிம்ஸ் hat gesagt…

//மதங்களைச் குற்றம் சாட்டுவதை விட சில மதசார் முறைகளில் எது நல்லது? எது தற்போதைய வாழ்வுக்குத் தேவையானது? எது மனிதர்களை முன்னேற்றக் கூடியது? என்பவைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டு, மூடத்தனங்களை களைந்து விட்டால் பிரச்சனைகள் ஒழியத் தொடங்கும்//
அப்படி மூடத்தனங்களை எல்லாம் எடுத்துவிட்டு பார்த்தால் இப்போதிருக்கும் எல்லா மதமும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். ஆக மதங்களை நாம், நீங்கள் கூறியதுபோல் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்காமல் இருந்தால் போதும்,அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக இருக்கும்.

Chandravathanaa hat gesagt…

காஞ்சி பிலிம்ஸ்
எதையும் முற்று முழுதாககத் தூக்கியெறிய வேண்டும் என்றில்லை.
ஒவ்வொன்றிலும் உள்ள நல்லவைகளை எம்மோடு எடுத்துக் கொள்ளலாம்

KARTHIKRAMAS hat gesagt…

சந்திரவதனா,
நல்ல பதிவு. இந்த "தாலியைப் பற்றி" உஷாவின் ப்திவிலேயே கேட்க நினைத்து. பிரச்சினையாய் நினைக்கபோகிறார்கள் என்று விட்டுவிட்டேன்.
தாலி+ ஆண்கள் தெரிந்த விஷயம்தான் , "தாலி + பெண்கள் பார்வை " உங்கள் கருத்தென்ன?

Chandravathanaa hat gesagt…

///தாலி+ ஆண்கள் தெரிந்த விஷயம்தான் , "தாலி + பெண்கள்///

கார்த்திக்
என்ன கேட்கிறீர்கள் என்பது சரியாக விளங்கவில்லை.
கொஞ்சம் விளக்கமாக எழுதினீர்களானால் பதில் தர இலகுவாக இருக்கும்.
நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Anonym hat gesagt…

நல்ல பதிவு!!!!


ரவியா

G.Ragavan hat gesagt…

மூடத்தனம் ஒழிய வேண்டும். பெண்ணடிமை விலக வேண்டும். பண்பாடு என்று கூப்பாடு போடுகின்றவர்களுக்கு அறிவும் வர வேண்டும். மதத்தின் பெயரால் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீங்க வேண்டும். ஆண்-பெண் சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் நாடு உருப்படும்.

Chandravathanaa hat gesagt…

ரவியா.
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.


ராகவன்
உங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் சொன்தெல்லாம் நடந்தால்.. நிட்சயம்
நல்லதொரு சுபீட்சமான வாழ்வு எமது எதிர்காலச் சந்ததிக்குக் கிடைக்கும்.

நல்லடியார் hat gesagt…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்ணுக்கு என ஒதுங்கிக்கொள்வது, பெண்கள் மீது ஆண்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என Positive ஆக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

மத நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இதில் ஒன்று மிகைக்கும்போது மற்றது மூட நம்பிக்கையாகத் தெரியும்.

மத கிரந்தங்கள் எல்லாம் ஆண்களால் எழுதப்பட்டவை என பேதம் பார்ப்பது எதில் பொய் முடியும் என்று தெரியவில்லை.

பல தெய்வக் கொள்கைகளில் பெரும்பாலான தெய்வங்கள் பெண்களே. இஸ்லாம் மட்டும்தான் கடவுள் ஆணுமல்ல பெண்ணுமல்ல என பேதமின்றி சொல்கிறது.

ஆணும் பெண்ணும் சமம்; ஆனால் ஒன்றல்ல என்பதை உணரவும். பெண்ணுரிமை என்ற பெயரில் உண்மையான பெண் உரிமைகள் எவ்வாறு திசை திருப்பப் பட்டுள்ளன என என் பதிவில் உள்ளதையும் பார்க்கவும்.

G.Ragavan hat gesagt…

// கலாச்சாரமும் பண்பாடும் பெண்ணுக்கு என ஒதுங்கிக்கொள்வது, பெண்கள் மீது ஆண்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என Positive ஆக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? //

நல்லடியார். இது முறையான வாதமல்ல. இதே பொன்ற நம்பிக்கைகள் ஆண்கள் மேல் ஏன் பெண்களுக்கு வரக்கூடாது? எதை நம்பிக்கை என்று சொல்கின்றீர்கள்? இதெல்லாம் நீயே பாத்துக்கோ என்று ஒதுங்கிக் கொள்ளும் கையாலாகத்தனத்தை.

சில பெண்கள் நீங்கள் சொல்வது போல நினைத்து தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றார்கள்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்
கொளுத்துவோம் என்பது பாரதி சொன்னது. இதற்குப் பொருள் என்ன தெரியுமா? மாதர்கள் தம்மைத் தாமே இழிவு செய்யும் மடமையை மாற்றுவோம் என்பதுதான். புரிந்து கொள்ளுங்கள்.

// மத கிரந்தங்கள் எல்லாம் ஆண்களால் எழுதப்பட்டவை என பேதம் பார்ப்பது எதில் பொய் முடியும் என்று தெரியவில்லை. //
எல்லா மத கிரந்தங்களும் அப்படி எழுதப்பட்டவையில்லை. ஆண்டாள் எழுதாததா? அதை விடவா ஒரு ஆணால் புரட்சிகரமாக எழுத முடிந்தது.
ஆண்களால் எழுதப்பட்டது என்பது மதகிரந்தங்களின் குற்றம் கிடையாது. பெண்களை சில இடங்களில் அடக்குகிறது என்பதுதான் குற்றம். மத கிரந்தங்கள் சொல்கின்றன என்பதற்காகவே நாம் எதையும் செய்து விடக் கூடாது.

// ஆணும் பெண்ணும் சமம்; ஆனால் ஒன்றல்ல என்பதை உணரவும். பெண்ணுரிமை என்ற பெயரில் உண்மையான பெண் உரிமைகள் எவ்வாறு திசை திருப்பப் பட்டுள்ளன என என் பதிவில் உள்ளதையும் பார்க்கவும். //

பெண்ணுரிமையை மறுப்பதிலும் கேவலப் படுத்துவதிலும் முன்னிலை வகிப்பது "பெண்ணுரிமை திசை திருப்பப் படுகிறது" என்கின்ற வாதமே. உங்கள் பதிவைப் படிக்கவில்லை. படித்து விட்டு கருத்து சொல்கிறேன்.

Chandravathanaa hat gesagt…

வணக்கம் இன்ஷா அல்லாஹ்

உங்கள் தளத்தைப் பார்வையிடுவதற்கான இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
உங்களது பல கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவே இருந்தாலும் உங்களது எல்லாக் கருத்துக்களோடும் என்னால் உடன் பட முடியாமல் உள்ளது.

மதம் சார்ந்து நான் எதையும் எழுதுவதில்லை. எனக்கு எம்மதமும் சம்மதமே. எந்த மதமாயினும் அங்குள்ள நல்லவைகளை எடுத்துக் கொள்வேன். அதே நேரம் எனது சுயத்தைப் பாதிக்கும் எதையும் விலக்கியும் விடுவேன்.

பர்தா பற்றி மதம்சார்ந்து நான் பார்ப்பதில்லை. அந்தப் பர்தாவால் அதை அணியும் பெண் எந்தளவு தூரம் அசௌகரியப் படுவாள் என்றே பார்ப்பேன். அதையும் அவளாக விரும்பி அணியும் வரை, அங்கு நான் பேச எதுவும் இல்லை. அவளைக் "கழற்றி எறி" என்று சொல்லி, அவளது சுதந்திரத்தில் தலையிட எனக்கு எந்த உரிமையுமில்லை. பர்தா தேவையா இல்லையா என்பதை மதங்களோ அவளைச் சுற்றியுள்ள மனிதர்களோ அன்றி, அவளே தீர்மானிக்க வேண்டும். அதற்கான சுதந்திரம் அவளுக்கு வேண்டும். அதைத்தான் நான் ஒவ்வொரு விடயத்திலும் வலியுறுத்துகிறேன். நான் எனது நெற்றியில் பொட்டு வைப்பதும், தாலி அணிவதும் எனது பிரச்சனை. மதம் சார்ந்து அன்றி எனக்கு அது தேவையென்று நான் கருதும் பட்சத்தில் நான் அணிவதும் தேவையில்லை என்று கருதும் பட்சத்தில் நான் அணியாது விடுவதும் எனது முடிவாக இருக்க வேண்டும். "நீ அணி" என்று சொல்லி யாரும் திணிப்பதையோ "நீ அணியாதே" என்று சொல்லி யாரும் எதிர்ப்பதையோ நான் விரும்பவில்லை.

அதற்காக ஆடை குறைப்புத்தான் பெண்விடுதலை என்பதை நான் ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை. தலையை மூடிக் கட்ட வேண்டும் என்றும் இல்லை. அரை குறை ஆடை அணிய வேண்டும் என்றும் இல்லை.

ஆனால் இன்று எது எனக்குப் பிடிக்கிறதோ, எது எனக்கு சௌகரியமாக இருக்கிறதோ அதை நான் அணிய எனக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். கொளுத்தும் வெயிலில் சருகைக் கரை போட்ட பட்டுப் பீதாம்பரத்தை என் மேல் சுற்றிக் கொண்டு ஐரோப்பியத் தெருக்களில் என்னால் வலம் வர முடியாது.

மது அருந்துவதும், டிஸ்கோவுக்குப் போவதும் ஆண்கள் செய்கிறார்கள். அதனால் நாங்களும் செய்வோம் என்று சொல்லும் பெண்களின் கருத்தோடு நான் என்றைக்குமே உடன் பட்டதில்லை. மது அருந்துவதை ஆண்கள் செய்தால் என்ன, பெண்கள் செய்தால் என்ன அது தப்புத்தான். (மருந்தாகப் பாவிப்பவர்களை விட்டு விடலாம்) ஆண்கள் அந்தத் தப்பை தெரிந்து செய்கிறார்கள். அவர்களைத் திருத்தி மது போதையிலிருந்து வெளிக் கொணர்வதை விடுத்து, "அவர்கள் அருந்துகிறார்கள் நான் அருந்தினால் என்ன?" என்பது "நாய் குரைத்தால் நானும் குரைப்பேன்" என்பது போலத்தான்.

அதற்காக ஒரு பெண் தான் விரும்பி அணியும் உடைகள் பற்றி நாம் விமர்சனம் செய்யத் தேவையில்லை. அவளது ஆடை குறைப்பினால்தான் ஆண் தவறினான் என்பது வெறும் சப்பைக்கட்டே. திரண்ட புஜங்களையும், விரிந்த மார்பகங்களையும், நிமிர்ந்த தோற்றங்களையும் கண்டு பெண்களெல்லாம் ஆண்கள் மேல் ஆசை கொண்டால்... அதற்கு ஆண்களின் ஆடை குறைப்பின் மேல் யாராவது குற்றம் சொல்வார்களா?

மற்றும் நீங்கள் குறிப்பிடுவது போல பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் என்பது இன்னும் கிடைத்து விடவில்லை. ஆதிகாலப் பெண்களின் வாழ்க்கையோடு ஒப்பிடும் போது எவ்வளவோ மாற்றங்கள் வந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லையேயானாலும், முழுமையான சுதந்திரம் என்பதும் இன்னும் இல்லை. 1970 ல் இருந்து பெண் விடுதலைக்காகப் போராடி வரும் ஜெர்மைன் க்ரீர் (60) என்ற பெண்மணி, உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சொன்ன, "இன்றும் பெண்கள் அடக்குமறையில் இருந்தும், ஆணாதிக்கத்தில் இருந்தும் விடுபடவில்லை. இன்று குடும்ப வாழ்க்கையிலே பெண்கள், கொடூரமான முறையில் கணவனால் நடத்தப்படுகிறார்கள். வீட்டிலே அவர்களை எதையுமே எதிர்த்துச் செயல்படாத பூச்சிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்." என்பது அப்பட்டமான உண்மை.

மற்றும் நீங்கள் குறிப்பிட்ட "கலாச்சாரமும் பண்பாடும் பெண்ணுக்கு என ஒதுங்கிக்கொள்வது, பெண்கள் மீது ஆண்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என Positive ஆக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?" என்ற கருத்து சற்று முரணாகவே தெரிகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் மீது கலாசாரங்களையும் பண்பாடுகளையும் திணிப்பது பெண்கள் மேல் ஆண்களுக்கு நம்பிக்கையே இல்லையோ என்று எண்ணவே தோன்றுகிறது.

சந்திரவதனா

Chandravathanaa hat gesagt…

///பெண்ணுரிமையை மறுப்பதிலும் கேவலப் படுத்துவதிலும் முன்னிலை வகிப்பது "பெண்ணுரிமை திசை திருப்பப் படுகிறது" என்கின்ற வாதமே.///

சரியாகச் சொன்னீர்கள் ராகவன்.

Chandravathanaa hat gesagt…

அக்பர் பாட்ஷாவின் இந்தக் கருத்துக்களையும் வாசித்துப் பாருங்கள்.

உரிமையே உன் நிலை என்ன?

நல்லடியார் hat gesagt…

ராகவன் மற்றும் சந்திரவதனா,

வேர்கள் மண்ணுக்கு அடியில் இருப்பதால்தான் மரங்கள் வெளியில் நிமிர்ந்து நிற்க முடிகிறது. வேர்கள் நாங்களும் வெளியில்தான் இருப்போம் என்று அடம் பிடித்தால் மரம் தழைக்குமா? இதில் வேர்கள் என்றது பெண்களைதான்.(அதற்காக பெண்களை நான் மண்ணுக்குள் இருக்கச் சொல்கிறேன் என தப்பர்த்தம் காண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

என் பதிவை முழுதும் படித்துவிட்டு கருத்திடுங்கள். நன்றி!

நல்லடியார் hat gesagt…

என்னை பொறுத்தவரை 'உரிமை' என்பது வாழ்க்கைக்கு அவசியமாதை பெறுவது. இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பார்த்தால் உங்களுக்கு இந்த வித்தியாசம் தெரியும்.

தற்போதுள்ள பெண்ணுரிமைப் போராட்டங்கள் இதற்காகவா உள்ளன? Lesbian Sex, Nudity & Exposure போன்றுதானே இருக்கிறது. இதுவா பெண்ணுரிமைகள்?

உரிமை என்ற பெயரில் ஒழுக்கச் சீர்கேட்டையும், குடும்பமுறை சீரழிவையும் தானே இன்றைய பெண்ணுரிமை போராட்டங்கள் செய்கின்றன. உரிமைகளை அடைந்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் இதைத்தானே பார்க்கிறோம்.

ஆணும் சரி பெண்ணும் சரி கண்ணியமாக இருக்க வேண்டும் என்றுதானே இஸ்லாம் சொல்கிறது.

வசந்தன்(Vasanthan) hat gesagt…

நல்லடியார்!
இங்கே உங்களின் கருத்துக்கள் இஸ்லாம் மீதான பிரச்சாரமாகவே படுகிறது. உங்கள் முதற்பின்னூட்டத்திலேயே அந்தப்பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இஸ்லாம் பற்றி யாரும் இங்கே தனித்துப்பார்க்கவில்லை. பிறகேன் இஸ்லாம் அதைச்செய்தது இதைச்செய்தது என்று பரப்புரை? எனக்கென்னவோ சந்திரவதனா எழுதியது உங்களைக்குறித்துத்தான் (இஸ்லாமை) என நீங்களாகக் கற்பனை பண்ணிக்கொண்டு களத்திற் குதித்தது போன்றுள்ளது.

நல்லடியார் hat gesagt…

மண்ணிக்கவும் வசந்தன், பொதுவாக ஒரு பிரச்சினையைப் பற்றி பேசும் போது இஸ்லாத்தை மேற்கோள் காட்டி எழுதினேன். சந்திரவதனாவின் பதிவுக்கு பதிலிடும் போது அத்தகைய ஒப்பீடுகள் அவசியம் என கருதினேன்.

சந்திரவதனா மதம் சார்ந்து எழுதுவதில்லை என்று சொல்லிவிட்டார். ஆக அவரிடம் மதப் பிரச்சாரம் அல்லது மத விவாதம் செய்யும் எண்ணம் எனக்கில்லை. நன்றி

கலை hat gesagt…
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
கலை hat gesagt…

வணக்கம் சந்திரவதனா!

அருமையான பதிவு. அதைத் தொடர்ந்து மற்றவர்களின் கருத்துக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்களும் அருமையே. இந்த விடயங்களில் நான் உங்களுடன் முழுமையாய் ஒத்துப் போகிறேன்.

கலாச்சாரம், பண்பாடு என்று கதைத்தவுடனேயே பலர் மனத்திலும் (ஆண்கள், பெண்கள் உட்பட) பெண்ணை மையமாக வைத்தே எண்ணங்களும் கருத்துக்களும் எழுவது வழக்கமாகி விட்டது. அதில் உள்ள உண்மைகளை அருமையாக விளக்கி உள்ளீர்கள்.

//பலபெண்கள் நீங்கள் குறிப்பிடுவது போல தாம்தான் கலாசாரத்தைக் கட்டிக் காப்பவர்கள என்பது போலப் பாவனை செய்து கொண்டு, தம்மையும் தாழ்த்தி, மற்றைய பெண்களையும் தாழ்த்தி விடுகிறார்கள். தொலைக்காட்சித் தொடர்கள் இப்படியான பெண்களின் மூளைகளை உருப்படவிடாமல் சலவை செய்து கொண்டே இருக்கின்றன..//

மிகச் சரியாகச் சொல்லி இருந்தீர்கள்.

காஞ்சி பிலிம்ஸ் இன் கருத்துக்களும் நன்றாக உள்ளது. கண்ணன் கூறியிருப்பதைப்போல் விடாமல் தள்ளினால், நகர்ந்து கொடுக்கத்தானே வேண்டும்.

தேன்துளி சொல்லி இருப்பதைப் போன்று, பெண்களே சில (ஏன் பல என்றும் சொல்லலாம்) சமயங்களில் பெண்களுக்கு எதிரியாகி விடுகிறார்கள்.

மத நம்பிக்கைகளும் (எல்லா மதங்களும்தான்) இந்த விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கத்தான் செய்கிறது. நீங்களும், காஞ்சி பிலிம்ஸ் உம் கூறி இருப்பது போல், மதங்களில் உள்ள நல்லவற்றை, தற்போதைய வாழ்வுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, தேவை அற்றவற்றையும், மூட நம்பிக்கைகளையும் ஒதுக்க கற்றுக் கொண்டால் நிலமை சீர்ப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கு எத்தனை பேர் தயார் என்பதும், அப்படி தயாராக இருப்பவர்களை, மற்றவர் இழுத்துப் பிடிப்பதும் ஒரு பிரச்சனையே.

//பெண்ணுரிமையை மறுப்பதிலும் கேவலப் படுத்துவதிலும் முன்னிலை வகிப்பது "பெண்ணுரிமை திசை திருப்பப் படுகிறது" என்கின்ற வாதமே.//
ஜீ.ராகவன் சொல்லி இருப்பதும் மிகவும் உண்மையே.

எனது இணையப் பதிவையும் முடிந்தால் சென்று பாருங்கள். http://mykirukkals.blogspot.com/

இதில் எனது ஏனைய இணையப் பதிவுகளை இன்னும் நான் இணைக்கவில்லை. ஆனால் View my complete profile ஐ சுட்டிப் பார்த்தீர்கள் என்றால் எனது ஏனைய இணையப் பதிவுகள் உள்ளன. அதில் 'என்னை பாதித்தவை' யில் சில பதிவுகள் உள்ளன. அதில் 'நமது பண்பு' என்ற பதிவு, ஓரளவு நீங்கள் எழுதி உள்ள இந்த விடயத்துடன் தொடர்பானது.

நான் இணையத்தளத்துக்கு புதியவள். பார்த்து விட்டு கருத்து எழுதினீர்கள் என்றால் மகிழ்வேன்.

Chandravathanaa hat gesagt…

நல்லடியார் said:
ராகவன் மற்றும் சந்திரவதனா,

வேர்கள் மண்ணுக்கு அடியில் இருப்பதால்தான் மரங்கள் வெளியில் நிமிர்ந்து நிற்க முடிகிறது. வேர்கள் நாங்களும் வெளியில்தான் இருப்போம் என்று அடம் பிடித்தால் மரம் தழைக்குமா? இதில் வேர்கள் என்றது பெண்களைதான்.(அதற்காக பெண்களை நான் மண்ணுக்குள் இருக்கச் சொல்கிறேன் என தப்பர்த்தம் காண மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)

என் பதிவை முழுதும் படித்துவிட்டு கருத்திடுங்கள். நன்றி!


நல்லடியார்
பெண்களும் மனிதஜென்மங்கள்தான். தெய்வங்கள் என்று சொல்லிக் கூட, அவர்களின்
சுயத்தில் கை வைக்காதீர்கள்.

அத்தோடு, நான் பொதுவாக இஸ்லாம், சைவம், கிறிஸ்தவம் என்று தொடங்கும் பதிவுகளின் பக்கமே போவதில்லை. நீங்கள் இணைப்பைத் தந்ததால் படித்துப் பார்த்தேன். மீண்டுமொருமுறை ஆறுதலாகப் படித்து விட்டு ஏதாவது கருத்தக்கள் இருந்தால் சொல்கிறேன்.

Chandravathanaa hat gesagt…

நல்லடியார் said
என்னை பொறுத்தவரை 'உரிமை' என்பது வாழ்க்கைக்கு அவசியமாதை பெறுவது. இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பார்த்தால் உங்களுக்கு இந்த வித்தியாசம் தெரியும்.


யார் யாருக்கு உரிமை வழங்குவது?
ஏன்...! அவளை அவளாகவே வாழ விடுங்களேன்.

நல்லடியார் hat gesagt…

//யார் யாருக்கு உரிமை வழங்குவது?
ஏன்...!//

பெண்ணுரிமை இல்லை என்கிறீர்கள். வழங்கப் பட்டுள்ளது என்றால் யார் யாருக்கு வழங்குவது என்கிறீர்கள். மண்ணிக்கவும் சந்திரவதனா, உங்கள் கருத்தில் தெளிவில்லை.

//அவளை அவளாகவே வாழ விடுங்கள்// எனில் ஆண் பெண் என்ற பேதம் தேவை இல்லை என்கிறீர்களா?

பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கணவனாலோ, தந்தையாலோ அல்லது சகோதரனாலோதான் சுமத்தப் படுகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகள்தான் குடும்ப அமைப்பை பாதுகாத்து வருகின்றன.
பண்பாடு, கலாச்சாரம் என பிரித்துப் பார்க்காமல் அன்பு அக்கரை என்ற கண்ணோட்டத்தில் ஏன் பார்க்க முடிவதில்லை?

ஆகவேதான் 'உரிமை' என்ற பெயரில் திசை திருப்பப் பட்டுள்ளனர் என சொல்கிறேன். மீண்டும் ஒருமுறை என் பதிவை படித்துப் பாருங்கள் அதில் மதப்பிரச்சாரமாக அன்றி பெண்களுக்கு சாதகமாகத்தான் எழுதியுள்ளேன். நன்றி!

Chandravathanaa hat gesagt…

நல்லடியார் Said:
பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கணவனாலோ, தந்தையாலோ அல்லது சகோதரனாலோதான் சுமத்தப் படுகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகள்தான் குடும்ப அமைப்பை பாதுகாத்து வருகின்றன.


அதுதான் ஏன் என்று கேட்கிறேன்.?

ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் வளர்க்கும் போது எது நல்லது எது கெட்டது
என்று சொல்லித்தானே ஒவ்வொரு பெற்றோரும் வளர்க்கிறார்கள்.

வளரும் போது ஆண் குழந்தை போலவே பெண் குழந்தையும் நல்லது கெட்டதைப் பிரித்தறியும்தானே.
பிறகெதற்கு ஆண் தனியாக பெண்ணைக் கட்டுப் படுத்த வேண்டும்.

பெண்ணை சுயமாக இயங்காவிட்டால் அவள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பாள்.

நல்லடியார் hat gesagt…

'சுயமாக' என்பதுதான் புரியவில்லை.

ஒரு தகப்பனோ, சகோதரனோ அல்லது கணவனோ ஒரு பெண்ணை கட்டுப்படுத்துவதை உரிமை மீறல் என்கிறீர்களா?

உங்கள் கருத்தில் சுதந்திரம் என்ற பெயரில் உறவின் அழுத்தங்களும் கடமைகளும் தேவை இல்லை என்பது போன்ற தொனி தெரிகிறது.

G.Ragavan hat gesagt…

//
'சுயமாக' என்பதுதான் புரியவில்லை.

ஒரு தகப்பனோ, சகோதரனோ அல்லது கணவனோ ஒரு பெண்ணை கட்டுப்படுத்துவதை உரிமை மீறல் என்கிறீர்களா?

உங்கள் கருத்தில் சுதந்திரம் என்ற பெயரில் உறவின் அழுத்தங்களும் கடமைகளும் தேவை இல்லை என்பது போன்ற தொனி தெரிகிறது.
//

அப்படியில்லை நல்லடியார். இதே ஒரு பெண் கணவனையோ சகோதரனையோ கட்டுப்படுத்தினால் ஒத்துக் கொள்வீர்களா?

கட்டுப்பாடு என்ற ஒன்று தவறான கருத்து. குடும்பத்தில் தேவையானது ஒத்த அலைவரிசை. அதுதான் தேவை. அது இல்லாத போதுதான் கட்டுப்பாடுகளும் வேறுபாடுகளும் தலை தூக்கும். யாரும் யாரையும் கட்டுப்படுத்தத் தேவையில்லை. மாறாக ஒத்து வாழக் கற்க வேண்டும்.

Ramachandranusha hat gesagt…

சந்திரா தலைப்பு பதில் ஆமாம், ஆமாம், ஆமாம்!
காஞ்சியார் சொன்னதுப் போல எல்லா மதமும் இந்த விஷயத்தில் ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
கிருஸ்துவர்கள் முன்னேறியவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காலஞ் சென்ற
போப் அவர்கள், குடும்பத்தை கட்டிக்காக்க வேண்டியது பெண்களின் கடமை என்றார். அனைத்து
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நீதி போதனைகள் நமக்குதான். நம்மை சரியாய் வழி நடத்தி,
போற்றி பாதுகாக்க வேண்டியது ஆண்களின் தலையாய பணி. அதை அனைவரும் மிக சரியாய் காலகாலமாய்
செய்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் செய்வார்கள்.

G.Ragavan hat gesagt…

// சந்திரா தலைப்பு பதில் ஆமாம், ஆமாம், ஆமாம்!
காஞ்சியார் சொன்னதுப் போல எல்லா மதமும் இந்த விஷயத்தில் ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான்.
கிருஸ்துவர்கள் முன்னேறியவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காலஞ் சென்ற
போப் அவர்கள், குடும்பத்தை கட்டிக்காக்க வேண்டியது பெண்களின் கடமை என்றார். //

உண்மைதான் உஷா. மதம் என்று வந்து விட்டாலே பெண்ணடிமைத் தனத்திற்கு பலவிதங்களில் வக்காலத்து வாங்குகின்றன. அதைத் தவறென்றால் நாம் மதத்துவேஷியாகிறோம்....மத நூல்கள் சொல்லும் இழிந்தவன் (பாவி) ஆகிறோம்.

ஒரு ஆணாக என் பார்வையில் பெண்ணுரிமை என்பது எல்லாருக்கும் கிடைக்கின்றதில்லை என்பதே உண்மை.

Chandravathanaa hat gesagt…

ராகவன்
நான் நல்லடியாருக்கு எழுத நினைத்த பதிலை நீங்களே எழுதி விட்டீர்கள். நன்றி.

நல்லடியார்
குடும்பம் என்பது என்ன..?
தகப்பன், சகோதரன், கணவன் மூவரும் என்ன அதிகாரிகளா?
இந்த அதிகாரிகளின் கீழ் வாழ்க்கைப் பட பெண்கள் என்ன அடிமைகளா?

கை கோர்த்து நடந்து, காதலோடு பேசி, நட்போடு நடை போடும்... வாழ்வு பற்றி
உங்களுக்குத் தெரியாதா...?

நல்லடியார்,
இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?
இதுதான் பெண்களைக் கட்டுப்படுத்தும் கணவன் மாமன் போன்றோரின் புனிதத் தன்மைகளா?

Chandravathanaa hat gesagt…

நன்றி உஷா.
ஆண்கள் எத்தனையோ விதமாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.
தமது சொகுசுத்தனத்தை மறந்து தம்மையண்டியுள்ள பெண்களின் உணர்வுகளையும் மதிகத் தொடங்கி விட்டார்கள்.
இவர்களின் மத்தியில் நல்லடியார் போல
ஆண்கள் அதிகாரிகள் என்றும் அவர்கள்தான் பெண்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் எண்ணம் கொண்ட
ஆண்களும் பலர் இருக்கிறார்கள்.

Kujili hat gesagt…

hey, it was a nice article.
Thank you for raising ur voice towards our gals. it was so sweet of you.

Keep up the good work

Chandravathanaa hat gesagt…

குயிலி
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

Haran hat gesagt…

//பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் கணவனாலோ, தந்தையாலோ அல்லது சகோதரனாலோதான் சுமத்தப் படுகின்றன. இத்தகைய கட்டுப்பாடுகள்தான் குடும்ப அமைப்பை பாதுகாத்து வருகின்றன.
பண்பாடு, கலாச்சாரம் என பிரித்துப் பார்க்காமல் அன்பு அக்கரை என்ற கண்ணோட்டத்தில் ஏன் பார்க்க முடிவதில்லை? //

எனது கருத்து என்ன என்றால்... இப்படியான கட்டுப்பாடுகள் தான் குடும்ப அமைப்பைச் சிதைத்து வருகின்றன.

ஏன் கலாச்சாரம்... மற்றும் ஏதேதோ பெயரில் அனைவரையும் தந்தையோ/ சகோதரனோ அல்லது மாமனோ... யாரோ இன்னொருவரை அடக்கி... ஆழ நினைக்கிறார்கள். நல்லடியார் கூறியதன் படி பார்த்தால்... கணவனோ... தந்தையோ அல்லது சகோதரனோ... அதாவது ஆண் சமூகம் தான் கட்டுப்படுத்த லாயக்கானவர்கள் என்பது போன்று எழுதி உள்ளார்.

ஏன்... எதற்காகக் கட்டுப்படுத்த வேண்டும்... சகோதரி சந்திரவதனா அவர்கள் கூறியது போன்று எல்லோரும் ஒரு வீட்டில் ஒரே விடயங்களைக் கூறித் தானே வளர்க்கப் படுகின்றார்கள்.. பின்னர் ஏன் ஆண்கள் பெண்களைக் கட்டுப்படுத்தி வளர்க்க வேண்டும்...

இதையே பெண்கள் செய்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இவ்வாறு பெண் நடந்தால் அதனையும் நீங்கள் அன்பு, அக்கறை என எடுத்துக் கொள்வீர்களா?

முதலில் ஒவ்வொருவரும்... மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்துப் பழகத் தொடங்கினாலே ஒரு பிரச்சனையும் வராது. மனைவியை வேலைக்காரியாகவும் கட்டிலில் சேவையாளியாகவும் மட்டும் நினைப்பதால் தான் ஒரு குடும்பத்தில் சந்தோசமான சூழ்நிலை அமைவதில்லை... இதுவே... கணவன் தன் மனைவியை தனது உற்ற நண்பியாகவும் ஆசானாகவும்... அனைத்திற்கும் துணையாகவும் கருதி நடத்தினால் (பெண்களும் இவ்வாறே தனது கணவனை நடத்தினால்) ஒரு பிரச்சனையுமே குடும்பத்தில் வராது என்பது எனது எண்ணம்...

இவ்வாறே வெளி உலகிலும், பெண்கள் என்பவள் ஆண்களைப் போன்றே ஒரு "மனிதன்" வித்தியாசமான உடலமைப்பை மட்டும் கொண்டவள் எனும் உண்மையை ஏற்று ஒரு சக மனிதனுக்கு எவ்வளவு மரியாதத கொடுப்போமோ... அதனைக் கொடுத்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உடலமைப்பு வித்தியாசங்கள் கூட நாம் நட்புடன் பழகத் தொடங்கி விட்டால் நமக்குத் தெரியாமல் மழுங்கிப் போகும்.

மாசிலா hat gesagt…

ஆதிக்க வெறி பிடித்த சில ஆண் வர்க்கத்தினரே இந்நிலமைக்கு காரணம் எனச் சொல்லலாம். இதில் மனதை நோகடிக்கும் மற்றொரு விடயம், பல பெண்களும் இதற்கு தோதாக இருப்பது. பல சமயங்களில் ஆண்களை விட இதில் அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வது. பெண்ணைப் பற்றி ஆண் எப்படி கீழ்த்தரமாக எடைபோடுகிறானோ அதே நேர் மாறாக சில குறிப்பிட்ட வயதுள்ள பெண்களும் ஆண்களை மிக உயரத்தில் வைத்து பார்க்கவும் செய்கின்றனர். இதெல்லாவற்றிற்கும் மதமே காரணம்.

காலம் இப்போது மாறிவிட்டது. ஆணுக்கு பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல என்றாகிவிட்டது. இதில் வயது முதிர்ந்தவர்கள் மனம் கோனாதபடி சுமுகமான வழியில் கலாச்சாரம், பண்பாடு ஆகியவைகளை புதுமை, நாகரிகம் ஆகியவைகளோடு கலந்து முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவோம்.