Sonntag, August 24, 2003

சாமத்தியச் சடங்கு

மாதவிடாய் ஆரம்பமாவது பெண்குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்வாகும். வளர்ச்சியடையும் போது வேறு மாற்றங்களும் நடைபெறுகின்றன. ஆண்பிள்ளைகளினதைப் போலல்லாமல் பெண்பிள்ளைகளின் குரல் மெலிவடைந்து ஆழமாகும். உடலின் இரத்த அழுத்தம், செங்குருதி சிறுதுணிக்கைகளின் அளவு விருத்தியடைதல், உடலின் வெப்பநிலை குறைதல், மூச்சு விடுதல் மிகவும் இலேசாக நடைபெறுதல், எலும்புகள் வலுப்படுதல் போன்றன இக்காலத்தில் நடைபெறுவதாகும். ஆண் குழந்தை பருவ வயதிற்கு வரும்போது உடலின் உட்பகுதியிலும் அதேபோல் வெளித்தோற்றத்திலும் மாற்றங்கள் நடைபெறும். இக்காலத்தில் முகத்தில் மயிர் முளைப்பதுடன் குரல் ஆழமாவதையும் எம்மால் கண்டுகொள்ள முடியும். ஆண் குழந்தையின் உடலின் உட்பகுதியிலும் இக்காலத்தில் இன விருத்திக்கான செயற்பாட்டில் கலந்து கொள்வதற்காக விதைச் சுரப்பிகளில் விந்துக்கள் உற்பத்தியாவது ஆரம்பமாகும்.

பெண்குழந்தையின் வளர்ச்சி சம்பந்தமாக பிழையான ஐதீகங்களும் அவற்றால் உண்டான சடங்குகளும் இலங்கைச் சமூகத்தில் காணப்படுகின்றன. எனினும் ஆண் குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட விசேட சடங்குகள் என எதுவும் கிடையாது. பெண் குழந்தையின் முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தியடைதல், பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல் எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நமது கிராமப்புறங்களை போன்றே நகர்ப்புறங்களிலும் நடைபெறும் சில சடங்குகள் பின்வருமாறு:

சிறுமியை வீட்டின் தனியான பகுதியிலோ, தனி அறையிலே தனிமைப்படுத்தி வைத்தல்.

அவளது துணைக்கு ஒரு பெண்ணையோ ஒரு சிறுமியையோ வைத்தல் (குளிக்கும் வரை சிறுமி இவ்வறையிலேயே இருக்க வேண்டும்)

சிறுமியின் அருகில் இரும்பு ஆயுதமொன்றை (கத்தி) வைத்தல்

சிறுமி மலசலகூடத்திற்கு செல்லும்போது அதையும் கொண்டு செல்லல் (இது பேய் பிசாசுகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்காகும்)

உடனடியாக பெற்றோர் சோதிடரை அணுகி சிறுமி வயதிற்கு வந்த நேரத்தைப் பார்த்து பலன் கேட்பர். (இதில் சிறுமியை குளிப்பாட்டுவதற்கு ஏற்ற சுபநாளும் நேரமும் பார்ப்பதும் நடைபெறும்.)

குளிப்பாட்டும் நாள்வரையும் தேங்காய்ப்பால் சேர்க்காது உணவு கொடுத்தல். மீன், இறைச்சி, எண்ணெய் சேர்ந்த பொரித்த உணவுகளை கொடுக்காமல் விடுவது.

சுபநேரத்தில் சலவைத் தொழில் செய்யும் பெண்ணைக்கொண்டு சிறுமியைக் குளிப்பாட்டுவது (சிறுமி பருவமையும் நேரத்தில் உடுத்தியிருந்த உடைகள் ஆபரணங்கள் போன்றவற்றைக் குளிப்பாட்டிய பெண்ணுக்கே கொடுப்பது)

குளிப்பாட்டும் நாளில் பாற்சோறு, பலகாரம், இனிப்புப்பண்டங்கள் போன்ற உணவுவகைகளைத் தயாரித்தல்.

குளிப்பாட்டிய பின் சிறுமிக்கு புத்தாடை அணிவிப்பது.

சில பிரதேசங்களைச் சார்ந்த சில குடும்பங்களில் சிறுமி 3ம் மாதம் வரையும் சலவை செய்யும் பெண் கொண்டுவரும் உடைகளையே உடுத்த வேண்டும்.

சிலர் சிறுமியை குளிப்பாட்டிய பின் சடங்கு செய்வர். இதை சாமத்திய சடங்கு என அழைப்பர்.

இந்த விருந்துக்கு தூர இடங்களிலிருந்தும் உறவினர் நண்பர்களை அழைப்பர். அவர்கள் சிறுமிக்கு பரிசுகளுடன் வருவர்.

கடந்த பல வருடங்களாக நான் மேற்கண்டவாறு சாமத்தியச் சடங்குகளை நடத்திய தாய்மார் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் (70வீதம் வரை) பருவடையும் போது என்ன நடக்கிறது என்பதை தமது மகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இதைப்பற்றிய தெளிவான அறிவு தாய்மாரிடமும் இல்லை. ஓரளவு கல்விகற்ற சில தாய்மார்களிடமே ஓரளவு தெளிவு இருந்தது. எனினும் தமது மகளுக்கு சரியான முறையில் விளக்கப்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் ஆற்றல் கிடையாது. பெரும்பாலான தாய்மார் தமது மகளுக்குக் கூறிய அறிவுரை "இதன் பிறகு ஆண்களிடம் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்" என்பதாகும்.

விரைவான உடல் வளர்ச்சியினால் 18-19 வயதுகள் வரும் வரையும் அவளினுள் உளவியல் ரீதியாகவும் மாற்றம் ஏற்படலாம் என்பது பற்றி எதுவித அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படாதது தெரிந்தது. பெண் குழந்தைகளின் முதல் மாதவிடாய் வெளியேற்றம் தொடர்பான சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்று பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பெண்ணுடலைப் பற்றி சரியான விஞ்ஞான பூர்மான அறிவின்மையே இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அடிப்படையாகும். பெண்ணின் உடல், உள வளர்ச்சியின் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியான இந்தப் பருவ வயதில் சிறுமிகள் மத்தியில் அவர்கள் உடலைப்பற்றிய பிழையான எண்ணக் கருத்துக்களை ஏற்படுத்துவதும் பெரியவர்கள் தம் எண்ணப்படி காலங்கடந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அவர்களை உட்படுத்துவதும், பிற்காலத்தில் பெண் என்ற முறையில் அவளது உடலைப்பற்றிய பிழையான கருத்துக்கள் மிக ஆழமாக அவளுள் வேரூன்ற காரணமாயுள்ளது. அவ்வாறே தமது சகோதரனைவிட அல்லது பெண் என்ற முறையில் ஆண்களைவிட தாம் கீழானவர்கள் எனும் உணர்வு சிறுமிகளிடம் ஏற்பட இந்த சடங்குகள் காரணமாகின்றன.

மாதவிடாய் ஏற்பட்ட மகளை பல நாட்களுக்கு வீட்டுக்குள் அடைத்த வைத்திருப்பது ஏன்? மகனின் குரல் மாற்றமடையும் போது முகத்தில் தாடி, மீசை முளைக்கும் போது மகனை பல நாட்களுக்கு விலக்கி வைத்திருப்பார்களா? மாதவிடாய் ”தீட்டு” எனும் கருத்தை மகளுக்கு மாத்திரம் கொடுப்பது ஏன்?

மாதவிடாய் என்பது சூலகங்களின் முதிராத முட்டையுடன் கருப்பைச்சுவரும் இரத்தமும் சேர்ந்து வெளியேறுவதாகும். பெண் உடலில் கருப்பை இல்லாவிட்டால் குழந்தை உற்பத்தி செய்யமுடியாது. பெண்களின் மாதவிடாய் அசுத்தம் என்று கூறும், அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் பரிசுத்தவான்கள் இவ்வுலகத்திற்கு வந்தது தாய் வயிற்றின் மூலமாயில்லையா?

உணவுகளில் தடை விதிப்பதன் மூலம், முதலாவது மாதவிடாய் வெளியேற்றத்தை ஒரு நோயெனக் கருத சிறுமியைத் தூண்டுவதாகும். உண்மையிலேயே உடல் மிகத் துரிதமாக வளர்ச்சியடையும் இந்நாட்களில் வேறு நாட்களையும் விட போசாக்கான உணவுகளை சிறுமிக்குக் கொடுக்க வேண்டும். முதலாவது மாதவிடாய் ஏற்படும்போது சிறுமியை பேய் பூதங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வை ஒரு குழந்தையின் மனதில் ஏற்படுத்துவது அவளது எதிர்கால வாழ்விற்கு மிகவும் பாதகமாகும். பிற்காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்குக் காரணம் வயதிற்கு வந்த நாளில் ஏற்பட்ட தனிமையே (கெட்ட பார்வை) எனக் கருதும் பெண்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் இலங்கையின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஆய்வுநடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இவ்வாறு கருதும் பெண்களை பெருமளவில் நான் சந்திக்கநேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெறாத வறிய பெண்களாகும். தனிமை (கெட்ட பார்வை) பற்றியுள்ள ஆழமான நம்பிக்கையினால் தேவையான வைத்திய பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயல்வது சாத்தியமில்லாத ஒன்றென எனக்கு விளங்கியது. வறுமைக்கும் கல்வியறிவின்மைக்கும் அடுத்ததாக பெண் உடலைப்பற்றி ஐதீகங்கள் அவர்களது வாழ்வின் சாபமாய் உள்ளது மிகத் துயரமானதொன்றாகும். சாமத்தியச் சடங்குகளை பின்பற்றுவது ஏன் என பெருந்தொகையான தாய்மார்களிடம் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுபற்றி அவர்களிடமிருந்து கிடைத்த காரணங்களை கீழே தருகின்றேன்.

"எனக்குத் தெரியும் இந்த சடங்கள் பிழையானவை என நான் மற்ற நாட்களில் போன்றே மகளுக்கு உணவு கொடுத்தேன் எனினும் எனது அயலவர்கள் இதற்காக என்மீது மிகவும் குறைகூறினார்கள். அப்படியிருக்க நான் யாருக்கும் தெரியாமல் மகளுக்கு நன்றாக உணவளித்தேன். நேரம் பார்ப்பது பொய்யான காரியம் என நான் மகளின் தந்தைக்குக் கூறினேன். நேரம் பார்க்காதுவிடுவது சரியில்லையெனக் கூறிய அவர் தானே சென்று நேரம் பார்த்துக் கொண்டு வந்தார்."(மருத்துவத் தாதி)

"யாருக்கும் இது பற்றி அறிவிக்க நான் விருப்பப்படவில்லை. எனது அண்ணன் கொண்டாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார். அதனாலேயே கொண்டாட்டம் நடத்த நேர்ந்தது." (தொழிலாளப் பெண். இவளின் மகளுக்கு தந்தை இல்லை)

"நான் சடங்குகளை நம்புவதில்லை. எனினும் எனது மாமியாரின் தொந்தரவினால் இதைச் செய்யாமல்விட முடியவில்லை"(ஆசிரியை)

"எமது வாழ்வில் மகிழ்ச்சியான வைபவங்களில் பங்குபெற வாய்ப்பில்லை. எமக்கு இருந்திருந்தென்றாலும் கொண்டாட்டங்கள் தேவை. அதனாலேயே நாம் மகள் வயதுக்கு வந்ததை கொண்டாடினோம்." (இதைச் சொன்னவர் ஒரு தந்தை)

சாமத்தியச் சடங்குகளை விமர்சிக்கதவர்கள் கூட நேர்மையாக அவற்றை எதிர்க்காததும், பிழையான கருத்துக்களை நிராகரித்துப்போகும் சக்தியும் தைரியமும் அவர்களுக்கு இல்லாததும் மேற்குறிப்பிட்ட அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வருகின்றது.

சாமத்திய சடங்கு வைபவங்களுக்கு அழைக்கப்பட்டு அவற்றில் பங்கு பற்றிய பலருடன் இதுபற்றிக் கருத்துக்கேட்டேன். அவர்கள் சொன்னவற்றைக் கீழே தருகின்றேன்.

"மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என ஆண்களான எம்மை சடங்குக்கு அழைப்பது எத்தனை வெட்கங்கெட்ட செயலாகும். ? தமது மகளைப் பற்றிய இத்தகைய விடயத்தை பெற்றார் இன்னொருவருக்கு சொல்வது எப்படி? எமது சமூகம் எவ்வளவு தூரம் சீரழிந்து விட்டது என்பதனையே இது காட்டுகின்றது."(விவசாயி)

சாமத்திய வைபவங்களை நடத்துவதன் முதற்காரணம் பணமும் பரிசுகளும் சேகரிப்பதற்காகும். பணத்திற்கும் வெளிப்பகட்டுக்கும் நமது சமூகம் எவ்வளவு தூரம் உட்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. (தொழிலாளி)

"பெரும்பாலானவர்கள் தமது குறைபாடுகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே சாமத்தியச் சடங்கு வைபவங்களை நடத்துகிறார்கள். மகளைக் காரணமாய்க் கொண்டு பரிசுகள் சேகரிப்பதை அருவறுக்காமல் செய்கிறார்கள்." (ஆசிரியை)

"சுருங்கக் கூறின் சாமத்தியச் சடங்கென்பது சுருக்கமாக பொருள் சேகரிப்பதற்காக செய்யும் ஒரு ஒரு காரியமாகும். பெண் மகளை இப்படியாக விற்கும் ஒரு சமூகம் ஏன் பெண்ணின் ஒழுக்கத்தை இவ்வளவு தூரம் தேடுகிறது? ஏழைப் பெண்கள் விபச்சாரத்திற்கு செல்வது இயலாமையினாலாகும். சாமத்தியச் சடங்கு நடாத்தும் சமூகம் ஏன் விபச்சாரியை அசிங்கமாகப் பார்க்கின்றது. பெண்மகளை முதன்மைப்படுத்தி பொருள் பண்டம் பெற்றுக்கொள்வது விபச்சாரம் இல்லையா?"(தொழிலாளப் பெண்)

பெண்ணைப் பற்றியும் பெண் உடலைப்பற்றியும் நிலவிடும் கருத்துக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அதேபோல் சாமத்தியச் சடங்குகள் மூலம் வெளிப்படுவது எமது சமுதாயத்தில் பெண்கள் பற்றியுள்ள பரஸ்பர விரோதமான சிந்தனையாகும். சாமத்தியப்படுவது தீட்டானது. அசுரத்தனமானது என்பது வெறும் நம்பிக்கையாகும். அப்படி நம்புவர்களே அதன்பிறகு அதற்காக கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.

உடல் சம்பந்தமான இத்தகைய பித்தலாட்டங்களுக்கு இளம் பெண்பிள்ளைகளை உட்படுத்துவது மிகவும் அநீதியானதாகும். வளர்ந்து வரும் பெண் பிள்ளைக்கு பெற்றோரினால் ஆற்றப்படவேண்டிய கடமைகளிலொன்று உடல் - உள வளர்ச்சி பற்றி சரியான வயதில் (அவளது வளர்ச்சி வெளிப்படையாகத் தெரியும்போது, சாதாரணமாக அவளது வயது 11ஆக இருக்கும் போது) முறையாக சொல்லிக் கொடுப்பதாகும். முதலாவாது மாதவிடாய் வெளியாகி தமது வாலிபப் பருவத்தைத் தாண்டுமளவும் (வயது 19 -20) உடலில் ஹோமோன் மாற்றமடைவது நடைபெறும். இதனால் சிறுமியொருத்திக்கு பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சனைகள் ஏற்பட இடமுண்டு. இந்தப்பிரச்சனைகளை விளங்கிக்கொள்ளவும் அவற்றிற்கு முகம் கொடுக்கவும் அவளுக்குள் அவளது உடல்பற்றி, விசேசமாக பாலுறுப்பின் அமைவு பற்றியும், குழந்தையுற்பத்தி செயற்பாடு பற்றியும் முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கம் இருக்க வேண்டும். அவளை இது தொடர்பாக அறிவூட்டுவது விசேடமாக பெற்றோர், ஆசிரியர்களது கடமையாகும். தமது உடலைப்பற்றிய முறையான, சாதகமான, நன்மையான கருத்துக்களை சிறுமிகளிடம் ஏற்படுத்துவது, தன்னம்பிக்கையுடனும் ஆத்ம கௌரவத்துடனும் கூடிய சுயாதீனமான பெண்கள் சமூகமொன்றை இந்நாட்டில் உருவாக்குவதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.

இன்று உலகெங்கிலுமுள்ள பெண்கள் சர்வதேச அளவில் தமது ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்புகிறார்கள். பெண் உடல் பற்றிய எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் நவீன விஞ்ஞானத்தின் மூலமாயும் பெண்விடுதலை இயக்கத்தினூடாகவும் வெற்றிகரமாக உடைத்துள்ளார்கள். இத்தகைய சகாப்த்தத்தில், சிறுமியொருத்திக்கு முதன்முதல் மாதவிடாய் வெளியேற்றம் ஏற்படுகையில் சடங்குகள் செய்வது அர்த்தமில்லாதது. பெண் உடல் சம்பந்தமான வெற்றுத்தனமான சாமத்தியச் சடங்குகள் எவ்விதத்திலும் அவசியமற்றவை.

- பெண் உடல் ஐதீகங்களிலிருந்து -

Keine Kommentare: