Mittwoch, August 27, 2003

பெண், குடும்பம், குழந்தைகள்

பெண்,குடும்பம், குழந்தைகள். பிரச்சினைகள் குறித்த
சில அவதானங்கள்


காலத்தோடொத்து இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மாறிக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எமது சூழலும் மாறுகிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப யாவுமே தம்மை இசைவாக்கிக் கொள்கின்றன. மரம், செடி, கொடியிலிருந்து நுளம்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கும் போது பெண்கள் எப்படி விதிவிலக்கா இருக்க முடியும்?

பெண்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகளாக வீடு, குடும்பம் சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சமுதாய மாற்றங்களுடன் கால ஓட்டத்தில் அதற்கப்பாலும் பெண்ணின் உழைப்பு தேவைப்பட்டது. புராதன கம்யூனிஸ் சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுதுவ அமைப்பு மாறிய போதும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது வாழ்கை முறையிலும் அது மாற்றங்களை ஏற்படுத்தியது.

பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்ட போதும் குடும்பம் சார்ந்த உழைப்பையும் அவளே செய்ய வேண்டிய நிலை இருந்தது. வேலைகள் சமனாக பங்கிடப்படாமல் இரட்டைச் சுமையுள் அவள் அழுந்தினாள். அவளது சமூக உற்பத்திக்கான உழைப்பு இரண்டாம் தரமானதாகவே கருதப்பட்டது. மீண்டும் குடும்பத்திற்கான அவளது உழைப்பே வலியுறுத்தப்பட்டது. விரும்பவும் பட்டது. இவ்விரட்டிப்பு வேலைப் பளுவிலிருந்து பெண் விடுபட முனையும் போது அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது குடும்பத்திற்கு வெளியே உலகைக் காணவிளையும் போது மீண்டும் மீண்டும் அடக்குமுறைக்குள் பெண்ணைத் தள்ளுவதற்கான எதிர்ப்புக் குரல்கள் உயர்வாக ஒலிப்பது இயல்பானதுதான். ஏனெனில், மாற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வசதிகளை அனுபவிக்க விரும்பும் அனைவருமே பெண் விடுதலை பெறுவதை விரும்பமாட்டார்கள்.

பெரும்பாலான மக்கள் மத்தியில் பெண் வேலைக்குப் போவதால்தான் குடும்ப உறவு சீரழிகிறது. பிள்ளைகள் சீரழிந்து போகின்றனர். போதைவஸ்து பாவிக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களால் அழிந்து போகின்றனர். அவர்களுக்கு அன்பு கிடைப்பதில்லை. குடும்ப உறவு அழிகிறது. சமுதாயம் நலிந்து போகிறது என்ற கருத்துக்கள் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் உண்மையைத் தரிசிக்க மறுக்கின்றனர். அவர்களது கூற்றுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. பிரச்சினைகள் எம்முன் உள்ளன. ஆனால், இவர்கள் பெண்களுக்கு முன் வைக்கும் தீர்வுகள் தான் இன்றைய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. பரிசீலிக்கப்பட வேண்டியவை.

பல ஆண்டுகளாக குடும்பம் சார்ந்த வேலைகளையே தனது கடமைகளாக செய்து வந்த பெண், சம அந்தஸ்துடன் குடும்பத்திற்கு அப்பால் உள்ள உலகத்திலுள்ளும் தனது பங்களிப்பை செய்யவிழையும் போது குடும்பம் பல பிரச்சினைகள் எதிர்நோக்கும். கால காலமாக பெண்களது கைகளில் இருந்த சமையறை, குடும்பம் என்பன மற்றவர்களுக்கும் பங்கிடப்படும் போது அவ்வேலைகளில் குறைபாடும், நேர்த்தியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அதுவே நிரந்தரமானதல்ல. அதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்போது பிரச்சினைகளும் மறைந்து போகும்.

இப்பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை. தனிப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினையாக கருத முடியாது. குடும்ப அமைப்புகளை பேணுவதற்கு பெண்களை மீண்டும் வீட்டில் மட்டும் உழைப்பை வழங்குவதற்காக அதாவது தனது குடும்பத்தைக் காக்கும் பணி பெண்ணினது அதற்காக அவள் வீட்டுக்குள் போயிருந்து வேலையைக் கவனிப்பதுதான் வழி என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.

உதாரணமக தற்காலக் குழந்தைகள் பால் குடித்து வளர்வதில்லை. தாய்மார் வேலைக்குப் போவதால் பால் கொடுப்பதில்லை. இதனால் பிள்ளைகள் நலிந்து போகின்றன. எனவே, பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து பிள்ளை வளர்க்க வேண்டும் என்று 'புத்திஜீவி" ஒருவர் பிரச்சினையையும் அதற்கான தீர்வையும் கூறியிருக்கின்றார்.

இதில் கூறப்பட்ட பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்காக அவர் கூறும் தீர்வை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையென்றால் அது ஒரு தனிப் பெண்ணின் பிரச்சினை அல்ல. சமுதாயத்தின் பிரச்சினை. இதற்கான தீர்வை பரந்த மனத்துடன் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். பால் ஒரு பிள்ளைக்கு எவ்வளவு காலம் கொடுப்பது சிறந்தது என்பது அறியப்பட்டு அந்நாட்களை தாய்மாருக்கு விடுமுறையாக வழங்க வேண்டும்.


நோர்வே, கனடா, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பாலுட்டும் தாய்மார்களுக்கு, பாலுட்டும் நேரங்கள் என குறுகிய நேர விடுமுறைகள் அமுலில் உள்ளன. இப்பிரச்சினைக்கு மாற்றுத் திட்டங்களைப் பற்றி நாமும் யோசிப்பது அவசியம். பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். அதை விடுத்து கேலியாகவும் கிண்டலாகவும் குடும்பத்தைச் சீரழிக்கும் பாவிகளாகவும் பெண் சித்திரிக்கப்படுவது ஆணாதிக்கச் சிந்தனை முறையின் மேலாட்சியைக் காட்டுகிறது.

இன்றைய காலம் குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப அலகே பெண்களின் அடிமைத்தனத்துக்கும் அடக்குமுறைக்கும் காரணம் என்று தீவிரப் பெண்ணியவாதிகள் கருதுகின்றனர்.

சமுதாய உற்பத்தி முறைமை அதன் உறவுகள், கலாசார விழுமியங்கள். என்பவற்றிற்கேற்ப குடும்ப அமைப்பு காலத்துக்கு காலம் மாறி வந்துள்ளது. எமது இன்றைய சமூக முறைமை ஜம்பது அறுபதுகளில் இருந்ததைவிடவும் எவ்வளவோ மாறிவிட்டது. பெண்கள் சமுதாய வேலைகளில் பங்களிப்பதால் குடும்பம் சிதைவுறுவதாக கூறுவதானது மிகவும் தவறான கருத்தியல்பு ஆகும். குடும்பம் பற்றிய கோட்பாடுகள் முன்னைய சமூக வாழ்வு முறைக்கேற்ப இயல்பாக்கம் அடைந்தாக இருப்பதால் இன்றை வாழ்வு முறைக்கேற்ப அவை தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தகவமைத்துக் கொள்ளும் வரையான காலத்தில் குடும்பம் சீரழிந்ததாகப்படுகிறது. இவை சிதைவுகளல்ல. மாறாக அமைப்பு புதிய நிலைக்கு ஏற்ப மாற்றுருப் பெரும் போக்கில் ஏற்படும் உடைவுகள் அல்ல, வளர்ச்சிகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சியைக்கூட ஒரு பயன் விளைவுள்ள வளர்ச்சியாக மாற்றுவதில் எமது பங்களிப்பை வழங்க முடியும்.

இன்றைய குடும்ப அமைப்பின் போக்கை விமர்சித்து, மாறாக வேறு வழிகளில் உருவாகி வருகின்றன. குடும்பம் இன்றைய ஜனநாயக சமூக அமைப்பினுள் உள்ள ஒரு வடிவம் என்பதால் குடும்பத்தில் கணவன், மனைவி குழந்தைகளுக்கிடையிலான உறவினையும் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று மாக்ஸியப் பெண்ணிலைவாதிகள் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். 'புதிய ஜனநாயகத்தை" சீனாவில் அறிமுகப்படுத்துகையில் குடும்ப வேலைப் பிரிவினை மற்றும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவில் சமத்துவம் என்பவற்றைப் பேணுவது பற்றிக் குறிப்பி;ட்டார். 'ஜனநாயக ப10ர்வமான" அடிப்படையில் குடும்பம் அமைதி காணமுடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்

இன்னொரு சாரார் குடும்பம் என்னும் வழமையான முறைகளை மீறி, ஆணும் பெண்ணும் தம்மால் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்பும்போது எத்தகையா சம்பிரதாய பூர்வமான திருமண முறைகளுமற்ற புரிந்துணர்வு, சமத்துவம் என்ற அடிப்படையில் 'சேர்ந்து வாழல்" (Living to gether) என்ற முறைமையினை மாற்றதாக் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் சமூகத்தில் பெண்களின் சம உரிமை, சம அந்தஸ்து என்ற விடயங்கள் அக்கறை இன்றி பெண்ணிலைவாதம் பற்றித் திறந்த மனதுடன் ஆராய யார் மறுத்தாலும் குடும்பம் பற்றிய கேள்விகள் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. காலச் சக்கரம் தனது பாதையில் நகர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதைத் தடுப்பது என்பது சூரியனை கைகளால் பொத்த நினைப்பது போலத்தான்!. எனவே இவ்வாறான மாற்று அமைப்புகள் அல்லது மாற்று வழிமுறைகள் பற்றிய கணிப்பீட்டை நிதானமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சமுதாயம் தொடர்பான புதிய சிந்தனைகளுக்கு வழிகோலும், வாழ்வுக்கும் அர்த்தம் சேர்ப்பதாக அமையும்.


நன்றி தினக்குரல்.

Keine Kommentare: